நீங்கள் நைட்-ஷிப்ட் வேலை செய்கிறீர்களா?

இரவு நேரத்தில் வேலை செய்பவர்களுக்கு பல்வேறு வளர்சிதை மாற்ற நோய்களின் ஆபத்து அதிகம் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்
நீங்கள் நைட்-ஷிப்ட் வேலை செய்கிறீர்களா?

தற்போது பல்வேறு துறைகளில் இரவு நேர வேலை(நைட்-ஷிப்ட்) என்பது சாதாரணமாகி விட்டது. முக்கியமாக ஐ.டி நிறுவனங்களில் பலர் இரவில்தான் அதிக வேலை செய்கிறார்கள். இயற்கைக்கு மாறாக இரவு நேரத்தில் தூங்காமல் விழித்திருப்பதால் பல்வேறு உடல் ரீதியான பிரச்னைகள் ஏற்படுகிறது.

இரவு நேரத்தில் வேலை செய்வதால் வரும் விளைவுகள் குறித்து பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், சமீபத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் உள்பட ஆராய்ச்சியாளர்கள் சிலர், இரவு நேர வேலை செய்பவர்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அவர்களுக்கு தூக்க கோளாறுகள் இருப்பதால், பல்வேறு வளர்சிதை மாற்ற நோய்களின் ஆபத்து அதிகம் இருப்பதாக கண்டறிந்துள்ளனர். இதய நோய், பக்கவாதம் மற்றும் நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது எனக் கூறுகின்றனர்.

'தி அமெரிக்கன் ஆஸ்டியோபதி அசோசியேஷனின் ஜர்னல்' பத்திரிகையில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், இரவு நேரத்தில் வேலை செய்பவர்களில் 9% பேர் ஒரு சில ஆண்டுகளில் வளர்சிதை மாற்ற நோய்களுக்கு ஆளாகின்றனர் என்றும் படிப்படியாக அவர்களுக்கு ஆபத்து அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரவு நேரத்தில் நமது உடல் அமைதியடைவதைத் தடுத்து உடலை இயக்க வைப்பதால் உடல் உறுப்புக்கள் பாதிக்கப்படுகிறது. உடலில் உள்ள ஹார்மோன் சுரப்பில் ஏற்படும் மாற்றத்தினால் மேற்குறிப்பிட்ட நோய்கள் ஏற்படுகிறது என்று ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, முடிந்தவரை இரவு நேரத்தில் விழித்திருப்பதை தவிருங்கள். தவிர்க்க முடியாத பட்சத்தில் இரவு நேர வேலை செய்பவர்கள், வேலையின் இடையே சில மணி நேரம் ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள். அதுவும், நாள்தோறும் ஒரே நேரத்தில் தூங்குவதை வழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும், சோர்வு ஏற்படும்போதும் அவ்வப்போது சிறிது நேரம் ஓய்வு எடுத்துக்கொள்வது நல்லது. நாள் ஒன்றுக்கு 7 முதல் 8 மணி நேரம் தூக்கம் அவசியம். தூக்கத்துடன், சரியான உணவு, உடற்பயிற்சி ஆகியவையும் ஆரோக்கியத்திற்கு தேவை என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com