தொடருமா சாதனைப் பயணம்?

தொடருமா சாதனைப் பயணம்?

ஒடிஸா மக்களவைத் தேர்தலுடன் சட்டப் பேரவைத் தேர்தலையும் எதிர்கொள்கிறது.


ஒடிஸா மக்களவைத் தேர்தலுடன் சட்டப் பேரவைத் தேர்தலையும் எதிர்கொள்கிறது. கடந்த 2000-ஆம் ஆண்டிலிருந்து ஆட்சி நடத்தி வரும் முதல்வர் நவீன் பட்நாயக், 5-ஆவது முறையாக அரியணை ஏறும் நம்பிக்கையில் களமிறங்கியிருக்கிறார். 
அவரது தலைமையிலான பிஜு ஜனதா தளம் கட்சிக்கு இம்முறையும் வெற்றி வாய்ப்பு இருப்பதாக கருத்து கணிப்புகள் கூறுகின்றன. 
அதேசமயம், கட்சித் தலைவர்கள் பலர் அதிருப்தியாளர்களாக உருவெடுத்திருப்பதும், கடந்த 5 ஆண்டுகளில் பாஜகவின் செல்வாக்கு அதிகரித்துள்ளதும் நவீன் பட்நாயக் முன் உள்ள பெரும் சவால்கள் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். 

கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து பேரவைத் தேர்தலையும் எதிர்கொண்டு வரும் ஒடிஸாவில், ஏப்ரல் 11-ஆம் தேதி தொடங்கி நான்கு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அங்கு, நவீன் பட்நாயக்கின் சாதனைப் பயணம் தடையின்றி தொடருமா என்பது வரும் மே 23-ஆம் தேதி தெரிந்துவிடும்.
ஒடிஸாவில் இரு முறை முதல்வர் பதவி வகித்தவரும், தனது தந்தையுமான பிஜு பட்நாயக் மறைவுக்கு பின்னர் கடந்த 1997-ஆம் ஆண்டில் பிஜு ஜனதா தளம் கட்சியைத் தொடங்கினார் நவீன் பட்நாயக். 1998-இல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பிஜு ஜனதா தளம் இணைந்தது. 2000-இல் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் இக்கூட்டணி வெற்றி பெற்று, காங்கிரஸிடமிருந்து ஆட்சியை கைப்பற்றியது. முதல்வராக நவீன் பட்நாயக் பதவியேற்றார். அதன் பிறகு அவருக்கு ஏறுமுகம்தான். 2004 மக்களவை, பேரவை தேர்தல்களிலும் இக்கூட்டணி வெற்றி வாகை சூடியதுடன், நவீன் பட்நாயக் இரண்டாவது முறையாக முதல்வரானார்.
இதனிடையே, ஒடிஸாவில் கடந்த 2008-இல் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்கள், ஆளும் கூட்டணியிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 2009-இல் மக்களவை, பேரவைத் தேர்தலையொட்டி, பாஜக கூட்டணியிலிருந்து விலகிய பிஜு ஜனதா தளம், தனியாக களமிறங்கியது. இரு தேர்தல்களிலும் பிஜு ஜனதா தளம் அமோக வெற்றி பெற்று, அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்தது. மொத்தமுள்ள 147 பேரவைத் தொகுதிகளில் 103 தொகுதிகளை அக்கட்சி கைப்பற்றியது. காங்கிரஸுக்கு 27 இடங்கள் கிடைத்தன. பாஜகவுக்கு வெறும் 6 இடங்கள் மட்டுமே கிடைத்தன. மக்களவைத் தேர்தலில், மொத்தமுள்ள 21 தொகுதிகளில் 14 தொகுதிகளை பிஜு ஜனதா தளம் கைப்பற்றியது. பாஜகவுக்கு ஒரு தொகுதி கூட கிடைக்கவில்லை.
2014ஆம் ஆண்டில் நடைபெற்ற மக்களவை, பேரவைத் தேர்தல்களிலும் பிஜு ஜனதா தளத்தின் கையே ஓங்கியிருந்தது. 117 பேரவைத் தொகுதிகளைக் கைப்பற்றிய பிஜு ஜனதா தளம், தொடர்ந்து 4-ஆவது முறையாக ஆட்சியமைத்தது. இதேபோல், 21 மக்களவைத் தொகுதிகளில் 20 இடங்கள் அக்கட்சியின் வசமாகின. ஒரு தொகுதியில் மட்டும் பாஜக வெற்றி பெற்றது. காங்கிரஸுக்கு அதுவும் கிடைக்காத நிலையில், மோசமான தோல்வியே மிஞ்சியது.
5-ஆவது முறையாக...: 72 வயதாகும் நவீன் பட்நாயக், 5-ஆவது முறையாக முதல்வராகும் முனைப்பில் இப்போதைய தேர்தலில் களமிறங்கியிருக்கிறார். அரசியல் வாழ்வில் அப்பழுக்கற்றவர், ஊழல் கறை படியாதவர் என்று அவருக்கு உள்ள நற்பெயர்தான் பிஜு ஜனதா தளத்தின் பலமாகும். அவரது அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு நலத் திட்டங்களுக்கு, அந்த மாநில மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பும் உள்ளது. ஆனால், கடந்த காலங்களை போலில்லாமல், இம்முறை அக்கட்சிக்கு பெரும் சவால்கள் காத்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
பட்நாயக்கின் அமைச்சரவை சகாக்கள், எம்எல்ஏக்கள் சிலர் மக்களிடம் அதிருப்தியை சம்பாதித்துள்ளனர். நிதி நிறுவன மோசடியில் அக்கட்சியின் ஒரு எம்.பி.யும், எம்எல்ஏக்கள் இருவரும் சிபிஐ-யால் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். மேலும் , பிஜு ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் இந்த மோசடியில் தொடர்பிருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகள், அக்கட்சியின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இதனால், ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலையை சமாளிக்கும் வியூகங்களை பட்நாயக் வகுத்துள்ளார். அதன் ஒரு பகுதியாக, தேர்தலில் புது முகங்களுக்கு வாய்ப்பளிக்கப்படுவதால், கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் அதிருப்தியடைந்துள்ளனர்.
கட்சித் தாவும் தலைவர்கள்: தேர்தல் நெருங்கும் நிலையில், பிஜு ஜனதா தளம் கட்சியின் இன்னாள், முன்னாள் எம்எல்ஏ-எம்.பி.க்கள் சிலர், அக்கட்சியிலிருந்து விலகி வருகின்றனர். அவர்களில் பலர் பாஜகவில் இணைந்துவிட்டனர். இதுவும் பிஜு ஜனதா தளத்துக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
பெண்கள் மத்தியில் தங்களது கட்சிக்கு உள்ள செல்வாக்கை தக்கவைக்கும் நோக்கில் மக்களவை, பேரவைத் தேர்தலில் 33 சதவீத இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும் என்று நவீன் பட்நாயக் அறிவித்தார். இதன் மூலம் பெண்களின் வாக்குகளை கவர முடியும் என்று அக்கட்சியினர் நம்புகின்றனர்.
இரு தொகுதிகளில் போட்டியிடும் பட்நாயக்: கடந்த 5 ஆண்டுகளில் ஒடிஸாவின் மேற்கு மண்டலத்தில்  பாஜகவின் செல்வாக்கு  கணிசமாக அதிகரித்துள்ளது. அப்பகுதியில் 5 மக்களவைத் தொகுதிகளும், 35 பேரவைத் தொகுதிகளும் அடங்கியுள்ளன. கடந்த 2017-இல் உள்ளாட்சித் தேர்தலில், மேற்கு மண்டலத்தில் மொத்தமுள்ள 209 மாவட்ட ஊராட்சிகளில் 126-ஐ பாஜக கைப்பற்றியது. பிஜு ஜனதா தளத்துக்கு 56 இடங்களே கிடைத்தன. காங்கிரஸ் 22 இடங்களில் வெற்றி பெற்றது.
எனவே, மேற்கு மண்டலத்தில் செல்வாக்கை தக்க வைக்க வேண்டிய நிலை பிஜு ஜனதா தளத்துக்கு ஏற்பட்டிருக்கிறது. இதனால், வழக்கமாக தான் போட்டியிடும் ஹின்ஜிலி பேரவை தொகுதியுடன், மேற்கு மண்டலத்திலுள்ள பிஜிபூர் தொகுதியிலும் பட்நாயக் போட்டியிடுகிறார். அவர் இரு தொகுதிகளில் போட்டியிடுவது இதுவே முதல் முறையாகும். தங்களைக் கண்டு பட்நாயக் அஞ்சுவதாக பாஜகவும், அவருக்கு தோல்வி பயம் வந்துவிட்டதாக காங்கிரஸும் விமர்சித்துள்ளன.

