செல்வாக்கை தக்க வைக்குமா காங்கிரஸ்?

பஞ்சாபில் மொத்தம் 13 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இவை அனைத்திற்கும் ஒரே கட்டமாக மே 19-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.
செல்வாக்கை தக்க வைக்குமா காங்கிரஸ்?

பஞ்சாபில் மொத்தம் 13 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இவை அனைத்திற்கும் ஒரே கட்டமாக மே 19-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. விவசாயிகளின் போராட்டம், வேலையின்மை, போதைப்பொருள்களுக்கு இளைஞர்கள் அடிமையாகி வருவது, பாலாகோட் துல்லியத் தாக்குதல் போன்றவை தேர்தல் களத்தில் மக்களின் மனங்களில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய விஷயங்களாக உள்ளன. 
இங்கு சீக்கியர்கள் 57.69% இருக்கின்றனர். ஹிந்துக்கள் 38.49% உள்ளனர். இவர்கள் தவிர்த்து பெளத்தர்கள், சமண மதத்தவர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் உள்ளிட்டோர் மாநிலத்தில் வாழ்கின்றனர்.

கடந்த 2017-இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அபார வெற்றி தந்த ஊக்கத்தில் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. தில்லியில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைப்பது குறித்து காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தியபோது, பஞ்சாபிலும் கூட்டணி சேர ஆம் ஆத்மி விருப்பம் தெரிவித்திருந்தது. ஆனால், பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் கறாராக எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த முயற்சியை காங்கிரஸ் மேலிடம் கைவிட்டது. அந்த அளவுக்கு செல்வாக்குள்ள தலைவராக முதல்வர் அமரீந்தர் சிங் உள்ளார்.
மாநிலத்தில், விளிம்பு நிலையில் உள்ள 5.83 லட்சம் விவசாயிகளின் ரூ.4,736 கோடி கடன்களை ரத்து செய்துள்ளதாக பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது. எனினும், முழுமையாக கடன் ரத்து செய்யப்பட வேண்டும், விவசாய நிலங்கள் ஏலம் விடப்படுவதை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் தொடங்கிய மறியல் போராட்டமானது ரயில் நிறுத்தம் வரை 38 ரயில்களை நிறுத்தும் அளவுக்கு பூதாகரமானது. பின்னர் உயர்நீதிமன்றம் தலையிட்டு போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தது.
பாராட்டத் தகுந்த அமரீந்தர் அரசு மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட விவசாயிகளுக்கான உதவித் தொகை திட்டத்தை ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் போன்ற காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் பெயரளவுக்கு கூட கண்டுகொள்ளவில்லை. ஆனால், பஞ்சாபில் அதை முழுவீச்சில் செயல்படுத்திய அமரீந்தர் அரசு, மொத்த எண்ணிக்கையில் 73 சதவீத விவசாயிகளை பயனடைய வைத்துள்ளது.
காங்கிரஸ் அரசு பொறுப்பேற்ற பிறகு, 552 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், 26,088 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார். சுமார் 5.76 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். எனினும், வேலையின்மை, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்டவை தீராத பிரச்னைகளாகவே நீடிக்கின்றன.
மற்றொரு பக்கம், மின் கட்டணத்தை உயர்த்தியாக வேண்டிய கட்டாய சூழலுக்கு இடையே, தேர்தலை முன்னிட்டு அதை காங்கிரஸ் அரசு ஒத்திவைத்துவிட்டது.
மொத்தத்தில் மாநில அரசின் மீது ஒருசில விஷயங்களில் மக்களுக்கு அதிருப்தி இருந்தாலும், தேர்தல் களத்தில் காங்கிரஸ் கட்சியே முன்னோக்கி செல்கிறது என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

