"தனி' தொகுதிகள் உருவான வரலாறு!

இந்தியாவில் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளில், 131 தொகுதிகள் "தனி' தொகுதிகளாக வரையறுக்கப்பட்டுள்ளன.
"தனி' தொகுதிகள் உருவான வரலாறு!

இந்தியாவில் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளில், 131 தொகுதிகள் "தனி' தொகுதிகளாக வரையறுக்கப்பட்டுள்ளன. "தனி' தொகுதிகள் என்பவை குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே போட்டியிடுவதற்கு வாய்ப்பளிக்கின்றன. அரசமைப்புச் சட்டம் குறிப்பிடும் "சமத்துவ' சமுதாயத்தை உருவாக்குவதற்கான அடிப்படையாகவே இந்தத் "தனி' தொகுதிகள் விளங்கி வருகின்றன. இந்தத் தொகுதிகளின் வரலாறு சுதந்திரத்துக்கு முற்பட்ட காலத்தில் "வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்' என்பதிலிருந்து ஆரம்பிக்கின்றது.

 இந்திய முஸ்லிம்களின் கோரிக்கைகளை ஆங்கிலேய அரசிடம் கொண்டு சேர்க்கும்பொருட்டு, 1906-ஆம் ஆண்டு "இந்திய முஸ்லிம் லீக்' தொடங்கப்பட்டது. இந்திய அரசியலில் முஸ்லிம்களின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கில், "வகுப்புவாரி பிரதிநிதித்துவம்' கோரிக்கையை இந்திய முஸ்லிம் லீக் முன்னெடுத்தது. இன்றைய தனித் தொகுதிகளுக்கு இந்தக் கோரிக்கையே அடிப்படையாக அமைந்தது.

 வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தின்படி, குறிப்பிட்ட தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அந்தந்த வகுப்பினர் மட்டுமே வாக்களிக்க முடியும். அதாவது, தேர்தலில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு முஸ்லிம் நபர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும்.

 1909-ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசு இயற்றிய மிண்டோ-மார்லி சீர்திருத்தச் சட்டம், முஸ்லிம்களின் கோரிக்கையை ஏற்று, அவர்களுக்கு வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை வழங்கியது. ஆங்கிலேய அரசு, இடஒதுக்கீட்டு முறைக்கு அனுமதி அளித்தது இதுவே முதன் முறையாகும்.

 1919-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட மாண்டேகு - செம்ஸ்ஃபோர்டு சீர்திருத்தச் சட்டம், சீக்கியர்களுக்கும், ஐரோப்பியர்களுக்கும், ஆங்கிலோ-இந்தியப் பிரிவினருக்கும் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை வழங்கியது.

 இதன் காரணமாக, பல நூற்றாண்டுகளாக ஜாதிக் கொடுமையினாலும், தீண்டாமைக் கொடுமையினாலும் பாதிக்கப்பட்டு வந்த தாழ்த்தப்பட்டோருக்கும், "வகுப்புவாரி பிரதிநிதித்துவம்' வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன.

 அம்பேத்கரின் கோரிக்கை
 1919-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட மாண்டேகு - செம்ஸ்ஃபோர்டு சீர்திருத்தச் சட்டம் சரிவர இயங்குகிறதா என்பதை ஆராய 1928-ஆம் ஆண்டு சைமன் தலைமையிலான குழு இந்தியாவுக்கு வருகை தந்தது.

 தாழ்த்தப்பட்டோர்களை ஹிந்துக்களாகக் கருதக் கூடாது எனவும், அவர்களை "அரசியல் ரீதியாகத் தாழ்த்தப்பட்டவர்கள்' எனக் கருத வேண்டும் என்று சைமன் குழு உறுப்பினர்களைச் சந்தித்து அம்பேத்கர் கோரிக்கை விடுத்தார். அப்போது தான், அவர்களுக்கு சிறப்புச் சலுகைகள் கிடைத்து, அவர்கள் மற்றவர்களுக்கு இணையாக உயர்நிலையை அடைய முடியும் என்று அவர் வலியுறுத்தினார்.

