மக்களவைக்கு போட்டியின்றி தேர்வான மூன்று பேர்!

உள்ளாட்சித் தேர்தலின்போது வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது இன்றளவிலும் வழக்கத்தில் உள்ளது.
மக்களவைக்கு போட்டியின்றி தேர்வான மூன்று பேர்!


உள்ளாட்சித் தேர்தலின்போது வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது இன்றளவிலும் வழக்கத்தில் உள்ளது. ஆனால், பல லட்சம் வாக்காளர்களைக் கொண்ட மக்களவைத் தொகுதியில் இருந்து சிலர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட வரலாறு கடந்த காலங்களில் தமிழகத்தில் நிகழ்ந்துள்ளது.
தமிழகத்திலிருந்து மூன்று பேர் மக்களவை உறுப்பினர்களாகப் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 1952-இல் நடைபெற்ற முதல் தேர்தலின்போது கோவை மக்களவைத் தொகுதியில் இருந்து காங்கிரஸ் சார்பில் டி.ஏ. ராமலிங்க செட்டியார் என்றழைக்கப்படும் திருப்பூர் அங்கப்ப ராமலிங்க செட்டியார் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
1957-ஆம் ஆண்டு திருச்செந்தூர் மக்களவைத் தொகுதியில் இருந்து காங்கிரஸ் சார்பில் கணபதி நாடாரும், 1962-ஆம் ஆண்டு காங்கிரஸ் சார்பில்  டி.டி.கிருஷ்ணமாச்சாரியும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். அப்போதைய பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் நேரடிப் பார்வையில் டி.டி.கிருஷ்ணமாச்சாரி தேர்வு நடந்தது என்றே கூறலாம்.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் படிப்பை முடித்த கிருஷ்ணமாச்சாரி, இந்திய அரசியலமைப்புச் சட்ட வரைவுக் குழுவில் இடம்பெற்ற பெருமைக்குரியவர். சுயேச்சை வேட்பாளராக சட்டப் பேரவைக்குள் நுழைந்த இவர், பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 1952 முதல் 1965 வரை மக்களவை உறுப்பினராக இருந்துள்ள கிருஷ்ணமாச்சாரி,  முதலில் வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சராக இருந்தார். அதன்பிறகு 1956-58 இல் நிதியமைச்சராக இருந்தபோது, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் வருவதற்கு முக்கியப் பங்கு வகித்தார்.
1962-ஆம் ஆண்டு மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெறும் சூழலில் மூன்றாவது முறையாகப் போட்டியிட விரும்பிய டி.டி.கிருஷ்ணமாச்சாரி எந்தத் தொகுதியில் போட்டியிடுவது எனக் குழப்பத்தில் இருந்தாராம். அப்போது, திருச்செந்தூர் மக்களவைத் தொகுதியில் டி.டி.கிருஷ்ணமாச்சாரி போட்டியிடுவார் என காங்கிரஸ் தலைமையால் அறிவிக்கப்பட்டது.
இந்திய தேசிய காங்கிரஸ், சுதந்திரா கட்சி, திமுக கூட்டணி இடையே கடும் போட்டி நிலவிய காலம் அது. நிதியமைச்சராக பணியாற்றிய டி.டி.கிருஷ்ணமாச்சாரி திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டதும் அந்தத் தொகுதியின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்தது.
இதையடுத்து, சுதந்திரா கட்சி மற்றும் திமுக கூட்டணி சார்பில் மாரிச்சாமி என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அப்போதுதான் அரசியல் விளையாட்டுகள் தொடங்கின. கிருஷ்ணமாச்சாரி வெற்றி பெற்றால் மீண்டும் நிதியமைச்சராக வருவது உறுதி எனப் பரவலாகப் பேசப்பட்டது.
அப்போதைய முதல்வரான காமராஜர் அன்றைய ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தின் முக்கிய காங்கிரஸ் நிர்வாகியான கே.டி. கோசல்ராமுடன் தொடர்புகொண்டு எப்படியாவது டி.டி.கிருஷ்ணமாச்சாரியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும், அவர் வெற்றி பெற்று மத்திய நிதியமைச்சரானால் தமிழகத்துக்கு மேலும் பல திட்டங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்றும் வலியுறுத்தினாராம்.
உடனே, ரகசியமாக செயல்பட்ட குழு ஒன்று, சுதந்திரா கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மாரிச்சாமியை வேட்புமனு தாக்கல் செய்யவிடாமல் பார்த்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கான நேரம் முடிந்த பிறகே மாரிச்சாமி வெளியே தலைக்காட்டியதாக மூத்த அரசியல்வாதிகள் கூறுகின்றனர்.
இதையடுத்து டி.டி.கிருஷ்ணமாச்சாரியை எதிர்த்து போட்டியிட வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால், திருச்செந்தூர் மக்களவைத் தொகுதியில் இருந்து அவர் போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, பொருளாதார மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்புத் துறை அமைச்சரானார் டி.டி.கிருஷ்ணமாச்சாரி. பின்னர் 1964-இல் மத்திய நிதியமைச்சரானார். அவர், அமைச்சராக இருந்த காலத்தில்தான் நாட்டின் மூன்று முன்னணி உருக்காலைகள், ஐடிபிஐ, ஐசிஐசிஐ வங்கி போன்றவை நிறுவப்பட்டன. வரிச் சீர்திருத்தம், குடும்ப ஓய்வூதியத் திட்டம் போன்றவற்றைக் கொண்டு வந்தார்.
இதுகுறித்து வரலாற்று ஆய்வாளர் திவான் கூறியது:
தமிழகத்தில் மூன்று பேர் இதுவரை மக்களவைத் தேர்தலில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதில் இரண்டு முறை திருச்செந்தூர் தொகுதியில் நிகழ்ந்தது ஒரு முக்கியமானதாகும். 1957-ஆம் ஆண்டு திருச்செந்தூர் மக்களவைத் தொகுதியில் இருந்து காங்கிரஸ் கட்சி சார்பில் கணபதி நாடார் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டது அப்போதைய பிரதமர் நேருவுக்கு மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
அந்த நிகழ்வை நினைவில்கொண்டு டி.டி. கிருஷ்ணமாச்சாரி மூன்றாவது முறையாக எங்கு போட்டியிடுவது என கேள்வி எழுந்தபோது அவரை திருச்செந்தூர் தொகுதி வேட்பாளராக அறிவித்து போட்டியின்றி தேர்வு செய்ய அனைத்து முயற்சிகளையும் பிரதமர் ஜவாஹர்லால் நேரு நேரடியாக மேற்கொண்டார்  என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com