அரியணை போட்டியில் அரக்கோணம்

இரண்டு முன்னாள் மத்திய அமைச்சர்களுடன் ஒரு முன்னாள் எம்எல்ஏ என மூன்று விஐபிக்கள் போட்டியிடும் முக்கியமான மக்களவைத் தொகுதியாக உள்ளது அரக்கோணம்.
அரியணை போட்டியில் அரக்கோணம்

இரண்டு முன்னாள் மத்திய அமைச்சர்களுடன் ஒரு முன்னாள் எம்எல்ஏ என மூன்று விஐபிக்கள் போட்டியிடும் முக்கியமான மக்களவைத் தொகுதியாக உள்ளது அரக்கோணம். விசைத்தறி தொழிலாளர்கள், விவசாயிகள், அரசு பணியாளர்கள் என பலதரப்பினர் இந்தத் தொகுதியில் வசிக்கின்றனர்.

 திருத்தணி தொகுதியாக இருந்து 1977-இல் அரக்கோணம் தொகுதி என பெயர் மாற்றம் பெற்றது. தற்போது இதில் அரக்கோணம், சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆற்காடு, காட்பாடி, திருத்தணி என ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன.

 திருத்தணி தொகுதியாக இருந்தபோது இங்கு எம்.பி.யாக இருந்த ஓ.வி.அழகேசன், தொகுதியின் பெயர் மாற்றப்பட்ட பிறகு நடைபெற்ற 1977 தேர்தலிலும் வெற்றி பெற்று எம்.பி.யானார். 1980 தேர்தலில் அப்போது இந்திரா காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிட்ட சோளிங்கர் பஸ் தொழிலதிபர் ஏ.எம்.வேலு வெற்றி பெற்றார். தொடர்ந்து 1984, 1989, 1991 தேர்தல்களில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி பிரமுகரான வேலூரைச் சேர்ந்த ஜீவரத்தினம் மூன்று முறை எம்.பி.யாக இத்தொகுதி மக்களால் தேர்வு செய்யப்பட்டார். 1996 தேர்தலின்போது, மூப்பனார் காங்கிரஸில் இருந்து பிரிந்து தமிழ்மாநில காங்கிரஸ் எனும் புதிய கட்சியைத் தொடங்கிய நிலையில் அக்கட்சி சார்பில் போட்டியிட்ட ஏ.எம்.வேலு மீண்டும் எம்.பி. ஆனார்.

 அதுவரைத் தொடர்ந்து காங்கிரஸ் வசம் இருந்த இத்தொகுதியை 1998-இல் அதிமுக தன்வசமாக்கியது. அந்தத் தேர்தலில் சோளிங்கரைச் சேர்ந்த வழக்குரைஞர் சி.கோபால் வெற்றி பெற்றார். அவர் 13 மாதங்களே பதவியில் இருந்த நிலையில் மீண்டும் 1999-இல் பொதுத்தேர்தல் வர, அப்போது எம்.ஜி.ஆர். கழகத்தைச் சேர்ந்த எஸ்.ஜெகத்ரட்சகன் இத்தொகுதியில் வெற்றிபெற்றார். அதற்கடுத்து நடைபெற்ற 2004 தேர்தலில் முதன்முதலாக பாமக இத்தொகுதியைக் கைப்பற்றியது. தமிழகத்திலேயே மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல பகுதிகளில் பணிபுரிந்து ஓய்வுப்பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆர்.வேலு பாமக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். வெற்றிப் பெற்றது மட்டுமல்லாமல் மத்திய அரசில் ரயில்வே துறை இணை அமைச்சராகவும் பணிபுரிந்தார். ஆனால் அதற்கடுத்து நடைபெற்ற 2009 தேர்தலில் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சன் வெற்றிபெற்றார். அவர் மத்திய அரசில் தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சராகவும் பணிபுரிந்தார். 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு இத்தொகுதியை அதிமுக கைப்பற்ற, திருத்தணியைச் சேர்ந்த கோ.அரி எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார்.

