நேரடி சவாலை எதிர்கொள்ளும் முதல்வர் தொகுதி

சேலம் மக்களவைத் தொகுதி முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியின் சொந்த தொகுதி என்பதால் அதிமுக்கியத்துவம் பெறுகிறது.
நேரடி சவாலை எதிர்கொள்ளும் முதல்வர் தொகுதி


சேலம் மக்களவைத் தொகுதி முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியின் சொந்த தொகுதி என்பதால் அதிமுக்கியத்துவம் பெறுகிறது. அதேவேளையில் திமுக நேரடியாக அதிமுகவை எதிர்த்து களம் காணுவதால் அதிமுக, திமுக, அமமுக என மும்முனைப் போட்டி உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

மாங்கனி நகரம் என்று அழைக்கப்படும் சேலம் மாவட்டம் 11 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்டது. சேலம் மக்களவைத் தொகுதியில் சேலம் தெற்கு, சேலம் வடக்கு, சேலம் மேற்கு, வீரபாண்டி, ஓமலூர், எடப்பாடி ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன.
1952 தேர்தல் முதல் 2014 வரையிலான தேர்தல்களில் சேலம் மக்களவைத் தொகுதியில் தனித்தும், கூட்டணி வைத்தும் 7 முறை வெற்றி பெற்ற கட்சியாக காங்கிரஸ் உள்ளது. திமுக 3 முறையும், அதிமுக 4 முறையும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி (ஆர்.தேவதாஸ்) ஒரு முறையும், தமிழக ராஜீவ் காங்கிரஸின் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி சுயேச்சையாகவும் வெற்றி பெற்றுள்ளனர்.
மூன்று முதல்வர்களை வழங்கிய கொங்கு மண்டலம்: அப்போதைய ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தில் இருந்த திருச்செங்கோட்டை சேர்ந்த ப.சுப்பராயன் 1927 சென்னை ராஜதானியின் முதல்வராகப் பொறுப்பு வகித்த முதல் தமிழர் என்ற பெருமையைக் கொண்டவர். சென்னை மாகாண உள்துறை அமைச்சர், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர், மத்திய அமைச்சர், மகாராஷ்டிர ஆளுநர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்தவர்.
அதைத் தொடர்ந்து சேலம் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் இருந்த கிருஷ்ணகிரி ஓசூர் தொரப்பள்ளியைச் சேர்ந்த சி.ராஜகோபாலாச்சாரி சென்னை மாகாண முதல்வராகவும், சென்னை மாநில முதல்வராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்பின்னர் சேலம் எடப்பாடியைச் சேர்ந்த எடப்பாடி கே.பழனிசாமி கடந்த 2017 முதல் தமிழக முதல்வராகப் பொறுப்பு வகித்து வருவது சேலம் மாவட்டத்தின் கூடுதல் சிறப்பாகும்.
முதல்வரின் சொந்தத் தொகுதி... மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆளும் கட்சியான அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, தமாகா ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்கிறது.
இதில் பாமகவுக்குக் கணிசமான வாக்கு வங்கி உள்ள மாவட்டமாக சேலம் உள்ளது. அதேவேளையில், இத் தொகுதியில் கணிசமான வாக்கு வங்கி இருந்த நிலையிலும் பாமகவால் போட்டியிடும் சூழல் உருவாகவில்லை. அக்கட்சி கூட்டணிக் கட்சிகளுக்கு இத்தொகுதியை விட்டுக் கொடுத்து வருகிறது.
திடீர் திருப்பம்: 1980-க்குப் பிறகு திமுக சேலம் மக்களவைத் தொகுதியில் வெற்றி பெறவில்லை. கூட்டணி கட்சியான காங்கிரஸுக்கு சேலம் தொகுதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று எதிர்பார்த்த வந்தநிலையில், திடீர் திருப்பமாக திமுகவே நேரடியாக அதிமுகவை களம் காண போட்டியிடுகிறது. கால் நூற்றாண்டுக்கு மேலாக திமுக-வில் இருந்து சேலம் மக்களவைத் தொகுதிக்கு யாரும் தேர்ந்தெடுக்கப்படவில்லை.
2014 மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வி.பன்னீர்செல்வம் 5,56,067 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக சார்பில் போட்டியிட்ட உமாராணி 2 லட்சத்து 88 ஆயிரத்து 939 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார்.  மூன்றாவதாக பாஜக கூட்டணியில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் எல்.சுதீஷ் 2,01,265 வாக்குகள் பெற்று மூன்றாம் இடம் பிடித்தார்.
2016 சட்டப்பேரவைத் தேர்தலை பொருத்தவரை மொத்தம் உள்ள 11 தொகுதிகளில் சேலம் வடக்கு தொகுதி தவிர்த்து 10 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றது.
