10 லட்சம் கலைச்சொற்களை தமிழில் உருவாக்கியவர்!

இயல், இசை, நாடகம் என்ற மூன்று தமிழுடன், அறிவியல் தமிழ் என்ற நான்காம் தமிழை  இணைத்தவர் மணவை முஸ்தபா என்று புகழப்பட்டாலும், ஆதித் தமிழனின்  முதல் தமிழ் அறிவியல்  தமிழ்தான் என்று மணவை சொல்லி வந்தார். 
10 லட்சம் கலைச்சொற்களை தமிழில் உருவாக்கியவர்!

அந்த இளைஞனுக்கு  தமிழின் மீது  அளவுக்கு அதிகமான பற்று. தமிழை நன்கு படித்து  வைத்திருந்தார்.  அண்ணாமலை  பல்கலைக்கழகத்தில் தமிழ் முதுகலை படித்து  வெளிவந்ததும்,  சேலம் அரசினர் கலைக்கல்லூரி  உதவிப் பேராசிரியர்  பணிக்கு அரசு ஆணை வந்து சேர்ந்தது.  அரசு ஆணையை எடுத்துக் கொண்டு  தனது குருநாதரும்   அண்ணாமலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராகவும் இருந்த தெ. பொ. மீனாட்சிசுந்தரத்திடம்  ஆசி பெறுவதற்காகக் கிளம்பினார். 

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்குச்  சென்ற போது, "பயிற்று மொழியாக  இருப்பதற்குத் தகுதியான  மொழி ஆங்கிலமா? தமிழா?' என்ற தலைப்பில் கருத்தரங்கு  காரசாரமாக  நடைபெற்றுக் கொண்டிருந்தது.

"தமிழில்  பயிற்றுவிக்க தேவையான  கலைச்சொற்கள் இல்லை.  தமிழில் அறிவியலைச்  சொல்லிக் கொடுக்கும் மனநிலை ஆசிரியர்களிடம் இல்லை. அறிவியலைத்  தமிழில் படிக்கும் மனநிலை மாணவர்களிடமும் இல்லை. படித்து முடித்ததும்  வேலையும்  கிடைக்காது. தமிழைப் பயிற்று மொழியாக்குவது எதிர்கால  தமிழக மாணவர்களை  குழிதோண்டிப் புதைக்கிற முயற்சி'' என்று   ஒரு பேராசிரியர் முழங்கினார்.

இதைக் கேட்ட  அந்த  இளைஞனுக்கு  கோபம்  பொத்துக்  கொண்டு வந்தது. முகம் சிவக்க  மேடையை நோக்கி அந்த இளைஞன் முன்னேற... வாய்க்கு வந்தவாறு பேசிக் கொண்டிருந்த  பேராசிரியர்    பேசுவதை   நிறுத்தினார்.  

மேடை ஏறிய இளைஞன்  உரக்கச் சொன்னான். 

"தமிழால் முடியாதது ஒன்றும் இல்லை.  ஆங்கில அறிவியல், தொழில் நுட்பச் சொற்களுக்கு  சமமான  சொற்களைத் தமிழில் தர முடியும். அதை நான் நிருபித்துக் காட்டுகிறேன்... அதற்காக உதவிப் பேராசிரியர்  பணி தருவதற்காக  எனக்கு  வந்த அரசு ஆணையைக்  கிழித்து  எறிகிறேன்'' என்று சொன்னவாறே   அவையில் கூடியிருந்தவர்கள்  அதிர்ச்சி அடைய அரசு  ஆணையை மேடையில் கிழித்து எறிந்தார்.  

அன்று முதல்  அறிவியல்  தமிழை வளர்க்கத்   தன்னை  அர்ப்பணித்துக் கொண்டார். அந்த  இளைஞன்  வேறு யாருமல்ல. அண்மையில் மறைந்த  மணவை  முஸ்தபாதான் அந்த இளைஞன். 

இயல், இசை, நாடகம் என்ற மூன்று தமிழுடன், அறிவியல் தமிழ் என்ற நான்காம் தமிழை  இணைத்தவர் மணவை முஸ்தபா என்று புகழப்பட்டாலும், ஆதித் தமிழனின்  முதல் தமிழ் அறிவியல்  தமிழ்தான் என்று மணவை சொல்லி வந்தார். 

"சங்க இலக்கியத்திற்கு  முன் வாழ்ந்த தமிழ் சமுதாயம்  இயற்கையுடன்  இயைந்த  அறிவியல்  சார்ந்த  வாழ்க்கையைக் கொண்டிருந்தது.  பிறகு காலப்போக்கில் சமயங்களின் தாக்கம் வந்து  இயல், இசை, நாடகம்  என்றானது'  என்பது  மணவை முஸ்தபாவின்   விளக்கம்.

தமிழ் மொழி செம்மொழியாக  அறிவிக்கப்பட வேண்டும்  என்று  தமிழகத்தின்  மூன்று முதல்வர்களாக இருந்த  கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரிடம்  முறையிட்டவர் மணவை.   தமிழ் செம்மொழியாகத் தேவையான  11அம்சங்களைப் பட்டியல்  போட்டுக் காட்டியவர் மணவை அவர்கள்.  அதே சமயம், இந்திய மொழிகளில் வேறு எந்த மொழிக்கும் இந்த  பதினொன்று  தகுதிகள் இல்லை என்றும் மணவை  நிரூபித்தார்.  

அவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்  படித்த போது  அவருக்கு ஆசிரியர்களாக  அமைந்தவர்கள் தெ. பொ. மீனாட்சி சுந்தரனார்,  தண்டபாணி  தேசிகர்,  தேவநேயப் பாவாணர்.  

