புதுச்சேரியில் கட்டுக்கட்டாக 2,000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்

புதுச்சேரியில் ஒரு கோடி மதிப்புள்ள 2,000 ரூபாய் கட்டுகள் பறிமுதல்
புதுச்சேரியில் கட்டுக்கட்டாக 2,000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்

புதுச்சேரியில் நிதிநிறுவன உரிமையாளர் வீட்டில் செல்லாது என அறிவிக்கப்பட்ட இரண்டாயிரம் ரூபாய் நோட்டு கட்டுகள் ஒரு கோடியும், 500 ரூபாய் கட்டுகள் என மொத்தமாக 4 கோடியே 13 லட்சத்தினை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

புதுச்சேரி நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க புதுவையில் 72 பறக்கும் படை அமைக்கப்பட்டு சோதனை செய்து வருகின்றனர்.

மாநில எல்லைகளிலும், வாகனங்களிலும் சோதனை செய்து வருகின்றனர். இந்நிலையில் 100 அடி ரோடு ஜான்சி நகரிலுள்ள முருகேசன் பெரியபாளையத்தம்மன் என்ற நிதி நிறுவனம் நடத்தி வரும் பைனான்சியர் வீட்டில் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக ரகசிய தகவல் பறக்கும் படைக்கு கிடைத்தது.

இதையடுத்து அங்கு சென்று தேர்தல் பறக்கும் படை சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர் வீட்டில் மத்திய அரசால் செல்லாது என அறிவிக்கப்பட்ட 2 ஆயிரம் நோட்டு கட்டுகள் ஒரு கோடிக்கும், 500 ரூபாய் நோட்டுகள் 2 கோடியே 60 லட்சம் இருந்தது தெரியவந்தது.

மேலும் இவருக்கு சொந்தமான நெல்லிதோப்பில் உள்ள பெரியபாளையத்தம்மன் நிதி நிறுவனத்திலும் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர். அங்கு சுமார் 45.46 லட்சம் ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து பணத்திற்கான ஆவணங்களை பைனான்சியரிடம் கேட்டபோது இல்லை என கூறியதால் தேர்தல் பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட பணம் கருவூலத்துக்கு கொண்டு சென்றதையடுத்து உரிய ஆவணத்தை காட்டி பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. மேலும் செல்லாத 2 ஆயிரம் ரூபாய் நோட்டை ஒரு கோடி அளவுக்கு வைத்திருப்பது ஏன் என விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com