மலைக்கோட்டையில் மல்லுக்கட்டு!

தமிழகத்தின் இரண்டாம் தலைநகரம் என்ற பெருமைக்குரிய திருச்சிராப்பள்ளி, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் திருச்சினாப்பள்ளி என்றே அழைக்கப்பட்டது. நாடு சுதந்திரமடைந்து 1947-ஆம் ஆண்டுக்குப் பிறகு
மலைக்கோட்டையில் மல்லுக்கட்டு!

தமிழகத்தின் இரண்டாம் தலைநகரம் என்ற பெருமைக்குரிய திருச்சிராப்பள்ளி, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் திருச்சினாப்பள்ளி என்றே அழைக்கப்பட்டது. நாடு சுதந்திரமடைந்து 1947-ஆம் ஆண்டுக்குப் பிறகு திருச்சிராப்பள்ளி எனப் பெயர் மாற்றப்பட்டது. மலைக்கோட்டையை அடையாளமாகக் கொண்டுள்ள இந்த மாவட்டத்தின் பெயரிலேயே மக்களவைத் தொகுதியும் அமைந்துள்ளது.

தொகுதி அறிமுகம்: திருச்சி மக்களவைத் தொகுதியானது 1951, 1953, 1955, 1956, 1961, 1967, 1976 என 7 முறை ஏற்கெனவே மறுசீரமைக்கப்பட்டது. 1976-ஆம் ஆண்டு முதல் முசிறி, லால்குடி, ஸ்ரீரங்கம், திருச்சி-1, திருச்சி-2, திருவெறும்பூர் ஆகிய 6 பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கியிருந்தது. 2008-ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து கந்தர்வக்கோட்டை (தனி), புதுக்கோட்டை ஆகிய இரு பேரவைத் தொகுதிகளையும், திருச்சி (மேற்கு), திருச்சி (கிழக்கு), ஸ்ரீரங்கம், திருவெறும்பூர் என திருச்சி மாவட்டத்தின் 4 பேரவைத் தொகுதிகளையும் உள்ளடக்கி உருமாற்றம் பெற்றது.

தொழில் வளம்: படைக்கலன் தொழிற்சாலைகள் (ஓஎப்டி, ஹெச்ஏபிபி), பாரத மிகு மின் நிறுவனம் (பெல்) உள்ளிட்ட மத்திய அரசின் தொழிற்சாலைகள், பொன்மலை ரயில்வே பணிமனை மற்றும் அதனைச் சார்ந்த சிறு, குறு நிறுவனங்களால் தொழிலாளர்கள் அதிகமுள்ள தொகுதியாகும். இதற்கு அடுத்தப்படியாக வேளாண்மை பிரதானமாக உள்ளது. நெல், வாழை முக்கியப் பயிர்களாகும்.
சாதிகள் பலம்: முத்தரையர், வெள்ளாளர், முக்குலத்தோர், தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் அதிகமுள்ள தொகுதி. இதற்கு அடுத்தப்படியாக நாயுடு, செட்டியார், நாடார், யாதவர் சமூகத்தினர் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உள்ளனர். ஸ்ரீரங்கத்தில் பிராமணர்கள் கணிசமான அளவில் உள்ளனர். இதுபோல கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் குறிப்பிடும்படியாக உள்ளனர்.
கடந்த கால வரலாறு: கம்யூனிஸ்ட் தலைவர் எம். கல்யாணசுந்தரம், மத்திய அமைச்சர் அரங்கராஜன் குமாரமங்கலம் ஆகியோரைத் தந்த தொகுதி. 1984 முதல் 1996 வரை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எல். அடைக்கலராஜ் தொடர்ந்து 4 முறை எம்.பி-யாக வெற்றி பெற்ற தொகுதி. பெரும்பாலும் கூட்டணி கட்சிகளுக்கே ஒதுக்கப்பட்ட இந்தத் தொகுதி, கடந்த 2009, 2014-இல் அதிமுக வசம் வந்தது. அதிமுக-வைச் சேர்ந்த ப. குமார், இருமுறையும் வெற்றி பெற்றார்.
16 முறை பொதுத் தேர்தலையும், ஒருமுறை (2001-இல்) இடைத்தேர்தலையும் சந்தித்துள்ளது. இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் தலித் எழில்மலை நிறுத்தப்பட்டு, வெற்றி பெற்றார். 1951-இல் சுயேச்சை வேட்பாளர் இ. மதுரம் வெற்றி பெற்றார். இதன் தொடர்ச்சியாக இந்திய கம்யூனிஸ்ட் 3 முறையும், மார்க்சிஸ்ட் ஒரு முறையும், காங்கிரஸ் 4 முறை, தமாகா ஒரு முறை, அதிமுக இருமுறை வெற்றி பெற்றுள்ளன. பாஜக-வும் இருமுறை வெற்றி பெற்றுள்ளது. திமுக, மதிமுக ஆகியவை தலா ஒரு முறை வென்றுள்ளன.

