அச்சாணி மாநிலம்! உத்தரப் பிரதேசம்

நாட்டின் பிரதமர்களாக இருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அல்லது அந்த மாநிலத்தில் உள்ள தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர்கள். 80 மக்களவைத்
அச்சாணி மாநிலம்! உத்தரப் பிரதேசம்

நாட்டின் பிரதமர்களாக இருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அல்லது அந்த மாநிலத்தில் உள்ள தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர்கள். 80 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட மாநிலம், பிரதமரை தேர்வு செய்யும் அளவுக்கு வாய்ப்பில்லாமல் இருந்திருந்தால்தானே ஆச்சரியம்! இவ்வளவு சிறப்புக்குரிய உத்தரப் பிரதேசத்தில் ஜாதி, மத அடிப்படையிலான வாக்கு வங்கி அரசியலே கோலோச்சுகிறது. 

கடந்த மக்களவைத் தேர்தலிலும்கூட, பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதற்கு, உத்தரப் பிரதேசத்தில் கிடைக்கப்பெற்ற 71 தொகுதிகளே அடித்தளமாக அமைந்தன. அதுமட்டுமல்ல, 2017-ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலிலும் நான்கில் மூன்று பங்கு பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது பாஜக. தற்போதைய மக்களவைத் தேர்தலில் இங்கு அக்கட்சி பெறக்கூடிய இடங்கள்தான், மீண்டும் அரியாசனம் ஏறுவதற்கான வாய்ப்பை உறுதி செய்யும் என்பதில் ஐயமில்லை.
பாஜகவின் திட்டமிடல்: தேர்தலில் ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலையை சமாளிக்கும் வகையில், தற்போதைய எம்.பி.க்களைக் காட்டிலும், புதிய முகங்களுக்கு கணிசமாக வாய்ப்பளிக்க பாஜக திட்டமிட்டுள்ளது. ஆனால், அதுவே போட்டி வேட்பாளர்கள் என்ற அம்பாக திரும்புமெனில், அக்கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தக் கூடும். பொதுப்பிரிவில் பொருளாதார ரீதியாக பின்தங்கியோருக்கு இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கையால், உத்தரப் பிரதேசத்தில் 20 சதவீதமுள்ள அந்த மக்களின் வாக்குகள் கணிசமாக கிடைக்கக் கூடும்.
குர்மி சமுதாயத்தினரை வாக்கு வங்கியாகக் கொண்ட அப்னா தளம் (எஸ்) கட்சி, கடந்த முறை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இதையடுத்து, அக்கட்சியின் தலைவர் அனுப்பிரியா படேல் மத்திய அமைச்சரானார். தற்போதும் அக்கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மாநில அமைச்சர் ஓம் பிரகாஷ் ராஜ்பார் தலைமையிலான சுஹல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியும் பாஜக கூட்டணியில் உள்ளது. ராஜ்பார் சமுதாயத்தினரின் ஆதரவு பெற்ற அக்கட்சிக்கு இதுவரை தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை.
சொந்தக் கூட்டணியை தக்க வைத்துக் கொண்டாலும், எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள பலமான கூட்டணியே, பாஜகவை ஆட்டம் காண வைப்பதாக அமைந்துள்ளது.
இணைந்த துருவங்கள்: அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜவாதி கட்சி, பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த யாதவர்களையும், முஸ்லிம்களையும் நிரந்தர வாக்கு வங்கியாகக் கொண்டது. கடந்த தேர்தலில் அக்கட்சி பெற்றது 22.2% வாக்குகள். அதைப்போலவே, மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி, தலித்துகளை நிரந்தர வாக்கு வங்கியாகக் கொண்டது. அக்கட்சியின் வாக்கு சதவீதம் 19.6% ஆகும். இந்த இரண்டையும் கூட்டினால், பாஜகவின் வாக்கு சதவீதத்தை மிஞ்சி விடலாம் என்று அகிலேஷ் யாதவ் கணக்கு போட்டதன் விளைவாக அமைந்ததுதான் சமாஜவாதி - பகுஜன் சமாஜ் கூட்டணி.
