தனிக்காட்டு ராஜாங்கம் நீடிக்குமா?

இன்று குஜராத் மாநிலம்தான் இந்திய அரசியலின் மையப் புள்ளி. அங்கு 4 முறை முதல்வராக இருந்த நரேந்திர மோடி இன்று நாட்டின் பிரதமர் ஆனதுடன்,
தனிக்காட்டு ராஜாங்கம் நீடிக்குமா?

இன்று குஜராத் மாநிலம்தான் இந்திய அரசியலின் மையப் புள்ளி. அங்கு 4 முறை முதல்வராக இருந்த நரேந்திர மோடி இன்று நாட்டின் பிரதமர் ஆனதுடன், இந்திய அரசியலையே தன்னைச் சுற்றிச் சுழலக் கூடியதாக மாற்றி இருக்கிறார். மோடியின் எழுச்சிக்கு குஜராத் மாநிலம் அடித்தளம் அமைத்தது எனில் மிகையில்லை.


குஜராத்தில் மோடி மேற்கொண்ட நலத் திட்டங்களும், சீர்திருத்தங்களும், பரிசோதனை முயற்சிகளும்தான் அவரை தேசிய அரசியலுக்குக் கொண்டுவந்தன. சென்ற மக்களவைத் தேர்தலில் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளிலும் பாஜக வென்றது. 

ஐந்து ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்தக் காலகட்டத்தில் தேசத்தை சோதனைக்குள்ளாக்கிய பல நடவடிக்கைகளையும், பயனளிக்கும் பல திட்டங்களையும் மேற்கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி. இப்போது மீண்டும் தேர்தலில் மறுவாய்ப்பு கேட்கிறது பாஜக. இன்று மோடி குஜராத்தில் இல்லாதபோதும், இப்போதும் அவர்தான் அந்த மாநிலத்தில் கதாநாயகன். என்ன இருந்தாலும் மண்ணின் மைந்தன் என்ற பாசம் குஜராத்தியர்களை ஆட்டிப் படைக்கிறது. இந்தத் தேர்தலில் பாஜக வென்று வாகை சூடுமா? மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் தனிக்காட்டு ராஜாவாக வலம் வந்த பாஜக மீண்டும் பீடுநடை போடுமா?

குஜராத்தின் அரசியல் வரலாறு

குஜராத் மாநிலம் மகாத்மா காந்தியின் மாநிலமாக இருந்தபோதும், ஆரம்பத்தில் இருந்தே காங்கிரஸூக்கு எதிரான கட்சிகளின் கோட்டையாகவும் இருந்து வந்திருக்கிறது. பம்பாய் மாகாணத்தில் அப்போது குஜராத் அங்கம் வகித்தது. அப்போதே இரண்டாவது தேர்தலில் மொத்தமுள்ள 66 தொகுதிகளில் (ஒட்டுமொத்த பம்பாய் மாகாணம்) காங்கிரஸ் கட்சியால் 38 இடங்களில் மட்டுமெ வெல்ல முடிந்தது. பாரதிய ஜன சங்கம் (பாஜகவின் முந்தைய வடிவம்), பிரஜா சோஷலிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், சுயேச்சைகள் உள்ளிட்டோர் மீதமுள்ள இடங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

தனிமாநிலம் கோரி நடந்த போராட்டத்தின் விளைவாக, 1960-இல் குஜராத் மாநிலம் தோற்றுவிக்கப்பட்டது. அதையடுத்து நடந்த 3-ஆவது மக்களவைத் தேர்தலில் (மொத்தம்: 22 தொகுதிகள்) காங்கிரஸ் கட்சி 6 இடங்களை எதிர்க்கட்சிகளிடம் இழந்தது. சுதந்திரா கட்சி அந்த இடங்களில் வென்றது.

அடுத்த 1967-இல் நடந்த தேர்தலில் (மொத்தம்: 24 தொகுதிகள்) 13 இடங்களை சுதந்திரா கட்சியிடம் பறிகொடுத்தது. 1971இல் காங்கிரஸ் கட்சி இரண்டாகப் பிளவுபட்ட நிலையில், இந்திரா காந்தி தலைமையில் இந்திரா காங்கிரஸ் கட்சி குஜராத்தில் பழைய காங்கிரஸ் வசம் 11 தொகுதிகளை இழந்தது.

