மேற்கு வங்கத்தில் 4-ஆம் கட்ட வாக்குப் பதிவு: நீடிக்குமா மம்தா செல்வாக்கு?

நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. மேற்கு வங்கத்தில் உள்ள 42 தொகுதிகளுக்கு 7 கட்டங்களில் வாக்குப் பதிவு
மேற்கு வங்கத்தில் 4-ஆம் கட்ட வாக்குப் பதிவு: நீடிக்குமா மம்தா செல்வாக்கு?


நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. மேற்கு வங்கத்தில் உள்ள 42 தொகுதிகளுக்கு 7 கட்டங்களில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதுவரை 4 கட்ட வாக்குப் பதிவு முடிந்து, ஐந்தாம் கட்டமாக வரும் மே 6-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். அப்போது மாநிலத்தின் 7 தொகுதிகளில் வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலம் குறிக்கப்படும்.
மேற்கு வங்க மாநிலம் பன்கான், பாரக்பூர், ஹெளரா, உளுபெரியா, சீரம்பூர், ஹூக்ளி, அராம்பக் ஆகிய 7 தொகுதிகளுக்கு 5-ஆம் கட்டமாக  தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதிகளில் ஹூக்ளி மக்களவைத் தொகுதியில் இடம் பெற்றுள்ள சிங்கூரில் டாடா நிறுவனத்தின் நானோ கார் தொழிற்சாலை தொடங்க கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றதை மக்கள் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட மாட்டார்கள். இந்தப் பிரச்னையை அடிப்படையாக கொண்டே, மம்தாவின் திரிணமூல் காங்கிரஸ் கட்சி மேற்கு வங்கத்தில் அபரிமித வளர்ச்சி பெற்று உயர்ந்தது என்றால் மிகையாகாது.
கடந்த 2007-ஆம் ஆண்டு ஜனவரியில் சிங்கூரில் டாடா நிறுவனத்தின் நானோ கார் தொழிற்சாலை தொடங்க அப்போதைய மாநில அரசான இடதுசாரி முன்னணி அரசு விவசாயிகளிடம் இருந்து நில ஆர்ஜிதம் செய்யும் பணியில் ஈடுபட்டது. விவசாயிகளிடம் இருந்து மிகக்குறைந்த விலைக்கு வாங்கி கார் தொழிற்சாலை அமைக்கும் பணிக்காக அரசு வழங்கியது. மொத்தம் 997.11 ஏக்கர் பரப்பளவில் கார் தொழிற்சாலை ஏற்படுத்த திட்டமிட்டு, நில ஆர்ஜிதம் செய்யப்பட்டது. மிகக்குறைந்த விலை நிர்ணயம் செய்யப்பட்டதால் நிலத்தை வழங்க விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 
விவசாயிகள் பிரச்னையை கையில் எடுத்த திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, அவர்களுக்கு ஆதரவாகப் போராட்ட களத்தில் குதித்தார். கார் தொழிற்சாலை உருவானால் மேற்கு வங்க மக்களுக்கு ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகும் என இடதுசாரி கூட்டணி அரசு பிரசாரம் மேற்கொள்ள, அதற்கு நேர் எதிராக மம்தா பானர்ஜி விவசாய நிலத்தை அழித்து ஆலை அமைக்க வேண்டுமா என்று கேட்டு தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டார். கார் தொழிற்சாலையை மேற்கு வங்கத்தில் தொடங்கக் கூடாது; விவசாயிகளிடம் பறிக்கப்பட்ட நிலத்தை மீட்டு மீண்டும் அவர்களுக்கே வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் பல்வேறு போராட்டங்களை திரிணமூல் காங்கிரஸ் முன்னெடுத்தது.   
மேற்கு வங்கம் மட்டுமின்றி நாடு முழுவதும் இந்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டது. தான் ஆட்சிக்கு வந்தால், நிலத்தை மீட்டு விவசாயிகளுக்கே ஒப்படைப்பேன் என்று கூறியதால் விவசாயிகள் மட்டுமின்றி, மக்கள் மத்தியிலும் மம்தாவுக்கு ஆதரவு பன்மடங்கு பெருகியது. 
கிட்டத்தட்ட பாதியளவு பணிகளை முடித்திருந்த டாடா நிறுவனம், சிங்கூரில் நடைபெற்ற தொடர் போராட்டங்களால், கார் தொழிற்சாலை அமைத்தாலும் தொடர்ந்து இயக்க முடியாது என்று கருதியது. இதையடுத்து, மேற்கு வங்கத்தைவிட்டு வெளியேறி, குஜராத்தில் ஆலையை அமைக்க டாடா முடிவு செய்தது. அதன்படி, டாடா நிறுவனம் 2008-ஆம் ஆண்டு அக்டோபர் 3-ஆம் தேதி சிங்கூரில் இருந்து வெளியேறியது. இந்த வெற்றியை திரிணமூல் காங்கிரஸ் கொண்டாடியது. 
