காலச்சக்கரம்...

ஐந்தாண்டுகளில் பிகாரில் காலச்சக்கரம் முழுமையாக ஒரு வட்டம் சுழன்றுவிட்டது. கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன், நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவதை
காலச்சக்கரம்...

ஐந்தாண்டுகளில் பிகாரில் காலச்சக்கரம் முழுமையாக ஒரு வட்டம் சுழன்றுவிட்டது. கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன், நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவதை எதிர்த்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறியவர் நிதீஷ் குமார். ஆனால், இன்றைக்கு அதேநரேந்திர மோடியை மீண்டும் பிரதமராக்கும் முயற்சியாக பிகாரில் 40க்கு 40 தொகுதியிலும் வெற்றியை உறுதி செய்வோம் என்று வாக்குறுதி கொடுத்துள்ளார் அவர்.

அது 2013-ஆம் ஆண்டு. கடந்த மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, புதிய கட்சிகளை அணியில் இணைத்து தேசிய ஜனநாயகக் கூட்டணியை பலப்படுத்திக் கொள்ள வேண்டிய நிலையில் இருந்தது பாஜக. ஆனால், அக்கட்சி வெளியிட்ட ஒரேயொரு அறிவிப்பால், இருக்கின்ற கூட்டணியிலேயே பிளவு ஏற்பட்டது. பாஜகவின் பிரசாரக் குழுத் தலைவராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டதை எதிர்த்து 2013 ஜூன் மாதத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சி வெளியேறியது. இத்தனைக்கும் அப்போது மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படவில்லை. 
சுமார் 17 ஆண்டுகால கூட்டணி முறிந்த நிலையில், ராம் விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி, உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்ட்ரீய லோக் சமதா ஆகிய கட்சிகளுடன் கைகோத்து மக்களவைத் தேர்தலை பாஜக எதிர்கொண்டது. மொத்தமுள்ள 40 தொகுதிகளில் அந்தக் கூட்டணி 31 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் பாஸ்வானும், குஷ்வாஹாவும் மத்திய அமைச்சர்களாயினர். ஆனால், 2015-இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் இந்த அணி தோல்வி கண்டது.
நிதீஷ் குமாரின் சரிவும், மீட்சியும்: அதே சமயம், மக்களவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி 2 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது. அடுத்து வந்த பேரவைத் தேர்தலில், அரசியலில் பரம எதிரியான நிதீஷ் குமாரும், லாலு பிரசாத்தும் ஒன்றிணைந்ததனர். ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகளைக் கொண்ட மகா கூட்டணி வெற்றி பெற்று பிகாரில் கூட்டணி ஆட்சி அமைந்தது.
ஆனால், புதிய நட்பு நீண்டநாள் நீடிக்கவில்லை. ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாகவும், லாலு பிரசாதின் மகனும், அப்போதைய துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் மீது எழுந்த ஊழல் குற்றச்சாட்டு காரணமாகவும், 2017 ஜூலையில் கூட்டணியை முறித்துக் கொண்டு நிதீஷ் குமார் பதவி விலகினார். ஆனால், அடுத்த நாளே பாஜகவுடன் மீண்டும் கைகோத்து புதிய கூட்டணி அரசை நிதீஷ் குமார் நிறுவினார்.
பாஜகவின் தந்திரமான அணுகுமுறை: நிதீஷ் குமார் கூட்டணிக்கு திரும்பிய நிலையில், மக்களவைத் தேர்தலில் அவரது கட்சிக்கு கெளரவமிக்க எண்ணிக்கையிலான தொகுதிகளை ஒதுக்க வேண்டிய கட்டாயம் பாஜகவுக்கு ஏற்பட்டது. இந்நிலையில் ஐக்கிய ஜனதா தளமும், பாஜகவும் சம அளவிலான தொகுதிகளில் போட்டியிடும் என்பதை அக்கட்சியின் தலைவர் அமித் ஷா முன்கூட்டியே அறிவித்துவிட்டார்.
ஆனால், நிதீஷ் குமாருடன் அரசியல் முன்விரோதம் கொண்ட உபேந்திர குஷ்வாஹாவுக்கு இது பிடிக்கவில்லை. முதலில் பிகார் அரசையும், நிதீஷ் குமாரையும் விமர்சிக்கத் தொடங்கிய அவர், பின்னர் மத்திய அரசின் மீதும் தனது விமர்சனப் பார்வையை திருப்பினார். முந்தைய தேர்தலில் ஒதுக்கப்பட்டதைக் காட்டிலும் கூடுதலான தொகுதிகளை பாஜக ஒதுக்க வேண்டும் என்று கெடு விதித்தார் குஷ்வாஹா. ஆனால், பாஜக எதையும் சட்டை செய்வதாக இல்லை. இறுதியில், குஷ்வாஹா தானாகவே மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, கூட்டணியில் இருந்து வெளியேறினார்.
