வாக்கு வித்தியாசம் எவ்வளவு?

மக்களவைத் தேர்தலை பொருத்தவரை கட்சிகளின் பலம், வேட்பாளர்களின் தரம், அவர்களது செல்வாக்கு மட்டுமே அவர்களது வெற்றியை நிர்ணயம் செய்து விடுவதில்லை.
வாக்கு வித்தியாசம் எவ்வளவு?

மக்களவைத் தேர்தலை பொருத்தவரை கட்சிகளின் பலம், வேட்பாளர்களின் தரம், அவர்களது செல்வாக்கு மட்டுமே அவர்களது வெற்றியை நிர்ணயம் செய்து விடுவதில்லை. எதிர்த்துப் போட்டியிடும் வேட்பாளரின் செல்வாக்கும், கட்சியும் வாக்காளர்களால் பரிசீலிக்கப்படுகிறது. சில நேரங்களில், அரசியலில் அதிக செல்வாக்கு இல்லாதவர் கூட அதிகப்படியான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்று விடுகின்றனர். அதேசமயம், அனைவரும் அறிந்த தலைவராக இருந்த போதிலும் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை நழுவ விடுகின்றனர். இதுபோன்ற நிலைப்பாட்டையே அரசியல் சதுரங்கம் என்று அரசியல் நோக்கர்கள் விமர்சிக்கின்றனர். 

ஒரு வேட்பாளர் வெற்றி பெற மக்கள் செல்வாக்கு எவ்வளவு முக்கியமோ, அதே போல தேர்தலின்போது அவர் மக்களை சந்திப்பதும் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. தற்போது 17-ஆவது மக்களவைக்கான தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. முதலாவது மக்களவைத் தேர்தல் 1952-ஆம் ஆண்டில் தொடங்கி, கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற 16-ஆவது மக்களவை தேர்தல் வரையிலும்,  பல்வேறு காரணிகளால் அகில இந்திய அளவில் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியடைந்த வேட்பாளர்களையும், குறைந்த வாக்குகளில் வெற்றியை வசமாக்கிய எம்.பி.க்கள் குறித்தும் காண்போம்.

அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற எம்.பி.க்கள்
1. பிரீத்தம் முண்டே(பாஜக)

மக்களவைத் தேர்தலில் நாட்டிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்திய எம்.பி.யாக திகழ்பவர் பிரீத்தம் முண்டே.  பாஜகவின் மூத்த தலைவரும், மகாராஷ்டிரத்தில் 5 முறை எம்எல்ஏவாக இருந்தவரும், அந்த மாநிலத்தின் துணை முதல்வராகவும் பதவி வகித்து வந்தவர் கோபிநாத் முண்டே. இவரது இரண்டாவது மகள்தான் பிரீத்தம் முண்டே. 


2014ஆம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில் ஆட்சியை கைப்பற்றியதும், மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக கோபிநாத் முண்டே மே 26ஆம் தேதி பொறுப்பேற்றார். பதவியேற்ற சில தினங்களிலேயே அதாவது, மே 3-ஆம் தேதி தில்லியில் விமான நிலையத்துக்கு காரில் செல்லும்போது ஏற்பட்ட விபத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். கோபிநாத் முண்டேயின் மறைவு பாஜகவினர் மத்தியில் மட்டுமின்றி ஒட்டுமொத்த தேசத்தையே அதிர்ச்சியடையச் செய்தது. இவரது மறைவால் காலியான இத்தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட பாஜக கட்சித்தலைமை கோபிநாத் முண்டேயின்  மகள் பிரீத்தம் முண்டேவுக்கு வாய்ப்பளித்தது. 
கோபிநாத் முண்டேவுக்கு ஆதரவான அனுதாப அலையும், பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்ட மோடியின் மீதான எதிர்பார்ப்பின் உச்சகட்டமாக பாஜகவுக்கு  வாக்குகளை அள்ளிக் குவித்தனர் மக்கள். 
இதன் காரணமாக, 32 வயதே நிரம்பிய டாக்டர் பிரீத்தம் முண்டே இந்திய வரலாற்றிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்ற பாஜக வேட்பாளர் என்ற பெருமையைப் பெற்றார். மொத்தம் பதிவான வாக்குகளில் 9,22,416 வாக்குகளை அதாவது 60.24 % வாக்குகளை அள்ளினார். எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அசோக் பாட்டீல் 2,26,095 வாக்குகளையே (17.21 %) பெற்றார். மொத்தம் 6,96,321 வாக்குகள் வித்தியாசத்தில் வரலாறு காணாத வெற்றியை பதிவு செய்தார். மக்களவைத் தேர்தல் வரலாற்றில் ஒரு தனிப்பட்ட வேட்பாளரால் பெறப்பட்ட வாக்கு வித்தியாசத்தில் இதுவே அதிகமாகும். 

