'கலை ஆர்வத்துக்கு மதம் ஒரு பொருட்டல்ல' - கர்நாடக பாரம்பரிய நடனக் கலைஞரான முஸ்லிம் பெண்!

கர்நாடகத்தைச் சேர்ந்த முஸ்லிம் பெண் ஒருவர் அம்மாநில பாரம்பரிய நடனக் கலைகளில் ஒன்றான 'யக்ஷகானா' கற்றுக்கொள்கிறார். 
'கலை ஆர்வத்துக்கு மதம் ஒரு பொருட்டல்ல' - கர்நாடக பாரம்பரிய நடனக் கலைஞரான முஸ்லிம் பெண்!

கர்நாடகத்தைச் சேர்ந்த முஸ்லிம் பெண் ஒருவர் அம்மாநில பாரம்பரிய நடனக் கலைகளில் ஒன்றான 'யக்ஷகானா' கலையை கற்றுக்கொண்டது மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கர்நாடகாவில் பாரம்பரிய நடனக் கலையான 'யக்ஷகானா' முதலில் முழுக்க முழுக்க ஆண் கலைஞர்களால் நடத்தப்படும் ஒன்றாகும். கோயில் திருவிழா மற்றும் முக்கிய பண்டிகை காலங்களில் இரவில் ஆரம்பித்து விடியற்காலை வரை நடக்கும். புராண இதிகாச கதைகள் இதில் இடம்பெறும். 

சமீபத்தில் பெண் கலைஞர்களும் இதில் ஈடுபட்டுள்ளனர். மேலும், யக்ஷகானாவில் நடிப்பவர்களுக்கு முதலில் ஆண்கள் மேக்கப் போடுவார்கள் என்பதால் ஆசாரக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் இதில் நடிப்பதற்கு குடும்பத்தினரிடையே எதிர்ப்பு இருந்தது. அதனால் தற்போது மேக்கப் முதற்கொண்டு, கதாப்பாத்திரங்களுக்குத் தேவையான உடைகள் அனைத்தையும் பெண்களே கவனித்துக் கொள்கின்றனர். சமீபத்தில் முழுவதும் பெண்கள் கொண்ட குழு ஒன்று நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இதில் சுமார் 20 கிலோ எடை கொண்ட உடையை அணிந்து நடிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் அனைத்துக் கட்டுப்பாடுகளையும் மீறி, முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் யக்ஷகானா கற்றுக்கொள்ள முன்வந்து அதனை செயல்படுத்தியும் காட்டியுள்ளார். 

மங்களூருவைச் சேர்ந்த யக்ஷகானா கலைஞரான அர்ஷியா இக்கலையை முழுவதும் கற்றுக்கொண்டுள்ளார். சிறுவயதில் யக்ஷகானா நிகழ்ச்சிகளை பார்த்து ஆர்வம் ஏற்பட்டு கற்றுக்கொண்டதாகத் தெரிவிக்கிறார் அர்ஷியா. 

இதுகுறித்து பேசிய அவர், 'யக்ஷகானா ஒரு பாரம்பரிய இந்தியக் கலை. இது எந்த மதத்துடனும் தொடர்புடையது அல்ல. நான் முதல் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது, எனது சொந்த ஊருக்கு அருகே நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியைப் பார்த்து ஆர்வம் வந்தது. இதனை கற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்பினேன். பின்னர் பள்ளியில் ஒரு ஆசிரியர் மூலமாக நான்காம் வகுப்பில் இருந்து கற்றுக்கொண்டு வருகிறேன்.

ஒரு முஸ்லிமாக இருப்பதால், யக்ஷகானா கற்றுக்கொள்வேன் என்று நினைத்துக்கூட பார்த்ததில்லை. எனினும் எனக்குப் பிடித்த கலையை கற்றுக்கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. உடுப்பியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் 'அசுரர்' என்ற முக்கிய கதாபாத்திரம் எனக்கு வழங்கப்பட்டது. இதுபோன்ற சிறிய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறேன். மேலும் கற்றுக்கொண்டு இக்கலையில் சிறந்த கலைஞராக வர வேண்டும் என்பதே விருப்பம்' என்று தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com