 தற்போது இந்த மக்களவை தொகுதிக்குள்பட்ட ஆறு தொகுதிகளில் அரக்கோணம் (சு.ரவி - அதிமுக), திருத்தணி (பி.எம்.நரசிம்மன் - அதிமுக) என இரு தொகுதிகள் தற்போது அதிமுக வசம் உள்ளன. காட்பாடி (துரைமுருகன் - திமுக), ராணிப்பேட்டை (ஆர்.காந்தி - திமுக), ஆற்காடு (ஈஸ்வரப்பன் - திமுக) என மூன்று தொகுதிகள் திமுக வசம் உள்ளன. சோளிங்கர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிப்பெற்ற என்.ஜி.பார்த்தீபன் அமமுகவில் இருக்கும் நிலையில், அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் தற்போது இத்தொகுதிக்கு ஏப்ரல் 18-ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது.

 தொகுதியில் விவசாயிகள் பரவலாக வசிக்கின்றனர். மேலும், ரயில்வே தொழிலாளர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனத் தொழிலாளர்கள், விசைத்தறி மற்றும் விவசாய தொழிலாளர்கள் என குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் பிற தொழிலாளர்களும் இத்தொகுதியில் உள்ளனர்.

 ராணிப்பேட்டை, சோளிங்கர், காட்பாடி ஆகிய பேரவைத் தொகுதிகளில் வன்னியர் பெருவாரியாக இருந்தாலும், ஆற்காடு, திருத்தணி பேரவை தொகுதிகளில் முதலியார் இனத்தவர் அதிகம் வசித்து வருகின்றனர். அரக்கோணம் பேரவைத் தொகுதியை உள்ளடக்கிய அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் ஆதிதிராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் உள்ளனர்.

 தொகுதி பிரச்னைகள்: போதிய ரயில் போக்குவரத்து வசதி இல்லாததே இந்தத் தொகுதியின் முக்கியப் பிரச்னையாக உள்ளது. அரக்கோணத்தில் இருந்தும், திருத்தணியில் இருந்தும் சென்னைக்கு போதுமான மின்சார ரயில்கள் இல்லை. அரக்கோணத்தில் பல ரயில்களை நிற்க வைக்க வேண்டும், வேளச்சேரி அரக்கோணம் ரயிலை திருத்தணி வரை நீட்டிக்க வேண்டும், மேலும் ரயில்கள் இயக்கத்தில் குறித்த நேர இயக்குதல் இல்லாமல் அதிக தாமதத்தோடு ரயில்களை இயக்குவது, பணிகள் முடிவடைந்த நிலையிலும் புறநகர் பகுதியான அரக்கோணத்தை, சென்னை பெருநகரத்தோடு இணைக்கும் சர்க்குலர் ரயில் திட்டம் நடைமுறைப்படுத்தப்படாதது, நிதிநிலை அறிக்கையில் பல முறை அறிவிக்கப்பட்டு பணிகள் துவக்கப்பட்ட பிறகும் திண்டிவனம் - நகரி ரயில் திட்டத்தை கிடப்பில் போட்டது, வாலாஜாபேட்டையில் இருந்து ராணிப்பேட்டை வரை உள்ள இருப்புப்பாதை புதுப்பிக்கப்பட்ட பிறகும் ராணிப்பேட்டைக்கு ரயில் இயக்கப்படாமல் இருப்பது, அன்வர்திகான்பேட்டையில் சேலம் பாசஞ்சரை நிறுத்த வேண்டும் என்பன இந்தப் பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கைகளாக உள்ளன.

 மேலும் பாலாறு, குசஸ்தலையாறு, நந்தியாறு ஆகியவற்றில் உரிமம் பெற்றும், உரிமம் பெறாமலும் திருட்டுத் தனமாக மணல் அள்ளப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் இத்தொகுதியில் வெகுவாக குறைந்து விட்டது. இதன் காரணமாக இத்தொகுதியில் நூற்றுக்கணக்கான கிராமங்களில் மக்கள் பல கிலோமீட்டர்கள் தூரம் நடந்தும், இருச்சக்கர வாகனங்களில் சென்றும் குடிநீர் எடுத்து வர வேண்டிய நிலை உள்ளது.