 இந்நிலையில், மோதிலால் நேரு (ஜவாஹர்லால் நேருவின் தந்தை) தலைமையிலான குழு, வரைவு அறிக்கை ஒன்றை 1928-ஆம் ஆண்டு தாக்கல் செய்தது. இதில், "வகுப்புவாரி பிரதிநிதித்துவம்' நீக்கப்பட வேண்டும் என்றும், இடஒதுக்கீடு அடிப்படையில் "தனி' தொகுதிகள் அமைக்கப்பட வேண்டும் எனவும் மோதிலால் நேரு வலியுறுத்தியிருந்தார். இடஒதுக்கீடு அடிப்படையிலான "தனி' தொகுதி முறையை முதன்முதலில் ஆங்கிலேய அரசிடம் எடுத்துரைத்தது நேரு அறிக்கையே.

 முகமது அலி ஜின்னா முஸ்லிம்களின் நலன்களை முன்னிலைப்படுத்தி, 14 கொள்கைகள் அடங்கிய புதிய அறிக்கையை ஆங்கிலேய அரசிடம் 1929-ஆம் ஆண்டு சமர்ப்பித்தார். இதில், வகுப்புவாரி பிரதிநிதித்துவத்துக்கு அவர் ஆதரவு தெரிவித்திருந்தார்.

 உப்பு சத்தியாகிரகம்
 இந்தியாவுக்கு சுதந்திரம் அளிப்பது குறித்து, ஆங்கிலேய அரசு எதையும் தெரிவிக்காததால், போராட்டத்தைத் தீவிரப்படுத்த காந்தி முடிவெடுத்தார். அதற்கு அவர் கையிலெடுத்த ஆயுதம் தான் "உப்பு'. உப்புக்கு வரி விதித்திருந்த ஆங்கிலேய அரசு, உப்பை மற்ற தனியார் நிறுவனங்களும், மக்களும் உற்பத்தி செய்யவும் தடை விதித்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, "உப்பு சத்தியாகிரகம்' போராட்டத்தை காந்தி தொடங்கினார்.

 அதன்படி, 1930-ஆம் ஆண்டு, மார்ச் 12-ஆம் தேதி, குஜராத்தின் சபர்மதி ஆசிரமத்தில் இருந்து நடைபயணம் தொடங்கிய அவர், தண்டி கடற்கரையில் தடையை மீறி உப்பு எடுத்தார். இதைப் பின்பற்றி, மதராஸ் மாகாணத்தில் ராஜாஜி தலைமையிலான குழு, திருச்சிராப்பள்ளியில் இருந்து நடைபயணம் மேற்கொண்டு, வேதாரண்யம் கடற்கரையில் உப்பு எடுத்தது. இத்துடன், சட்டமறுப்பு இயக்கத்தையும் காந்தி தொடங்கினார். மக்கள் அனைவரும் வரி கட்ட வேண்டாம் என அவர் அறிவுறுத்தினார். வணிகர்களும், விவசாயிகளும் பெருமளவில் இந்தப் போராட்டத்தில் பங்கெடுத்தனர். காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

 வட்டமேஜை மாநாடு
 போராட்டம் தீவிரம் அடைந்த காரணத்தினாலும், சைமன் குழுவின் அறிக்கையை ஆராயும் நோக்கிலும் வட்டமேஜை மாநாட்டுக்கு ஆங்கிலேய அரசு அழைப்பு விடுத்தது. முதல் வட்டமேஜை மாநாடு 1930-ஆம் ஆண்டு நடைபெற்றது. இதில், முகமது அலி ஜின்னா, அம்பேத்கர், ரெட்டமலை சீனிவாசன் உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்றனர். இந்திய தேசிய காங்கிரஸ் இந்த மாநாட்டைப் புறக்கணித்தது.

 காந்தியை சமாதானப்படுத்தும் நோக்கில், அப்போதைய வைஸ்ராய் இர்வின் அவரைச் சந்தித்துப் பேசினார். இந்தப் பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எடுக்கப்பட்டதையடுத்து, சட்ட மறுப்பு இயக்கத்தைக் கைவிடுவதாகவும், அடுத்து நடைபெறும் வட்டமேஜை மாநாட்டில் பங்கேற்பதாகவும் காந்தி உறுதியளித்தார்.

