குறுகிய கால பிரதமரான குல்சாரி லால் நந்தா

மகாத்மா காந்தியின் கொள்கைகள் மற்றும் போதனைகளால் ஈர்க்கப்பட்டு பொது வாழ்வில் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட தலைவர்கள், எண்ணில் அடங்காதவர்கள். குறிப்பாக, காந்திய கொள்கையை ஏற்றுக் கொண்டவர்கள்,
பிரதமர் நேரு தலைமையிலான கூட்டத்தில் குல்சாரி லால் நந்தா, மொரார்ஜி தேசாய், காமராஜர், ஆர்.வெங்கடராமன் உள்ளிட்டோர்.
பிரதமர் நேரு தலைமையிலான கூட்டத்தில் குல்சாரி லால் நந்தா, மொரார்ஜி தேசாய், காமராஜர், ஆர்.வெங்கடராமன் உள்ளிட்டோர்.



மகாத்மா காந்தியின் கொள்கைகள் மற்றும் போதனைகளால் ஈர்க்கப்பட்டு பொது வாழ்வில் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட தலைவர்கள், எண்ணில் அடங்காதவர்கள். குறிப்பாக, காந்திய கொள்கையை ஏற்றுக் கொண்டவர்கள், தங்கள் வாழ்வின் இறுதி வரை அதை பின்பற்றி வாழ்ந்து காட்டினர். அத்தகைய தலைவர்களில் ஒருவர்தான் பாரத ரத்னா குல்சாரி லால் நந்தா.
நாடு மிக முக்கியமான நெருக்கடிகளை சந்தித்த இருவேறு சமயங்களில் இடைக்கால பிரதமராக இருந்தவர் குல்சாரி லால் நந்தா. இந்திய விடுதலைப் போராட்டத்தின் ஓர் அங்கமான ஒத்துழையாமை இயக்கம் வாயிலாக பொதுவாழ்வில் அடியெடுத்து வைத்தவர். விடுதலைக்கு முன்னரும், அதன் பின்னரும் பலமுறை மக்கள் பிரதிநிதியாக பதவி வகித்துள்ளார். தொழிலாளர் நலன் சார்ந்த சீர்திருத்தங்களை முன்னெடுத்த பிதாமகன் குல்சாரி லால் நந்தா.
பிரிவினைக்கு முன்னர், ஒன்றுபட்ட இந்தியாவின் பகுதியும், தற்போது பாகிஸ்தானில் இருப்பதுமான சியால்கோட் (பஞ்சாப்) நகரில் 1898-ஆம் ஆண்டு ஜூலை திங்கள் 4-ஆம் தேதி குல்சாரி லால் நந்தா பிறந்தார். லாகூர், அமிருதசரஸ், ஆக்ரா உள்ளிட்ட இடங்களில் அவர் கல்வி பயின்றார். குறிப்பாக, அலாகாபாத் பல்கலைக்கழகத்தில், தொழிலாளர் பிரச்னைகள் சார்ந்த துறையில் ஆய்வுப் படிப்பை மேற்கொண்டவர். 1921-இல் மும்பையில் உள்ள தேசிய பொருளாதாரக் கல்லூரியில் பேராசிரியராக குல்சாரி லால் நந்தா பணியில் சேர்ந்தார். அந்த சமயங்களில் காந்தியின் மீது அவருக்கு ஏற்பட்ட ஈர்ப்பு, அவரை பொதுவாழ்வுக்கு உந்தியது.