பாஜக வியூகம்
ஒடிஸாவில் கடந்த 5 ஆண்டுகளில் பாஜகவின் செல்வாக்கு இரு மடங்கு அதிகரித்திருப்பதாக கூறப்படும் நிலையில், அங்கு கணிசமான தொகுதிகளை கைப்பற்றும் நோக்குடன் பாஜக வியூகங்களை வகுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, நவீன் பட்நாயக்கின் தந்தை பிஜு பட்நாயக்கின் விசுவாசிகளையும், பிஜு ஜனதா தள அதிருப்தி தலைவர்களையும் தங்களது கட்சிக்கு இழுக்கும் நடவடிக்கையை கையாண்டு வருவதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். இதன்படி, பிஜு ஜனதா தளம் மூத்த தலைவர்கள் பலர் பாஜகவில் ஐக்கியமாகியுள்ளனர். அந்த வரிசையில் வைஜயந்த் பாண்டே, தாமோதர் ரௌட், பாலபத்ரா மாஜி உள்ளிட்டோரின் வருகை, தங்களுக்கு மேலும் வலு சேர்த்துள்ளதாக பாஜகவினர் கூறுகின்றனர். அத்துடன், பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் ஒடிஸாவுக்கு அடிக்கடி பயணம் மேற்கொண்டு, பல்வேறு கூட்டங்களில் பங்கேற்று வருகின்றனர்.

முனைப்பு காட்டும் காங்கிரஸ்
ஒடிஸாவில் 19 ஆண்டுகளுக்கு முன் ஆட்சியை பறிகொடுத்த காங்கிரஸ், இந்த முறை புதிய உத்வேகத்துடன் களமிறங்கியுள்ளது. அண்மையில் சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் அக்கட்சிக்கு கிடைத்த வெற்றியே அந்த உத்வேகத்துக்கு காரணமாகும். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் ஒடிஸாவுக்கு அடிக்கடி பயணம் மேற்கொண்டு, பொதுக் கூட்டங்களில் பங்கேற்று வருகிறார். ஒடிஸாவின் தெற்கு, மேற்கு மண்டலங்களை குறிவைத்து, அக்கட்சியின் தேசிய, மாநிலத் தலைவர்கள் பிரசாரத் திட்டங்களை வகுத்துள்ளனர்.

துருப்புச் சீட்டு
வரும் மக்களவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது; அப்படிப்பட்ட சூழலில், ஆட்சியமைப்பதில் நாங்கள்தான் துருப்புச் சீட்டாக இருப்போம் என்று பிஜு ஜனதா தளம் கூறி வருகிறது.
பாஜகவுக்கு எதிராக மகா கூட்டணி அமைப்பது தொடர்பான பேச்சுகள் தொடங்கிய காலகட்டத்தில், அந்தக் கூட்டணியில் பிஜு ஜனதா தளமும் இணையுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், பாஜக, காங்கிரஸிடமிருந்து சம தூரத்தில் விலகியிருப்போம் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளதாகவும், மகா கூட்டணியில் இணையப் போவதில்லை என்றும் நவீன் பட்நாயக் தெரிவித்தார்.
கடந்த 2018-ஆம் ஆண்டில் நடைபெற்ற மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் ஹரிவன்ஷ் நாராயண் சிங்குக்கு பிஜு ஜனதா தளம் ஆதரவளித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

