'பணியிடங்களில் 80% பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர்' - ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

ஹைதராபாத் ஓல்டு சிட்டி பகுதியில் குறைந்த வருமானம் கொண்ட வேலைகளில் ஈடுபடும் பெண்களில் 80 சதவீதம் பேர் பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர்
கோப்புப் படம்
கோப்புப் படம்

ஹைதராபாத் ஓல்டு சிட்டி பகுதியில் குறைந்த வருமானம் ஈட்டும் வேலைகளில் ஈடுபடும் பெண்களில், 80 சதவீதம் பேர் பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர் என்று சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேலும், அவர்களில் பெரும்பாலோர் அமைப்புசாரா துறையில் பணியாற்றுவதால் புகார் அளிக்க அமைப்பு ஏதும் இல்லை என்றும் கூறப்படுகிறது.

'பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல்' குறித்து  ஹைதராபாத்தில் உள்ள ஓல்டு சிட்டி பகுதியில் உள்ள பெண்களிடையே ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.  ஷாஹீன் மகளிர் நலச் சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் சில அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளன. 

குடிசைத் தொழிலாளர்கள், விற்பனையாளர்கள், வீட்டு வேலை செய்பவர்கள் மற்றும் தினசரி கூலித் தொழிலாளர்கள் என கிட்டத்தட்ட 100 பெண்களை தேர்வு செய்து அவர்களின் தரவுகள் சேகரிக்கப்பட்டது. அவர்களிடம் பல்வேறு கேள்விகளும் கேட்கப்பட்டன. அதில், 100 பெண்களில் 91 பெண்கள் தங்கள் பணியிடத்தில் பாதுகாப்பற்ற நிலையை உணர்வதாக தெரிவிக்கின்றனர்.  பாலியல் துன்புறுத்தல் பெரும்பாலான பெண்களுக்கு வாய்மொழியாக, உடல் ரீதியான தொந்தரவாகவும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

அதேபோன்று 80 பெண்கள் ஆபாச வார்த்தைகளால் தாக்கப்பட்டுள்ளனர். 40 பேர் ஆபாச விடியோக்களை காட்டியும், 73 பெண்கள் பயணத்தின்போதும் பாலியல் துன்புறுத்தல்களை எதிர்கொண்டதாகக் கூறினர். தாங்கள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல் குறித்து புகார் அளிக்க அமைப்பு ஏதும் இல்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

அதே நேரத்தில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான சட்டம் குறித்து அவர்களுக்கு எந்த விழிப்புணர்வும் இல்லை என்று ஆய்வாளர்களில் ஒருவரான ஜமீலா நிஷாத் கூறினார். அமைப்பு சாரா  நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படுவதில்லை என்றும் கூறப்படுகிறது. 

மேலும் அதிர்ச்சியூட்டும் ஒரு தகவல் என்னவென்றால், பதிலளித்தவர்களில் 86 பேர், தங்களுக்கு துன்புறுத்தல் கொடுப்பவர்களால் ஏதேனும் பிரச்னை ஏற்படும் என்று எண்ணி எதிர்விளைவுகளுக்கு பயந்து எந்த நடவடிக்கையும் எடுக்க விரும்பவில்லை என்றுகூறியுள்ளனர் . 

அதுமட்டுமின்றி, 40 சதவீதம் பேர், தங்களது இந்த எதிர்மறையான கருத்துகளை வெளியே தெரிவிப்பது குறித்து கவலை தெரிவித்துள்ளனர். அவ்வாறு வெளியே தெரியும் பட்சத்தில் அவர்கள் வேலையை இழக்க நேரிடும் என்றும் அச்சம் கொண்டிருந்தனர்.

ஆய்வில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் நகர்ப்புற சேரிகளைச் சேர்ந்தவர்கள். குறைந்த வருமானம் ஈட்டக்கூடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

நாட்டின் பெண்களுக்கு பாதுகாப்பு குறித்து பல்வேறு அமைப்புகள் இருந்தும் ஹைதராபாத் பகுதியைச் சேர்ந்த பெண்கள் இவ்வாறு கூறியுள்ளது சற்று அதிர்ச்சியைத் தான் ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com