மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

தமிழகத்தில் மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு முடிந்தது.
மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

தமிழகத்தில் தேர்தல் முடிந்தது

தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் இன்று காலை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. வாக்குப்பதிவு தொடங்கியது முதல் நிறைவுபெற்றது வரை தேர்தல் செய்திகளின் முழு விவரம்..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவான்மியூரில் மாநகராட்சிப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் நடிகர் அஜித்.

நாகப்பட்டினம் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வை.செல்வராஜ் தனது வாக்கை செலுத்தினார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த அரசூர் அங்கன்வாடி மையத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குசாவடியால் நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி இந்தியா கூட்டணியின் சார்பில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வை.செல்வராஜ் தனது வாக்கினை முதல் வாக்காக பதிவு செய்தார்.

ஆர்வத்துடன் வாக்களித்த 88 வயது மூதாட்டி

தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கடம்பூர் இந்து நாடார்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச் சாவடி மையத்தில் 88 வயது மூதாட்டி ராமலட்சுமி என்பவர் ஆர்வத்துடன் வந்து வாக்கினை செலுத்தி தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினார்.

முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ. ராஜு தனது ஜனநாயகக் கடமை நிறைவேற்றினர்.

தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதிக்குள்பட்ட கடம்பூர் சிதம்பராபுரம் இந்து தொடக்கப் பள்ளியில் முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினார்

விழுப்புரம் தொகுதியில் வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை (ஏப்.19) காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் விழுப்புரம் (தனி) தொகுதியில் விசிக வேட்பாளர் துரை. ரவிக்குமார், அதிமுக வேட்பாளர் ஜெ. பாக்யராஜ், பாமக வேட்பாளர் எஸ். முரளிசங்கர், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இயக்குநர் மு. களஞ்சியம் உள்ளிட்ட 17 பேர் களத்தில் உள்ளனர்.

கரூர் மக்களவைத் தொகுதியில் அதிகாலை 7 மணி முதலே விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

கரூர் செங்குந்தபுரத்தில் உள்ள மார்னிங் ஸ்டார் பள்ளியில் காலை 7:00 மணிக்கு முதல் வாக்காக அதிமுக வேட்பாளர் எல். தங்கவேல் தனது வாக்கினை பதிவு செய்தார்.

தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு தில்லைநகர் மக்கள் மன்றத்தில் தனது வாக்கை பதிவு செய்தார்.

சென்னை விருகம்பாக்கம் வாக்குச்சாவடியில் வாக்களிக்க வந்த போது பிரேமலதா விஜயகாந்த் விஜயகாந்த்-தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்.

வாக்களித்தப் பின் செய்தியாளர்களுடன் பேசிய பிரேமலதா விஜயகாந்த், மக்களிடம் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. பணம் கொடுப்பது, டோக்கன் கொடுப்பது போன்ற முறைகேடுகளை தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

நடிகர் பிரபு தியாகராய நகர் வாக்குச்சாவடியில் குடும்பத்துடன் வாக்களித்தார்.

விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலையிலுள்ள எம்.ஆர்.ஐ.சி. ஆர்.சி. உயர்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, டாக்டர் பொன். கௌதமசிகாமணி எம்.பி. ஆகியோர் தங்கள் குடும்பத்தினருடன் சென்று ஜனநாயகக் கடமையாற்றினர்.

இதனைத் தொடர்ந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் கனவு நிறைவேறும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

நெல்லை மாவட்டம், காவல்கிணறு ஊராட்சி பெரியநாயகிபுரம் - ஏ.டி.எச் உயர்நிலைப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு அவர்கள் வாக்களித்தார்.

ஈரோடு மோளக்கவுண்டம்பாளையம் அரசுப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்குச்செலுத்திய ஈரோடு தொகுதி திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷ்.

நாமக்கல் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ரகா சு. தமிழ்மணி பரமத்தி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்கை பதிவு செய்தார்.

நாமக்கல் மக்களவைத் தொகுதியில் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று அவர் தெரிவித்தார்.

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த ஓரடியம்புலம் வாக்குச் சாவடியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வாக்களித்தார்.

