பேச வைக்கும் கலைஞன் நவீன சிற்பி தட்சிணாமூர்த்தி!

செராமிக் வழியாக சுடுமண் சிலைகள், கற்சிலைகள் செய்ய ஆரம்பித்தார். அவர் படைப்புகளின் அடிப்படை மனிதர்கள். அதிலும் பெண்களைச் சிறப்பாக எடுத்துக் கொண்டார். அவர் படைப்பில் பெண்கள் தனித்தன்மையும் சிறப்பும்...
பேச வைக்கும் கலைஞன் நவீன சிற்பி தட்சிணாமூர்த்தி!

சென்னை ஓவியக் கல்லூரியில் உருவான நவீன சிற்பி சி.தட்சிணாமூர்த்தி. அவர் இடைவிடாது தன் இருப்பைத் தேடிக்கொண்டே இருந்தார். ஆறாண்டுகள் சந்தானராஜ், தனபாலிடம் ஓவியம் கற்ற அவருடைய கோட்டோவியங்கள் தனித்தன்மை பெற்று இருந்தன. வண்ண ஓவியங்களும் வரைந்தார்.

சி.தட்சிணாமூர்த்தி  1943-இல் குடியாத்தத்தில் பிறந்தார். உயர்நிலைப் படிப்பை முடித்ததும் ஆசிரியர் வழிகாட்டுதலில் ஓவியக் கல்லூரியில் சேர்ந்தார். அவர் வாழ்க்கை என்பதே கலை சார்ந்ததாகிவிட்டது.

அவர் ஓவியந்தான் படித்தார். செராமிக்கில்தான் வேலை கிடைத்தது. ஆனால், அவர் அதில் ஆழ்ந்து போய்விடவில்லை. செராமிக் வழியாக சுடுமண் சிலைகள், கற்சிலைகள் செய்ய ஆரம்பித்தார். அவர் படைப்புகளின் அடிப்படை மனிதர்கள். அதிலும் பெண்களைச் சிறப்பாக எடுத்துக் கொண்டார். அவர் படைப்பில் பெண்கள் தனித்தன்மையும் சிறப்பும் கொண்டிருந்தார்கள். அவர் இன்னொருவர் படைப்பைப் பின்பற்றி செய்தவர் இல்லை. தன் சொந்தக் கற்பனையை வசீகரத்தைக் கொண்டு எழிலார்ந்ததாக்கினார்.

அதுபற்றி ஓவியக் கல்லூரி முன்னாள் முதல்வரும், தட்சிணாமூர்த்தி ஆசிரியருமான எஸ்.முருகேசன், "சாதாரணமாக தனபால், தட்சிணாமூர்த்தி நவீன சிற்பங்கள் ஆங்கிலேய சிற்பி ஹென்றி மூர் படைப்புக்களில் இருந்து உருவானதென்று கூறுவார்கள். ஆனால், அது இல்லை. தமிழகச் சிற்பிகள் தங்களின் சொந்த மரபில் இருந்து தற்காலத்திற்கு ஏற்ப படைத்துக் கொடுத்து இருக்கிறார்கள். அவர் கலை மரபு நெடிய சரித்திரம் கொண்ட திராவிட கலை மரபில் இருந்து தொடர்ந்து வருவதாகும்'' என்று மதிப்பிட்டார்.

தட்சிணாமூர்த்தி சிற்பத்திற்கென்று தனியாகப் படிக்கவில்லை. ஓவியம்தான் படித்தார். எந்தக் கலையும் தனித்து இயங்குவது கிடையாது. ஒரு துறையில் இருந்து மற்றொரு துறையைத் தன் போக்கிலேயே பற்றிக்கொள்ளக் கூடியது. அதனால்தான் அவர் சிற்பியாகிவிட்டார்.