ஒத்துழையாமை இயக்கத்தில்....: 1921-இல், மும்பையில் உள்ள மணிபவன் மாளிகையில், காந்தியடிகளை முதல்முறையாக சந்திக்கும் வாய்ப்பு குல்சாரி லால் நந்தாவுக்கு கிடைக்கப்பெற்றது. தன் உள்ளம் முழுவதும் நிறைந்த மகாத்மாவை நேரில் காணப் போகும் ஆச்சரியத்துடன் காத்திருந்தார் அவர். அப்போது, அங்கு வந்த காந்தியடிகள், குல்சாரி லால் நந்தா குறித்த அறிமுக விவரங்களை கேட்டறிந்தார். பின்னர், ஒத்துழையாமை இயக்கத்தில் சேருவதற்கு விருப்பம் உள்ளதா? என்று அவர் வினவியபோது, எந்த தயக்கமும் இல்லை என்றார் குல்சாரி லால் நந்தா. எனினும், அவரை சியால்கோட்டுக்கு அனுப்புவதா அல்லது மும்பையில் சேவையாற்ற வைப்பதா என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது, குல்சாரி லால் நந்தா மும்பையிலேயே இருக்கட்டும் என்றார் காந்தியடிகள்.
பின்னர், பல்வேறு பணிகளை குல்சாரி லால் நந்தா முன்னெடுத்து வந்த நிலையில், சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்றதற்காக 1932-ஆம் ஆண்டில் சிறை சென்றார். பின்னர், 1942 முதல் 1944-ஆம் ஆண்டு வரையிலும் சிறையில் அடைக்கப்பட்டார்.
பதவிகள்: பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த, மும்பை சட்டப்பேரவையின் உறுப்பினராக 1937-ஆம் ஆண்டில் குல்சாரிலால் நந்தா தேர்வு செய்யப்பட்டார். 1946-1950 வரையில், மும்பை மாகாண அரசில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக அவர் பதவி வகித்தார்.
பின்னர் சுதந்திர இந்தியாவில் நிறுவப்பட்ட திட்டக் குழுவின் துணைத் தலைவராக பொறுப்பேற்ற, குல்சாரி லால் தத்தா, முதலாவது ஐந்தாண்டு திட்டத்தை தயாரிப்பதில் முக்கியப் பங்கு வகித்தார். பிரதமர் ஜவாஹர்லால் நேரு தலைமையிலான அமைச்சரவையில் நீர்ப்பாசனத்துறை, மின்சாரம் ஆகிய துறைகளின் அமைச்சராக அவர் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், 1952-இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் குல்சாரி லால் நந்தா முதல்முறையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அந்த வெற்றி அடுத்தடுத்த தேர்தல்களிலும் தொடர்ந்த நிலையில், பல்வேறு துறைகளின் அமைச்சராக அவர் பணியாற்றினார். இந்தக் காலகட்டங்களில் சிங்கப்பூர், ஜெனீவா போன்ற இடங்களில் நடைபெற்ற சர்வதேச தொழிலாளர் நல மாநாடுகளில், இந்தியக் குழுவினரை வழிநடத்திச் சென்றவர் குல்சாரி லால் நந்தா.
இடைக்கால பிரதமர்....: இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே 1962-இல் போர் நடைபெற்று முடிந்திருந்தது. இந்நிலையில், 1964-இல் பிரதமர் ஜவாஹர்லால் நேரு மறைந்தார். இதையடுத்து, மூத்த அமைச்சர் என்ற அடிப்படையில் இடைக்கால பிரதமராக குன்சாரி லால் தத்தா பொறுப்பேற்றார். அவர் 13 நாள்கள் மட்டுமே அப்பதவியில் நீடித்தார். இதற்கிடையில், பல்வேறு கட்ட ஆலோசனைகள், மிக தீவிரமான பரிசீலனைகளின் அடிப்படையில் லால் பகதூர் சாஸ்திரியை புதிய பிரதமராக காங்கிரஸ் நாடாளுமன்றக் குழு தேர்வு செய்தது.
பின்னர், 1965-இல் மற்றொருமொரு போரை இந்தியா எதிர்கொண்டது. அந்தப் போர் 1966-இல் முடிவுக்கு வந்த நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்காக சோவியத் ரஷியாவுக்கு சென்றிருந்த லால் பகதூர் சாஸ்திரி, அங்கேயே காலமானார். இத்தகைய சூழலில், மீண்டும் இடைக்கால பிரதமராக பொறுப்பேற்ற குல்சாரி லால் நந்தா, மீண்டும் 13 நாள்கள் அப்பதவியில் நீடித்தார். அதன் பிறகு இந்திரா காந்தி பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். பின்னர், ஸ்தாபன காங்கிரஸ், இந்திரா காங்கிரஸ் என்று காங்கிரஸ் கட்சி இரண்டாகப் பிளவுபட்டது. குல்சாரி லால் நந்தா உள்பட மூத்த தலைவர்கள் பலர் ஸ்தாபன காங்கிரஸில் நீடித்தனர்.
பொதுவாழ்வில் இருந்து ஓய்வு: 1971-இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் இந்திரா காந்தி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றினார். அந்த சமயத்தில், தற்போதைய அரசியல் சூழல் மாற்றமடைந்திருப்பதாகவும், அந்த மாற்றத்துக்கு ஏற்ற வகையில் நான் இல்லை என்று கூறியும் தீவிர அரசியலில் இருந்து குல்சாரி லால் நந்தா விலகினார். அதன் பிறகு சமூக நலன் சார்ந்த விஷயங்களில் மட்டும் ஈடுபாடு காட்டி வந்தார்.
நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா, குல்சாரி லால் நந்தாவுக்கு கடந்த 1997-ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது. 1998-ஆம் ஆண்டு, ஜனவரி மாதம், குஜராத் மாநிலம், ஆமதாபாதில் குல்சாரி லால் நந்தா காலமானார்.

இரண்டு முறை இடைக்கால பிரதமராக இருந்தபோதிலும், தொழிலாளர் நல சீர்திருத்தங்களை முன்னெடுத்த பிதாமகனாக அறியப்படுபவர். குல்சாரி லால் நந்தாவின் இறுதிக் காலத்தில் தனிப்பட்ட வருவாய் ஆதாரம் எதுவும் இல்லை. பிள்ளைகள் மற்றும் ஆதரவாளர்களிடம் இருந்தும் உதவி பெற மறுத்தார். தியாகிகளுக்கான மாத ஓய்வூதியம் ரூ.500 கிடைக்கப்பெற்றதே அவருக்குப் போதுமானதாக இருந்தது.இந்திய வர்த்தக யூனியன் காங்கிரஸ் அமைப்பதற்கான முக்கிய காரணகர்த்தாவாக இருந்த குல்சாரிலால் நந்தா, பின்னாளில் அதன் தலைவர் ஆனார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com