உணவின் முழு சுவையைப் பெற, கைகளால் சாப்பிடுங்கள்!

உணவைத் தொட்டு ரசித்து ருசித்து சாப்பிடும்போது அதுவொரு அலாதியான சுக அனுபவத்தைத் தருகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
உணவின் முழு சுவையைப் பெற, கைகளால் சாப்பிடுங்கள்!


உணவைத் தொட்டு ரசித்து ருசித்து சாப்பிடும்போது அதுவொரு அலாதியான சுக அனுபவத்தைத் தருகிறது என்றும் அதனால்தான் இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் மக்கள் கைகளால் உண்ணும் பழக்கத்தைக் கொண்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். 

'ஜர்னல் ஆஃப் ரீடைலிங்' என்ற இதழில் வெளியிடப்பட்ட ஆய்வினை அமெரிக்காவின் ஸ்டீவன்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டுள்ளனர்.

இதில், உணவை கைகளினால் உண்பதற்கும், ஸ்பூன் உள்ளிட்ட பொருட்களினால் உண்பதற்கும் உள்ள வித்தியாசம் குறித்து மாணவர்களை வைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஆய்வில், நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மியூன்ஸ்டர் சீஸ் வழங்கப்பட்டது. இதில் கைகளில் நேரடியாக சாப்பிட்டவர்கள் மற்றும் ஸ்பூன் கொண்டு சாப்பிட்டவர்களிடையே உள்ள வித்தியாசத்தின் அனுபவம் பெறப்பட்டது. அதிலும் தங்களுக்குப் பிடித்த சுவையான உணவு என்றால் அதனை நேரடியாக கைகளினால் சாப்பிடுவதை விரும்புகின்றனர். 

கைகளினால் உணவை நேரடியாகத் தொடும்போது, அவர்கள் உணவின் சுவையை உணருகிறார்கள். சுவையை ரசித்து உண்கிறார்கள். மேலும், உணவு எடுத்துக்கொண்டதற்கான ஒரு திருப்தி மனதளவில் ஏற்படுகிறது. அடுத்த முறை சாப்பிடும்போது உணவு மிகவும் விரும்பத்தக்கதாகவும், ஈர்க்கக்கூடியதாகவும் இருக்கிறது. சுவை குறைந்த உணவுகள் கூட கைகளால் சாப்பிடும்போது நல்ல சுவையானதாகத் தெரிகிறது. 

அதேபோன்று சிலர் என்னதான் பிடித்த உணவுகள் கொடுத்தாலும் உடல்நிலையை கருத்தில் கொண்டு குறைவாக சாப்பிடும் சுயக் கட்டுப்பாடு கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். சிலர் தங்கள் எடை, உடல்நிலை பற்றியெல்லாம் கவலைப்படாமல் வாழ்க்கையில் இன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்ற நோக்கில் சுவையான உணவுகளில் தங்களை அடிக்கடி ஈடுபடுத்திக்கொள்கின்றனர் என்று அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இன்றைய நவீன உலகில் பெரிய பார்ட்டிகளில், திருமண விழாக்களில் ஸ்பூன் கொண்டு சாப்பிடுவதை சிலர் நாகரிகமாக கருதுகின்றனர். ஆனால், உணவின் இன்பத்தை ரசித்து உண்ணும் அந்த சுகானுபவம் வேண்டுமானால் உணவை நேரடியாக கைகளால் சாப்பிடுங்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com