நேரு போட்டியிட்ட தொகுதி புல்பூர்: வெற்றி மகுடம் யாருக்கு?

நமது நாட்டின் முதல் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜவாஹர்லால் நேரு முதன்முதலாக 1952ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேச மாநிலம், அலகாபாத் மாவட்டம், புல்பூர் தொகுதியில் போட்டியிட்டு

நமது நாட்டின் முதல் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜவாஹர்லால் நேரு முதன்முதலாக 1952ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேச மாநிலம், அலகாபாத் மாவட்டம், புல்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று பிரதமர் ஆனார். அடுத்து, 1957 மற்றும் 1962 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களில் புல்பூர் தொகுதியில் போட்டியிட்ட நேரு தொடர்ந்து வெற்றிக்கனியை பறித்தார். நாட்டின் முதல் பிரதமர் போட்டியிட்டு வெற்றி பெற்ற புல்பூர் தொகுதி, மக்கள் மத்தியில் தனி கவனத்தை ஈர்த்துள்ளது.
 புல்பூர், பிரயாக்ராஜ் (அலாகாபாத்) வடக்கு, பிரயாக்ராஜ் (மேற்கு), சோரோன், பாபாமா ஆகிய 5 சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய இந்த புல்பூர் மக்களவைத் தொகுதி, முன்பு காங்கிரஸின் எஃகு கோட்டையாக விளங்கியது. நேருவின் மறைவிற்கு பிறகு 1964ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் அவரது தங்கையான விஜயலட்சுமி பண்டிட் இங்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் 1967ஆம் ஆண்டு தேர்தலிலும், விஜயலட்சுமி பண்டிட் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு, 1969ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் சம்யுக்தா சோஷலிஸ கட்சியை சேர்ந்த ஜானேஷ்வர் மிஸ்ரா வெற்றி பெற்றார். பின்னர், 1971ல் காங்கிரஸ் சார்பில் வி.பி.சிங் வெற்றி பெற்றார்.
 அதன்பிறகு நடைபெற்ற தேர்தல்களில் பெரும்பாலும், படேல் சமுதாயத்தை சேர்ந்தவரே இத்தொகுதியில் இருந்து வெற்றி பெற முடிந்தது. 4 முறை சமாஜவாதி கட்சியும், இருமுறை ஜனதா தளமும், பகுஜன் சமாஜ் மற்றும் பாஜக தலா ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளது.
 கடைசியாக கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக வேட்பாளர் கேசவ் பிரசாத் மெளரியா வெற்றி பெற்றார்.
 மே 12ஆம் தேதி (இன்று) நடைபெற உள்ள 6-ஆம் கட்ட தேர்தலில் இந்த தொகுதியும் முக்கியத்துவம் வாய்ந்த தொகுதியாக கருதப்படுகிறது. கடந்த 2014இல் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட கேசவ் பிரசாத் மெளரியா, தற்போதைய உத்தரப் பிரதேசத்தின் துணை முதல்வராக கடந்த 2017ஆம் ஆண்டு மார்ச் 18ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 கேசவ் பிரசாத் மெளரியா உத்தரப் பிரதேச துணை முதல்வராக பொறுப்பேற்றதால், காலியான புல்பூர் மக்களவை தொகுதியில் 2018ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் சமாஜ்வாதி கட்சியின் நாகேந்திர சிங் படேல் வெற்றி பெற்றார். தற்போது, 2019ஆம் ஆண்டுக்கான தேர்தலில், பாஜக சார்பில் கேசரிதேவி படேல், சமாஜ்வாடி கட்சியின் சார்பில் பண்டரி யாதவ், காங்கிரஸ் சார்பில் பங்கஜ் நிரஞ்சன் ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக களம் இறங்கியுள்ளனர்.
 மும்முனை போட்டியாக நடைபெறும் இத்தொகுதியில், கடந்த 2014ஆம் ஆண்டு தேர்தலில் பாