கடைகளில் தரும் பைகளுக்குக் காசு தர வேண்டாம்!

வணிக நிறுவனங்களில் பொருள்களை வாங்கும்போது  வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் தரும்  பைக்குக் காசு கொடுக்க வேண்டிய அவசியமில்லை.
கடைகளில் தரும் பைகளுக்குக் காசு தர வேண்டாம்!

வணிக நிறுவனங்களில் பொருள்களை வாங்கும்போது, அவற்றை எடுத்துச் செல்ல  வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் தரும்  பைக்குக் காசு கொடுக்க வேண்டிய அவசியமில்லை.

சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் கருத்தில்கொண்டு, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, பல்வேறு மாநிலங்களில் கடைகளில் பிளாஸ்டிக் பைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தடை காரணமாக, பெரும்பாலான கடைகளில் காகிதப் பைகள், துணிப் பைகள் வழங்குவது அதிகரித்துள்ளது. இதேநேரத்தில், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, பல கடைகளில் பொருள்களை எடுத்துச் செல்லும் பைகளுக்கென குறிப்பிட்ட தொகை விலையாக வசூலிக்கப்படுகிறது. பில் போடும்போது, பைகளுக்கு எனத் தனியே காசு வழங்க நிர்பந்திக்கும்போது நாம் பலரும், வேறு வழியில்லாமல் வெறும் ரூ. 5 தானே, ரூ. 3 தானே என்று கொடுத்துவிட்டு சாதாரணமாக அதைக் கடந்து விடுகிறோம். 

ஆனால், துணிக் கடைகளிலோ அல்லது மற்ற கடைகளிலோ பொருள்கள் வாங்கும்போது, தரப்படும் கடையின் விளம்பரம் அச்சிடப்பட்டிருக்கும் பைகளுக்குக் காசு வசூலிக்கக் கூடாதென நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

இதையும் மீறி இப்போதும் பல கடைகளில் விளம்பரம் அச்சிடப்பட்ட பைகளுக்கும் பணம் வசூலிக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் இதைப் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை.

ஆனால், இதுதொடர்பாக நுகர்வோர் எதிர்ப்புத் தெரிவித்து பணம் செலுத்த மறுக்க முடியும். கேள்வி எழுப்பி நியாயத்தையும் பெறலாம்.

சண்டீகரில் நடந்த ஒரு நிகழ்வை இங்கே சுட்டிக் காட்ட வேண்டும்.

சண்டீகரில் வாடிக்கையாளர் ஒருவர் அங்குள்ள பாட்டா கடையில் ஷூ ஒன்றை வாங்கியுள்ளார். அவருக்கு ரூ. 402 பில் வந்தது. பணம் செலுத்திய பின்னரே ரசீதைப் பார்த்த அவர், காகிதப் பைக்குத் தனியே ரூ. 3 வசூலித்தது தெரிய வந்தது. இதன் பின்னர் சண்டீகரில் உள்ள நுகர்வோர் நீதிமன்றத்தில் அவர் வழக்குத் தொடுத்தார்.

இந்த வழக்கில், வாடிக்கையாளரிடம் பைக்குக் கட்டணம் வசூலித்தது, வழக்கு தொடர்ந்ததற்கான செலவு, வாடிக்கையாளருக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியமைக்கு என அனைத்தும் சேர்த்து பாட்டா நிறுவனம் ரூ. 9 ஆயிரம் அபராதத் தொகையாக செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. 

மேலும், நீதிமன்ற உத்தரவில், வாடிக்கையாளர் கடையில் ஒரு பொருளை வாங்கும்பட்சத்தில், அந்த பொருள்களை எடுத்துச் செல்லும் பைகளை நிறுவனமே வழங்க வேண்டும். அதற்காக வாடிக்கையாளரிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது. பிளாஸ்டிக் பைகள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் அதற்கு ஏற்றவாறு சுற்றுசூழலுக்கு உகந்த மாற்று ஏற்பாடுகளை நிறுவனத்தின் தரப்பில் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. 

