ஹரியாணா தேர்தல் நிலவரம்

"ஹரியாணா, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் விவசாயிகளின் கடன் விவகாரம் பூதாகரமாக உள்ளது. மத்திய அரசு பட்ஜெட் கூட்டத்தொடரின்போது அறிவித்த விவசாயிகளுக்கான நிதியுதவித் திட்டம் பாஜகவுக்கு ஓரளவு விவசாயிகளின் ஆதரவைப் பெற்றுத் தரும் என நம்பப்படுகிறது.
ஹரியாணா தேர்தல் நிலவரம்

"ஹரியாணா, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் விவசாயிகளின் கடன் விவகாரம் பூதாகரமாக உள்ளது. மத்திய அரசு பட்ஜெட் கூட்டத்தொடரின்போது அறிவித்த விவசாயிகளுக்கான நிதியுதவித் திட்டம் பாஜகவுக்கு ஓரளவு விவசாயிகளின் ஆதரவைப் பெற்றுத் தரும் என நம்பப்படுகிறது.

 ஹரியாணாவில் ஜாட் பிரிவு மக்களின் கோரிக்கை போராட்டம் முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு நடவடிக்கை பாஜகவுக்கு அந்த வகுப்பினர் மத்தியில் சற்று சாதகமான நிலையை ஏற்படுத்தக் கூடும். "
 கலாசாரம், மொழி அடிப்படையில் ஹரியாணா மாநிலம், 1966, நவம்பர் 1-இல் முன்னாள் கிழக்கு பஞ்சாப் மாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்டது. எனினும் இதன் அரசியல்- புவியியல் நிலவரம் வினோதமானது. இதன் தலைநகராக சண்டீகர் நகரம்உள்ளது. முழுமையான யூனியன் பிரதேசமான சண்டீகர், பஞ்சாப்- ஹரியாணா ஆகிய மாநிலங்களுக்கும் பொதுத் தலைநகராக விளங்கி வருகிறது. அதிக மக்கள்தொகை நிறைந்த பகுதியான ஹரியாணாவின் ஃபரீதாபாத் தில்லி தலைநகர் வலையப் பகுதியின் கீழ் வருகிறது. அதிக முன்னணி நிதி நிறுவனங்கள் அமைந்துள்ள குருகிராம் ஆகியவை இம்மாநிலத்தில் உள்ளன. நாட்டில் தனி நபர் வருவாய் அதிகமுள்ள 5-ஆவது மாநிலமாகவும் இது திகழ்கிறது.

 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கின்படி ஹரியாணாவில் மொத்தம் 2 கோடியே 51 லட்சத்து 50 ஆயிரம் பேர் உள்ளனர். இதில் ஹிந்துக்கள் 87.46% முஸ்லிம்கள் 7.03%, சீக்கியர்கள் 4.91% பேர் உள்ளனர். ஹரியாணா மக்கள் தொகையில் 29% பேர் ஜாட் வகுப்பினர். இவர்கள் அரசியல் கட்சிகள் மத்தியில் முக்கியத்துவம் பெற்றுள்ளனர். அடிப்படையில் ஹரியாணா ஒரு விவசாய மாநிலமாகும். இங்குள்ள மக்களில் 70% பேர் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாட்டில் உணவு தானிய உற்பத்தியில் இரண்டாம் இடத்தை வகிக்கிறது. கோதுமை, நெல் முக்கியப் பயிர்களாகும்.

 மாநிலத்தில் உள்ள 10 மக்களவைத் தொகுதிகளில் அம்பாலா மற்றும் சிர்ஸா ஆகிய இரண்டு தனி தொகுதிகளாகும். கடந்த 2014 தேர்தலில் பாஜக 7, காங்கிரஸ் 1, ஐஎன்எல்டி கட்சி 2 இடங்களிலும் வெற்றி பெற்றன.