1977-இல் குஜராத் மாநில மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 26 ஆனது. அந்தத் தேர்தலில் இந்திரா காந்தியின் நெருக்கடி நிலைக்கு எதிராகப் போராடிய ஜனதா கட்சி 16 தொகுதிகளைக் கைப்பற்றியது. எனினும் ஜனதா அரசின் வீழ்ச்சிக்குப் பிந்தைய 1980 தேர்தலில் இந்திரா காங்கிரஸ் 25 தொகுதிகளில் வென்று மீண்டது. காலப்போக்கில் இந்திரா காங்கிரஸ் கட்சியே முழுமையான காங்கிரஸ் கட்சியாகிவிட்டது.

இந்திரா காந்தி படுகொலையை அடுத்து 1984இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் ஜனதா படுதோல்வி அடைந்தது. அந்தத் தேர்தலில் ஜனதா ஓரிடத்திலும் புதிதாக உருவான பாஜக ஓரிடத்திலும் வென்றன. 24 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியது அதுவே முதலும் கடைசியுமாக அமைந்தது. மாநிலத்தில் மாதவ்சிங் சோலங்கி முதல்வராக இருந்த காலம் (1990) வரை, காங்கிரஸ் வசமே பேரவையும் இருந்தது.

இடைக்காலத்தில் ஜனதாவின் அடுத்த அவதாரமான ஜனதாதளம் எழுச்சி பெற்றபோது, 1990இல் ஜனதாதளம் (70), பாஜக (67) கூட்டணி அமைச்சரவை குஜராத்தில் அமைந்தது. காங்கிரஸ் 33 இடங்களில் வென்றது. இதுவே பாஜகவின் வெற்றிப் பயணத்துக்கு அடிகோலிய நிகழ்வு. பாஜகவின் கேசுபாய் படேலும், ஜனதாதளத்தின் சிமன்பாய் படேலும் இணைந்து இந்த வெற்றியைச் சாத்தியமாக்கினர்.

ஆனால், குறுகிய காலத்தில் பாஜகவின் முதுகில் குத்தினார் சிமன்பாய் படேல். கூட்டணி முறிந்தது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சியைத் தொடர்ந்தார் அவர். இந்த துரோகத்துக்கு எதிராக கேஷுபாய் நடத்திய போராட்டமே  பாஜகவின் எழுச்சிக்கு அடிப்படையானது. சிமன்பாய் படேல் அரசு மீதான ஊழல் புகார்களும், காங்கிரஸின் செல்வாக்கு வீழ்ச்சியும் இணைந்து, 1995-இல் நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக ஆட்சி அமையக் காரணமாயின (பாஜக-121, காங்கிரஸ்- 45). கேஷுபாய் படேல் முதல்வர் ஆனார்.
எனினும் பாஜகவில் நேரிட்ட உள்கட்சிப் பூசலால் பாஜக அட்சி கவிழ்க்கப்பட்டது. சங்கர் சிங் வகேலா துவங்கிய ராஷ்ட்ரீய ஜனதா கட்சிக்கு பின்புலத்தில் இருந்து கைகொடுத்த காங்கிரஸ், பாஜக அரசை வீழ்த்தியது. இடைக்காலத்தில் சுரேஷ் மேத்தா, திலீப் பாரிக் ஆகிய பாஜக முதல்வர்களையும் குஜராத் கண்டது.

மாநில அரசியலில் மோடி

1998-இல் நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் பாஜக 117 தொகுதிகளில் வென்றது. (காங்கிரஸ் -53). கேசுபாய் படேல் மீண்டும் முதல்வர் ஆனார். ஆனால் உள்கட்சிக் குழப்பங்கள் தொடர்ந்தன. புஜ் நிலநடுக்கத்தால் நேரிட்ட பேரழிவைதொடர்ந்த மீட்புப் பணிகளில் கேஷுபாய் சிறந்த முறையில் செயல்படவில்லை என்பதே அதிருப்தியாளர்களின் புகார். அந்தச் சிக்கலான நேரத்தில் அன்றைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயால் குஜராத் அனுப்பி வைக்கப்பட்டார் நரேந்திர மோடி. அப்போது மோடி தில்லியில் தேசியச் செயலாளராக இருந்தார்.