மற்றொருபுறம், பாஜகவுடன் மென்மையான போக்கை கடைப்பிடித்து வந்த லோக் ஜனசக்தி கட்சியும், கூட்டணி விஷயத்தில் மாற்றுக் கருத்துகளை முன்வைக்கத் தொடங்கியது. தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தையை பாஜக இழுத்தடிப்பதாக அக்கட்சி குற்றம்சாட்டிய நிலையில், ராம் விலாஸ் பாஸ்வான், அவரது மகன் சிராக் பாஸ்வான் ஆகியோருடன் பாஜகவின் மூத்த தலைவர் அருண் ஜேட்லி சமரசம் பேசியதன் விளைவாக கூட்டணி உறுதியானது.
இறுதியாக ஐக்கிய ஜனதா தளமும், பாஜகவும் தலா 17 தொகுதிகளில் போட்டியிடுகிறது என்றும், லோக் ஜனசக்தி கட்சிக்கு 6 தொகுதிகளுடன் சேர்த்து, ராம் விலாஸ் பாஸ்வானுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுக்கப்படும் என்றும் கூட்டணித் தலைவர்கள் முன்னிலையில் அமித் ஷா அறிவித்தார்.
அணிசேர்ந்த போட்டித் தலைவர்கள்: எதிரணியில் ராஷ்ட்ரீய ஜனதா தளமும், காங்கிரஸும் இயல்பான கூட்டணிக் கட்சிகளாக இருந்தன. இந்நிலையில், பல்வேறு சிறிய கட்சிகளையும் அணியில் இணைத்து மகா கூட்டணி அமைக்கப்பட்டது. குறிப்பாக, நிதீஷ் குமாரின் அரசியல் எதிரிகள் எல்லோரும் தஞ்சமடையும் இடமாக அமைந்தது இந்தக் கூட்டணி.
ஜிதன்ராம் மாஞ்சி தலைமையிலான ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சா, உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சி, சரத் யாதவ் தலைமையிலான லோக் தந்திரிக் கட்சி ஆகியவை மகா கூட்டணியில் இணைந்தன. இவர்கள் மூவருமே இதற்கு முன் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்தவர்கள் ; நிதீஷ் குமாரை தீவிரமாக எதிர்ப்பவர்கள். குறிப்பாக, பாஜகவுடன் நிதீஷ் மீண்டும் கூட்டணி வைத்ததை விமர்சித்ததால் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டவர் சரத் யாதவ்.
தொகுதி உடன்பாட்டில் பிடிவாதம்: கடந்த மக்களவைத் தேர்தலில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சிக் கூட்டணியில் 12 தொகுதிகளில் போட்டியிட்டது காங்கிரஸ் கட்சி. இந்த முறை தங்களுக்கு 15 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தையை அக்கட்சி தொடங்கியது. ஆனால், கடந்த முறைப் போல அல்லாமல், இந்த முறை உபேந்திர குஷ்வாஹா, ஜிதன்ராம் மாஞ்சி, சரத் யாதவ் உள்ளிட்டோரின் கட்சிகளும் கூட்டணியில் இணைந்துள்ள நிலையில், அவர்களுக்கும் தொகுதிகள் ஒதுக்க வேண்டியிருப்பதை ராஷ்ட்ரீய ஜனதா தளம் சுட்டிக்காட்டியது. இதனால், காங்கிரஸுக்கு 8 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முடியும் என்ற வாதத்தை அக்கட்சி முன்வைத்தது.
ஆனால், குறைந்தபட்சம் 11 தொகுதிகளாவது ஒதுக்க வேண்டும் என்று காங்கிரஸ் பிடிவாதம் காட்டியதால் தொகுதி உடன்பாடு ஏற்படுவதில் நீண்டநாள் சிக்கல் நீடித்து வந்த நிலையில், வெள்ளிக்கிழமையோடு (மார்ச் 22) அது முடிவுக்கு வந்தது.
இறுதியாக, ராஷ்ட்ரீய ஜனதா தளம் -20, காங்கிரஸ் -9, ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சி - 5, ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சா - 3, முகேஷ் சாநிஸ் தலைமையிலான விகாஸ் இன்சான் கட்சி - 3 என்ற எண்ணிக்கையிலான தொகுதிகளில் போட்டியிடுவது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் (எம்எல்) கட்சி வேட்பாளரும், சரத் யாதவும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளில் அக்கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 
குறிப்பாக, சரத் யாதவின் லோக் தந்திரிக் கட்சியை, தேர்தலுக்குப் பிறகு ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியுடன் இணைப்பது என்று உடன்பாடு ஏற்பட்டுள்ளது.