 பாஜகவுக்கு சாதகமா?
 பாஜகவைப் பொருத்தமட்டில் ஹரியாணாவின் தற்போதைய மக்களவை எம்பிக்கள் 7 பேரில் சிலருக்கு மட்டுமே மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்க உள்ளதாகவும், அப்பட்டியலில் மத்திய அமைச்சர்களான குருகிராம் எம்.பி. ராவ் இந்திரஜித், ஃபரீதாபாத் எம்.பி. கிருஷண் பால் குஜ்ஜர் ஆகியோரும் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அண்மையில் மாநகராட்சி தேர்தல் முடிவுகள் மற்றும் ஜிந்த் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் வெற்றி ஆகியவை பாஜகவுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது.

 மேலும், முக்கிய எதிர்க்கட்சியான இந்திய தேசிய லோக் தளம், குடும்பப் பிரச்னையால் பிளவுபட்டிருப்பதும் பாஜகவுக்கு சாதகமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. ஹரியாணா முதல்வரான பாஜகவின் மனோகர் லால் கட்டர் காங்கிரஸ் கட்சி தலைவர்களைத் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். குறிப்பாக முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடாவின் மகன் தீபீந்தர் சிங் ஹூடாவின் சொத்து 2009-இல் ரூ.6.5 கோடியாக இருந்ததாகவும், அது 2014-இல் ரூ. 35.5 கோடியாக உயர்ந்தது எப்படி என்றும் கேள்வி எழுப்பி வருகிறார்.

 கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் பாஜக 35% வாக்குகளை பெற்றது. எனினும் அதே ஆண்டு அக்டோபரில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் அக்கட்சியின் வாக்கு சதவீதம் 35-லிருந்து 33 ஆகக் குறைந்தது. அக்கட்சி 47 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. தற்போதைய மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடியின் மக்கள் செல்வாக்கை பிரசார உத்தியாக பாஜக பயன்படுத்தி வருகிறது. மேலும், மாநில முதல்வர் மனோகர் லால் கட்டரின் ஐந்து ஆண்டு கால செயல்பாடுகளை விளக்கியும் அக்கட்சியினர் வாக்கு சேகரித்து வருகின்றனர்.

 அதே சமயம், காங்கிரஸ் கட்சி ரஃபேல் விவகாரம், விவசாயிகளுடைய பிரச்னை, வேலைவாய்ப்பின்மை ஆகியவற்றை முன்வைத்து பாஜகவுக்கு எதிராக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது. அக்கட்சியின் முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா ஏற்கெனவே ரத யாத்திரையை நடத்தினார். காங்கிரஸ் மாநில தலைவர் அசோக் தன்வர் சைக்கிள் பிரசாரப் பயணம் மேற்கொண்டார். இந்திய தேசிய லோக் தளம் கட்சி சட்லஜ்-யமுனை இணைப்பு (எஸ்ஒய்எல்) கால்வாய் திட்டத்தை செயல்படுத்தக் கோரி வருகிறது.

 கூட்டணி முயற்சி
 இதனிடையே, பாஜகவுடன் இந்திய தேசிய லோக் தளம் கட்சி, கூட்டணி வைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே கடந்த காலங்களில் பலமுறை பாஜகவுடன் அக்கட்சி கூட்டணி வைத்திருக்கிறது. 1999 தேர்தலில் இரண்டு கட்சிகளும் கூட்டணி அமைத்து தலா 5 தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்திலும் வெற்றி பெற்றன. 1998 முதல் 2004 வரை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இந்திய தேசிய லோக் தளம் இருந்தது. 2014 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகும் இந்திய தேசிய லோக் தளம் கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வெளியிலிருந்து ஆதரவு தருவதாக அறிவித்தது.