இந்த மூன்று  பேராசிரியர்களும் வெவ்வேறு கருத்துக்களைக் கொண்டவர்கள். ஆனால் உள்ளுக்குள்  ஒருவர் மீது  ஒருவர்   மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தனர். இந்த  மூன்று துருவ நட்சத்திரங்களை இணைக்கும் பாலமாக மணவை  செயல்பட்டார். அதனால் மணவைக்கும்  பலன் கிடைத்தது. 
 எப்படி ஒரு வேர்ச்சொல்லைக்  கண்டுபிடிப்பது?  கண்டுபிடித்த  வேர் சொல்லிலிருந்து  புதிய ஒரு சொல்வடிவத்தை எப்படி உருவாக்குவது? எப்படி பழைய தமிழ்ச் சொல்லைப் புதிய வடிவமாக்குவது? தொடர்பான பயிற்சி  மணவைக்கு  இந்த தமிழ்  ஜாம்பவான்களிடமிருந்து  வரமாகக் கிடைத்தது.

இந்தப்  பயிற்சியின் காரணமாக, அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சிகளுக்குப் பொருத்தமாக  தமிழ்மொழி முன்னேற வேண்டும்  என்கிற முனைப்புடன் மணவையால் பணியாற்ற முடிந்தது.  நாற்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்கள், ஏழு கலைச்சொற்களஞ்சிய அகராதிகளை  மணவையால்  உருவாக்க முடிந்தது .   

யுனெஸ்கோ கூரியர் உலக அளவில் ஆறு மொழிகளில் மட்டும்தான் வெளியாகிக் கொண்டிருந்தது.  கன்னிமாரா நூலகத்திற்கு ஆங்கில பதிப்பு தவறாமல் வரும். அங்கே  அதை வாசிக்க அண்ணாதுரை தவறாமல்  வருவார். 

முதல் உலகத் தமிழ் மாநாடு  1967}இல்  நடைபெற்றபோது, யுனெஸ்கோ பேரமைப்பின் துணை இயக்குநராக இருந்த ஆதிசேஷையா  கலந்து கொண்டார். அப்போது  முதல்வர் அண்ணாதுரை அவரிடம்  யுனெஸ்கோ கூரியர்  இதழைத் தமிழில் வெளிவர  ஏற்பாடு செய்யும்படி கேட்டுக்கொண்டார். 

ஆதிசேஷையா அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டபோது இந்திய அரசாங்கத்திடமிருந்து  எதிர்ப்புகள்  கிளம்பின.  இந்தியில்தான் யுனெஸ்கோ கூரியரைக் கொண்டு வர  வேண்டும்  என்று அன்றைய மத்திய அரசு சொன்னது. "இந்தி இந்தியாவில் மட்டும்தான்  ஆட்சி  மொழியாக இருக்கிறது. ஆனால் தமிழ்,  தமிழ்நாடு, இலங்கை, சிங்கப்பூர் ஆகிய மூன்று நாடுகளிலும் ஆட்சிமொழியாக  இருக்கிறது. மலேசியாவில் பாராளுமன்ற மொழியாகவும் உள்ளது. எனவே தமிழை சர்வதேச மொழியாக எடுத்துக் கொண்டு யுனெஸ்கோ கூரியர்  இதழை  முதலில் தமிழில் கொண்டு வரலாம்..  இரண்டு ஆண்டுகள் கழித்து  இந்தியில் கொண்டு வரலாம்''  என்று   ஆதிசேஷையா சொன்ன  யோசனையை  மத்திய அரசு ஏற்றுக்  கொண்டது. 

அன்றைய பிரதமர்  மொரார்ஜி தேசாய் கூரியர் தமிழ் பதிப்பை 1967}இல் தொடங்கி வைத்தார். ஆதிசேஷையா 1975இல் சென்னை வந்து  சென்னைப் பல்கலைக் கழகத்தின்  துணைவேந்தர் பொறுப்பை ஏற்றபோது  மணவை  முஸ்தபாவை  கூரியரின் ஆசிரியராகவும் வெளியீட்டாளராகவும்  நியமித்தார்.

என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா களஞ்சியம் தமிழ்ப் பதிப்பின் பொறுப்பாசிரியர், தமிழ் வளர்ச்சித் துறை ஆலோசகர், திரைப்படத் தணிக்கைக் குழு உறுப்பினர், தமிழ்நாடு அரசின் அறிவியல் தமிழ் மன்றத் தலைவர், எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக் கழகத் தமிழ் வளர்ச்சித்துறை ஆலோசகர், செம்மொழி ஐம்பெருங்குழு செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன உறுப்பினர் என அவர் வகித்த பொறுப்புகள் அதிகம்.

அவர் உருவாக்கிய "கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி' தமிழுக்கு அவர் அளித்த கொடை.  31 நூல்களை எழுதியுள்ளார். 10க்கும் மேற்பட்ட   மொழிபெயர்ப்பு நூல்கள். தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது, திரு.வி.க விருது, எம்.ஜி.ஆர். விருது, தமிழ் தூதுவர் விருது, தந்தை பெரியார் விருது உட்பட 35க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றவர் மணவை முஸ்தபா. 

பத்து லட்சம் கலைச்சொற்களைத் தமிழில் புதிதாக உருவாக்கி தமிழின் சொத்தாகச் சேர்த்து வைத்து, தமிழில் சொத்தாகவும் மாறிப் போனவர் மணவை முஸ்தபா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com