அத்துடன், மேற்கு உத்தரப் பிரதேசத்தில் ஜாட் சமுதாயத்தினரிடம் கணிசமாக ஆதரவு பெற்ற, அஜித் சிங் தலைமையிலான ராஷ்ட்ரீய லோக் தளம் கட்சியும் அவர்களது கூட்டணியில் இணைந்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் 47 தொகுதிகளில் மொத்த மக்கள் தொகையை ஒப்பிடுகையில், முஸ்லிம்-யாதவ்-தலித் சமுதாயத்தினர்களின் கூட்டு எண்ணிக்கை 50 சதவீதத்தை தாண்டும் என்கிறது ஓர் கணக்கெடுப்பு. இதனால், பாஜகவுக்கும், அகிலேஷ்-மாயாவதி அணிக்கும் இடையே மிக, மிகக் கடுமையான போட்டி நிலவும் என கருதப்படுகிறது.
அதே சமயம், அரசியலில் எதிரெதிர் துருவங்களாக இருந்த அவர்கள் இருவரும் கைகோத்திருப்பதால், சில சிராய்ப்புகளும் ஏற்பட்டிருக்கின்றன. அகிலேஷ்-மாயாவதி கூட்டணியால் அதிருப்தி அடைந்த அல்லது தங்களுக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்காது என்பதை அறிந்த இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட தலைவர்கள் ஒருவர் பின், ஒருவராக பாஜகவில் ஐக்கியமாகி வருகின்றனர். குறிப்பாக, பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து மட்டும் பாஜகவுக்கு தாவியிருப்பவர்களின் எண்ணிக்கை 15-ஐ தாண்டிவிட்டது. அதிலும், வாராணசி தொகுதியில் கடந்த முறை மோடியை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளர், சமீபத்தில் பாஜகவில் இணைந்திருக்கிறார்.
பரிதாப நிலையில் காங்கிரஸ்: மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநில தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசத்தில் பலமான கூட்டணியை அமைத்து விடலாம் என்று காங்கிரஸ் நினைத்துக் கொண்டிருந்தது. ஆனால், தேர்தலுக்கு பிறகு வேண்டுமானால் காங்கிரஸுடன் கூட்டணி வைத்துக் கொள்ளலாம் என்று கணக்குப் போட்ட அகிலேஷும், மாயாவதியும், மானசீக ஆதரவை வழங்கும் வகையில், ராகுல் காந்தி போட்டியிடும் அமேதியிலும், சோனியா காந்தி போட்டியிடும் ரே-பரேலி தொகுதியிலும் வேட்பாளர்களை நிறுத்தாமல் விட்டிருக்கிறார்கள்.
இதனால் பரிதாப சூழலுக்கு தள்ளப்பட்ட நிலையில், பிரம்மாஸ்திர நடவடிக்கையாக பிரியங்கா காந்தியை களமிறக்கியது காங்கிரஸ் கட்சி. பாரம்பரிய அரசியல் குடும்ப வாரிசு, இந்திராவின் மறு உருவம் என்ற அடையாளங்களைக் கொண்ட பிரியங்கா காந்தியோ, சிறு தீப்பொறியை தீபமாய் தக்க வைத்துக் கொள்ளும் சாதுர்யமான முயற்சியை மேற்கொள்ளப்போக, அது பெரும் நெருப்பாய் பற்றிக் கொண்டுவிட்டது. மாயாவதியை சமன் செய்யும் நோக்கில், பீம் ஆர்மியின் சந்திரசேகர் ஆசாத்தை திடீரென சந்தித்தார் பிரியங்கா. அவர் கூட்டணிக்கு பிடிகொடுக்கவில்லை. இந்த சந்திப்பால் கடுப்பாகிப் போன மாயாவதி, காங்கிரஸுடன் எந்த மாநிலத்திலும் கூட்டணியில்லை என்று அறிவித்துவிட்டார். அதாவது, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் 4-5 சதவீத வாக்குகளை கொண்டுள்ள பகுஜன் சமாஜ் கட்சியை, கூட்டணியில் இணைத்திருந்தால் வெற்றியின் விளிம்பு நிலையில் தேவைப்படும் வாக்குகள் எளிதாகக் கிடைத்திருக்கும். ஆனால், அந்த பொன்னான வாய்ப்பை காங்கிரஸ் தவறவிட்டிருக்கிறது.
கிங்மேக்கர் கணக்கு
உத்தரப் பிரதேசத்தில் கடந்த மக்களவைத் தேர்தலிலும், சட்டப்பேரவைத் தேர்தலிலும் பாஜகவுக்கு வானளாவிய வெற்றியை உறுதி செய்தவர் அமித் ஷா. தேர்தல் நெருங்கிய நிலையில், பாஜக கூட்டணியில் உள்ள அப்னா தளம் (எஸ்) கட்சியும், சுஹல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியும் முரண்டு பிடிக்கத் தொடங்கின. இறுதி நேரத்தில், அமித் ஷா நேரடியாக களமிறங்கி பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, உத்தரப் பிரதேசத்தில் உள்ள அரசுக்கழகங்கள் மற்றும் வாரியங்களில் அப்னா தளம் கட்சி நிர்வாகிகள் 9 பேருக்கும், சுஹல்தேவ் கட்சி நிர்வாகிகள் 8 பேருக்கும் பதவிகள் வழங்கப்பட்டன. 
குஜராத்தில் மோடி முதல்வராக இருந்த காலகட்டத்தில் அவரை அரசியல் ரீரியாக எதிர்த்து பாஜகவில் வெளியேறினார் ஜோர்தான் ஜடாஃபியா. பின்னர் மீண்டும் கட்சிக்கு திரும்பிய அவரை தற்போது உத்தரப் பிரதேச மேலிடப் பொறுப்பாளராக நியமித்திருக்கிறார் அமித் ஷா.