அகாலி தளம் - பாஜக கூட்டணி
தேசிய அரசியலில் பாஜகவுக்கு 21 ஆண்டுகால (1998 முதல்) பழம்பெரும் நண்பனாக திகழுகிறது அகாலி தளம் கட்சி. பெரிய அளவிலான கருத்து வேறுபாடுகளும், மோதல்களும் இல்லை என்றால் மட்டுமே இது சாத்தியம். பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சியை பிடிப்பதற்கு முன், இதே கூட்டணி 10 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்திருக்கிறது. இப்போது அமரீந்தர் அரசு மீது எந்தவிதமான அதிருப்திகள் இருக்கின்றனவோ, அவையேதான் அச்சு பிசகாமல் இவர்கள் மீதும் இருந்தது. கூடுதலாக, அகாலி தளம் கட்சி குடும்ப அரசியல் செய்கிறது என்ற குற்றச்சாட்டும் உண்டு.
அதே சமயம், அகாலி தளமும், பாஜகவும் பரஸ்பரம் விசுவாசமிக்க கூட்டணிக் கட்சிகள் என்பதே அவர்களுக்கான பலம். மாநில அரசியல் களம், முதல்வர் அமரீந்தருக்கு சாதகமானதாக தெரிந்தாலும், தேசிய அளவில் யார் ஆள வேண்டும் என்று மக்கள் விரும்புவதைப் பொறுத்து அகாலி தளம் - பாஜக கூட்டணியின் வெற்றி, தோல்வி நிர்ணயிக்கப்படும் என்பதில் ஐயம் இல்லை. 
பஞ்சாபில் உள்ள பதான்கோட், உரி மற்றும் ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா ஆகிய இடங்களில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களையும், அதைத்தொடர்ந்து நரேந்திர மோடி அரசு மேற்கொண்ட துல்லியத் தாக்குதல்களையும் ஒப்பிட்டு எடை வைத்து பஞ்சாப் மக்கள் வாக்களிக்கக் கூடும்.

நம்பிக்கையில் ஆம் ஆத்மி 


தில்லிக்கு அடுத்ததாக, ஆம் ஆத்மி கட்சிக்கு பலமான செல்வாக்கு உள்ள மாநிலமாக பஞ்சாப் இருக்கிறது. கடந்த மக்களவைத் தேர்தலில் முதல்முறையாக இங்கு தனித்துப் போட்டியிட்டபோதே 4 இடங்களைக் கைப்பற்றி அசத்தியது ஆம் ஆத்மி கட்சி. ஆனால், அதற்கு அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் பெரிய அளவிலான வெற்றிகள் கிடைக்கவில்லை. அது தவிர, வாக்கு சதவீதம் சற்று குறைந்தது; இருபதுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் வைப்புத் தொகையை இழந்தனர்.
இத்தகைய சூழலில், மக்களவைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர ஆம் ஆத்மி கட்சி முயற்சித்தது. ஆனால், அது பலன் அளிக்கவில்லை. அதே சமயம், ஊழலை ஒழிக்கும் நோக்கத்தில் இருந்து கட்சி வழிதவறிச் செல்வதாக இரண்டாம் கட்டத் தலைவர்கள் பலர் கட்சித் தலைமை மீது நேரிடையாக விமர்சனங்களை முன்வைக்கின்றனர். 
தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு குறிப்பிடத்தக்க வாக்குகள் கிடைக்கும் என்றாலும், அது வெற்றிக்கு வழிவகுக்குமா என்பது சந்தேகமே. ஆனால், காங்கிரஸ் மற்றும் அகாலி தளம் - பாஜக அணிகளின் வெற்றி தோல்விகளை நிர்ணயிப்பதாக ஆம் ஆத்மி பிரிக்கும் வாக்குகள் இருக்கும் என்பது நிச்சயம்.

நவ்ஜோத் சிங் சித்து


கடந்த 2004 மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் வெற்றி பெற்றதன் மூலமாக அரசியலில் நுழைந்த கிரிக்கெட் வீரர். கசப்புடன் பாஜகவைவிட்டு வெளியேறிய இவர், 2016-இல் ஆம் ஆத்மி கட்சியில் இணைவார் என்று கூறப்பட்டது. ஆனால்  காங்கிரஸ் கட்சிக்கு அணி மாறிவந்து, பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலமாக அமைச்சரானவர். இவரது செயல்பாடுகளும், சர்ச்சைக்குரிய பேச்சுகளும் பஞ்சாப் அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்துவதாகவே அமைகின்றன. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் பதவியேற்பு விழாவுக்கு சென்றபோது, அந்நாட்டு ராணுவத் தளபதியை கட்டித் தழுவியது பெரும் சர்ச்சையாக அமைந்தது. 
அரசியல் களத்தில் முதல்வர் அமரீந்தர் சிங்கின் நிலைப்பாடுகளுக்கு, நேர் மாறான கருத்துகளை சித்து முன்வைப்பதால் இருவருக்கும் இடையே பனிப்போர் நிலவுகிறது. அதே சமயம், சித்துவின் மனைவி நவ்ஜோத் கெளர் சித்துவுக்கு, தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் கட்சி வாய்ப்பளிக்காத நிலையில், கட்சி நடவடிக்கைகளில் இருந்து சித்து சற்று விலகி நிற்கிறார்.

