நலமாக இருந்தவரையில் கலைஞரின் ‘ஓர் நாள்’!
By கார்த்திகா வாசுதேவன் | Published On : 27th July 2018 03:26 PM | Last Updated : 07th December 2019 01:28 PM | அ+அ அ- |

- அதிகாலை 5 மணிக்கு எழும் பழக்கம் கொண்ட கலைஞர் கருணாநிதி.
- எழுந்ததும் முதலில் செய்யும் காரியம் தமிழகத்தில் கிடைக்கக்கூடிய அத்தனை பத்திரிகைகளையும் ஒன்று விடாமல் வாசிப்பது. வாசித்து முடித்த பின் அடுத்ததாகத் தொடர்வது உடன்பிறப்புக்குக் கடிதம். கடிதம் எழுதி முடித்ததும் தமது தனிச்செயலர் சண்முகநாதனிடம் கூறி அறிக்கைகள் தயார் செய்ய வாய்மொழிக்குறிப்புகள் அளிக்கிறார்.
- அதன் பின், அன்றைய தினம் யாருக்கெல்லாம் வாழ்த்துத் தந்திகள் அனுப்ப வேண்டுமோ அது குறித்த தகவல்களைத் தமது உதவியாளரிடமிருந்து பெற்றுக்கொண்டு வாழ்த்துச் செய்திகளை கைப்பட எழுதித் தருகிறார். அதன் பின் காலையில் வருகை தரும் சிறப்பு விருந்தினர்களையும், கழக உடன்பிறப்புகளையும் மலர்ந்து முகத்துடன் சந்திப்பது கலைஞரின் வழக்கம். ஒரு காலகட்டத்தில் கலைஞரை தினமும் சென்று தரிசிக்கும் பாக்கியம் பெற்றிருந்தவர்கள் இருவர்... ஒருவர் கலைஞரின் உற்ற நண்பரும் திமுக செயலாளருமான க. அன்பழகன். மற்றொருவர் கவிஞர் வைரமுத்து.
- காலையில் இத்தனை வேலைகளையும் சிரத்தையுடன் முடித்து விட்டு பிறகு அறிவாலயம் புறப்படுகிறார். அங்கே தமது அரசியல் பணிகள் குறித்து கழகச் செயலாளர், மட்டும் கட்சியின் உயர்மட்டக் குழுவினருடன் தினமும் ஆலோசனை நடத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் கருணாநிதி.
- அறிவாலயப் பணி முடிந்ததும் மதிய உணவுக்கு வீடு திரும்பும் கருணாநிதி சற்று நேர ஓய்வுக்குப் பின் மீண்டும் அன்று வரும் மாலை நாளிதழ்கள் அனைத்தையும் பார்வையிடுவது வழக்கம். நாளிதழ்களை வாசித்து முடித்ததும் பல்லாண்டுகளாகத் தொடர்ந்து ஆற்றி வரும் தனது கலைச்சேவைப் பணிகளைத் தொடங்குகிறார்.
- கருணாநிதி தமிழர்களுக்கு அறிமுகமானது அவரது தமிழால்... வசனங்களால். எனவே திரைப்படங்களுக்கு வசனம் எழுதுவதை மட்டும் அவர் ஒருபோதும் விட்டாரில்லை. தமது தள்ளாத வயதிலும் கூட ஸ்ரீராமானுஜர் (மதத்தில் புரட்சி செய்த மகான்) எனும் தொலைக்காட்சித் தொடருக்கு திரைக்கதை எழுதிக் கொண்டிருந்தவர் கலைஞர் கருணாநிதி.
- ஆகவே தினமும் மாலை நாளிதழ்களை வாசித்ததுமே அவர் செய்யக்கூடிய பணி தமது கலைப்பணிகளைத் தொடர்வது தான்.
- அது முடிந்ததும் மீண்டும் அறிவாலயப் பயணம். அங்கே அரசியல் ஆலோசனைகளை முடித்துக் கொண்டு வீடு திரும்பும் கருணாநிதி... இரவு தொலைக்காட்சி செய்திகளையும் விடாமல் கேட்கும் வழக்கம் கொண்டிருந்தார்.
- கலைஞர் நல்ல ஆரோக்யத்துடன் இருந்தவரை அ.ராசா, பொன்முடி, துரைமுருகன் உள்ளிட்டோர் கலைஞருடன் இணைந்து தொலைக்காட்சி செய்திகளை அலசுவது நிகழும்.
- அதன்பிறகும் கூட சளைக்காமல் தனது 93 வயது வரையிலும் கூட தமக்கான இணையதளப் பக்கத்தில் தொண்டர்களுடன் உரையாடும் வழக்கமிருந்திருக்கிறது கலைஞருக்கு. அதற்குப் பின் தான் இரவு உணவு. இரவு உணவுக்குப் பின் கட்சியின் முக்கியத் தலைவர்களுக்கு அடுத்து ஆற்ற வேண்டிய ஆக்கப்பணிகளுக்கான அறிவுரைகளும், ஆலோசனைகளும் வழங்கப்படும்.
- இப்படி தினமும் சூரியன் உதிப்பதற்கு முன்பே எழுந்து விடும் பழக்கம் கொண்ட கலைஞர் இரவிலும் சூரியனை வழியனுப்பிய பின்னரே படுக்கைக்குச் செல்கிறார். தமது கட்சிக்கு சின்னமாக உதயசூரியனைத் தேர்ந்தெடுத்த கலைஞர், வாழ்நாள் முழுதும் அந்தச் சூரியனோடு போட்டியிட்டு உழைக்கவும் தயங்காதவராகவே இருந்திருக்கிறார். அதனால் தான் வெற்றி மேல் வெற்றியாக அவரால் 5 முறை தமிழக முதல்வராகக் கோலோச்ச முடிந்திருக்கிறது.