கரோனா தொற்றுநோயால் குறைந்துள்ள சர்க்கரை பயன்பாடு: ஆய்வுத் தகவல்
By DIN | Published On : 11th March 2022 06:11 PM | Last Updated : 11th March 2022 06:11 PM | அ+அ அ- |

கரோனா தொற்றுநோயினால் மக்கள் சர்க்கரையைப் பயன்படுத்துவது குறைந்துள்ளதாக சமீபத்திய கணக்கெடுப்பு கூறுகிறது.
கரோனா பெருந்தொற்று உலகம் முழுவதும் மிகக் கடுமையான சமூகப் பொருளாதார, சுகாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொற்றுநோயால் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாற்றம் என்னவென்றால் மக்களின் உணவு மற்றும் சுகாதார பழக்கவழக்கங்கள்.
தொற்றுநோய் தொடங்கிய காலம் முதல் உணவு மற்றும் சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அடுத்தடுத்த அலைகளினால் வைரஸிலிருந்து தற்காத்துக்கொள்ள மக்களின் உணவு பழக்கவழக்கம் பெருமளவில் மாறியுள்ளதாக ஆய்வுகள் காட்டுகின்றன.
உடல்நலம், உணவு, உடற்பயிற்சி என ஒட்டுமொத்த வாழ்க்கை முறையிலும் மக்களுக்கு அக்கறை ஏற்பட்டுள்ளது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க, பொருந்தா உணவுகளைக் குறைத்து சத்துமிக்க உணவுகளை எடுத்துக்கொள்ளத் தொடங்கியுள்ளனர்.
அதிலும் குறிப்பாக வெள்ளை உணவுகளை நீக்க மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைத்ததன் அடிப்படையில், உப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருள்களின் நுகர்வு குறைந்துள்ளது.
கரோனா காலத்தில் 10ல் 8 பேர் தங்கள் உணவுப் பழக்கத்தை மாற்றிக்கொண்டுள்ளதாக சமீபத்திய ஆய்வு கூறுகிறது.
கணக்கெடுப்பு மேற்கொண்ட 'மேஜிக் லீப்' நிறுவனத்தின் நிறுவனர் பிரதேமேஷ் கூறுகையில், 'இந்த தொற்றுநோய் மக்களின் உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறைகளில் உடனடி தாக்கத்தை ஏற்படுத்தியது. அவர்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவைப் பின்பற்றத் தொடங்கினர்.
ஆய்வில் சர்க்கரை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இணை நோய்கள் மற்றும் குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களுக்கு இந்த வைரஸ் மிகவும் ஆபத்தானது என்பதால், சர்க்கரை நோயாளிகள் உடல் பருமனைத் தவிர்க்கவும், ஆரோக்கியமாக இருக்கவும் தங்கள் உணவில் சர்க்கரையைக் குறைப்பதில் கவனமாக இருந்துள்ளனர். பலர் கீட்டோ டயட்டைப் பின்பற்றத் தொடங்கினர்.
ஒரு கணக்கெடுப்பின்படி, 74 சதவீத மக்கள் தங்கள் உணவில் இருந்து சர்க்கரை உட்கொள்ளலை கட்டுப்படுத்தி இருக்கிறார்கள் அல்லது தவிர்த்திருக்கிறார்கள்' என்று கூறியுள்ளார்.