ஓட்டுப் போட்டுவிட்டு சாமி கும்பிட செல்வேன்!: மதுரை மாவட்ட நிர்வாகம் நூதன பிரசாரம்
By DIN | Published On : 24th March 2019 02:54 AM | Last Updated : 24th March 2019 02:54 AM | அ+அ அ- |

மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் தேரோட்டம் மற்றும் கள்ளழகர் எதிர்சேவை நாளன்று மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு (ஏப்ரல் 18) நடைபெற உள்ளது.
திருவிழா நாளில் வாக்குப்பதிவு நடத்தினால் வாக்காளர்களுக்குச் சிரமம் ஏற்படும். எனவே, வாக்குப்பதிவு தேதியை மாற்ற வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது. தேர்தல் தேதியை மாற்ற இயலாது என மறுத்த தேர்தல் ஆணையம், வாக்குப்பதிவுக்கு கூடுதலாக 2 மணி நேரம் ஒதுக்கியுள்ளது.
இந்நிலையில், தேர்தல் முன்னேற்பாடு தொடர்பான கூட்டங்களில் அலுவலர்களிடம் பேசும் தேர்தல் அலுவலரும், மதுரை மாவட்ட ஆட்சியருமான ச. நடராஜன், "எல்லோரும் வாக்குப்பதிவை நடத்த இயலாது என்கிறார்கள். இதை நாம் சவாலாக எடுத்து நடத்திக் காண்பிக்க வேண்டும்' என்று கூறி வருகிறார்.
அதோடு, திருவிழா காரணமாக வாக்குப்பதிவு குறைந்துவிடக் கூடாது என்பதற்காக, வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் நூதன பிரசாரமும் செய்யப்பட்டு வருகிறது.
"எனக்கு ஓட்டுப் போடுவதும், சாமி கும்பிடுவதும் முக்கியமானது. இரண்டையும் கண்டிப்பாக செய்வேன்', "ஓட்டு போட்டுவிட்டு சாமி கும்பிட செல்வேன், "ஆன்மிகம் - ஓட்டுப் போடுவது இரண்டையும் கண்டிப்பாக நிறைவேற்றுவேன்' போன்ற வாசகங்கள் அடங்கிய பேனர்களுடன் வாக்காளர் விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகின்றனர்.