கடந்த 2014-ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக, திமுக, தேமுதிக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் ஆகிய கட்சிகள் தனித்து களம் இறங்கின. இதில், அதிமுக வேட்பாளர் ப. குமார், 4,58,478 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 3 லட்சம் வாக்குகளுடன் திமுக 2-ஆம் இடம் பிடித்தது. 94 ஆயிரம் வாக்குகளுடன் தேமுதிக 3 ஆவது இடத்தையும், 51 ஆயிரம் வாக்குகளுடன் காங்கிரஸ் 4-ஆவது இடத்தையும் பிடித்தது. 17 ஆயிரம் வாக்குகள் பெற்று மார்க்சிஸ்ட் கட்சி 5-ஆவது இடத்துக்கு வந்தது.

களம் காணும் வேட்பாளர்கள்: இப்போது (2019) அதிமுக சார்பில் கூட்டணி கட்சியான தேமுதிக-வுக்கு தொகுதி ஒதுக்கப்பட்டு வேட்பாளராக தருமபுரியைச் சேர்ந்த மருத்துவரும், கட்சியின் அவைத் தலைவருமான வி. இளங்கோவன் நிறுத்தப்பட்டுள்ளார். திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டு, தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் சு. திருநாவுக்கரசர் நிறுத்தப்பட்டுள்ளார். அமமுக சார்பில் சாருபாலா ஆர். தொண்டைமான், மநீம சார்பில் வி. ஆனந்தராஜா ஆகியோர் போட்டியிடுகின்றனர். நாம் தமிழர் கட்சியும் தனித்து களம் காண்கிறது. இவைத்தவிர பகுஜன் சமாஜ் கட்சி, இந்திய கிறிஸ்தவர் முன்னணி, தமிழ்நாடு இளைஞர் கட்சி, தேசிய உழைப்பாளர் கழகம் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 24 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

தீர்க்கப்படாத பிரச்னைகள்: மூடப்பட்ட சிறு, குறு தொழிற்சாலைகளைத் திறப்பது, ஸ்ரீரங்கத்தில் அடிமனை பிரச்னைக்குத் தீர்வு, வேளாண் சார்ந்த மதிப்பு கூட்டுத் தொழில்கள் தொடங்குதல், திருச்சிக்கு ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், கிடப்பில் உள்ள ஜங்ஷன் மேம்பாலம், சுற்று வட்டச் சாலை, கந்தர்வக் கோட்டையில் முந்திரி சார்பு தொழிற்சாலைகள், கந்தர்வக்கோட்டை வரை பாசனக் கால்வாய் இணைத்தல், தஞ்சாவூரிலிருந்து புதுக்கோட்டைக்கு இருப்புப் பாதை, காவிரியின் பாசனக் கால்வாய்களான 17 வாய்க்கால்களை முழுமையாக தூர்வாருதல், காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டம் உள்ளிட்டவை நீண்ட கால கோரிக்கைகளாகவும், தீர்க்கப்படாத பிரச்னைகளாகவும் அமைந்துள்ளன.

தொகுதி நிலவரம்: புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சு. திருநாவுக்கரசருக்கு, அவரது மாவட்டத்தின் இரு பேரவை தொகுதிகள் திருச்சி மக்களவையில் இடம் பெற்றிருப்பதும், இந்தத் தொகுதிகளில் முக்குலத்தோர் சமுதாய வாக்குகள் அதிகம் இருப்பதும் பலமாக உள்ளது. தொகுதி மக்களின் அனைத்து இல்ல நிகழ்வுகளிலும் பங்கேற்று மக்களைக் கவர்ந்தவராக உள்ளார். திருச்சி மாவட்டத்துக்கு புதியவர். இருப்பினும், வந்தோரை வாரி அணைக்கும் தொகுதி என்பதாலும், கூட்டணி கட்சிகளின் வாக்கு வங்கிகளையும் நம்பி களம் இறங்கியுள்ளார். தற்போதுள்ள 6 பேரவை தொகுதிகளில் திருவெறும்பூர், திருச்சி மேற்கு, புதுக்கோட்டை ஆகிய மூன்று தொகுதிகள் திமுக வசம் உள்ளன. மேலும், திருநாவுக்கரசர் புதுக்கோட்டை எம்பி, எம்எல்ஏ பதவிகளை வகித்து தொகுதி மக்களுக்கு பல்வேறு திட்டங்களை பெற்றுத்தந்துள்ளது வலுச்சேர்க்கிறது. இதன்காரணமாக வாக்குசேகரிப்பில் புதுக்கோட்டை மாவட்டத்துக்கு முக்கியத்துவம் அளித்து பெரும்பாலான பகுதிகளில் வலம்வந்து முடித்துவிட்டார்.