2.  அனில் பாசு (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்)
மேற்கு வங்க மாநிலம், ஹூக்ளி மாவட்டம் அரம்பாக் மக்களவைத் தொகுதியிலிருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனில் பாசு நாட்டிலேயே, இரண்டாவதாக அதிக வித்தியாசத்தில் வெற்றி பெற்ற எம்.பி. என்ற பெருமையைப் பெறுகிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த இவர் முதன்முதலாக கடந்த 1984ஆம் ஆண்டில் இந்த தொகுதியில் இருந்து வெற்றி பெற்றார்.
தொடர்ந்து, 1989, 1991, 1996, 1998, 1999 மற்றும் 2004 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தொடர்ந்து 7 முறை வெற்றி பெற்றார் அனில் பாசு. இதில் 2004ஆம் ஆண்டு தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஸ்வபன்குமார் நந்தியை விட 5,92,502 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் அனில் பாசு 7,44,464 வாக்குகளும், ஸ்வபன்குமார் நந்தி 1,51,962 வாக்குகளும் பெற்றார். பதிவான வாக்குகளில் 77.16 % வாக்குகளை அனில் பாசு ஒருவரே பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 
அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்ற போதிலும், 2009-இல் நடைபெற்ற தேர்தலில் இவருக்கு கட்சி சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது தான் மிகப்பெரிய சோகம். கட்சியின் விதிகளை மீறி நடந்து கொண்டதாகவும், தனது உறவினர்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருவதாகவும் இவர் மீது புகார் கூறப்பட்டதன் விளைவாக அடுத்தடுத்த தேர்தல்களிலும் இவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. தனது  72-ஆவது வயதில் 2018-ஆம் ஆண்டில் அனில் பாசு காலமானார். 

3. பி.வி.நரசிம்ம ராவ் (காங்கிரஸ்)
நாட்டின் 10ஆவது பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட பி.வி.நரசிம்ம ராவ் அதிகபட்ச வாக்கு வித்தியாசத்தில் வென்றவர்களின் பட்டியலில் மூன்றாமிடத்தை பெறுகிறார். 1991-ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு பிறகு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் நந்தியால் மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றவர் கங்குல பிரதாப ரெட்டி. முதன்முதலாக தென்னிந்தியாவிலிருந்து பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் நரசிம்ம ராவ். 
அவர் பதவியேற்ற சில மாதங்களில், நந்தியால் தொகுதியின் எம்.பி.யான கங்குல பிரதாப ரெட்டி தனது பதவியை நரசிம்ம ராவ் போட்டியிடுவதற்காக ராஜிநாமா செய்தார். 
இடைத்தேர்தலில், ஆந்திரத்தை சேர்ந்தவர் பிரதமர் பதவியேற்கும் வகையில், பாஜகவை தவிர முக்கிய கட்சிகளான தெலுங்கு தேசம் உள்ளிட்ட மற்ற பிராந்திய கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை நிறுத்தாமல் நரசிம்ம ராவ் வெற்றி பெற எளிதான பாதையை அமைத்துத் தந்தன. நரசிம்ம ராவுக்கு 6,26,241 வாக்குகள் பதிவானது. 
எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பங்காரு லட்சுமண் 45,944 வாக்குகள் மட்டுமே பெற்றார். நரசிம்ம ராவ் 5,80,297 வாக்கு வித்தியாசத்தில் தனது வெற்றியை பதிவு செய்தார். ஒரே வேட்பாளருக்கு மட்டும் 89.48 % வாக்குகள் பதிவானதன் மூலம் கின்னஸ் சாதனை படைத்தார் நரசிம்ம ராவ். ஒரு தொகுதியில் ஒரு வேட்பாளரால்  பெறப்பட்ட வாக்கு சதவீதத்தில் இதுவே முதலிடத்தைப் பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய பொருளாதார சீர்திருத்தங்களுக்கு அடித்தளமிட்டவர் இவர்தான். 

