சமாஜவாதி கோட்டை மைன்புரி

மக்கள் தொகையிலும், பரப்பளவிலும் மிகப்பெரிய மாநிலமாக திகழும் உத்தரப் பிரதேசம், நமது  நாட்டுக்கு பல்வேறு புகழ்பெற்ற தலைவர்களையும், அரசியல் சாணக்கியர்களையும் தந்துள்ளது.  
சமாஜவாதி கோட்டை மைன்புரி

மக்கள் தொகையிலும், பரப்பளவிலும் மிகப்பெரிய மாநிலமாக திகழும் உத்தரப் பிரதேசம், நமது  நாட்டுக்கு பல்வேறு புகழ்பெற்ற தலைவர்களையும், அரசியல் சாணக்கியர்களையும் தந்துள்ளது.  இந்த மாநிலத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில், தேசிய அளவில் கவனிக்கப்படும் தொகுதிகளில் மைன்புரியும் ஒன்று. முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சரும், சமாஜவாதி கட்சியின் நிறுவனருமான முலாயம் சிங், இத்தொகுதியில் போட்டியிடுவதே இதற்கு காரணம்.

சுதந்திர இந்தியாவில் ஜனநாயக ரீதியிலான தேர்தல் நடவடிக்கை கடந்த 1952-ஆம் ஆண்டு தொடங்கியது முதல் சுமார் 40 ஆண்டுகள் எந்த பரபரப்பும் இன்றி அமைதியாகவே மைன்புரி தொகுதி காணப்பட்டது. 

இந்த காலகட்டத்தில் மைன்புரியில் காங்கிரஸ், ஜனதா, ஜனதா தளம் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களின் கைகளே ஓங்கியிருந்தன. அக்கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களே, 1952-ஆம் ஆண்டில் தொடங்கி, 1991-ஆம் ஆண்டு வரையிலும் வெற்றி பெற்றனர்.

1952 தேர்தலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பாத்ஷா குப்தா முதன்முதலில் வெற்றி வாகை சூடினார். 1957 தேர்தலில் பிரஜா சோஷலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பன்சி தாஸ் தங்கர் வென்றார். இதற்கடுத்து 1962-ஆம் ஆண்டு தேர்தலில் பாத்ஷா குப்தா மீண்டும் வெற்றி பெற்றார்.

காங்கிரஸ் கட்சி பிளவுபட்டபோது, காமராஜர் தலைமையிலான அணியில் பாத்ஷா குப்தா இணைந்தார். இந்த சூழ்நிலையில், இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மகராஜ் சிங் 1967, 1971ஆம் ஆண்டுத் தேர்தல்களில் அத்தொகுதியை தனதாக்கிக் கொண்டார்.

1977-ஆம் ஆண்டு தேர்தலில், முன்னாள் பிரதமர் சரண் சிங் தலைமையிலான பாரதிய லோக் தளத்தின் வேட்பாளர் ரகுநாத் சிங் வர்மா வெற்றி பெற்றார். 1980-ஆம் ஆண்டு தேர்தலிலும், ஜனதா கட்சி (மதச்சார்பற்ற) சார்பில் ரகுநாத் சிங் வர்மா போட்டியிட்டு வென்றார். 1984-இல் சௌதரி பல்ராம் சிங் யாதவ் (காங்கிரஸ்), மைன்புரி எம்.பி.யானார். 

இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதால் நாடு முழுவதும் வீசிய அனுதாப அலை காங்கிரஸூக்கு சாதகமாக இருந்ததபோதிலும், மைன்புரி தொகுதியில் அது எடுபடவில்லை. 1989, 1991 தேர்தல்களில், முலாயம் சிங்கின் அரசியல் குருவாக கருதப்படும் உதய் பிரதாப் சிங் (ஜனதா தளம், ஜனதா கட்சி) 2 முறை வெற்றி பெற்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

4 தேர்தல்களில் முலாயம் வெற்றி

இதற்கடுத்து 1996-ஆம் ஆண்டு முதல் கடந்த 23 ஆண்டுகளில் மைன்புரியில் நடைபெற்றுள்ள 6 பொதுத் தேர்தல், 2 இடைத் தேர்தல்களில் சமாஜவாதி கட்சியே வென்றுள்ளது. குறிப்பாக, 1996, 2004, 2009, 2014 ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் முலாயம் சிங் 4 முறை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்று சாதனை  படைத்துள்ளார். 

1996 பொதுத் தேர்தலில் முலாயமுக்கு 2,73,303 வாக்குகளும், பாஜகவின் உப்தேஷ் சிங் சௌஹானுக்கு 2,21,345 வாக்குகளும் கிடைத்தன. 2004ம் ஆண்டு தேர்தலில் முலாயமுக்கு 4,60,470 வாக்குகளும், பாஜகவின் அசோக் சாக்யாவுக்கு 1,22,600 வாக்குகளும் கிடைத்தன. 