 நேருக்கு நேர்
 இரண்டாம் வட்டமேசை மாநாடு, 1931-ஆம் ஆண்டு நடைபெற்றது. இதில், காந்தி, ஜின்னா, அம்பேத்கர், சரோஜினி நாயுடு உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில், தாழ்த்தப்பட்டோருக்கும் "வகுப்புவாரி பிரதிநிதித்துவம்' வழங்கப்பட வேண்டும் என அம்பேத்கர் கோரிக்கை விடுத்தார். ஆனால், காந்தி இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். காந்திக்கும், அம்பேத்கருக்கும் இடையேயான நேரடி மோதலாக இந்த மாநாடு அமைந்தது. இந்த மாநாட்டுக்குப் பிறகு, தாழ்த்தப்பட்டோரது அவல நிலை அனைவருக்கும் தெரிய ஆரம்பித்தது. அனைவரது பார்வையும் அவர்கள் பக்கம் திரும்பியது எனலாம்.

 இரண்டாம் வட்டமேஜை மாநாட்டில், தாழ்த்தப்பட்டோருக்கு "வகுப்புவாரி பிரதிநிதித்துவம்' அளிக்கப்பட்டால், ஹிந்து மதத்திலிருந்து தனிப் பிரிவினராக அவர்கள் பிரிந்து விடுவர் என்று காந்தி அஞ்சினார். இந்த மாநாடும் தோல்வியிலேயே முடிந்தது. இந்தியாவுக்குத் திரும்பிய காந்தி, சட்ட மறுப்பு இயக்கத்தை மீண்டும் தொடங்குவதாக அறிவித்தார். ஆங்கிலேய அரசு காந்தியை கைது செய்து சிறையில் அடைத்தது.

 இந்த நிலையில், 1932-ஆம் ஆண்டு "வகுப்புக் கொடை' என்பதை பிரிட்டன் பிரதமர் ராம்சே மெக்டொனால்ட் வழங்கினார். அதன்படி, தாழ்த்தப்பட்டோரை சிறுபான்மையினராகக் கருதி, அவர்களுக்கு "வகுப்புவாரி பிரதிநிதித்துவம்' அளிக்கப்பட்டது. இந்தச் செய்தியைக் கேட்டு கொந்தளித்த காந்தி, "இந்திய ஒற்றுமை மீதும், தேசியவாதத்தின் மீதும் நடத்தப்படும் தாக்குதலே, வகுப்புக் கொடை. இது தீண்டாமையை மேலும் அதிகரிக்கும்' என்று கூறி, சிறையிலேயே உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.

 சமாதானம்
 அம்பேத்கர், மதன் மோகன் மாளவியா உள்ளிட்டோர் காந்தியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து, அம்பேத்கருக்கும் காந்திக்கும் இடையே 1932-ஆம் ஆண்டு "பூணா ஒப்பந்தம்' கையெழுத்தானது. அதன்படி, தாழ்த்தப்பட்டோருக்கு அளிக்கப்பட்டிருந்த வகுப்புவாரி பிரதிநிதித்துவத்துக்குப் பதிலாக, இடஒதுக்கீடு அடிப்படையில் "தனி' தொகுதிகள் வழங்க காந்தி ஒப்புக் கொண்டார். இதனடிப்படையில், "வகுப்புக் கொடை'யில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

 இதையடுத்து, 1935-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்திய அரசுச் சட்டத்தில், "வகுப்புக் கொடை' அமல்படுத்தப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி நடைபெற்ற 1937-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், தாழ்த்தப்பட்டோருக்குத் "தனி' தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

 1946-ஆம் ஆண்டு இடைக்கால அரசு பொறுப்பேற்றது. இடைக்கால அரசின் பிரதமர் ஜவாஹர்லால் நேரு, அம்பேத்கரை சட்ட அமைச்சராக நியமித்தார். இந்தியாவுக்கென தனி அரசமைப்புச் சட்டத்தை உருவாக்க 1946-ஆம் ஆண்டு "அரசியல் நிர்ணய சபை' அமைக்கப்பட்டது.