4. நரேந்திர மோடி (பாஜக)
நரேந்திர மோடி கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் குஜராத் மாநிலம் வதோதரா மக்களவைத் தொகுதியில் இருந்து போட்டியிட்டு வெற்றியை வசப்படுத்தினார். இந்த தேர்தலில் மோடி,  8,45,464 வாக்குகள் பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் மதுசூதன் மிஸ்திரி 2,75,336 வாக்குகளை பெற்றார். 5,70,128 வாக்குகள் வித்தியாசத்தில் இந்த தொகுதியை மோடி கைப்பற்றினார். மொத்தம் பதிவான  வாக்குகளில் 72.75 % வாக்குகளை மோடி பெற்றார். இவருக்கு அடுத்தபடியாக வந்த மிஸ்திரி 23.69 % வாக்குகளையே பெற முடிந்தது. 
இருப்பினும், அந்தத் தேர்தலில் வதோதரா மட்டுமின்றி, வாராணசியிலும் மோடி போட்டியிட்டார். வாராணசியில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கேஜரிவாலைவிட 3,71,784 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றார். பின்னர், வாராணசி தொகுதியின் பிரதிநிதியாகத் தொடர விரும்பி, வதோதரா தொகுதியில் தனது எம்.பி. பதவியை மோடி ராஜிநாமா செய்தார். இதன் பின் நடைபெற்ற இடைத்தேர்தலிலும் வதோதரா தொகுதியில் பாஜக வேட்பாளர் ரஞ்சன்பென் 3,29,507 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. 

5. ராம்விலாஸ் பாஸ்வான் (லோக் ஜனசக்தி)
ஹாஜிபூர் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யாக 8 முறை தேர்ந்தெடுக்கப்பட்ட ராம்விலாஸ் பஸ்வான் தற்போது லோக் ஜனசக்தி கட்சியின் தலைவராக விளங்கி வருகிறார். கடந்த 1989-ஆம் ஆண்டு ஜனதா தளம் சார்பில் ஹாஜிபூர் தொகுதியில் போட்டியிட்ட ராம்விலாஸ் பாஸ்வான், தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மகாவீர் பாஸ்வானை விட 5,04,448 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார். மொத்தம் பதிவான வாக்குகளில் 84.08 % வாக்குகளை இவர் ஒருவரே பெற்றது குறிப்பிடத்தக்கது. ராம்விலாஸ் பாஸ்வான் 6,15,129 வாக்குகளும், மகாவீர் பாஸ்வான் 1,10,681 வாக்குகளும் பெற்றிருந்தனர். 
ராம்விலாஸ் பாஸ்வான் இந்த தொகுதியில் முதன்முதலாக 1977-ஆம் ஆண்டு ஜனதா தளம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து 1980, 89, 96 மற்றும் 1998- ஆம் ஆண்டு வரை ஜனதா தளம் சார்பிலும், 1999-ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த ஜனதா தளம் சார்பிலும், 2004 மற்றும் 2014-ஆம் ஆண்டுகளில் லோக் ஜனசக்தி சார்பிலும் போட்டியிட்டு எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  2010ஆம் ஆண்டில் மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். 
வி.பி.சிங், தேவேகெளடா, ஐ.கே.குஜ்ரால், வாஜ்பாய் மற்றும் நரேந்திர மோடி ஆகியோர் பிரதமராக உள்ள காலகட்டங்களில், இவர் பல்வேறு துறைகளின் கேபினட் அமைச்சராக பணிபுரிந்துள்ளார். ரயில்வே, தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஒலிபரப்புத்துறை மற்றும் சுரங்கத்துறை, உரம் மற்றும் ரசாயனத்துறை அமைச்சராக பணியாற்றியுள்ள வந்த இவர் தற்போது, மோடியின் அமைச்சரவையில் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு, உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சராக பணியாற்றி வருகிறார்.


குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்திய எம்.பி.க்கள்


மக்களவைத் தேர்தலில் பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தி வரும் வேட்பாளர்கள் மத்தியில் மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை பெற்று கவனத்தை ஈர்த்த எம்.பி.க்களும் இருக்கவே செய்கிறார்கள். இதுபோன்ற வேட்பாளர்கள் கடைசி வரையிலும் வெற்றி யாருக்கு கிடைக்கும் என மதில்மேல் பூனையாக காத்திருப்பார்கள். கடைசி வரை இழுபறியாக நீடிக்கும் வாக்கு எண்ணிக்கையின் முடிவில் மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை பறி கொடுக்கும் வேட்பாளரின் நிலை பரிதாபகரமானது தான் என்றாலும், வெற்றி பெற்ற வேட்பாளரின் மனநிலையை எண்ணும்போது, கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையிலிருந்து மீண்டு வந்ததைப் போலவே கருதுவார் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

1. சத்யஜித்சிங் திலீப்சிங் கெய்க்வாட் (காங்கிரஸ்)
குஜராத் மாநிலம் வதோதரா தொகுதியில் கடந்த 1996-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட இவர் தன்னை எதிர்த்துப்  போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஜிதேந்திர ரத்திலால் சுகாதியா (ஜிதுபாய்)  வேட்பாளரைவிட வெறும் 17 வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தினார்.
சத்யஜித்சிங் திலீப்சிங் கெய்க்வாட் 1,31,248 வாக்குகளும், ஜிதேந்திர ரத்திலால் சுகாதியா1,31,231 வாக்குகளும் பெற்றனர். மூன்றாவது இடத்தை பிடித்த சுயேச்சை வேட்பாளர் சுபாங்கினி ராஜி ரஞ்சித் சிங் கெய்க்வாட் 1,00,678 வாக்குகளை பிரித்ததால் இரண்டு தேசிய கட்சிகளுக்கும் இடையே கடும் மோதலை உருவாக்கிவிட்டது. 

2. எம்.எஸ்.சிவசாமி (திமுக)
1971ஆம் ஆண்டு தமிழகத்தில் திருச்செந்தூர் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட  சோஷலிச கட்சி வேட்பாளர் மத்தியாஸை விட வெறும் 26 வாக்குகள் மட்டுமே கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார். 

3. ரிஷாங்க் (சோஷலிஸ்ட் கட்சி)
மணிப்பூர் புறநகர் எம்.பி. தொகுதியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவரான ரிஷாங்க் கைசிங்க் தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளரை விட 46 வாக்குகள் அதிகம் பெற்று குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவர் 1980 முதல் 1988ஆம் ஆண்டு வரையிலும், 1994ஆம் ஆண்டிலும் மணிப்பூர் முதல்வராக ஆட்சி புரிந்தார். 

4. பி.பூக்குஞ்ஞி கோயா (ஐக்கிய ஜனதா தளம்)
நாட்டின் குறைந்த வாக்காளர்கள் உள்ள மக்களவைத் தொகுதியாக கருதப்படும் லட்சத்தீவுத் தொகுதியில் இருந்து 2004ஆம் ஆண்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதாதளம் கட்சி சார்பில் போட்டியிட்ட பி.பூக்குஞ்ஞி கோயா 71 வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை தன்வசப்படுத்தினார். 
பி.பூக்குஞ்ஞி கோயா 15,597 வாக்குகளும், தனக்கு அடுத்த இடத்தை பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் பி.எம்.சயீது 15,526 வாக்குகளும் பெற்றார். இதில் காங்கிரஸ் வேட்பாளர் பி.எம்.சயீது 8 முறை இதே தொகுதியில் இருந்து எம்.பி.யாக வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com