இதனிடையே, முலாயம் பதவி விலகியதால் 2004-ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத் தேர்தலில் போட்டியிட்ட அவரது உறவினர் தர்மேந்திர யாதவுக்கு 3,48,999 வாக்குகளும், பாஜகவின் அசோக் சாக்யாவுக்கு 1,69,286 வாக்குகளும் கிடைத்தன.

2009-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் முலாயம் சிங் 3,92,308 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பாஜகவின் வினய் சாக்யா 2,19,239 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார். 2014ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் முலாயமுக்கு 5,95,918 வாக்குகளும், பாஜகவின் சத்ருகன் சிங் சௌஹானுக்கு 2,31,252 வாக்குகளும் கிடைத்தன.

2 தொகுதியில் போட்டியிட்டு வென்ற முலாயம் சிங், மைன்புரியில் பதவி விலக விரும்பினார். இதன்படி முலாயம் பதவி விலகியதால் நடைபெற்ற இடைத் தேர்தலில் அவரது பேரன் தேஜ் பிரதாப் சிங் யாதவ் 6,53,786 வாக்குகள் பெற்று வெற்றி வாகை சூடினார். பாஜகவின் பிரேம் சிங் சாக்கியா 3,32,537 வாக்குகள் பெற்று தோல்வியை சந்தித்தார். 

கடந்த 23 ஆண்டுகளாக மைன்புரி தொகுதியானது, முலாயம் சிங் குடும்பத்தினர் ஆதிக்கம் செலுத்தும் தொகுதியாகவும், சமாஜவாதி கட்சியின் அசைக்க முடியாத கோட்டையாகவும் திகழ்கிறது.

இருமுனை போட்டி

2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், மைன்புரி தொகுதியில் முலாயம் சிங்கை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளர் யாரும் நிறுத்தப்படவில்லை. அதேநேரத்தில் பாஜக சார்பில் பிரேம் சிங் சாக்கியா போட்டியிடுகிறார். இத்தொகுதியில் பாஜக இதுவரை ஒருமுறை கூட வென்றதில்லை. இதனால் பாஜக வெல்ல முடியாத தொகுதிகளில் மைன்புரியும் ஒன்றாக கருதப்பட்டு வருகிறது. அந்தக் கூற்றை முறியடித்து புதிய சாதனை படைப்பதற்கு இத்தேர்தலில் பாஜக அதிக தீவிரம் காட்டி வருகிறது.

மைன்புரியில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவிலேயே முலாயம் சிங்கின் சொந்த ஊரான சைபாய் அமைந்துள்ளது. இதனால் மைன்புரி தொகுதியில் வெற்றி பெறுவது, சமாஜவாதி கட்சியின் கௌரவம் சம்பந்தப்பட்ட விஷயமாக பார்க்கப்படுகிறது.

35% பேர் யாதவ் சமூகத்தினர் 

மைன்புரி மக்களவைத் தொகுதியானது, கிஷ்னி, மைன்புரி, கர்ஹால், பாங்கோன், ஜஸ்வந்த்நகர் ஆகிய 5 பேரவைத் தொகுதிகளை கொண்டுள்ளது. இத்தொகுதியில் 16,53,065 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 9,00,613 பேர் ஆண்கள்.7,52,452 பேர் பெண்கள்.

மைன்புரி தொகுதியில் வசிக்கும் மக்களில் பெரும்பாலானோர் யாதவ் சமூகத்தினர். அதாவது 16.53 லட்சம் வாக்காளர்களில் 35 சதவீதம் பேர், யாதவ் சமூகத்தினர் ஆவர். அதற்கடுத்து ராஜபுத்திர சௌஹான், ரத்தோர், பதோரியா சமூகத்தினர்  20 சதவீதம் பேர் வசிக்கின்றனர். சாக்யா, பிராமணர்கள், தலித்துகள், முஸ்லிம்கள் ஆகியோரும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வசிக்கின்றனர்.

இவர்களில் யாதவ் சமூகத்தினர், முஸ்லிம்கள் ஆகியோர் சமாஜவாதிக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வந்துள்ளனர். தலித்துகள் பகுஜன் சமாஜுக்கு வாக்களித்தனர். ராஜபுத்திர சமூகத்தினர், பிராமணர்கள் ஆகியோர் பாஜகவுக்கு வாக்களித்தனர்.

இந்தத் தேர்தலில் பகுஜன் சமாஜும், சமாஜவாதியும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. இதனால் தலித்துகளின் வாக்குகளும், சமாஜவாதிக்கு கூடுதலாக கிடைக்கலாம் என்று ஒரு கருத்து நிலவுகிறது.

இருப்பினும், இறுதி வார்த்தை வாக்காளர்களுடையது! அவர்கள் தீர்ப்பு என்ன என்பதை அறிய  மே 23-ஆம் தேதி வரை காத்திருக்கத்தான் வேண்டும்.

மொத்த வாக்காளர்கள் 16,53,065

ஆண்கள் - 9,00,613

பெண்கள் - 7,52,452

மொத்த மக்கள் தொகை

35% யாதவ் சமூகம்

ராஜபுத்திரர்கள் - 20%
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com