முதலில் அவர் பண்டைய தொல்மரபில் வழியில் மண்ணில் நவீன சிலைகள் செய்து சுட்டெடுத்தார். அதுதான் டெரகோட்டா. அதாவது சுடுமண் சிலைகள். அது போதாமையைக் கண்டு கொண்டது. கருங்கற்களில் சிலைகள் வடிக்க ஆரம்பித்தார். அவர் படைப்பிற்காக கருங்கற்களைத் தேடிப் போனதில்லை. கிடைக்கும் கற்களில் மனத்திலிருக்கும் படிமத்தை வேறுவேறுபட்ட முறைகளில் படைத்தார்.

தட்சிணாமூர்த்தி என் நாற்பதாண்டுகால நண்பர். நாங்கள் "கசடதபற' ஆரம்பித்தபோது எங்களோடு சேர்ந்து பணியாற்றினார். அவர் கோடுகள் உயிர்த்துடிப்பும், கருத்தும் கொண்டவை. கே.எம்.ஆதிமூலம் ஆர்.பி.பாஸ்கரனோடு சேர்ந்து சென்னையில் ஓவியக் கலை - சிற்ப வளர்ச்சி மேம்பாட்டிற்குப் பாடுபட்டார். தில்லி, மும்பை, சென்னையில் கூட்டாக ஓவிய, சிற்பக் கண்காட்சிகள் நடத்தியிருக்கிறார்.

1985-ஆம் ஆண்டில் அவருக்கு லலித்கலா அகாதமியின் தேசிய விருது அவருக்கு வழங்கப்பட்டது. அப்பொழுது நாற்பத்திரண்டு வயதாகி இருந்தது. அவர் இளம் பருவம் தொட்டே சோர்வு இல்லாத ஒரு படைப்பாளி. கலை நேசராகவே இருந்தார். அவரை அறிந்தவர்கள் எல்லாம், மாணவர் பருவத்தில் இருந்தே ஓவியம், சிற்பங்கள் படைக்கக் கல்லூரிக்கு வரும் முதலாளாகவே இருந்தார் என்கிறார்கள்.

தமிழகத்தில் கருங்கற்களில் சித்திரம் படைப்பதென்பது ஏழாம் நூற்றாண்டில் தொடங்கி, பன்னிரண்டாம் நூற்றாண்டு வரையிலான அறுநூறு ஆண்டுகளில் ஓர் உச்சத்தை எட்டிவிட்டது. இனி அந்த உயரத்தை எட்டிப் பிடிக்கவே முடியாது என்று கலைஞர்கள் வேறு வேறு துறைகளுக்குப் போய்விட்டார்கள். அந்த இறுக்கத்தை உடைத்து நவீனமாகப் புத்தொளி மிளிர சிற்பங்கள் செய்து முன்னெடுத்துச் சென்றவர் தட்சிணாமூர்த்தி.

கலைஞர்கள் கால ஓட்டத்தில் இல்லாமல் மரணமுற்றுப் போய்விடலாம். ஆனால், படைப்புக்களின் வழியாகவே காலத்தைக் கடந்து எப்பொழுதும் உயிர்ப்புடன் இருக்கிறார்கள். அவர்கள் பெயர்களால் அறியப்படுவதைவிட படைப்புக்கள் மூலமாகவே அறியப்படுகிறார்கள்.

தட்சிணாமூர்த்தி நெடிய மரபின் ஓர் இழை. அவர் அன்பு, கருணை, பொறுமை, பாசம் என்பதன் வடிவமாக பெண்களைத் தம் படைப்புக்களுக்கு ஆதாரமாக எடுத்துக் கொண்டார். அதற்கு அர்த்தம் கொடுத்து பூரண அமைதியோடும், அழகோடும் பெண்களையும், அவர்கள் பெற்றெடுத்த குழந்தைகளையும் சமூகம் முழுவதையும் பிரதிநிதிப்படுத்தும் விதமாகவும் படைத்திருக்கிறார். அவர் படைப்புக்கள் அசலானவை. அவை பேசுகிறவை; பேசப்படுகின்றவை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com