தகர்த்திடுங்கள்... தாழ்வு மனப்பான்மையை!

பிறர் நம்மை கவனிக்கவில்லையே, நமக்கு சமூகத்தில் செல்வாக்கு இல்லாததாலேயே அவர்கள் கவனிக்கவில்லையோ? என்றெல்லாம் சிந்தித்து தாழ்வு மனப்பான்மையை உருவாக்கிக் கொள்ள வேண்டாம். ஒவ்வொருவருக்கும் ஆயிரம் வேலைகள்.
தகர்த்திடுங்கள்... தாழ்வு மனப்பான்மையை!

"நாமெல்லாம் எதற்குமே லாயக்கில்லை. அவர் சாதிக்கப் பிறந்தவர். நம்மால் எல்லாம் அவரைப் போல் ஆக முடியாது.'  - இப்படி தாழ்வு மனப்பான்மையில் சிக்கி, பல இளைஞர்கள் வாழ்வில் முன்னேற எந்த முயற்சியும் செய்யாமல், காலத்தை வீணாகக் கழிக்கிறார்கள். தாழ்வு மனப்பான்மை என்பது உண்மையில் நம்மிடம் உள்ள திறமைகளை நாம் தெரிந்து கொள்ளாததே. தாழ்வு மனப்பான்மை நம்பிக்கையின்மையை ஏற்படுத்துகிறது. எந்தச் செயலையும் செய்ய முடியாதவர்களாக நம்மை மாற்றி விடுகிறது. தாழ்வு மனப்பான்மையை வெல்ல என்ன செய்ய வேண்டும்?

அடிப்படை காரணத்தைக் கண்டறியுங்கள்
தாழ்வு மனப்பான்மை வருவதற்கு பல காரணங்கள் இருக்கும். அதற்கு உங்களது உடல் தோற்றமோ அல்லது ஏதேனும் ஒரு காரியத்தில் அடையும் தோல்வியோ கூட காரணமாக இருக்கலாம். வாழ்க்கையில் நீங்கள் புரியும் சாதனைகளுக்கும், உடல் தோற்றத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அழகு என்பது பார்ப்போரின் பார்வையைப் பொறுத்தே உள்ளது. தாழ்வு மனப்பான்மை உருவாவதற்கு அடிப்படை காரணம் என்ன என்பதை முதலில் கண்டுபிடிக்க வேண்டும். பிறகு, அதை சரி செய்வதற்கான பணியில் ஈடுபட வேண்டும். 

திறமைகள் மீது கவனம்
குறையில்லாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஒவ்வொருவருக்கும் வெளியில் சொல்ல முடியாத குறைகள் நிச்சயம் இருக்கும். அதேபோல், சில அபார திறமைகளும் இருக்கும். எனவே, நமக்கென இருக்கும் தனிப்பட்ட திறமைகள் எவை என்பதை முதலில் கண்டறிய வேண்டும். சில பலவீனங்களால் கூட நமக்குத் தாழ்வு மனப்பான்மை ஏற்படலாம்.  அந்த பலவீனத்தை திட்டமிட்டு வெல்ல வேண்டும். கடந்த காலத்தில் செய்த தவறுகளினால் நாம் பின்தங்கியிருக்கலாம். அதுவே நமக்குத் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தி இருக்கலாம்.  உங்களுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்பட என்ன காரணம் என்பதைத் தெரிந்து கொண்டு அதை நீக்க முயல வேண்டும்.

பிறருடன் ஒப்பிடுவதை நிறுத்துங்கள்
பிறருடன் உங்களை ஒப்பிடுவதை நிறுத்த வேண்டும். ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட திறமைகளும், ஈடுபாடுகளும் இருக்கும். அவர்களோடு நம்மை ஒப்பிட்டு, அதை வைத்து உங்களை நீங்கள் மதிப்பிடக் கூடாது. நம்மிடம் இருக்கும் சிறப்புகள் குறித்து மட்டுமே நாம் நினைக்க வேண்டும். 

ஊக்கம் அளிப்பதே உங்களுடையது
புத்தகம் வாசித்தல், ஓவியம் வரைதல், பாடுதல், விளையாடுதல் இப்படி உங்களை ஊக்கப்படுத்த, உற்சாகப்படுத்த ஏகப்பட்ட விஷயங்கள் உலகத்தில் உள்ளன. எனவே அவற்றில் தீவிரமாக ஈடுபட வேண்டும். தாழ்வு மனப்பான்மை தப்பித்தேன், பிழைத்தேன் என்று உங்களை விட்டு ஓடிவிடும்.

தேவையில்லாத யூகங்கள் வேண்டாம்
பிறர் நம்மை கவனிக்கவில்லையே, நமக்கு சமூகத்தில் செல்வாக்கு இல்லாததாலேயே அவர்கள் கவனிக்கவில்லையோ? என்றெல்லாம் சிந்தித்து தாழ்வு மனப்பான்மையை உருவாக்கிக் கொள்ள வேண்டாம். ஒவ்வொருவருக்கும் ஆயிரம் வேலைகள்.  உங்களைக் கவனிக்க அதனால் அவர்களுக்கு நேரமிருந்திருக்காது. எனவே இதுபோன்ற தேவையில்லாத யூகங்களுக்கு இடமளிக்க வேண்டாம்.

பிறருக்கு உதவி செய்யுங்கள்
பிறருக்கு நீங்கள் உதவி செய்யும் வேளை வரும்போது, அவர்களை விட நீங்கள் சிறப்பான நிலையில் உள்ளீர்கள் என்பதை உணர்வீர்கள். அது உங்களுடைய தாழ்வு மனப்பான்மையை அகற்றும். சமூகநலப் பணிகளில் குழுவாகச் செயல்படும்போது,  குழுவாக எப்படிப் பணியாற்றுவது என்பதைக் கற்க முடியும். தாழ்வு மனப்பான்மை தகர்ந்து போவது, இந்த கூட்டு உழைப்பில்தான்.

பிறருடன் பேசுங்கள்
பிறருடன் பேசும்போதுதான் உங்களைப் பற்றி உங்களுக்கே தெரிய வரும். பிறரைப் பற்றியும் தெரிய வரும். இதனால், குறையும், நிறையும் கலந்ததுதான் மனித இயல்பு என்பதைப் புரிந்து கொள்வீர்கள். தாழ்வு மனப்பான்மை இதனால் இல்லாமற் போகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com