ஆஸ்பிரின் பக்கவாதத்தைத் தடுக்காது, ரத்தக் கசிவை அதிகமாக்கும்: ஆய்வில் புது தகவல்

குறைந்த அளவு ஆஸ்பிரின் மருந்து எடுத்துக்கொள்வது பக்கவாதத்தைத் தடுக்காது என்று சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ஆஸ்பிரின் பக்கவாதத்தைத் தடுக்காது, ரத்தக் கசிவை அதிகமாக்கும்: ஆய்வில் புது தகவல்

குறைந்த அளவில் ஆஸ்பிரின் மருந்தை எடுத்துக்கொள்வது பக்கவாதத்தைத் தடுக்காது என்று சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மாறாக, மூளையில் அதிக ரத்தக் கசிவை ஏற்படுத்தும் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. 

மூளைத் திசுக்களில் ரத்தக்கசிவை ஏற்படுத்தும் பக்கவாதம் குறித்து அமெரிக்க மருத்துவ சங்கத்தின் 'ஜாமா' (JAMA) இதழில் இந்த ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 

இதன்படி 19,114 முதியவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், 9,525 பேருக்கு ஆஸ்பிரின் மருந்தும் (75மி.கி./நாள்) 9,589 பேருக்கு போலி மருந்தும் வழங்கப்பட்டது. 4.7 வருடங்களுக்குப் பிறகு இரு குழுவிலும் மூளையின் ரத்தம் உறைதலில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என கண்டறியப்பட்டுள்ளது. 

மேலும் ஆஸ்பிரின் மருந்து பயன்படுத்துபவர்களிடம் 38% அதிகமாக மூளையின் திசுக்களில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது. வயதானவர்களிடம் இது பாதிப்பை ஏற்படுத்துவதால் அதன் பயன்பாட்டை நிறுத்த வேண்டும் என்று பரிந்துரைக்கிறது இந்த ஆய்வு.

'பக்கவாதத்தைத் தடுக்க, குறைந்த அளவு ஆஸ்பிரினை நீங்கள் கண்மூடித்தனமாகப் பரிந்துரைக்க முடியாது. ஏனெனில் முதியவர்கள் கீழே விழும்போது தலையில் அடி ஏற்படும்பட்சத்தில் ஆஸ்பிரினின் நன்மைகளையும் பாதிப்புகளையும் ஆராய வேண்டும். ஏனெனில் இது அதிகப்படியான ரத்தப்போக்கு மற்றும் மரணத்திற்கு வழிவகுக்கும்' என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். 

பக்கவாதம் மற்றும் இதய நோய்களைத் தடுக்கும் ஆன்டிபிளேட்லெட் (எதிர் தட்டணுக்கள்) காரணியாக 'ஆஸ்பிரின்' இருக்கிறது. ஆனால் இதனால் ரத்தப்போக்கு அதிகமாவதாக இந்த ஆய்வு கூறினாலும், தற்போது பக்கவாதத்தின் முதல் மற்றும் இரண்டாம் நிலைத் தடுப்பு மருந்தாக பரவலாக ஆஸ்பிரின் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com