சேலம் மக்களவைத் தொகுதியில் இடம்பெறும் 6 தொகுதிகளான சேலம் தெற்கு, சேலம் வடக்கு, மேற்கு மற்றும் ஓமலூர், எடப்பாடி, வீரபாண்டி ஆகிய தொகுதிகளில் 5,27,428 வாக்குகளை அதிமுக பெற்றது. இந்த 6 தொகுதிகளில் திமுக சுமார் 4,25,639 வாக்குகளை பெற்றது குறிப்பிடத்தக்கது. கணிசமான வாக்கு வங்கி திமுகவிற்கு உள்ளதாலும் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ்,விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் வாக்குகள் வெற்றிக்கு உதவும் என திமுக கணக்கு போடுகிறது.
கடந்த 2014 தேர்தலில் மோடி அலை இருந்த நிலையில், 2019 தேர்தலில் அதுபோன்றதொரு அலை இல்லை என்றும், மோடியை வீழ்த்துவதே முதல் இலக்கு என்றும், இவ்வளவு நாள் கிடைக்காத வாய்ப்பு இப்போது திமுகவிற்கு கிடைத்திருப்பதால் அணிகளாக பிரிந்து கிடக்கும் திமுக வெற்றி ஒன்றை குறிக்கோளாக வைத்து பாடுபடும் என அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
வேட்பாளர் யார்? சேலம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட, திமுகவில் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் மருத்துவர் பிரபு, மறைந்த செழியனின் மருமகன் மருத்துவர் தருண் மற்றும் தீர்மானக்குழு உறுப்பினர் தாமரைக்கண்ணன், உமாராணி ஆகியோரின் பெயர்கள் அடிபடுகின்றன.
அமமுக கட்சியில் முன்னாள் எம்எல்ஏ எஸ்.கே.செல்வம் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. அதிமுகவில் இருமுறை புறநகர் மாவட்டச் செயலாளராக இருந்தவர். இவர் பொறுப்பில் இருந்த நேரத்தில் எடப்பாடி கே.பழனிசாமி ஓரம் கட்டப்பட்ட நிலையில் இருந்தார். பின்னர் எடப்பாடி கே.பழனிசாமி கை ஓங்கிய நேரத்தில் எஸ்.கே.செல்வம் ஓரம் கட்டப்பட்டு மாறி, மாறி எதிர்ப்பு அரசியல் நீடித்து வந்தது.
அதிமுகவில் ஜெயலலிதா இறந்த பிறகு எடப்பாடி கே.பழனிசாமி முதல்வர் ஆனதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணைந்தார். ஆனால், ஓ.பன்னீர்செல்வம்  அணியினரும் அதிமுகவில் இணைந்துவிட்டதால், அங்கிருந்து வெளியேறி அமமுக-வில் ஐக்கியமாகிவிட்டார் எஸ்.கே.செல்வம்.
மும்முனைப் போட்டி: இப்போது இந்தத் தொகுதியில் செல்வமும் களம் காண்பதால், மும்முனைப்போட்டி உறுதியாகிவிட்டது.
கட்சியைத்தாண்டி அமமுக எஸ்.கே.செல்வத்திற்கு தனி வாக்கு வங்கி இருப்பதால் அவர் பிரிக்கும் வாக்குகள், திமுகவிற்கு சாதகமாக மாறும் எனவும் கூறப்படுகிறது. ஏற்கெனவே நில அபகரிப்பு மற்றும் மிரட்டல் சம்பவங்களால் மக்கள் மத்தியில் பெயரிழந்துவிட்ட திமுக தற்போது வியாபாரிகள், தொழிலதிபர்களிடையே சுமுகமாக அனுசரித்து போகும் பாணியை சேலம் தொகுதியில் கையாண்டுவருவது குறிப்பிடத்தக்க அம்சம்.
அதிமுகவில் இப்போதைய எம்.பி. வி.பன்னீர்செல்வம் மற்றும் சேலம் வடக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த கே.ஆர்.எஸ்.சரவணன் ஆகியோரின் பெயர்கள் அடிபடுகிறது.
அதிமுக கடந்த முறை 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் சேலம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட 6 தொகுதிகளில் 5,27,428 வாக்குகள் பெற்றது. அத்தேர்தலில் தனித்து நின்ற பாமக 6 தொகுதிகளில் சுமார் 1,63,932 வாக்குகள் பெற்றது குறிப்பிடத்தக்கது. இப்போது அதிமுக அணியில் பாமக இடம் பெறுவதால் அக்கட்சியின் வாக்குகள் வெற்றிக்கு எளிதாக இருக்கும் என்று அதிமுக கணக்குப் போடுகிறது.
சேலம் தொகுதியில் தேமுதிகவுக்கும் கணிசமான வாக்கு வங்கி உள்ளது. கடந்த 2014 இல் எல்.கே.சுதீஷ் போட்டியிட்டு 2,01,268 லட்சம் வாக்குகளை பெற்றார். 2009 இல் தனித்துப் போட்டியிட்ட தேமுதிகவில் அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ் போட்டியிட்டு சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் வாக்குகளை பெற்றார். இப்போது அதிமுக அணியில் தேமுதிக இடம் பெற்றிருப்பதால் அந்த வாக்குகளும் அதிமுகவிற்கு முக்கியமானதாக உள்ளது என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
முதல்வரின் சொந்தத் தொகுதி என்பதால், சேலம் மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற முனைப்பில் ஆளும்கட்சி உள்ளது. கால் நூற்றாண்டுகளுக்குப் பிறகு வெற்றியைத் தனதாக்கி 4 ஆவது முறை வெற்றி மகுடம் சூட வேண்டும் என்ற முனைப்பில் திமுக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com