இதே போன்று தமிழகத்தில் ஒரு சம்பவத்தில் திருநெல்வேலியில் வாடிக்கையாளர் ஒருவரிடம் காகிதப் பைக்கு ரூ. 7 வசூலித்த துணிக்கடை நிறுவனம் பின்னர் ரூ. 15 ஆயிரம் அபராதம் செலுத்தியுள்ளது.

திருநெல்வேலியைச் சேர்ந்த அப்துல் ரஹ்மான் என்பவர் கடந்த ஜூலை மாதம் அங்குள்ள ரிலையன்ஸ் டிரெண்ட்ஸ் துணிக்கடையில் துணி வாங்கியுள்ளார். துணியைக் கொண்டுசெல்லும் காகிதப் பைக்கு என்று தனியாக 7 ரூபாய் தர வேண்டும் என்று கூறிய கடைக்காரரிடம் அவர் சண்டை போட்டுள்ளார். உங்களுடைய கடை விளம்பரம் அச்சிடப்பட்ட பைகளை நாங்கள் ஏன் விலை கொடுத்து வாங்க வேண்டும் எனக் கேட்டு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். இறுதியில், வேறு வழியின்றி ரூ.7 செலுத்தி பை வாங்கிவிட்டு, ஆதாரத்திற்கு விடியோவையும் மொபைலில் பதிவு செய்தார். 

இதன் பின்னர், நெல்லை நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கின் விசாரணை முடிவில், நீதிமன்றம், ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ரூ. 15 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டது.

மேலும், 'நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின்படி, கடைகளில் கொடுக்கப்படும் பைகளில் விளம்பரம் அச்சிடப்பட்டிருந்தால் அதனை வாடிக்கையாளர்கள் காசு கொடுத்து வாங்க வேண்டிய தேவையில்லை. கடைக்காரர்களும் விளம்பரம் அச்சிடப்பட்ட பைகளை இலவசமாகத் தர வேண்டுமே தவிர, பைகளுக்குக் காசு கேட்டு வாடிக்கையாளர்களை ஒருபோதும் நிர்பந்திக்கக் கூடாது.  

அல்லாமல் விளம்பரம் அல்லாத பைகளைத் தந்து அவற்றுக்காகப் பணமும் பெற்றால் அந்தப் பையில் விலை, தயாரிப்புத் தேதி, காலாவதியாகும் தேதி போன்றவை எல்லாம் குறிப்பிட வேண்டும். இவ்வாறு எதுவுமே குறிப்பிடாமல் சட்டப்படி விற்க முடியாது' என்று நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேபோன்ற மற்றொரு வழக்கில் கடந்த ஜனவரி 3 ஆம் தேதி புணே நுகர்வோர் நீதிமன்றம் வாடிக்கையாளரிடம் பைக்கு ரூ. 8 வசூலித்த காரணத்திற்காக ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ரூ. 30 ஆயிரம் அபராதம் செலுத்த நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுபோன்ற வழக்குகளில் கிடைக்கும் வெற்றிகளால் தற்போது ஓரளவு விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. 

எனவே, துணிக்கடைகள் மட்டுமின்றி, எந்தவொரு பெரிய நிறுவனங்களிலும் பொருள்களை வாங்கும்போது, நிறுவனத்தின் விளம்பரம் அச்சிடப்பட்டிருக்கும் பைகளைத் தந்தால் பணம் கொடுக்க வேண்டியதில்லை. பொருள்களுக்கான தொகையை மட்டும் செலுத்தினால் போதுமானது. ஒருவேளை பைக்குப் பணம் செலுத்தினால் சற்றும் தயங்காமல், சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் புகார் தெரிவித்தோ, நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகியோ தீர்வு காணலாம். இதுபோன்ற விஷயங்களில் நுகர்வோர் விழிப்புணர்வே முக்கியம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com