கண் திருஷ்டியா? உடனடியாக இதையெல்லாம் செய்யுங்கள்!

கண் திருஷ்டியா அதெல்லாம் மூட நம்பிக்கை என்று நினைப்பவர்கள் உண்டு.
கண் திருஷ்டியா? உடனடியாக இதையெல்லாம் செய்யுங்கள்!

கண் திருஷ்டியா அதெல்லாம் மூட நம்பிக்கை என்று நினைப்பவர்கள் உண்டு. ஆனால் அது உண்மை என்பது பாதிக்கப்பட்டவர்களுக்குத்தான் தெரியும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கண் திருஷ்டிகளால் ஏற்படும் பாதிப்புக்கள் சொல்லி மாளாது.

ஒருவருடைய அறிவு, ஞானம், கல்வி, செல்வம், உடல் ஆரோக்கியம் அல்லது தோற்றப் பொலிவைப் பார்த்து இன்னொருவருக்கு (பெரும்பாலும் இவை தனக்கு இல்லையே என ஏங்குபவர்கள்) ஏற்படும் ஏக்கம் பொறாமையாக மாறுவதால் ஏற்படும் தாக்கம்தான் கண் திருஷ்டி. இப்படி வெளிப்பட்ட அந்த எதிர்மறை எண்ணத்தின் தாக்கத்தால் ஒருவர் சற்று பலவீனமாக இருக்கும் ஏதோவொரு சமயத்தில் பற்றிக் கொள்வது இயல்புதான். கண் ஏறு என்று இதைச் சொல்வார்கள். கல்லடி பட்டாலும் படலாம் ஆனால், கண்ணடி படவே கூடாது என்று சொலவடை உள்ளது. கண் திருஷ்டி இருபது செய்வினைகளுக்குச் சமமாம். அப்படிப்பட்ட திருஷ்டி நம் மீது பட்டுவிட்டால் உடல் உபாதைகள், சண்டை சச்சரவுகள் நேரும். நிம்மதி பறி போகும். நன்றாக சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு உணவைக் கண்டாலே பிடிக்காமல் போகும். அரும்பாடுபட்டு வீடு கட்டியிருப்போம், கண் திருஷ்டி பட்டால் அவ்வீட்டில் உள்ளவர்களுக்கு உடல் நலம் அல்லது மன நலன் பாதிக்கப்படலாம். இப்படி பலருடைய கஷ்டங்களுக்கு மூல காரணம் கண் திருஷ்டிதான். இதிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ள என்ன செய்யலாம்? தொடர்ந்து படியுங்கள்.

இது நம் வீட்டில் பாட்டித் தாத்தா செய்து வந்த வழிமுறைதான். சிலவற்றை கடைபிடிப்பது சுலபம். சில விஷயங்கள் கேட்கும் போது கடினமாக இருந்தாலும் ஒருமுறை செய்து பழகிவிட்டால், பின்பு அதை தொடர்ந்து செய்துவிடலாம். எல்லாவற்றுக்கும் ஆதாரம் நம்பிக்கைதான். இந்த எளிமையான வழிமுறைகளைப் பின்பற்றி பலன் பெறுங்கள். பரிகாரம் செய்யும்போது உங்கள் மனதுக்குப் பிடித்த தெய்வத்தை வேண்டிக் கொண்டு செய்யுங்கள்.

படிகாரம், சுண்ணாம்பு கல், சுக்கு மற்றும் வால் மிளகு இவை நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். நான்கையும் தனித்தனியாக தூளாக்கிக் கொள்ளவும். பின் ஒன்றாக கலக்கவும். தண்ணீரில் கல் உப்பை கரைத்துக் கொள்ளவும். படிகாரக் கலவையை அதில் நன்றாகக் கரைத்து வீட்டில் எல்லா இடங்களிலும் தெளிக்கவும். இரு சக்கர வாகனம், கார் என இயந்திரங்கள் இருந்தால் அதிலும் தெளிக்கவும். வீட்டிலுள்ள அனைவரின் உடல்களிலும் இந்த தண்ணீரைத் தெளிக்கவும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இப்படிச் செய்து வந்தால் கண் திருஷ்டி நம்மை அண்டவே அண்டாது. அதையும் மீறி வந்துவிட்டால், வந்த சுவடு தெரியாது மறைந்துவிடும் என்கிறார்கள் மூத்தோர். 