1998-இல் குஜராத் வந்த மோடிக்கு அந்த மாநிலம் சொந்த மாநிலம் மட்டுமல்ல, மாவட்டவாரியாக பயணித்து களப்பணி புரிந்த சொந்த அனுபவமும் உதவியது. அதிருப்தியாளர்களை சரிக்கட்டினார். அனைத்து கோஷ்டிகளையும் ஒருங்கிணைத்தார்.

இதனிடையே, கோத்ரா ரயில் நிலையத்தில் கரசேவகர்கள் சென்ற ரயில் பெட்டி எரிக்கப்பட்டதை அடுத்து வெடித்த மதக்கலவரம் மோடி அரசுக்கு கரி பூசுவதாக அமைந்தது. கலவரக்காரர்களை முதல்வரே ஊக்குவித்தார் என்பது குற்றச்சாட்டு. பிரதமர் வாஜ்பாயே முதல்வர் மோடியை ராஜதர்மத்தைக் கடைப்பிடிக்குமாறு அரிவுறுத்தினார். 2002-இல் தனது அரசைக் கலைத்து புதிய தேர்தலைச் சந்தித்தார் மோடி. 122 தொகுதிகளில் வென்று மீண்டும் முதல்வர் ஆனார் மோடி. 2007-இல் நடந்த தேர்தலிலும் (117), 2012-இல் நடந்த தேர்தலிலும் (115) அவரே வென்று முதல்வராகத் தொடர்ந்தார்.

தனது ஆட்சிக்காலத்தில் நர்மதை அணை கட்டுமானத்தை கடும் எதிர்ப்புகளை மீறி நடைமுறைப்படுத்தியதன் வாயிலாக வறண்ட வட குஜராத் பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டுவரச் செய்தார். இலவசங்கள் அளிக்கும் கவர்ச்சி அரசியலை நாடாமல் உள்கட்டமைப்பு மேம்பாடு, சூரிய மின் திட்டங்கள், ஊழலற்ற நிர்வாகம், தொழில் துறை வளர்ச்சி, மக்கள் நலத் திட்டங்களில் கவனம் செலுத்தியதால் குஜராத் மாநிலம் அவரது தலைமையில் முன்னேறியது. குஜராத்தை ஹிந்துத்துவ அரசியலின் சோதனைச்சாலை ஆக்குகிறார் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அவர் மீது தொடர்ந்து புகார் கூறின. ஆனால், மக்கள் அவரையே தொடர்ந்து தேர்வு செய்தனர்.

1989 முதல் 2009 வரை குஜராத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களில் பாஜக - காங்கிரஸ் கட்சிகளின் வெற்றி மாறுபாடே மத்தியில் ஆளும் அரசை சுட்டிக்காட்டுவதாகவும், குஜராத் மாநில அரசியலின் திசையைக் காட்டுவதாகவும்  அமைந்திருந்தது. பாஜக-12, ஜனதாதளம்-11, காங்கிரஸ்-3 (1989), பாஜக-20, காங்கிரஸ்-6 (1991), பாஜக-16 , காங்கிரஸ்- 10 (1996), பாஜக-19, காங்கிரஸ்-7 (1998), பாஜக-20, காங்கிரஸ்-6 (1999), பாஜக-14, காங்கிரஸ்-12 (2004), பாஜக-15, காங்கிரஸ்-11 (2009), பாஜக- 26, காங்கிரஸ்-0 (2014). அதாவது, தேசிய அரசியலில் காங்கிரஸ் பெரும் வெற்றி பெற்ற காலங்களிலும்கூட பாஜக குஜராத்தில் படுதோல்வி அடையவில்லை.

மோடியின் தேசியப் பயணம்

2014-இல் தேசிய அரசியலுக்கு மோடி சென்றபோது குஜராத் மாநிலம் அவரது தலைமையை இழந்தது.

2014-இல் குஜராத்தில் நிலவிய மாபெரும் ஆதரவுப் பெருக்கு இன்று பாஜகவுக்கு இல்லை என்பது அக்கட்சியினரே உணர்ந்ததுதான். இருப்பினும் மோடிக்கு ஆதரவான நிலைப்பாடு குஜராத்தில் இன்னமும் மங்கிவிடவில்லை என்பதும் நிதர்சனம். குஜராத் மாநிலத்தின் கெளரவச் சின்னமாகவே நரேந்திர மோடி கருதப்படுகிறார். அதனால்தான் தோல்வியின் விளிம்பில் இருந்த பாஜகவை 2017இல் மீண்டும் ஆட்சியில் அமர்த்த மோடியால் இயன்றது. அவரது சூறாவளிப் பிரசாரம் பேரவைத் தேர்தலின் முடிவையே மாற்றியது.

