நோட்டா வாக்குகள் இம்முறை குறையுமா?

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில், அதிமுக தலைமையிலான அணியில் 8 கட்சிகளும், திமுக தலைமையிலான கூட்டணியில் 9 கட்சிகளும் தொகுதி பங்கீடு செய்து,
நோட்டா வாக்குகள் இம்முறை குறையுமா?

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில், அதிமுக தலைமையிலான அணியில் 8 கட்சிகளும், திமுக தலைமையிலான கூட்டணியில் 9 கட்சிகளும் தொகுதி பங்கீடு செய்து, மொத்தமுள்ள 40 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. இந்த இரு அணிகள் நீங்கலாக, டிடிவி.தினகரனின் அமமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சார்பிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

 தமிழகத்தின் இருபெரும் ஆளுமைகளாக இருந்த கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் மறைவுக்குப் பின் நடைபெறும் முதல் பொதுத் தேர்தல் என்பதால், 2019 மக்களவைத் தேர்தல் தமிழக அரசியல் களத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

 ஆளும் கட்சி, எதிர் கட்சி என இரு அணிகள் மீதும் வெறுப்பு கொண்ட நடுநிலையாளர்கள், கடந்த முறை நோட்டாவுக்கு வாக்களித்தனர். தமிழகத்தின் பல இடங்களில் சுயேச்சைகள் மட்டுமின்றி, அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளை விட கூடுதல் வாக்குகள் நோட்டாவுக்கு கிடைத்தன. அதுபோன்ற நிலை இந்த முறை தொடராது என்றும், புதிதாக களம் இறங்கியுள்ள கட்சிகளை அங்கீகரிக்கும் வகையில் நடுநிலையாளர்கள் வாக்களிக்க முன் வருவார்கள் என்றும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 ஒவ்வொரு தேர்தலின்போதும் மாறுபட்ட வாக்குறுதிகளுடன் புதிய கட்சிகள் வருகின்றன. தமிழகத்தைப் பொருத்தவரை அதுபோன்ற கட்சிகளுக்கு மக்கள் முக்கியத்துவம் அளிப்பதில்லை என்பதே கடந்த கால வரலாறு. ஆனால், இந்த முறை தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டு வரும் நிலையில், டிடிவி.தினகரன், சீமான், கமல்ஹாசன் ஆகியோர் தனித்து நின்று 2019 தேர்தல் களத்தைச் சந்திக்கின்றனர்.

 புதிய தலைமை வேண்டும், மாற்றம் வேண்டும், தகுதியான வேட்பாளர் இல்லை, நடைமுறைக்கு சாத்தியமான தேர்தல் வாக்குறுதிகள் இல்லை எனப் பல்வேறு காரணங்களை முன் வைத்து, தேர்தலில் வாக்களிக்காமல் தவிர்ப்பதை சிலர் வழக்கமாக கொண்டுள்ளனர். அதேபோல், நோட்டாவுக்கு வாக்களிப்பதையும் சிலர் பெருமையாகக் கருதும் நிலை உள்ளது.

 இதுதொடர்பாக அமமுக பிரமுகர் தர்மர் கூறுகையில், எந்தக் கட்சியினர் மீதும் நம்பிக்கை இல்லை எனக் கருதும் வாக்காளர்கள், வாக்குச் சாவடிக்கு வராமல் வீட்டில் முடங்குவதைத் தவிர்க்கவும், யாருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்களின் எண்ணிக்கையை வரையறை செய்யவும் நோட்டா சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த 2016 -இல் நடைபெற்ற தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில், 5.61 லட்சம் வாக்காளர்கள் நோட்டாவுக்கு வாக்களித்தனர்.

அதாவது, தமிழகத்தில் பதிவான வாக்குகளில் நூற்றில் ஒருவர் நோட்டாவுக்கு வாக்களித்தார். ஆனால், இந்த முறை கூட்டணியில் போட்டியிடும் ஆளும் கட்சி, எதிர்கட்சி வேட்பாளர்களுக்கு மாற்றாக அமமுக, நாம் தமிழர், மநீம ஆகிய 3 கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களில் ஒருவருக்கு வாக்களிக்கும் வாய்ப்பு வாக்காளர்கள் முன்பு உள்ளது. நோட்டாவுக்கு மாற்றாக இந்த 3 கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளருக்கு கிடைக்கும் வாக்குகள், எதிர்காலத்தில் தனித்து நிற்பதற்கான நம்பிக்கையை விதைக்கும் என்றார் அவர்!

 - ஆ.நங்கையார்மணி
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com