வெண் கடுகை எடுத்து ஒரு தாம்பாளத்தில் போட்டு, இந்த மந்திரத்தை சொல்லவும், ‘ஓம் தும் துர்காயஹ நமஹ’ அதன் பின் வீட்டை எட்டுப் பகுதியாகப் பிரிக்கவும். முதலில் கிழக்கு வாசல்படியின் அருகே சிறிதளவு இந்தக் கடுகை மேற்சொன்ன மந்திரத்தைச் சொல்லிப் போடவும், அடுத்து அக்னி மூலையில் மந்திரத்தை ஜெபித்து போடவும், அதன் பின் அக்னி மூலைக்கும் கன்னி மூலைக்கும் இடையே சிறிதளவு கடுகை போடவும், கன்னி மூலையில், சிறிதளவு, பின் மத்தியில் போடவும், வாயு மூலையில் சிறிதளவு போடுங்கள். பின்னர் கொஞ்சம் நகர்ந்து நடுவில் போடவும், ஈசான மூலை (வட கிழக்கில்) சிறிதளவு கடுகை போடவும். இப்படி அஷ்ட திக்கிலும் கடுகை போட்டுவிட்டால் போதும், அருமையான பலன்கள் தென்படும். கண் திருஷ்டி ஏற்படாது. ஒவ்வொரு திசையில் போடும்போதும் மந்திரத்தை மறக்காமல் சொல்ல வேண்டும். ஆறு மாததிற்கு ஒரு முறை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் இதைக் கடைப்பிடித்தால் இறை அருள் பெற்று தீய சக்திகளை அண்ட விடாமல் வீட்டையும் குடும்ப உறுப்பினர்களையும் காக்கலாம். 

அடுத்து ஒரு எளிய வழிமுறை. கைப்பிடி அளவு உப்பு, சிறிதளவு கடுகு, நான்கு ஐந்து வர மிளகாய், நம் வீட்டு வாசலில் எடுக்கப்பட்ட மண் ஆகியவற்றை ஒரு ஓலைப் பெட்டி அல்லது அட்டைப் பெட்டியில் போட்டு அதன் மீது காகிதங்கள் போட்டு, வீட்டில் உள்ள அத்தனை பேருக்கும் சுற்றிய பின், ஓலைப் பெட்டியை வாசலில் போட்டு எரித்து விட வேண்டும். 

வாரத்தில் ஒரு முறை இதைப் பின்பற்றுங்கள் - குளிக்க வைத்திருந்த நீரில் உப்பைப் போட்டு கரைத்து அதைக் குளித்தால் எல்லாவித கண் திருஷ்டிகளும் நீங்கும்.

வீட்டில் அனைவருக்கும் வெவ்வேறு பிரச்னைகள் தொடர்ந்து வந்தால், அல்லது சிறு சிறு விபத்துக்கள் நேர்ந்தால் இதைச் செய்யவும். வெண் கடுகுடன் கல் உப்பு ஒன்றாக சேர்த்து நாம் புழுங்கும் இடங்களில் வீடு முழுக்கத் தூவி விட்டு அடுத்த நாள் காலையில் சுத்தமாக கூட்டி எடுத்துவிடவும். பின்பு, மாலை வேறு புதிய வெண் கடுகு மற்றும் கல் உப்பை எடுத்து வந்து மீண்டும் தூவ வேண்டும். இரவு முடிந்ததும், மறுநாள் காலை மற்றும் மாலையில் அதே போல் செய்ய வேண்டும். இதையே தொடர்ந்து மூன்று நாட்கள் செய்யவேண்டும். வெண் கடுகு மிக மிக பலன் தரும். உப்புடன் சேர அதீத பலன்களைத் தரும்.

வர மிளகாய், வால் மிளகு, சுக்கு இவை மூன்றையும் கலந்து நைசாக அரைத்துக் கொள்ளவும். அதனுடன் சேர்ந்து ரெளத்திரமான கடவுள் (காளி, சிவன், பிரத்யங்கரா) இருக்க கூடிய கோவில் மண்ணை சிறிதளவு எடுத்துக் கொள்ளவும் அதில் கலக்கவும். வீட்டில் சாம்பிராணி போடுவது போல சாம்பிராணித் தட்டில் மேற்சொன்ன கலவையைப் போட்டு வீட்டில் முக்கிய இடங்களில் போடவும். சாம்பிராணி போன்ற வாசனை வராது, காட்டமான ஒருவித நெடி வரும் பரவாயில்லை வீட்டில் வாரம் ஒருமுறை இதைச் செய்யலாம்.

வீட்டு வாசலில், நிலைக்கதவின் மீது கண் திருஷ்டி பிள்ளையாரை வைக்கலாம் அல்லது திருஷ்டி பொம்மையைக் கட்டி வைக்கலாம்.

கண் திருஷ்டி நீங்க அமாவாசை அன்று முழுப்பூசணிக்காயை வீட்டு வாசல் மற்றும் வியாபாரத் தலங்கள் வாசலில் போட்டு உடைக்கவும். பாதசாரிகள் மற்றும் வாகனங்களில் படாத இடத்தில், சுற்றுச் சூழலுக்கு ஊறு விளைவிக்காதபடி செய்ய வேண்டும்.