 காங்கிரஸில் உள்கட்சி பூசல்
 ஹரியாணா காங்கிரஸில் முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா, அக்கட்சியில் செல்வாக்குப் பெற்ற தலைவர்களுள் ஒருவராகத் திகழ்கிறார். தற்போது இவருக்கு எதிராக பல்வேறு ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருந்த போதிலும், மாநிலத்தில் ஜாட் வகுப்பினரை ஒருங்கிணைக்கும் காங்கிரஸ் வியூகங்களில் இவர் முக்கியப் பங்கு வகித்து வருகிறார். இவர் தவிர காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களாக முன்னாள் முதல்வர் பன்சிலாலின் மருமகள் கிரண் செüத்ரி, கடந்த 5 ஆண்டுகளாக மாநிலக் காங்கிரஸ் தலைவராக இருந்து வரும் அசோக் தன்வர், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பொறுப்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா, முன்னாள் மத்திய அமைச்சர் குமாரி செல்ஜா ஆகியோரும் கட்சியில் செல்வாக்கு பெற்றவர்களாக உள்ளனர். ஆனால், இவர்கள் தனித் தனி கோஷ்டிகளாக செயல்படுவது தலைமைக்கு தலைவலியாக இருந்து வருகிறது.
 மக்கள் ஆதரவு யாருக்கு?
 ஹரியாணா, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் விவசாயிகளின் கடன் விவகாரம் பூதாகரமாக உள்ளது. மத்திய அரசு பட்ஜெட் கூட்டத் தொடரின்போது அறிவித்த விவசாயிகளுக்கான நிதியுதவித் திட்டம் பாஜகவுக்கு ஓரளவு விவசாயிகளின் ஆதரவைப் பெற்றுத் தரும் என நம்பப்படுகிறது. ஹரியாணாவில் ஜாட் பிரிவு மக்களின் கோரிக்கை போராட்டம் முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.

 பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு நடவடிக்கை பாஜகவுக்கு அந்த வகுப்பினர் மத்தியில் சற்று சாதகமான நிலையை ஏற்படுத்தக் கூடும்.

 புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் பாலாக்கோட் பகுதியில் இந்திய விமானப் படை நடத்திய அதிரடித் தாக்குதல், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கும் திட்டம் ஆகியவற்றை முன்வைத்து அக்கட்சியினர் பிரசாரம் செய்து வருகின்றனர்.

 2014 தேர்தலுக்கு முன்பாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஜாட் வகுப்பினருக்கு இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவு அந்தஸ்தை அளித்தது. எனினும் அந்த உத்தரவு உச்சநீதிமன்றத்தால் நிறுத்திவைக்கப்பட்டது. 2016-இல் ஜாட் வகுப்பினர் மிகப்பெரிய போராட்டத்தை மேற்கொண்டனர் வன்முறை மற்றும் மோதலில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில், தற்போது நடைபெறும் தேர்தலில் ஜாட் வகுப்பினரின் வாக்குகளை கவர்வதில் பாஜக, காங்கிரஸ் ஆர்வம் காட்டுகின்றன.

 இது ஒருபுறம் இருக்க, 2014, தேர்தலில் பாஜகவுக்கு வெளிப்படையாக தனது ஆதரவைத் தெரிவித்திருந்த தேரா சச்சா சௌதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம், பாலியல் வன்கொடுமை வழக்கில் 2017, ஆகஸ்டில் சிறப்பு பஞ்ச்குலா நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அதையொட்டி அவரது ஆதரவாளர்கள் நடத்திய வன்முறையில் 31 பேர் கொல்லப்பட்டனர். இதன் தாக்கம் இந்தத் தேர்தலில் எதிரொலிக்கக் கூடும்.

 ஹரியாணாவில் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க ஆம் ஆத்மி முயன்று தோல்வி அடைந்தது. இதனால், புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள ஜனநாயக் ஜனதா கட்சியுடன் ஆம் ஆத்மி கூட்டணி அமைத்துள்ளது. இந்தக் கட்சி இந்திய தேசிய லோக் தளம் கட்சி உடைந்த பிறகு உருவாக்கப்பட்டது. இதனிடையே, பகுஜன் சமாஜ் கட்சி 8 தொகுதிகளில் போட்டியிட உள்ளது.

 கடும் போட்டியை கொடுக்கும் ஆம் ஆத்மி!

