தோல்வியால் துவண்ட காங்கிரஸுக்கு புத்துணர்வூட்டிய வெற்றி!

மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட தியாகி வீரபத்திரத்தேவரின் மகன் என்.எஸ்.வி.சித்தன்.
தோல்வியால் துவண்ட காங்கிரஸுக்கு புத்துணர்வூட்டிய வெற்றி!

மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட தியாகி வீரபத்திரத்தேவரின் மகன் என்.எஸ்.வி.சித்தன். அவரது தந்தை வீரபத்திரத் தேவர், மாமனார் வி.சோமசுந்தரத் தேவர் ஆகிய இருவரும் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று காமராஜரோடு சிறையில் இருந்தவர்கள்.
 காங்கிரஸ் கட்சியில் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கிய சித்தன், தற்போது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழுத் தலைவராக 85-ஆவது வயதிலும் அரசியல் பணியில் இருந்து வருகிறார்.
 முதல் தேர்தல் அனுபவம்?
 1957 மக்களவைத் தேர்தலில் தான் முதன் முதலில் வாக்களித்தேன். அப்போது மதுரை மக்களவைத் தொகுதியில் திருமங்கலம் இடம் பெற்றிருந்தது. அந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் டி.கே.ராமா, கம்யூனிஸ்ட் கட்சியின் கே.டி.கே. தங்கமணி ஆகியோர் போட்டியிட்டனர். அப்போதெல்லாம் வீடுதோறும் காங்கிரஸ் தான். நானும் காங்கிரஸ் வேட்பாளருக்குத் தான் வாக்களித்தேன். அந்தத் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சியின் கே.டி.கே.தங்கமணி வெற்றி பெற்றார்.
 நேரடியாக முதல் தேர்தல் அனுபவம் என்பது, திருமங்கலம் ஊராட்சிக்கு 1964-இல் நடந்த வார்டு உறுப்பினர் தேர்தலில் குருவி சின்னத்தில் போட்டியிட்டு, வெற்றி பெற்றவர்களில் அதிக வாக்குகள் பெற்ற உறுப்பினராகத் தேர்வானதுதான்.
 தமிழகத்தில் 1967-இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் திருமங்கலம் தொகுதியில் சுதந்திரா கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முத்துராம தேவர், தேர்தல் நடைபெறுவதற்கு ஒரு வாரம் முன்பு மாரடைப்பால் உயிரிழந்தார். இதையடுத்து திருமங்கலம் தொகுதியில் பொதுத்தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. தமிழகமெங்கும் உணவுப் பற்றாக்குறை, ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் இவை இரண்டும் விசுவரூபம் எடுத்ததால் பேரவைத் தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தோல்வியுற்றது. காமராஜர், கக்கன் போன்ற தலைவர்கள் தங்களது சொந்த தொகுதியில் தேல்வியைத் தழுவினர். அண்ணா தலைமையில் திமுக ஆட்சியமைத்தது. 1967 மக்களவைத் தேர்தலிலும் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களை திமுக கைப்பற்றியது. "
 அப்போது ஒரு மாதத்திற்கு பின் திருமங்கலம் பேரவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. திருமங்கலத்தில் ஏற்கெனவே காங்கிரஸ் கட்சி வேட்பாளராக களம் இறங்கிய ரத்தினசாமி தேவர் தேர்தலில் போட்டியிடவில்லை எனக் கூறிவிட்டார். இதையடுத்து திருமங்கலத்தில் புதுமுகமாகவும், இளைஞராகவும் ஒரு வேட்பாளரை நிறுத்தலாம் என முடிவெடுத்த காமராஜர், என்னை வேட்பாளராக அறிமுகப்படுத்தினார். தோல்வியால் காங்கிரஸ் கட்சி துவண்டு இருந்தபோது திருமங்கலம் இடைத் தேர்தலில் நான் பெற்ற வெற்றி காங்கிரஸுக்கு புத்துணர்ச்சியைத் தந்தது.