இப்பிரச்னையால், மேற்கு வங்கத்தில் இடதுசாரி கட்சியின் செல்வாக்கு வீழ்ச்சியடைந்தது. அடுத்து வந்த உள்ளாட்சி தேர்தல், மக்களவைத் தேர்தல்களில் திரிணமூல் காங்கிரஸின் செல்வாக்கு உயர இந்த விவகாரம் காரணமாக அமைந்தது. இதெல்லாம் பழைய கதை. தற்போதைய நிலையோ வேறு.
வீழ்ச்சியடைந்த திரிணமூல் செல்வாக்கு: 
கடந்த 2016இல் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த மம்தா, விவசாயிகளின் நிலத்தை திரும்ப ஒப்படைத்தார். சிங்கூரில், கார் தொழிற்சாலைக்காக கையகப்படுத்திய 997 ஏக்கர் நிலத்தின் பெரும்பகுதி கான்கிரீட் தளமாக மாற்றப்பட்டுவிட்டதால் அங்கு விவசாயம் செய்ய முடியாத நிலை உருவாகிவிட்டது. பெரும்பகுதி விவசாய நிலம் கான்கிரீட் காடாக மாறிவிட்டதால் விவசாயிகள் ஏமாற்றமடைந்தனர். அங்கு விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 
முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தங்கள் நிலத்தை திரும்ப பெற்ற பிறகு அவர்களது கருத்து வேறாக உள்ளது.
நிலம் கொடுக்கும் விவசாயிகளின் குடும்பத்துக்கு கார் தொழிற்சாலையிலேயே பணி வழங்குவதாக, முந்தைய இடதுசாரி அரசு கூறியது. அதை ஏற்காமல் நிலத்தை திரும்ப பெற்றுக் கொண்டோம். இப்போது, எங்கள் தவறை உணருகிறோம். அரசியல் லாபத்துக்காக, கார் நிறுவனத்தை வரவிடாததால், ஆயிரக்கணக்கான மக்களின் வேலை வாய்ப்பு தற்போது பறி போய் விட்டது. முன்பு, திரிணமூல் காங்கிரஸை நம்பிய பலரும், இப்பிரச்னைக்கு பிறகு பாஜகவை ஆதரிக்கத் தொடங்கிவிட்டனர் என்று விவசாயிகள் கூறுகின்றனர். 
இந்தக் கூற்றை மெய்ப்பிக்கும் வகையில், கடந்த இரண்டு தேர்தலிலும் பாஜகவினரின் வாக்கு விகிதம் அதிகரித்து வருவது கண்கூடாகத் தெரிகிறது. 
மக்களவைத் தேர்தலில் ஹூக்ளி தொகுதியில் 3.42 % ஆக இருந்த பாஜகவின் வாக்கு சதவீதம் கடந்த 2009-ஆம் ஆண்டில் 16.4 %ஆக அதிகரித்தது. அதேசமயம், 2014-ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியின் வாக்குகள் 10.84% ஆக சரிவடைந்துவிட்டது. 
இத்தொகுதியில், கடந்த 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் 5,74,022 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது. அடுத்தபடியாக வந்த கம்யூனிஸ்ட் கட்சி 4,92,499 வாக்குகளும், பாஜக 39,784 வாக்குகளும் பெற்றன. 
2014ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் 6,14,312 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது. கம்யூனிஸ்ட் கட்சி 4,25,228 வாக்குகளும், பாஜக 2,21,271 வாக்குகளையும் பெற்றது. 
திரிணமூல் காங்கிரஸ் கட்சியை தொடங்கி தான் சந்தித்த இரண்டு மக்களவைத் தேர்தல்களிலும், திரிணமூல் வேட்பாளர் டாக்டர் ரத்னா டி வெற்றி பெற்றார். இருப்பினும், தற்போது அக்கட்சியில் நிலவி வரும் கோஷ்டி மோதல் மற்றும் மக்கள் மத்தியில் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தி காரணமாக, இம்முறை ஹூக்ளி மட்டுமின்றி அரம்பாக் தொகுதியிலும் திரிணமூல் காங்கிரஸ் வெற்றி பெறுவது சிரமம் என்றும், அதேசமயம், தங்கள் கட்சி மேற்கு வங்கத்தில் வேகமாக வளர்ந்து வருவதால் கட்டாயம் இம்முறை வெற்றியை பெறும் என அரம்பாஹ் தொகுதியின் பாஜக வேட்பாளர் நம்பிக்கை தெரிவிக்கிறார். 
சீரம்பூர் தொகுதியை பொருத்தவரை, ஹூக்ளி தொகுதியின் நிலவரத்தையே பின்பற்றி தேர்தல் முடிவு அமையும் என்கின்றனர். இந்த தொகுதியிலும், பாஜகவின் வாக்கு சதவீதம் 2009-ஆம் ஆண்டை- விட 2014-ஆம் ஆண்டில் 18.74 % அதிகரித்துள்ளது. 
அதேசமயம் 2009ல் பதிவான வாக்குகளை விட 2014-ஆம் ஆண்டில் திரிணமூல் காங்கிரஸின் வாக்குகள் 12.78 % குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
இதையும் கடந்து மீண்டும் நாங்களே வெற்றிக் கொடி நாட்டுவோம் என்று திரிணமூல் காங்கிரஸும் நம்பிக்கையுடன் களம் இறங்குகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com