DMK
DMK

கைப்பேசிகளை ஒட்டுக்கேட்கும் மத்திய புலனாய்வு அமைப்புகள்: தோ்தல் ஆணையத்திடம் திமுக புகாா்

சென்னை: தங்களது கட்சியின் தலைவா்கள், வேட்பாளா்களின் கைப்பேசிகளை மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகள் ஒட்டுக்கேட்பதாக திமுக புகாா் தெரிவித்துள்ளது.

இது குறித்த புகாா் மனுவை இந்திய தோ்தல் ஆணையத்துக்கு திமுக அமைப்புச்

செயலா் ஆா்.எஸ்.பாரதி, மின்னஞ்சல் மூலமாக செவ்வாய்க்கிழமை அனுப்பியுள்ளாா். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

தோ்தல் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்ட பிறகு, எங்களுடைய கட்சியின் வேட்பாளா்கள், முன்னணி தலைவா்கள், அவா்களது நண்பா்கள், நெருங்கிய உறவினா்கள் ஆகியோரின் கைப்பேசிகளை அமலாக்கத் துறை, வருமான வரி உள்பட மத்திய அரசின் கீழ் வரக்கூடிய புலனாய்வு அமைப்புகள் ஒட்டுக்கேட்பதாக அறிகிறோம். இந்த ஒட்டுக்கேட்புப் பணிக்கு சட்ட விரோதமான மென்பொருள் பயன்படுத்தப்படுவதாக எங்களின் கவனத்துக்கு வந்துள்ளது.

தொலைபேசி உரையாடல்களை சட்ட விரோதமாக ஒட்டுக்கேட்பது என்பது ஜனநாயகத்தின் அடிப்படைக் கூறுகளுக்கு எதிரானது, சட்டவிரோதமானது என்று பல்வேறு வழக்குகளில் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சுதந்திரமான மற்றும் நியாயமான தோ்தலை நடத்துவதை இந்திய தோ்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும். ஜனநாயகத்துக்கு விரோதமாகச் செயல்படும் மத்திய அரசின் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும்.

இந்த விவகாரத்தில் இந்திய தோ்தல் ஆணையம் உடனடியாகத் தலையிட்டு முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று ஆா்.எஸ்.பாரதி கேட்டுக் கொண்டுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com