1998-இல் இருந்து தொடர்ந்து 5 முறை எம்.பி.யாக இருந்ததால் யோகி ஆதித்யநாத்தின் கோட்டையாக விளங்கியது கோரக்பூர். அவர் முதல்வராக பொறுப்பேற்றதால், கோரக்பூர் மக்களவைத் தொகுதிக்கும், துணை முதல்வரான கேசவ பிரசாத் மெளரியாவின் பல்பூர் மக்களவைத் தொகுதிக்கும் கடந்த ஆண்டு மார்ச்சில் இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்த இரு தொகுதிகளிலும் பகுஜன் சமாஜ் ஆதரவுடன் போட்டியிட்ட சமாஜவாதி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். அதுவே அவ்விரு கட்சிகளின் கூட்டணிக்கு அச்சாரமாக அமைந்தது.

யார் இந்த சந்திரசேகர் ஆசாத்?
சந்திரசேகர் ஆசாத், 31 வயது நிரம்பிய வழக்குரைஞர். தலித் மக்களின் சமூக மேம்பாட்டுக்காகவும், ஜாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும்,  பீம் ஆர்மி என்ற அமைப்பை 2014-ஆம் ஆண்டில் தொடங்கி நடத்தி வருபவர். எனினும், கடந்த காலங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக அறியப்படுகிறார். மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு போட்டியாக இவரது அமைப்பு தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மாயாவதியும் அதே குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இந்நிலையில், வாராணசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்துப் போட்டியிடவிருப்பதாக சந்திரசேகர் ஆசாத் அறிவித்துள்ளார். பாஜகவுக்கு எதிராக பலமான போட்டியாளர் தேவைப்படும் இடங்களில் வேட்பாளரை நிறுத்தவுள்ளதாகவும் அவரது அமைப்பு தெரிவித்துள்ளது.

ராகுலுக்கு பலப்பரீட்சை
அமேதி தொகுதியில் கடந்த முறை ராகுல் காந்தியை எதிர்த்து நின்று, கடுமையான போட்டியை உருவாக்கிய பாஜகவின் ஸ்மிருதி இரானி, இறுதியில் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இந்த முறையும், ஸ்மிருதி இரானி ராகுலை எதிர்த்து நின்றால், அதை விடக் கடுமையான போட்டியை ஏற்படுத்தக் கூடும். 2017 பேரவைத் தேர்தலில், அமேதிக்கு உள்பட்ட 5-இல் 4 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர் என்பதை கவனித்தால் ராகுலுக்கு சவால் காத்திருப்பதை அறியலாம்.
காங்கிரஸ் கூட்டணி: பெரிய கட்சிகள் எதுவும் கூட்டணி வைக்காத நிலையில் சிறு கட்சிகளுகடன் காங்கிரஸ் அணி சேர்ந்துள்ளது. அப்னா தளம் அதிருப்தி அணிக்கு 2 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. பெரிதும் அறியப்படாத ஜன் அதிகார் கட்சிக்கு காங்கிரஸ் 7 தொகுதிகளை ஒதுக்கியிருக்கிறது. அதில் 2 வேட்பாளர்கள் கை சின்னத்தில் போட்டியிடுகின்றனர். ராகுல் காந்தி, சோனியா காந்தி தொகுதிகளில் மானசீக ஆதரவை வழங்கிய சமாஜ்வாதி - பகுஜன் கூட்டணிக்கு நன்றிக்கடன் செலுத்தும் நோக்கில், சமஜ்வாதி நிறுவனர் முலாயம் சிங், அகிலேஷின் மனைவி டிம்பிள் யாதவ் உள்ளிட்டோர் போட்டியிடும் 7 தொகுதிகளில் போட்டியிடுவதில்லை என்று காங்கிரஸ் தெரிவித்திருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com