 மேலும் ராணிப்பேட்டையில் கடந்த 40ஆண்டுகளுக்கும் மேலாக தேக்கி வைக்கப்பட்டுள்ள 2.27லட்சம் மெட்ரிக். டன் குரோமியக் கழிவுகள் அகற்றப்பட வேண்டும், தமிழகத்திலேயே ஒரே நிறுவனமாக ராணிப்பேட்டையில் இயங்கிவரும் கால்நடை நோய் தடுப்பு மருந்து ஆராய்ச்சி நிலையத்தை கால்நடை மருத்துவக் கல்லூரியாக தரம் உயர்த்தக்கோருதல், ஆற்காட்டில் சென்னை புறவழிச்சாலையில் மேம்பாலம் அமைத்துத் தர வேண்டும் போன்றவை கவனிக்கப்பட வேண்டிய முக்கியப் பிரச்னைகளாக உள்ளன.

 மும்முனைப்போட்டி: இத்தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாமக வேட்பாளராக ஏ.கே.மூர்த்தி, திமுக வேட்பாளராக எஸ்.ஜெகத்ரட்சகன், அமமுக வேட்பாளராக என்.ஜி.பார்த்தீபன், பகுஜன்சமாஜ் கட்சி வேட்பாளராக தாஸ், மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக ராஜேந்திரன், நாம்தமிழர் கட்சி வேட்பாளராக யு.ரா.பாவேந்தன் என 6 கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் போட்டி என்னவோ பாமக, திமுக, அமமுக இடையே தான் உள்ளது.

 பாமக: தொகுதியில் தங்களுக்கென உள்ள சமூக வாக்குவங்கி, ரயில்வே மந்திரியாக பாமக ஆர்.வேலு இருந்தபோது தொகுதியில் நிறைவேற்றிய மூன்று ரயில்வே மேம்பாலத் திட்டங்கள், மேலும் அவரால் கொண்டு வரப்பட்ட சர்க்குலர் ரயில் திட்டம், ஏ.கே.மூர்த்தி ரயில்வே அமைச்சராக இருந்த போது ரயில்வே பணியாளர்களிடம் காட்டிய நெருக்கம், தற்போதைய ஆளுங்கட்சியான அதிமுகவோடு கூட்டணி வைத்து போட்டியிடுவதால் அவர்களின் பலம், அதிமுக சார்பில் தொகுதியில் கடந்த 8 வருடங்களாக நிறைவேற்றப்பட்ட பல பணிகள் ஆகியவை பாமகவிற்கு பலமாக உள்ளன. ஒவ்வொரு முறை இத்தொகுதி பாமகவிற்கு ஒதுக்கப்படும் போதெல்லாம் வெளியூரில் இருக்கும் வேட்பாளரையே இங்கு நிற்க வைப்பது, தொகுதியின் பிரச்னைகளைத் தெளிவாக அறியாதவரும் கடந்த முறை ஆரணியில் நின்று தோற்றவரை இம்முறை அரக்கோணத்தில் வேட்பாளராக்கி இருப்பதும் பாமகவின் பலவீனமாகப் பார்க்கப்படுகிறது.

 திமுக: தொகுதியில் ஆன்மிக வழியில் அனைத்துப் பணிகளுக்கும் பெருமளவு உதவி செய்திருப்பது, தொகுதியில் திமுகவினரோடு மட்டுமல்லாமல் அனைத்து ஆன்மிகத்தவர்களோடும் வேட்பாளர் காட்டிய நெருக்கம், தற்போதைய மத்திய மற்றும் மாநில ஆட்சிகள் மீது அரசு ஊழியர்கள், சிறுபான்மையினர் காட்டும் எதிர்ப்பு ஆகியவை திமுகவுக்கு பலமாக இருந்தாலும், வெற்றிபெற்றால் தொகுதிக்கு அவ்வப்போது வராமல் இருப்பதும், இரு முறை எம்.பி., ஒரு முறை மந்திரியாக இருந்தும் தொகுதியில் பெரிய அளவிலான திட்டங்கள் எதுவும் நிறைவேற்றாததும், தொகுதியில் ரயில் குறித்த கோரிக்கைகள் பல இருந்தும் அதில் ஒன்றைக்கூட நிறைவேற்றாததும் திமுகவின் பலவீனங்கள்.