 அரசமைப்புச் சட்டம்
 அரசமைப்புச் சட்ட வரைவுக் குழுவின் தலைவராக அம்பேத்கர் நியமிக்கப்பட்டார். ஜாதிய அடிப்படையில் நிலவி வரும் பாகுபாடுகள் குறித்தும், தாழ்த்தப்பட்டோர் நிலை குறித்தும் இந்தக் குழுவில் விரிவாக விவாதிக்கப்பட்டது. இடஒதுக்கீடு அடிப்படையில், அவர்களுக்கு "தனி' தொகுதிகள் ஒதுக்குவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அதிகாரத்தில் சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் வாய்ப்பு வழங்கும் வகையிலும், மக்களவையில் தாழ்த்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. அரசமைப்புச் சட்டத்தின் 15-ஆவது பிரிவு, மதம், இனம், ஜாதி, பிறந்த இடம், பாலினம் ஆகியவற்றின் அடிப்படையில் மக்களிடம் பாகுபாடு காட்டக் கூடாது என்று வலியுறுத்துகிறது. 17-ஆவது சட்டப் பிரிவு, தீண்டாமையை முற்றிலும் ஒழிக்க வழிவகை செய்தது.

 சுழற்சி முறையில்...
 அரசமைப்புச் சட்டத்தின் 330-ஆவது பிரிவு, தாழ்த்தப்பட்டோருக்கு மக்களவையில் இடஒதுக்கீடு அளிக்கிறது. அவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படுவது குறித்து, நாடாளுமன்றம் உரிய காலத்தில் முடிவு எடுக்கலாம். தாழ்த்தப்பட்டோருக்கும், பழங்குடியினருக்குமான இந்த இடஒதுக்கீடு, மாநிலத்துக்கு மாநிலம் வேறுபட்டுள்ளது. குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் "மறுவரையறை குழு', மாநிலங்களில் உள்ள மக்களவைத் தொகுதியில், தாழ்த்தப்பட்டோருக்கும், பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட வேண்டிய "தனி' தொகுதிகள் குறித்து முடிவு எடுக்கும்.

 ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினரின் மக்கள்தொகையை அடிப்படையாகக் கொண்டு, "தனி' தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படும். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட தொகுதிகள், சுழற்சி முறையில் "தனி' தொகுதிகளாக அறிவிக்கப்படும். இதன்படி, தற்போது நாடு முழுவதும் 47 தொகுதிகள் பழங்குடியினருக்காகவும், 84 தொகுதிகள் தாழ்த்தப்பட்டோருக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன.

 நீட்டிப்பு
 முதலில் 10 ஆண்டுகளுக்கு மட்டுமே வழங்கப்பட்ட இந்த இடஒதுக்கீடு, 9-ஆவது சட்டத்திருத்தம் (1960), 23-ஆவது சட்டத்திருத்தம் (1969), 45-ஆவது சட்டத்திருத்தம் (1980), 62-ஆவது சட்டத்திருத்தம் (1989), 79-ஆவது சட்டத்திருத்தம் (1999) ஆகியவற்றின் மூலம் நீட்டிக்கப்பட்டது. கடைசியாக 2009-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட 95-ஆவது சட்டத்திருத்தம் மூலம், தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு, 2020-ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டது.
 தாழ்த்தப்பட்டோரும், பழங்குடியினரும் சமூகத்தில் சமநிலை பெறும் நோக்கிலும், ஜாதிய வேறுபாடுகள் கலைந்து, சமத்துவம் மிக்க சமுதாயத்தை அடையும் நோக்கிலும், 10 ஆண்டுகளுக்கு மட்டும் இந்த இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. ஆனால், 70 ஆண்டுகளாக இடஒதுக்கீடு நீட்டிக்கப்பட்டுவந்துள்ளது.
 
 - சுரேந்தர் ரவி
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com