தவிர, பாஜகவின் தேசியத் தலைவராக உள்ள அமித் ஷாவும் குஜராத்தியர். தேர்தல் வியூகம் வகுப்பதிலும், அரசியல் ராஜதந்திரத்திலும் நிபுணர் என்று பெயர் பெற்றுள்ள அமித் ஷா- பிரதமர் நரேந்திர மோடி ஆகிய இருவரும் இணைந்த ஜோடி, தேசிய வரைபடத்தை சில ஆண்டுகளில் காவிமயமாக மாற்றிக் காட்டியது. அண்மைக்கால தேர்தல்களில் பெற்ற இழப்புகளால்தான் பாஜக தற்போது தன்னிலைக்கு வந்திருக்கிறது. இவ்விருவர் மீதான அபிமானம் குஜராத்தில் தொடர்கிறது என்பதுதான் கள யதார்த்தம், இந்த அபிமானம் வாக்குகளாக மாறுமா? சென்ற தேர்தலில் பெற்ற 100 சதவிகித வெற்றியை இம்முறையும் பாஜகவால் அறுவடை செய்ய முடியுமா? இவையே இப்போதைய கேள்விகள்.

எதிர் தரப்பில் அகமது படேல் என்ற ராஜதந்திரியின் தலைமையில் காங்கிரஸ் களமாடுகிறது. "மிஷன்-50%' என்ற இலக்குடன், வெற்றி பெற வாய்ப்புள்ள தொகுதிகளில் மட்டும் அதீத கவனம் கொடுத்து காங்கிரஸ் களப்பணி ஆற்றுகிறது. படேல் சமூகத்தினர் போராட்ட நாயகன் ஹார்திக் படேல் காங்கிரஸ் கட்சியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

காங்கிரஸ் காரிய கமிட்டி அண்மையில் ஆமதபாதில் நடைபெற்றதற்குக் காரணம், குஜராத்தை மையப்படுத்திய அதன் அரசியல் பார்வையே. சிங்கத்தை அதன் குகையிலேயே சந்திப்பது என்று காங்கிரஸ் முடிவு செய்துவிட்டது. ஊரகப் பகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்குள்ள செல்வாக்கை விரிவுபடுத்துவதன் மூலமாக இழந்த தொகுதிகளை மீட்கலாம் என்பதே காங்கிரஸ் கட்சியின் செயல் திட்டம்.

மக்களவைத் தேர்தல் முடிவுகள்- இதுவரை...

1962
சுதந்திரா    4
காங்கிரஸ்    16 
(மொத்த இடங்கள்: 22)


1967
சுதந்திரா    12
காங்கிரஸ்    11
சுயேச்சை    1
(மொத்த இடங்கள்: 24)


1971
சுதந்திரா    2
பழைய காங்கிரஸ்    11
காங்கிரஸ்    11
(மொத்த இடங்கள்: 24)


1977
ஜனதா    16
காங்கிரஸ்    10
(மொத்த இடங்கள்: 26)


