நீங்கள் நேர்மையாக இருக்க வேண்டுமா?

வாக்குறுதிகள் அளித்தால் நேர்மையாக இருப்பதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக இளம் பருவத்தினரிடையே நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

வாக்குறுதிகள் அளித்தால் நேர்மையாக இருப்பதற்கான வாய்ப்பு அதிகம் என இளம் பருவத்தினரிடையே நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

பிளைமவுத் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உளவியல் பிரிவு ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வின் முடிவுகள், சமீபத்தில் ஒரு இதழில் (Journal of Behavioral Decision Making) வெளியிடப்பட்டது. 

இதில், இளம் பருவத்தினர் நேர்மையாக இருப்பதற்கும், அவர்களிடையே நன்னடத்தையை ஊக்குவிப்பதற்கும் வாக்குறுதிகள் ஒரு சக்திவாய்ந்த கருவியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நேர்மையின்மை சிறிதளவு இருப்பினும், ஒருவருக்கு நம் மீது உள்ள நம்பிக்கையை சீர்குலைக்கும். எதிர்காலத்தில் உறவு விரிசலுக்கும் இது காரணமாக அமையும். மேலும், ஒருவருக்கு மட்டுமின்றி, சமூக அளவில் மோசடிக்கும் இது வழிவகுக்கும். 

2018 ஆம் ஆண்டு நிலவரப்படி, உலகின் இளம் பருவத்தினரில் 20% (சுமார் 25 கோடி பேர்) இந்தியாவில் இருந்தனர். இதில் உலக நாடுகளை ஒப்பிடுகையில் கல்வி தொடர்பான மோசடிகளில் இந்தியர்கள் குறைவாகவே ஈடுபட்டிருந்தனர். இதன் காரணம் குறித்து ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் பல சுவரசியமான விஷயங்கள் தெரிய வந்துள்ளன. 

இந்த ஆய்வில் பங்கேற்றவர்களிடம் ஒரு விளையாட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அதில்,  16 பகடைகளைக் கொண்ட ஒரு பெட்டியில் ஒரு பகடையைத் தேர்வு செய்து, அதில் விழும் எண்ணை கூறவேண்டும். முதல்முறை சாதாரணமாக நடத்தப்பட்ட இந்த விளையாட்டு, இரண்டாவது முறையில், விளையாட்டில் உண்மையாக இருப்பதென பங்கேற்பாளர்களிடம் ஒரு உறுதிமொழி வாங்கப்பட்டது. 

இப்போது, முதல் மற்றும் இரண்டாம் முறை முடிவுகளை ஒப்பிடுகையில், இரண்டாவது தடவை பங்கேற்பாளர்கள் உண்மையாக இருந்துள்ளது மதிப்பெண்கள் வித்தியாசத்தைக் கொண்டு கண்டறியப்பட்டுள்ளது. மேலும், விளையாட்டில் முழுவதும் உண்மையாக இருந்தவர்களுக்கு கூடுதல் புள்ளிகள் மதிப்பெண்களாக வழங்கப்பட்டன. இது நேர்மையற்ற பங்கேற்பாளர்களுக்குக் கூட நேர்மையாக இருக்க ஊக்குவிப்பதாக இருந்தது. 

எனவே, மோசடி விகிதங்கள் மற்றும் நேர்மையற்ற நடத்தைகளைக் குறைப்பதற்கான எளிய கருவியாக வாக்குறுதிகள் இருப்பதாக ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறிப்பிட்ட வாக்குறுதிகளை அளிக்கும்போது நாம் அதனை கடமையாக நினைக்கிறோம். எனவே, அதனை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் தோன்றி நம்மை நேர்மையாக இருக்க வைப்பதாக உளவியல் பேராசிரியர் டாக்டர் பாட்ரிசியா காங்கியெஸர் தெரிவித்தார். 

எனவே, நேர்மையாக இருக்க வேண்டுமெனில், நீங்கள் செய்யும் செயல்களை வாக்குறுதிகளாக நினைத்துக் கொள்ளுங்கள். மற்றவர்களுக்கு செய்ய நினைப்பதை வாக்குறுதிகளாக அளித்து நிறைவேற்ற முற்படுங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com