இதேபோல, சாருபாலா ஆர். தொண்டைமானுக்கு முக்குலத்தோர் சமூக வாக்குகள் கை கொடுக்கும் என்பதும், ஏற்கெனவே இரு முறை வெற்றி வாய்ப்பை நழுவவிட்டிருந்தாலும், தொகுதியில் உள்ள தனது தனித்த செல்வாக்காலும் (மன்னர் பரம்பரை), திருச்சி மேயராக இருந்து திருச்சி மாநகராட்சியைத் திறம்பட நடத்திய அனுபவம் உள்ளதும் வாக்காளர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அமமுக, டிடிவி தினகரன் என்ற அடையாளமே தனக்கு வெற்றியைத் தேடித்தரும் என்கிறார். காங்கிரஸ் வேட்பாளர் சு. திருநாவுக்கரசரும், தேமுதிக வேட்பாளர் வி. இளங்கோவனும் தொகுதிக்கு இறக்குமதி செய்யப்பட்டவர்கள், நான்தான் மண்ணின் மைந்தர் எனக் கூறி வாக்கு சேகரிப்பதும் திருச்சி தொகுதிக்கானவர் என்ற அடையாளத்தை பெற்றுத்தந்துள்ளது.

தேமுதிக-வுக்கு கடந்த 2014, 2009 தேர்தல்களில் கிடைத்த தனிப்பட்ட வாக்குகள் (1.50 லட்சத்துக்கும் மேல்), இதே காலகட்டத்தில் அதிமுக தொடர்ந்து இருமுறை வெற்றி பெற்று சேகரித்த வாக்குகள், பாமக, தமாகா, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், சமத்துவ மக்கள் கட்சி, மூவேந்தர் முன்னணிக் கழகம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் பலம் கரைசேர்க்கும் என்ற நம்பிக்கையில் உள்ளார் தேமுதிக வேட்பாளர் இளங்கோவன். திருச்சி தொகுதியானது தலித் எழில்மலை, என். செல்வராஜ், அரங்கராஜன் குமாரமங்கலம், எல். கணேசன், ப. குமார் என திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்திராத வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் வந்து வெற்றி பெற்ற தொகுதி என்பதால் தன்னையும் ஏற்றுக் கொள்ளும் என்ற நம்பிக்கையில் வலம் வருகிறார். நான் தொகுதிக்கு புதிதானவன் அல்ல, திருச்சி அரசு மருத்துவமனையில் 7 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தவன், எனது குழந்தைகள் திருச்சியில் பிறந்தவை எனக் கூறி வாக்குசேகரித்து வருவது, மாவட்டத்தைச் சேராதவர் என்பதற்கான இடைவெளியைக் குறைத்துள்ளது.

காங்கிரஸில் உள்ள கோஷ்டி பூசல் திருநாவுக்கரசருக்கும், அதிமுக-வில் உள்ள கோஷ்டி பூசல் தேமுதிக-வுக்கும் சற்று பின்னடவை ஏற்படுத்தும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் வி. ஆனந்தராஜா, ஏற்கெனவே, கடந்த 2009 தேர்தலில் சுயேச்சையாக களம் இறங்கியவர். இந்த முறை கமல்ஹாசன் என்ற பிம்பத்தை முன்வைத்து களம் காண்கிறார். வெற்றி இலக்கை தொட முடியாமல் போனாலும், கணிசமான வாக்குகளை பெற முடியும் என்ற நம்பிக்கையில் உள்ளார். காங்கிரஸ், தேமுதிக, அமமுக என மூன்று வேட்பாளர்களில் யார் முதலிடத்தைப் பிடிப்பது என்ற கடுமையான போட்டி நிலவக்கூடிய சூழலே உள்ளது. மலைக்கோட்டையில் பறக்கப் போகும் வெற்றிக் கொடி யாருடையது என்ற ஆவலில் அனைத்துக் கட்சிகளுமே காத்திருக்கின்றன.

வாக்காளர்கள் விவரம்
ஆண்கள்    7,39,241
பெண்கள்    7,68,940
மூன்றாம் பாலினம்    148
மொத்தம்    15,08,329

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com