கோவிலில் இருக்கும் புற்று மண் எடுத்துக் கொள்ளவும். அந்தப் புற்று மண் செம்மண்ணாக இருப்பது நல்லது, குறைந்தது இரண்டரை அடி மேலுள்ள புற்றாக அது இருக்க வேண்டும். அதன் மேல்புறத்திலிருந்து மண்ணை எடுக்கவும். அதனுடன் பச்சை கற்பூரம் சேர்க்கவும். கற்பூரம் சேர்க்கும் முன் புத்து மண்ணை நன்றாகச் சலித்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் இரண்டையும் பன்னீரில் கரைத்து முகம், கை கால்களில் கழுவிக் கொள்ளவும். அல்லது முடிந்தால் அந்த நீரில் குளித்துவிடவும். வீடு முழுவதும் இந்த நீரைத் தெளிக்கவும். இதனால் கண் திருஷ்டி மட்டுமல்லாமல் பட்சி தோஷம் இருந்தால், அதுவும் விலகும்.

திரவியப் பட்டையை ஒரு தம்பளரில் பன்னீர், இரண்டு துளி சந்தனாதித் தைலம் ஆகியவற்றுடன் போட்டு இரவு முழுவதும் விட்டுவிடுங்கள். காலையில் இந்தத் தண்ணீரை இயந்திரங்கள், வாகனம் ஆகியவற்றில் தெளித்தால் திருஷ்டி விலகி சுபிட்சம் பெருகும்.

அடுத்து குழந்தைகளுக்கு ஏற்படக் கூடிய கண் திருஷ்டியை எப்படி போக்குவது என்று பார்க்கலாம். 

குழந்தைக்கு கண் திருஷ்டி ஏற்படாமல் இருக்க, நல்ல சுத்தமான கரிசலாங்கண்னி இலைச்சாறிலிருந்து தயாரிக்கப்பட்ட கருப்பு மையைக் குழைத்து நெற்றி, கன்னம், மோவாய், உள்ளங்கை மற்றும் கால்களில் இடவும். 

குளிக்க ஊற்றும் போது கடைசியில் சிறிதளவு தண்ணீரால் சுற்றிப் போடவும். தினமும் இரவில் ஆலம் கரைத்து வைத்து அதில் இரண்டு வர மிளகாய், இரண்டு வெத்தலையைப் போட்டு ஆலம் எடுத்தபின், குழந்தையை தூங்க வைக்க வேண்டும்.

ஐந்து வயதுக்கு மேலுள்ள குழந்தைக்கு உப்பு சுற்றிப் போடலாம். உப்பு என்பது மிகவும் சக்தி வாய்ந்தது. பெரியவர்களுக்குக் கூட உப்பு சுற்றிப் போடுவது வழக்கம். பெண்களுக்கு வெள்ளிக்கிழமை, ஆண்களுக்கு சனிக்கிழமை சுற்றிப் போடுவது நல்லது. கைப்பிடி அளவு கல் உப்பை உள்ளங்கையில் வைத்து வலதும் இடதுமாக தலையைச் சுற்றி, குழந்தையைத் துப்பச் சொல்லி, குளிக்க வைத்துள்ள தண்ணீரில் அந்த உப்பை போட்டு, அதன்பின் அதை கொண்டு போய் வெளியில் ஊற்றி விட வேண்டும்.

பொதுவாகவே கண் திருஷ்டி படக்கூடாது என்றால் சில தற்காப்பு வழிகள் உள்ளன. அது நாம் காலம்தோறும் பழகி வந்த விஷயம்தான். வீட்டில் இருக்கும் போதும் சரி, வெளியில் செல்லும் போதும் சரி நெற்றியில் திருநீறு, திருமண், சந்தனம், குங்குமம் போன்றவற்றை இட்டுக் கொண்டு செல்வதால் நம்மை எவ்வித கண் திருஷ்டியும் எளிதில் பாதிக்காது. அவை ஒரு அரணாக நம்மை பாதுகாக்கும். ருத்ராட்ஷம், ஸ்படிகம், துளசி மாலை போன்றவற்றை அணிந்தால் அவை உடலோடு இருக்கும் போது கண் திருஷ்டி படாது. கால் அல்லது கையில் சிவப்பு அல்லது கருப்பு கயிறு (திருப்பதி கயிறு அல்லது எந்தவொரு கோவிலில் வாங்கியதாகவும் இருக்கலாம்) அணிவது நல்லது. அது எதிர்மறை எண்ணங்களுடன் நம்மை அணுகுபவர்களிடமிருந்து காப்பாற்றும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com