தாக்கத்தை ஏற்படுத்துவாரா வைஜயந்த் பாண்டா?
ஒடிஸாவை சேர்ந்த முன்னணி ஊடகத்தின் உரிமையாளரான வைஜயந்த் பாண்டா, பிஜு ஜனதா தளம் கட்சியில் அக்கட்சியின் தலைவரும், மாநில முதல்வருமான நவீன் பட்நாயக்குக்கு அடுத்து செல்வாக்கு பெற்றத் தலைவராக விளங்கினார். பாஜகவுடன் நட்பு பாராட்டியதாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டை அடுத்து, பிஜு ஜனதா தளம் கட்சியிலிருந்து அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். பின்னர் பிஜு ஜனதா தளம் கட்சியிலிருந்தும், எம்.பி. பதவியிலிருந்தும் வைஜயந்த் பாண்டா விலகினார். தற்போது அவர் பாஜகவில் இணைந்திருக்கிறார். அவரது வருகை தங்களுக்கு வலுசேர்த்திருப்பதாக பாஜகவினர் நம்புகின்றனர். அவர், கேந்திரபரா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.

புகழ்பெற்ற முதல்வர்கள்

பிஜயானந்த (பிஜு) பட்நாயக்
ஒடிஸா முதல்வராக கடந்த 1961-63 காலகட்டத்திலும் (காங்கிரஸ்), 1990-1995 காலகட்டத்திலும் (ஜனதா தளம்) பதவி வகித்தவர் பிஜயானந்த பட்நாயக். பிஜு பட்நாயக் என்று அழைக்கப்படும் இவர், ஒடிஸாவின் தற்போதைய முதல்வர் நவீன் பட்நாயக்கின் தந்தை ஆவார். முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் நெருங்கிய நண்பராக கருதப்பட்ட இவர், இந்திய சுதந்திர போராட்டத்தில் மட்டுமன்றி, இந்தோனேஷியாவின் சுதந்திர போராட்டத்திலும் பங்காற்றியவர்.


ஹரேகிருஷ்ண மஹதாப்
ஒடிஸாவின் முதல் முதல்வரான இவர் (1946-1950), காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். 1956-61 காலகட்டத்திலும் இவர் ஒடிஸா முதல்வராக பதவி வகித்தார். நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக பங்கெடுத்த தலைவர். மகாத்மா காந்தியின் உப்பு சத்தியாகிரகம், வெள்ளையனே வெளியேறு போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றவர்.
நந்தினி சத்பதி
ஒடிஸாவின் முதல்வராக 1972 முதல் 1976 வரை பதவி வகித்தவர் நந்தினி சத்பதி. காங்கிரஸை சேர்ந்தவர். ஒடிஸாவில் கடந்த 1951-ஆம் ஆண்டில் கல்லூரி படிப்புக்கான செலவினங்கள் அதிகரித்ததை எதிர்த்து, மாணவர் போராட்டம் வெடித்தது. பின்னர், அது தேசிய அளவிலான இயக்கமாக மாறியது. இந்த இயக்கத்துக்கு தலைவராக செயல்பட்டவர் இவரே.
நவீன் பட்நாயக்
ஒடிஸாவில் 4-ஆவது முறையாக முதல்வர் பதவி வகித்து வரும் நவீன் பட்நாயக், அரசியல்வாதி மட்டுமன்றி எழுத்தாளரும்கூட. ஹிந்தி, ஆங்கிலம்,  பிரெஞ்சு மொழிகளில் தேர்ந்தவரான இவர், சிறந்த நிர்வாகத்துக்காக உள்நாட்டில் மட்டுமன்றி சர்வதேச கௌரவத்தையும் பெற்றவர். ஏழை மக்களுக்காக இவர் கொண்டு வந்த திட்டங்கள்தான், அவரது தடையற்ற ஆட்சிக்கு ஆதாரங்களாக உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com