1980
ஜனதா    1
காங்கிரஸ்    25


1984
ஜனதா    1
பாஜக    1
காங்கிரஸ்    24


1991
பாஜக    20
காங்கிரஸ்     6


1996
பாஜக    16
காங்கிரஸ்    10


1998
பாஜக    19
காங்கிரஸ்    7


1999
பாஜக    20
காங்கிரஸ்    6


2004
பாஜக    14
காங்கிரஸ்    12


2009
பாஜக    15
காங்கிரஸ்    11


2014
பாஜக    26
காங்கிரஸ்    0


நட்சத்திரத் தொகுதிகள்


இந்த முறை குஜராத்தின் நட்சத்திர வேட்பாளரான லால் கிருஷ்ண அத்வானி தேர்தலில் போட்டியிடவில்லை. அவரது காந்திநகர் தொகுதியில் பாஜக தலைவரான அமித் ஷாவே களம் காண்பது பாஜகவினரை உற்சாகப்படுத்தி இருக்கிறது.
அதேபோல, சென்ற முறை மோடி போட்டியிட்டு வென்றபின் பதவி விலகிய வதோதரா தொகுதியும் கூடுதல் கவனம் பெற்றிருக்கிறது. வாராணசியை பிரதமர் மோடி தனது பிரதானத் தொகுதியாக மாற்றிக் கொண்டபோதும், தனது இரண்டாவது தொகுதியாகவே வதோராவைக் கருதி வந்திருக்கிறார். பாஜக அரசு வதோதராவுக்கு அளித்து வந்துள்ள முக்கியத்துவம், அந்தத் தொகுதியின் வளர்ச்சியில் வெளிப்படையாகவே புலப்படுகிறது.
காங்கிரஸ் கட்சி சார்பில் ஹார்திக் படேல் போட்டியிட வாய்ப்புள்ள அம்ரேலி தொகுதியும் இம்முறை தேசிய அளவில் கவனம் ஈர்க்க வாய்ப்புள்ளது.

பலமும் பலவீனமும்

குஜராத் மாநில பாஜக ஆட்சியில் ஊழல் குற்றச்சாட்டுகள் ஏதும் இல்லை என்பதே பாஜகவின் மிகப் பெரிய பலம். அதேபோல, வாக்குச்சாவடி வரை கட்சியின் தொண்டர்படை இருப்பது பாஜகவுக்கு கூடுதல் பலம். மாறாக சிறுபான்மையினரின் வாக்குகள் காங்கிரஸ் கட்சிக்கு பலம். படேல் ஜாதியினரின் ஆதரவு முழுமையாக கிடைக்காவிட்டாலும், அதில் பெரும்பகுதி காங்கிரஸ் கட்சிக்குக் கிடைக்க வாய்ப்பிருப்பதும் அக்கட்சிக்கு கூடுதல் பலம்.
இப்போதைக்கு படேல்கள் தங்களிடமிருந்து விலகுவதை அடுத்து இதர பிற்பட்ட ஜாதியினாரை அரவணைப்பதில் பாஜக கவனம் செலுத்தை வருகிறது. ஜெயின் சமூகத்தைச் சாரந்த விஜய் ரூபானியை முதல்வர் ஆக்கியதே அதன் அடையாளம் தான். தவிர, பழங்குடியினப் பகுதிகளிலும் பாஜகவின் செல்வாக்கு குறையவில்லை. நகர்ப்புறங்களில் பாஜகவின் செல்வாக்கு தொடர்ந்து பெருகியே வருகிறது.  
அதேசமயம், கிராமங்கள் மிகுந்த ஊரகப் பகுதிகளில் அதிகமான சட்டப்பேரவை உறுப்பினர்களை காங்கிரஸ் கொண்டிருக்கிறது. கிராம வாக்காளர்களே காங்கிரஸ் கட்சியின் இலக்கு. இதை பாஜக எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது என்பதைப் பொருத்தே 2014-இல் பெற்ற வெற்றியை மீண்டும் பாஜக பெற முடியுமா என்று சொல்ல முடியும்.

வரலாற்று உண்மை!

2014 மக்களவைத் தேர்தலில் பாஜக பெற்ற வாக்கு சதவிகிதம் 59.1 %. காங்கிரஸ் பெற்ற வாக்கு விகிதம் 32.9 %. கிட்டத்தட்ட, எட்ட இயலாத வித்தியாசம். 2017 சட்டப்பேரவைத் தேர்தலில் இந்த விகிதம் மாறியது (49.1 %- 41.4 %). எனினும் மக்களவைத் தேர்தலுக்கு ஒருவகையிலும் பேரவைத் தேர்தலுக்கு ஒருவகையிலும் மக்கள் வாக்களைப்பதையும் நாம் கவனத்தில் கொண்டாக வேண்டும்.
குஜராத்தின் கெளரவமா?  மதச்சார்பின்மையா? இதுவே வரும் தேர்தல் களத்தின் மையக் கேள்வியாக இருக்கும். குஜராத்தியர்கள் அவ்வளவு சீக்கிரம் யாரையும் நம்ப மாட்டார்கள்; நம்பினால் அவ்வளவு சீக்கிரம் கைவிடவும் மாட்டார்கள் என்பதே வரலாறு கூறும் உண்மை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com