பிரகாஷ் சிங் பாதலும்  குடும்ப அரசியலும்
1947-இல் தொடங்கி நீண்ட, நெடிய அரசியல் அனுபவங்களைக் கொண்ட மூத்த தலைவர் இவர். பஞ்சாப் முதல்வராக 4 முறை பதவி வகித்துள்ளார்.  தொடக்கத்தில் ஊராட்சி தலைவராக இருந்து, அதன் பின்னர் படிப்படியாக முன்னேறி தலைமை பதவிக்கு வந்தவர். அதே சமயம், குடும்ப அரசியலை ஊக்குவிப்பதாக விமர்சிக்கப்படுபவர். பிரகாஷ் சிங் பாதலின் மகன், சுக்பீர் சிங் பாதல், அகாலி தளம் கட்சியின் தலைவராக உள்ளார். கடந்த காலங்களில் பஞ்சாபின் துணை முதல்வராகவும் பதவி வகித்திருக்கிறார். இவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உண்டு. சுக்பீரின் மனைவி ஹர்ஸிம்ரத் கெளர் மத்திய அமைச்சராக உள்ளார். ஹர்ஸிம்ரத்தின் சகோதரர் விக்ரம் சிங் எம்எல்ஏ-வாக இருக்கிறார்.

மொத்த மக்கள்தொகை 2.77 கோடி
மொத்த வாக்காளர்கள் 2.03 கோடி
மக்களவைத் தொகுதிகள் 13
சட்டப்பேரவைத் தொகுதிகள்117

கேப்டன் அமரீந்தர் சிங்
பாட்டியாலா மன்னர் குடும்பத்து வாரிசு இவர். இந்திய ராணுவத்தின் சீக்கிய படைப் பிரிவில் கேப்டனாக பணியாற்றிய அமரீந்தர் சிங், 1965-இல் பாகிஸ்தானுக்கு எதிரான போரில் பங்கெடுத்தவர். தற்போது பஞ்சாப் முதல்வராகவும், மாநில காங்கிரஸ் தலைவராகவும் இருக்கிறார். 
புல்வாமா பயங்கரவாதத் தாக்குதல், பாலாகோட் துல்லியத் தாக்குதல் போன்ற விஷயங்களில் மத்திய அரசை விமர்சித்து, காங்கிரஸ் அரசியல் செய்வதாக பாஜக குற்றம்சாட்டுகிறது. ஆனால், அத்தகைய குற்றச்சாட்டுகள் அமரீந்தரிடம் எடுபடாது. 
உண்மையில், உள்ளூர் அரசியல் விமர்சனங்களைத் தாண்டி தேசியப் பிரச்னைகளை அணுகுபவர் அமரீந்தர் சிங் என்பதற்கு அவரது பேச்சுகளே சாட்சி. 


பலசிஆர்பிஎப் வீரர்களை பலி வாங்கிய புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலைக் கண்டித்து சட்டப்பேரவையில் அமரீந்தர் சிங் பேசும்போது, பாகிஸ்தான் ராணுவத் தளபதி பாஜ்வாவுக்கு வெளிப்படையாக ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நீங்கள் பஞ்சாபி இனத்தவர் என்றால், நாங்களும் பஞ்சாபியர்கள்தான். உங்களுக்கு தைரியம் இருந்தால் பஞ்சாப் எல்லைக்குள் நுழைந்து பாருங்கள். பிறகு, உங்களை வைக்க வேண்டிய இடத்தில் வைத்துவிடுவோம் என்று எச்சரித்தார்.
அதேபோல் மற்றொரு சம்பவம் - இந்திய விமானப் படை பாலாகோட்டில் நிகழ்த்திய பதிலடித் தாக்குதலில் கொல்லப்பட்ட ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாதிகளின் எண்ணிக்கை குறித்து காங்கிரஸ் தலைவர்கள் பலரும் விமர்சித்தார்கள்.
 தாக்குதலையும் பலியான பயங்கரவாதிகள் எண்ணிக்கையையும் சந்தேகித்து செய்தியாளர்கள் கேள்விகளை முன்வைத்தபோது, நெத்தியடியாக பதில் அளித்தார் கேப்டன். எண்ணிக்கை ஒன்றாக இருந்தால் என்ன? 100-ஆக இருந்தால் என்ன? நம் தேசத்தின் அப்பாவி வீரர்கள் கொல்லப்படுவதை இந்தியா பொறுத்துக் கொள்ளாது என்ற செய்தி இந்த தாக்குதல் மூலம் உரத்த குரலில், தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது என்றார்.
அமரீந்தரின் மனைவி பிரணீத் கெளர், பாட்டியாலா தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்கு முன்பும், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தின்போது அத்தொகுதியில் எம்.பி.யாக இருந்த அவர், மத்திய இணையமைச்சராக பதவி வகித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com