இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

இந்தியாவின் முதல் தொழில்முறை மல்யுத்த வீராங்கனை ஹமிதா பானுவை சிறப்பிக்கும் விதமாக கூகுள் நிறுவனம் கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்டுள்ளது.
ஹமிதா பானு - கூகுள் வெளியிட்ட கவன ஈர்ப்புச் சித்திரம்
ஹமிதா பானு - கூகுள் வெளியிட்ட கவன ஈர்ப்புச் சித்திரம்

ஹமிதா பானு இந்தியாவின் முதல் தொழில்முறை மல்யுத்த வீராங்கனை ஆவார். 1954-ம் ஆண்டு இதே நாளில், பிரபல மல்யுத்த வீரர் பாபா பஹல்வானை குத்துச்சண்டைப் போட்டியில் வெறும் 1 நிமிடம் 34 நொடிகளில் ஹமிதா பானு தோற்கடித்தார். அதன் பின்னர் அவருக்கு சர்வதேச அங்கீகாரமும் பெரும் புகழும் கிடைத்தது. அதனைச் சிறப்பிக்கும் விதமாக கூகுள் நிறுவனம், கவன ஈர்ப்புச் சித்திரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

1900 களின் முற்பகுதியில் உத்தரப்பிரதேசத்தின் அலிகார் பகுதியில் மல்யுத்த வீரர்கள் அடங்கிய குடும்பத்தில் பிறந்த ஹமிதா பானு, 1940 முதல் 1950 கள் வரை 300 க்கும் மேற்பட்ட போட்டிகளில் வென்றுள்ளார்.

ஹமிதா பானு
ஹமிதா பானு

அவர் வாழ்ந்த காலத்தில், சமூக ஒடுக்குமுறைகளின் காரணமாக விளையாட்டுப் போட்டிகளில் பெண்களின் பங்கேற்பு தடுக்கப்பட்டிருந்தது. ஆனால் பானு, மல்யுத்தத்தின் மீதுள்ள பெரும் ஆர்வத்தால் அடக்குமுறைகளை எதிர்த்து போட்டிகளில் பங்கேற்றார். ஆண் மல்யுத்த வீரர்களுடனும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆணாதிக்க சமூகத்தின் விழுமியங்களைத் தகர்த்து பெண்ணுரிமையை அழுத்தமாக பதிவு செய்தார்.

“என்னை தோற்கடித்தால் நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன்”, இதுவே தன்னுடன் மல்யுத்தம் செய்ய வரும் ஆண் வீரர்களுக்கு ஹமிதா பானு வைக்கும் சவால். ஆனால், ஆச்சரியப்படும் விதமாக ஒருவர் கூட அந்த சவாலில் ஜெயித்ததில்லை.

ஹமிதா பானுவின் வெற்றிப் பயணம் சர்வதேச அரங்கு வரை விரிவடைந்தது. ரஷ்ய மல்யுத்த வீராங்கனை வேரா சிஷ்டிலினை வெறும் இரண்டு நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில் தோற்கடித்தார்.

ஹமிதா பானு - கூகுள் வெளியிட்ட கவன ஈர்ப்புச் சித்திரம்
சவுக்கு சங்கர் கைது! அழைத்துச் சென்ற வாகனம் விபத்து

பல செய்தித்தாள்களின் தலைப்புச் செய்தியில் பானுவின் பெயர் இடம்பெற்றது. அவர் ‘அலிகாரின் அமேசான்’ என்று அனைவராலும் அழைக்கப்பட்டார். அவர் வென்ற போட்டிகள், அவரின் பயிற்சிமுறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்கள் அப்போது பெரிய பேசு பொருளாகின.

ஹமிதா பானு, மல்யுத்த வீரர்களுக்கு ஒரு முன்மாதிரியாக விளங்கினார். அச்சமின்றி எடையும் எதிர்கொள்ளும் அவரின் பண்பு இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுக்க நினைவு கூறப்படுகிறது.

கூகுள் கவன ஈர்ப்புச் சித்திரத்தை வடிவமைத்த பெங்களூரைச் சேர்ந்த திவ்யா நேகி கூறுகையில், “டூடுல் வடிவமைக்க ஹமிதா பானு குறித்து ஆராய்கையில் பழமைவாதத்திற்கு எதிராக போராடிய அவரது வாழ்க்கை மிகவும் ஊக்கமளிப்பதாக இருந்தது. குழு சிந்தனைக்கு எதிராகச் செயல்படுவது மிகக் கடினமானது. மேலும், பெண்ணாக இருந்து அதனைச் செய்வது இன்னும் சிக்கலாக்கும். ஆனாலும், அவற்றை மீறி ஹமிதா வெற்றிகளைக் குவித்துள்ளார்” என்றார்.

வாழ்க்கையில் தனக்குத் தானே உண்மையாகவும், தனக்குப் பிடித்ததை எவர் எதிர்த்தாலும் செய்து, அதில் வெற்றிபெற்று காட்டிய ஹமிதா பானுவின் முனைப்பும் அனைவராலும் என்றும் கொண்டாடப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com