ஆம்பூர் அருகே வெங்கட் சமுத்திரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரம் சரிவர இயங்காததால் மாற்று இயந்திரம் கொண்டுவரப்பட்டு சுமார் ஒரு மணி நேரம் காலதாமதமாக வாக்குப்பதிவு தொடங்கப்பட்டது.

வாக்களித்தார் முதல்வர் ஸ்டாலின்!

சென்னை தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி. கல்லூரியில் மனைவி துர்கா ஸ்டாலினுடன் இணைந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்.

கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் அகஸ்தீஸ்வரம் அரசுப் பள்ளியில் தனது வாக்கினை செலுத்தினார்

சிவகங்கை சட்டப்பேரவை தொகுதி சிவகங்கை அருகே காஞ்சிரங்கால் தொடக்கப்பள்ளியில் வாக்குப்பதிவு தொடங்கிய போது மின்னணு வாக்குப் பதிவு இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால் சுமார் 30 நிமிடங்கள் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது

ஆற்காட்டில் எம்எல்ஏ ஈஸ்வரப்பன் வாக்களிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ள வாக்குச்சாவடியில் ஆற்காடு சட்டப்பேரவை உறுப்பினர் தனது பெற்றோர் மகளுடன் சென்று தனது வாக்கைப் பதிவு செய்தார்

கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் விவி பேட் இயந்திரத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக ஒரு மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.

அல்லிக்காரன்பாளையத்தில் எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி வாக்கு செலுத்தினார்.

அவிநாசி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட அன்னூர் ஒன்றியம், அல்லிக்காரன் பாளையத்தில் உள்ள பள்ளியில் வால்பாறை எம்.எல்.ஏ அமுல் கந்தசாமி இன்று வாக்கு செலுத்தினார்.

தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நெற்குன்றத்தில் உள்ள எம்.ஆர். மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் வாக்கு செலுத்தினார்.

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் தனது வாக்கினை பதிவு செய்தார்.

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் காளியம்மாள், நாகை நகராட்சிக்கு உள்பட்ட டாட்டா நகர் வாக்குச்சாவடி மையத்தில் தனது வாக்கைப் பதிவு செய்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலத் தலைவர் ரா. முத்தரசன் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வேளூர் அரசுப் பள்ளி வாக்குச்சாவடியில் தனது வாக்கைப் பதிவு செய்தார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த தளிக்கோட்டை அரசு நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குசாவடியில் , தமிழக தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தனது வாக்கினை செலுத்தினார்.

திருப்பூர் பத்மாவதிபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் தனது வாக்கை பதிவு செய்த திருப்பூர் மக்களவைத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கே. சுப்பராயன்.

பவானி அருகே கவுந்தபாடி அருகே உள்ள வேலம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் முன்னாள் அமைச்சரும், பவானி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினருமான கே.சி. கருப்பணன் தனது வாக்கினை செலுத்தினார்.

தனது மனைவி தேவி, மகன் யுவராஜா, மருமகள் சிபியா ஆகியோருடன் வரிசையில் காத்திருந்து வாக்கினை செலுத்தினார். தொடர்ந்து, அவர் கூறுகையில் 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.

சென்னை அடையாறு காமராஜர் அவென்யூவில் உள்ள பள்ளியில் வாக்களித்தார் திராவிட கழகத் தலைவர் கே. வீரமணி.

உடல் நலக் குறைவால், கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி வ. ஜெயராமன் அவரது சொந்த ஊரான திப்பம்பட்டி கிராமத்தில் வாக்குச் செலுத்தினர்.

கரூர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி தனது சொந்த ஊரான பெரிய திருமங்கலத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் தனது வாக்கினை செலுத்தினார்.

தூத்துக்குடி அருகே உள்ள பொட்டலூரணி கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.

ஈரோடு கச்சேரி வீதி மாநகராட்சி பள்ளியில் வாக்களித்த மூன்று மதங்களை சேர்ந்த தோழிகள்.