கட்சி அலுவலகமான மருத்துவமனை
பிகார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவருமான லாலு பிரசாத், ஊழல் வழக்கில் சிறைத் தண்டனை பெற்றவர். ஆனால், உடல்நிலையை காரணம் காட்டி தொடர்ந்து ஜாமீன் பெறும் இவர், ராஞ்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தங்கியிருக்கிறார். லாலுவுக்கான பிரத்யேக வார்டு தான், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் அறிவிக்கப்படாத தலைமை அலுவலகமாக செயல்படுகிறது என்றுகூட சொல்லலாம். கூட்டணி, தொகுதி உடன்பாடு, ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சிக்கான வேட்பாளர் பரிந்துரை உள்ளிட்ட பல முடிவுகள் இங்கு எடுக்கப்படுகிறது.

சுஷீல்குமார் மோடி 
பிகாரில் பாஜகவின் முகம்  இவர். ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி ஆட்சி அமையும் தருணங்களில் துணை முதல்வராக இருப்பவர்; தற்போதும் பதவியில் உள்ளார். லாலு பிரசாத் மற்றும் அவரது குடும்ப அரசியலை
 மிகத் தீவிரமாக எதிர்ப்பதன் மூலமாக பாஜகவுக்கு பலம் சேர்ப்பவர் சுஷீல் குமார் மோடி. 

பிரசாந்த் கிஷோர் 
அரசியல் கட்சிகளுக்கான  பிரசார வியூகங்களை வகுக்கும் நிபுணர் என்பதே தொடக்கத்தில் இவரது அடையாளம். குஜராத்தில் நரேந்திர மோடியை மூன்றாம் முறையாக முதல்வர் ஆக்கியதிலும், அதன் பிறகு அவரை பிரதமர் ஆக்கும் அளவுக்கு பாஜகவை தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறச் செய்ததிலும் பிரசாந்த் கிஷோருக்கு முக்கியப் பங்குண்டு. 
பஞ்சாப், உத்தரப் பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகவும், பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில், ஐக்கிய ஜனதா தளம் கட்சியை உள்ளடக்கிய மகா கூட்டணிக்கு ஆதரவாகவும் தேர்தல் உத்திகளை வகுத்தவர். பின்னர் நேரடி அரசியலில் நுழைந்த அவர், தற்போது ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் துணைத் தலைவராக இருக்கிறார்.


தேஜஸ்வி
லாலுவின் இளைய மகன் தேஜஸ்வி யாதவ். அவரது அரசியல் வாரிசாகக் கருதப்படுபவர். பிகார் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறார். தற்போது கட்சி பெரும்பகுதி இவரது கட்டுப்பாட்டில் உள்ளது. 29 வயதுதான் ஆகிறது என்றாலும் சொந்தக் கட்சியிலும், மாற்றுக் கட்சியிலும் உள்ள மூத்த தலைவர்களை அனுசரிப்பது, மனம் கவருவது என  அரசியலை நேர்த்தியாகக் கையாள்பவர்.

தேஜ் பிரதாப்
லாலுவின் மூத்த மகன்  தேஜ் பிரதாப் யாதவ். முன்னாள் மாநில அமைச்சர். கட்சியில் தனது இளைய சகோதரர் முன்னிலைப்படுத்தப்படுவதை விரும்பாதவர்; பல சந்தர்ப்பங்களில் அதை வெளிப்படையாக விமர்சித்தவர். வேகம் உள்ள அளவுக்கு விவேகம் இல்லை என்பதால் அரசியல் வாழ்வில் பின்தங்கியிருக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com