 ஆம் ஆத்மி கட்சிக்கு பலமான செல்வாக்கு உள்ள மாநிலமாக பஞ்சாப் உள்ளது. அதே பலத்தை ஹரியாணாவிலும் ஏற்படுத்த அக்கட்சித் தலைமை முயன்று வருகிறது. கடந்த மக்களவைத் தேர்தலில் முதன்முறையாக பஞ்சாபில் தனித்துப் போட்டியிட்ட ஆம் ஆத்மி, நான்கு தொகுதிகளைக் கைப்பற்றியது. ஆனால், அதைத் தொடர்ந்து நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அக்கட்சி சோபிக்கவில்லை. தவிர வாக்கு சதவீதமும் சற்று குறைந்தது. இத்தகைய சூழலில், இந்தத் தேர்தலில் ஹரியாணா, பஞ்சாப் ஆகிய இரண்டு மாநிலங்களையும் குறிவைத்து காங்கிரஸுடன் கூட்டணி சேர முயற்சி செய்தது. ஆனால், இதுவரை அது பலனளிக்கவில்லை. இது ஆம் ஆத்மிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சி, ஹரியாணாவில் துஷ்யந்த் சௌதாலா தலைமையிலான ஜனநாயக் ஜனதா கட்சியுடன் (ஜேஜேபி) கூட்டணி அமைத்துள்ளது. இதன்படி, ஹரியாணாவில் மொத்தம் உள்ள 10 தொகுதிகளில் ஜேஜேபி 7 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி கட்சி 3 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளன. தில்லி அருகே உள்ள ஃபரீதாபாத், குருகிராம், கர்னால் ஆகிய தொகுதிகளில் ஆம் ஆத்மி போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 இந்தத் தேர்தலில் இரு பெரும் தேசியக் கட்சிகளான பாஜகவுக்கும், காங்கிரஸுக்கும் ஆம்ஆத்மி- ஜேஜேபி கடும் போட்டியை அளிக்கும் என்பது உண்மை. மேலும், காங்கிரஸ், பாஜக ஆகியவற்றின் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக ஆம் ஆத்மி, ஜேஜேபி ஆகியவை இருக்கும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

 40 ஆண்டுகளில் 4 பெண் எம்பிக்கள்!
 ஹரியாணாவில் கடந்த 40 ஆண்டுகளில் நான்கு பெண் எம்.பி.க்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஹரியாணாவின் நாடாளுமன்ற ஆவணங்கள் ஆய்வு தகவலின்படி, இந்த மாநிலத்தில் இருந்து இதுவரை 151 எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெண்கள் ஏழு முறை மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக குமாரி செல்ஜா அம்பாலா தொகுதியிலிருந்து இரு முறையும், சிர்ஸா தொகுதியிலிருந்து ஒரு முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டார். கைலாஷோ சைனி குருúக்ஷத்திரா தொகுதியிலிருந்து இருமுறை, பிவானி மகேந்திரகர் தொகுதியிலிருந்து ஸ்ருதி செüத்ரி, சுதா யாதவ் ஆகிய இருவரும் தலா ஒரு முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். 2014 மக்களவைத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 எம்.பி.க்களில் ஒருவர்கூட பெண் இல்லை.

 1.74 கோடி வாக்காளர்கள்
 ஹரியாணாவில் மே 12-இல் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் 1 கோடியே 74 லட்சத்து 48 ஆயிரத்து 293 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் 93 லட்சத்து 97 ஆயிரத்து 153 பேர்ஆண்கள். 80 லட்சத்து 51ஆயிரத்து 140 பேர் பெண்கள். மொத்தம் 19 ஆயிரத்து 425 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் நகர்ப்புறப் பகுதியில் 5,494 வாக்குச்சாவடிகள், ஊரகப் பகுதிகளில் 13 ,931 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் 1 கோடியே 60 லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர்.
 - வே. சுந்தரேஸ்வரன்
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com