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி திமுக கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் கே. நவாஸ்கனி தனது சொந்த ஊரான பெருநாழி அடுத்துள்ள குருவாடி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் தன் வாக்கினை பதிவு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அவர், "திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் மிகப்பெரிய வெற்றி பெரும். ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் கடந்த முறையை விட இந்த முறை சிறப்பான வரவேற்பு உள்ளது. கடந்த முறையை விட இந்த தேர்தலில் அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் நான் வெற்றி பெறுவேன்". என்று தெரிவித்தார்.

சிவகங்கை தொகுதிக்குள்பட்ட சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் முதல் வாக்காளராக குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் வாக்களித்தார்.

ஈரோடு நாடாளுமன்றத் தேர்தலில் பெரியார் நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிஎஸ்ஐ மகளிர் மேல்நிலை ப்பள்ளியில் உள்ள 224 எண் வாக்குச்சாவடியில் 88 வயது வேதநாயகி என்ற முதியவர் தனது மகன் விஜயகுமாருடன் ஆட்டோவில் வந்து நான்கு சக்கர நாற்காலியில் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தார்.

திண்டுக்கல் புனித லூர்து அன்னை மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் 81 வயதான தனது பாட்டி அமலோற்பவ மேரியை வாக்களிக்க அழைத்து வந்த பேத்தி ஜீவிதா.

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூரில் மாநில தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் வாக்களித்தார்.

அரியலூர் மாவட்டம் அங்கனூரில் வாக்களித்தார் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது மனைவி கிருத்திகாவுடன் தேனாம்பேட்டையில் உள்ள பள்ளியில் வாக்களித்தார்

நாமக்கல் மக்களவைத் தொகுதியில் காலை 11 மணி நிலவரப்படி 29.72 சதவீத வாக்குகள் பதிவு

வெயிலின் தாக்கம் அதிகமாகவுள்ளதால் பெரும்பாலான வாக்குச்சாவடிகள் வெறிச்சோடி உள்ளன.

கரூர் மக்களவைத் தொகுதியில் காலை 11 மணி நிலவரப்படி 28.8 சதவீத வாக்குகள் பதிவாகின.

தமிழகத்தில் காலை 11 மணி நிலவரப்படி 24.37% வாக்குகள் பதிவாகியுள்ளது.

சென்னையில் வாக்குப்பதிவு மந்தமாக நடைபெற்று வருகிறது.

காலை 11 மணி நிலவரப்படி வடசென்னையில் 16.37%, தென்சென்னை 17.71%, மத்தியசென்னை 15.80% வாக்குகள் பதிவாகியுள்ளது.

புதுச்சேரியில் 11 மணி நிலவரப்படி 28.10 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

சூரியனார் கோயில் ஆதீனம் வாக்களித்தார்.

ராமநாதபுரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ் கனி மூன்று லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் நிச்சயம் வெற்றி பெறுவார் என்று திருச்சியில் வாக்களித்தப் பின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சித் தலைவர் காதர் மொய்தீன் தெரிவித்தார்.

விளவங்கோடு தொகுதி இடைத் தேர்தல் 11 மணி நேர நிலவரப்படி 17.09% வாக்குகள் பதிவாகியுள்ளது.

சென்னை அருகே பனையூர் குடுமியாண்டி தோப்பில் உள்ள அரசுப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது மனைவி மம்தா சர்மா உடன் வாக்களித்தார் தமிழக காவல்துறையின் தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால்.

விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் பகல் 11 மணி நிலவரப்படி 24.53 சதவீத வாக்குகள் பதிவு.

திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் பகல் 11 மணி நிலவரப்படி 23.04 சதவீதம் வாக்குப்பதிவு.

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் பகல் 11 மணி நிலவரப்படி 24.04 சதவீதம் வாக்குப்பதிவு.

பகல் 11 மணி நிலவரப்படி, கோவையில், 23.13% பொள்ளாச்சியில் 21.61%, ஈரோட்டில் 28.29%, நீலகிரியில் 21.69% வாக்குகள் பதிவாகியுள்ளன.

சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் காலை 11 மணி நிலவரப்படி 19.16 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

வேலூர் மக்களவைத் தொகுதி காலை 11 மணி நிலவரப்படி 23.55 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் 11 மணி நிலவரப்படி 23.93 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம், உடுமலை சாலையில் உள்ள சிஎஸ்ஐ மகளிர் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் வாக்களித்தார்.

சேலத்தில் வாக்களிக்க வந்த இரு முதியோர் மயங்கி விழுந்து மரணம்

சேலம் மக்களவைத் தொகுதியில், இருவேறு வாக்குச்சாவடிகளில், வாக்களிக்க வந்த முதியவர் இருவர் மயங்கி விழுந்து மரணமடைந்தனர்.

பேச்சிப்பாறை மலைப்பகுதிகளில் வசிக்கும் காணி பழங்குடி மக்கள் பேச்சிப்பாறை அணை வழியாக படகில் வந்து பேச்சிப்பாறை அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடியில் வாக்களித்தனர்.

மக்களவைத் தேர்தல் இன்று தொடங்கியுள்ள நிலையில், ஜனநாயகத் திருவிழாவைக் கொண்டாடும் வகையில் கவன ஈர்ப்புச் சித்திரம்(டூடுல்) வெளியிட்டு சிறப்பித்துள்ளது கூகுள் நிறுவனம்.

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வேளச்சேரியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.

மேற்குவங்கத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு: கல்வீச்சு, கடத்தல், தீவைப்பு

மேற்கு வங்கத்தில், கூச் பெஹார், அலிபுர்தௌர், ஜல்பைகுரி ஆகிய மக்களவைத் தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், வன்முறை நடந்துள்ளது.

மணிப்பூரில் பதற்றம்: வாக்குச் சாவடியில் துப்பாக்கிச்சூடு!

மணிப்பூரில் உள்ள மொய்ராங்கில் உள்ள தமன்போக்பியில் உள்ள வாக்குச் சாவடியில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றதால் அங்கு பதற்றம் நிலவி வருகின்றன.

சென்னை, நந்தனம் அரசு உயர்நிலைப் பள்ளியில் வாக்களித்தார் இந்திய கம்யூ. மூத்த தலைவர் இரா. நல்லகண்ணு.

2024 - மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், பிற்பகல் 1மணி நிலவரப்படி நாகையில் 42.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் மதியம் 1 மணி நிலவரப்படி 39.11 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

தமிழகத்தில் மதியம் 1 மணி நிலவரப்படி 40.05% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக தருமபுரி தொகுதியில் 44.08 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக மத்தியசென்னையில் 32.31 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 35.14 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையத் தலைவர் சத்தியபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 1 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு விவரம்:

தருமபுரி 44.08%, கள்ளக்குறிச்சி 44%, நாமக்கல் 43.66%, ஆரணி 43.62%, கரூர் 43.60%, பெரம்பலூர் 43.32%, சேலம் 43.13%, விழுப்புரம் 42.89%, விருதுநகர் 42.89%, ஈரோடு 42.23%, சிதம்பரம் 42.09%, திண்டுக்கல் 41.97, அரக்கோணம் 41.92%, கிருஷ்ணகிரி 41.55%, திருவண்ணாமலை 41.46%, நாகப்பட்டினம் 41.43%, பொள்ளாச்சி 41.34%, தேனி 41.24%, வேலூர் 41.24%, திருப்பூர் 40.96%, தஞ்சாவூர் 40.81%, மயிலாடுதுறை 40.77%, கடலூர் 40.32, கன்னியாகுமரி 40.24%, சிவகங்கை 40.15, தென்காசி 40.15%, நீலகிரி 40.14%, திருவள்ளூர் 40.12%, திருச்சி 39.91%, ராமநாதபுரம் 39.60%, கோவை 39.51%, காஞ்சிபுரம் 39.41%, தூத்துக்குடி 39.06%, திருநெல்வேலி 38.27%, ஸ்ரீபெரும்புதூர் 37.40%, மதுரை 37.11%, வடசென்னை 35.09%, தென்சென்னை 33.93%, மத்தியசென்னை 32.31.

