அனந்த்நாக் ஒரே தொகுதிக்கு 3 கட்டத் தேர்தல்

நாட்டின் தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக, ஒரே தொகுதியில் 3 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அது, ஜம்மு-காஷ்மீரிலுள்ள அனந்த்நாக் மக்களவைத் தொகுதியாகும்.
அனந்த்நாக் ஒரே தொகுதிக்கு 3 கட்டத் தேர்தல்

நாட்டின் தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக, ஒரே தொகுதியில் 3 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அது, ஜம்மு-காஷ்மீரிலுள்ள அனந்த்நாக் மக்களவைத் தொகுதியாகும். தெற்கு காஷ்மீரில் அமைந்திருக்கும் இத்தொகுதி, சில ஆண்டுகளாக பயங்கரவாதிகளின் ஆதிக்கப் பகுதியாக உருவெடுத்துள்ளது.

இதன் காரணமாக, அனந்த்நாக் தொகுதிக்கு 3 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அனந்த்நாக், குல்காம், சோபியான், புல்வாமா என 4 மாவட்டங்களில் பரவியுள்ள இந்த தொகுதியில், மொத்தம் 16 சட்டப் பேரவை தொகுதிகள் அடங்கியுள்ளன. இதில், அனந்த்நாத் மாவட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் கடந்த 23-ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. குல்காம் மாவட்டத்தில் ஏப். 29-ஆம் தேதியும், சோபியான், புல்வாமா ஆகிய இரு மாவட்டங்களில் மே 6-ஆம் தேதியும் அடுத்தடுத்த கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெறவுள்ளன. இந்த 4 மாவட்டங்களும் பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. அனந்த்நாக் மக்களவைத் தொகுதியில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 13 லட்சம். இதில் ஆண் வாக்காளர்கள் சுமார் 6.8 லட்சம் பேர். பெண் வாக்காளர்கள் சுமார் 6.1 லட்சம் பேர்.

களத்தில் 18 வேட்பாளர்கள்

 மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெஹபூபா முஃப்தி உள்பட மொத்தம் 18 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மெஹபூபாவின் சொந்த ஊர், இந்த தொகுதியில்தான் உள்ளது. இங்கு கடந்த 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வெற்றி வாகைசூடிய மெஹபூபா, பின்னர், காஷ்மீர் முதல்வராக பதவியேற்பதற்காக கடந்த 2016-இல் எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார். அதன்பிறகு, இங்கு இடைத்தேர்தல் நடைபெறவில்லை. கடந்த 2017-ஆம் ஆண்டில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, பின்னர் சட்டம்-ஒழுங்கு பிரச்னையால் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

கௌரவப் பிரச்னை 

அனந்த்நாக் தொகுதியில் இம்முறை வெற்றி பெறுவது மெஹபூபாவுக்கு மிகவும் முக்கியமானது; அது, அவருக்கு கௌரவப் பிரச்னை என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். தனது செல்வாக்கை உயர்த்திக் கொள்வதற்கும், மக்கள் ஜனநாயக கட்சியை துடிப்புடன் வைத்திருக்கவும் இந்த வெற்றி மெஹபூபாவுக்கு அவசியம். எனினும், தேர்தலில் அவருக்கு கடும் போட்டியும் காத்திருக்கிறது.

காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் ஜம்மு-காஷ்மீர் மாநிலத் தலைவர் குலாம் அகமது மிர், தேசிய மாநாட்டுக் கட்சி சார்பில் ஓய்வுபெற்ற நீதிபதி ஹஸ்னைன் மசூதி, பாஜக சார்பில் சோஃபி யூசுஃப், ஜம்மு-காஷ்மீர் மக்கள் மாநாட்டு கட்சி சார்பில் சௌதரி ஜாஃபர் அலி உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர்.

கடந்த 2016-க்கு பின்னர்...

மக்கள் ஜனநாயக கட்சியின் கோட்டையாக கருதப்பட்டு வந்த தெற்கு காஷ்மீர், கடந்த 2016-இல் பெருமளவில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களுக்கு பிறகு, அந்த நிலையிலிருந்து மாற்றம் கண்டிருப்பதாக கூறப்படுகிறது. 2016-இல் நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களை, அப்போதைய மக்கள் ஜனநாயக கட்சி - பாஜக கூட்டணி அரசு முறையாக கையாளவில்லை என்ற குற்றச்சாட்டும், 2016 முதல் 2018 வரையிலான 3 ஆண்டு கால கூட்டணி ஆட்சிக்கு எதிரான மனநிலையும் மக்கள் ஜனநாயக கட்சியின் செல்வாக்கை சரிவடையச் செய்திருக்கிறது. 

அதனை மெய்ப்பிக்கும் விதமாக, மெஹபூபாவின் பிரசாரக் கூட்டங்களில் மக்களின் கூட்டம் குறைவாக காணப்படுவதையும், அவரது பாதுகாப்பு வாகனங்கள் மீது கூட கல் வீச்சு நடத்தப்படுவதையும் அரசியல் நோக்கர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

அத்துடன், 2016 வன்முறை சம்பவங்களுக்கு பிறகு, பயங்கரவாதிகளின் ஆதிக்கப் பகுதியாக தெற்கு காஷ்மீர் உருவெடுத்திருக்கிறது. ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த புர்ஹான் வானி கொல்லப்பட்டதைக் கண்டித்து, காஷ்மீர் பள்ளத்தாக்கு பிராந்தியத்தில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களில், பொதுமக்கள் 90 பேர் வரை உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்குப்பதிவு குறைவு 

அனந்த்நாக் தொகுதியில் பலத்த பாதுகாப்புடன் கடந்த 23-ஆம் தேதி நடைபெற்ற முதல்கட்ட தேர்தலில் வெறும் 13.61 சதவீத வாக்குகளே பதிவாகின. தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று பயங்கரவாதிகளும், பிரிவினைவாதிகளும் விடுத்திருக்கும் அழைப்பும் இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக காலை 7 மணி தொடங்கி 4 மணி வரையே வாக்குப்பதிவு நடைபெற்றது. கடுமையான சவால்களுக்கு இடையே நடைபெறும் இந்த தேர்தலில் மெஹபூபா வெற்றி பெறுவாரா என்பது மே 23-இல் தெரியும்.

முதல் முறையாக  வெளிமாநிலத்தவர் போட்டி

அனந்த்நாக் தொகுதியில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஷம்ஸ் காஜா என்ற 
வழக்குரைஞர் சுயேச்சை வேட்பாளராக களத்தில் உள்ளார். ஜம்மு-காஷ்மீர் மக்களவைத் தேர்தல் வரலாற்றில், வெளிமாநிலத்தைச் சேர்ந்த  ஒருவர் போட்டியிடுவது இதுவே முதல் முறையாகும். அவரது வேட்பு மனுவுக்கு இதர வேட்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தபோதும், மக்களவைத் தேர்தலில் நாட்டின் குடிமகன் எவரும், ஜம்மு-காஷ்மீர் உள்பட எந்த மாநிலத்திலும் போட்டியிட முடியும் என்ற அடிப்படையில் காஜாவின் வேட்பு மனு ஏற்கப்பட்டது. கடுமையான போட்டி நிலவக் கூடிய மக்களவைத் தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் போட்டியிட வேண்டும் என்ற விருப்பத்தால், அனந்த்நாக் தொகுதியை தேர்வு செய்ததாக காஜா தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com