 அமமுக: தொகுதியில் அதிகம் வசிக்கும் முதலியார் இனத்தைச் சேர்ந்தவர் என்பது தான் இவரது பெரிய பலம். தான் அதிமுகவில் இருந்தபோது சோளிங்கர் தொகுதியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், தொகுதியில் எங்கு சென்றாலும் அப்பகுதிவாசியாக மாறி அங்குள்ள பிரச்னைகளைப் பேசுவது, இத்தொகுதியில் அதிமுகவின் முக்கிய நபராக இருந்த முன்னாள் எம்.பி. சோளிங்கர் சி.கோபாலின் மகனாக இருப்பதும், சோளிங்கர் தொகுதியில் முன்னாள் எம்எல்ஏவாக இருந்தும், அதிமுக மாவட்ட செயலராக இருந்தும் ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அதிகமானவர்களால் அறியப்பட்டவராக இருப்பதும், முக்கிய மூன்று வேட்பாளர்களில் தொகுதிக்குள்பட்ட பகுதியில் வசித்து வரும் வேட்பாளர் என்பதுமே இவரது பலம். மேலும் தற்போது அதிமுகவை விட்டு விலகி வந்து விட்டபோதும், அதிமுகவில் இருக்கும் தனது விசுவாசிகளைத் தனக்கு வாக்கு சேகரிக்க வைத்திருப்பதும் இவரது பலமாகப் பார்க்கப்படுகிறது. அமமுகவிற்கு கிடைத்த சின்னமான பரிசுப் பெட்டிச் சின்னத்தை தேர்தல் நெருங்கும் வேளையிலும் கிராம மக்கள் அறியாமல் இருப்பது, வெற்றிப்பெற்றால் இவரது கட்சி காங்கிரûஸ ஆதரிக்குமா, பாஜகவை ஆதரிக்குமா என அறிவிக்காமல் வாக்கு சேகரிப்பது, தொகுதியில் உள்ள ஆறு சட்டப்பேரவை தொகுதிகளிலும் அமமுகவிற்கு போதுமான கட்சி பலம் இல்லாதது ஆகியவை இவரது பலவீனங்கள்.

 இவர்களைத் தவிர பகுஜன்சமாஜ் கட்சி சார்பில் வேட்பாளராக தாஸ் நிறுத்தப்பட்டுள்ளார். இவர் தொகுதிக்கு நன்கு அறிமுகமானவராக இருந்தாலும், அவருடைய கட்சி இன்னும் அறிமுக நிலையிலேயே இருக்கிறது. மநீம சார்பில் என்.ராஜேந்திரன் போட்டியிடுகிறார். இவர் தொகுதிக்கு அறிமுகம் இல்லாதவர். நாம் தமிழர் கட்சி சார்பில் அரக்கோணத்தைச் சேர்ந்த யு.ரா.பாவேந்தன் போட்டியிட்டாலும் அவர் குறிப்பிடத்தக்க இடங்களில் மட்டுமே வாக்கு சேகரித்து வருகிறார். இவர்களுடன் சேர்த்து மொத்தம் 19 பேர் அரக்கோணம் தொகுதியில் களம் கண்டாலும், பந்தயத்தில் பாமக, திமுக, அமமுக கட்சிகளின் வேட்பாளர்கள் மட்டுமே உள்ளனர். இதில் முந்துபவர் யார் என்பது மே 23-ஆம் தேதி தெரிந்துவிடும்.

 வாக்காளர்கள் விவரம்
 ஆண்கள் 7,31,263
 பெண்கள் 7,63,587
 மூன்றாம் பாலினம் 79
 மொத்தம் 14,94,929
 
 -எஸ். சபேஷ்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com