 நான் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த 4 ஆண்டுகளில் 7 ஆயிரம் கேள்விகள் கேட்டுள்ளேன். ஒரே நாளில் 22 கேள்விகள் வரை கேட்டுள்ளேன். அதன் பின்புதான் ஒரு பேரவை உறுப்பினர் இரண்டு கேள்விகள் மட்டுமே கேட்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 திமுகவுக்கு எதிராக மக்கள் அலையை காமராஜர் உருவாக்கியபோது, அந்தக் காலகட்டத்தில் அதிமுக வைத் தொடங்கிய எம்.ஜி.ஆர், எதிர்ப்பு அலையை அப்படியே அறுவடை செய்தார்.
 திருமங்கலம் தொகுதியில் 1967, 1980, 1984 ஆகிய தேர்தல்களில் வெற்றிபெற்று 3 முறை சட்டப் பேரவை உறுப்பினராகவும், திருமங்கலம், உசிலம்பட்டி, சோழவந்தான், ஆத்தூர், திண்டுக்கல், நிலக்கோட்டை ஆகிய தொகுதிகளை உள்ளடக்கிய திண்டுக்கல் மக்களவை உறுப்பினர் தேர்தலில் 1996, 2004, 2009 ஆகிய மூன்று முறையும் வெற்றிபெற்று மக்களவை உறுப்பினராகவும் பணியாற்றினேன். இதுவரை நான் சந்தித்த 13 தேர்தல்களும் திருமங்கலம் சட்டப்பேரவை தொகுதி, திருமங்கலம் தொகுதியை உள்ளடக்கிய திண்டுக்கல் மக்களவை தொகுதியில் மட்டுமே போட்டியிட்டேன்.
 இன்றைய அரசியல் எப்படி உள்ளது?
 மக்கள் பிரச்னையை மையமாகக் கொண்டு தேர்தலைச் சந்தித்தோம். அதற்கான பதிலை மக்கள் தங்கள் வாக்குகளாக அளித்தனர். பணம் என்பது அப்போது பெரிய பொருட்டாக இருக்காது. கட்சியினர் கூட பணம் பெறாமல் தேர்தல் பணிகள் செய்தனர். ஆனால் திமுக வந்தபின்பு, குறிப்பாக 1969- க்குப் பின்பு தமிழகம் மாறிவிட்டது. எதற்கெடுத்தாலும் பணம் என்றாகிவிட்டது. சாதாரணமாக நடத்தப்படும் கட்சி பொதுக் கூட்டத்திற்கு கூட பல லட்ச ரூபாய் செலவழிக்கும் சூழல் இன்று உள்ளது. இன்றைய அரசியல், பணத்தின் மூலமாகவே நடத்தப்படுகிறறது.
 தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் வாக்காளர்களைக் கெடுத்து வைத்துள்ளனர். திராவிடக் கட்சிகள் வந்ததிலிருந்தே வாக்காளர்களின் ஆசையைத் தூண்டி அவர்களின் பலவீனத்தை பயன்படுத்திக் கொள்கின்றனர். பணத்தை வாரி இறைத்து வாக்குகளை விலைக்கு வாங்கலாம் என்ற நிலையை உருவாக்கி விட்டனர். தேர்தலின்போது வாக்குக்கு பணம் வாங்கமாட்டேன் என மிகப்பெரிய புரட்சி வரவேண்டும்.
 இப்போது கட்சிகள் தங்களது கொள்கைகளை மறந்து வெற்றியை மட்டுமே இலக்காக மாற்றிவிட்டன. திராவிட கட்சிகளால் அரசியல் வாதிகளின் பொதுவாழ்க்கை என்பது கறைபடிந்ததாகி விட்டது. அதற்காக நல்ல அரசியல்வாதிகள் இல்லை எனக் கூறவில்லை. இன்றும் பொதுவாழ்வில் நேர்மையான அரசியல் செய்பவர்களாக பலரும் உள்ளனர் என்றார்.
 - எம்.மது
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com