மக்களவைத் தேர்தல் - 2024க்கான வாக்குப்பதிவு பிற்பகல் 3 மணி நிலவரப்படி நாகையில் 54.07 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் 59.02%, மயிலாடுதுறையில் 50.91% வாக்குகள் பதிவாகியுள்ளன.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 51.41% வாக்குகள் பதிவாகியுள்ளது.

புதுச்சேரியில் மதியம் 3 மணி நிலவரப்படி 58.97% வாக்குகள் பதிவாகியுள்ளன: தேர்தல் ஆணையம்

வாக்குச்சாவடிக்கு மனைவியுடன் சென்று வாக்களிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் நடிகர் சூரி திரும்பினார்.

விருதுநகர் மக்களவைத் தொகுதி - வாக்கு பதிவு நிலவரம்

பிற்பகல்: 3 மணி

1. விருதுநகர்- 52.29%

2. திருப்பரங்குன்றம் - 51.52%,

3. திருமங்கலம் - 49%,

4. சாத்தூர் - 56.02%,

5. சிவகாசி- 52.85%,

6. அருப்புக்கோட்டை - 54.18%,

மொத்தம் - 52.47%

திண்டுக்கல் மக்களவைத் தொகுதி 3 மணி நிலவரம்

பழனி - 52.93

ஒட்டன்சத்திரம் - 58.25

ஆத்தூர் - 58.26

நிலக்கோட்டை - 53.26

நத்தம் - 54.21

திண்டுக்கல் - 49.13

பாஜக ஆதரவு வாக்காளரின் பெயர்கள் நீக்கம்: அண்ணாமலை

பாஜக ஆதரவு வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். கோவை தொகுதியில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லை. கோவையில் தேர்தல் ஆணையத்தின் களப்பணி சரியாக இல்லை. வெளிநாடுகளில் இருந்து வாக்களிக்க வந்தோரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லை என்றார்.

நாகை தொகுதி 5 மணி நிலவரம்

நாகை மக்களவைத் தேர்தல் - 2024 க்கான வாக்குப்பதிவு மாலை 5 மணி நிலவரப்படி 65.06 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

பாமக வேட்பாளர் பாலு தர்ணா

ராணிப்பேட்டை மோட்டூர் பகுதி வாக்குச்சாவடியில் பாமக வேட்பாளர் பாலு தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். திமுகவினர் கள்ள ஓட்டு போடுவதாகக் கூறி அதிகாரிகளை கண்டித்து அவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

வேங்கைவயலில் இதுவரை யாரும் வாக்களிக்கவில்லை

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராம வாக்குச்சாவடியில் இதுவரை யாரும் வாக்களிக்க வரவில்லை. 561 வாக்காளர்கள் உள்ள வேங்கைவயல் வாக்குச்சாவடியில் இறையூரைச் சேர்ந்த 8 பேர் மட்டுமே வாக்குப்பதிவு செய்துள்ளனர். வாக்குகளை செலுத்தக் கோரி இரு கிராம மக்களுடன் தேர்தல் அதிகாரிகள் சமரசப் பேச்சுவார்தையில் ஈடுபட்டுள்ளனர்.

ஏகனாபுரத்தில் 17 வாக்குகள் மட்டுமே பதிவு

காஞ்சிபுரம் ஏகனாபுரத்தில் தற்போது வரை 17 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர்.

மாலை 5 மணி நிலவரப்படி 63.20 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வாக்குப்பதிவு முடிந்தது

தமிழகத்தில் மொத்தமுள்ள 39 மக்களவைத் தொகுதிகளிலும், புதுவையிலும் மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு முடிந்தது.

தமிழகம் உள்பட நாடு முழுவதும் 102 தொகுதிகளில் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. ஒரு சில வாக்குச்சாவடிகளைத் தவிர்த்து வாக்குப்பதிவு பொதுவாக அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது.

வேங்கைவயலில் வாக்களித்த மக்கள்

வேங்கைவயலில் கடைசி நேரத்தில் வாக்களிக்க வந்த மக்களால், வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் தேர்தலை புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு கடைசி நேரத்தில் வாக்களித்தனர்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com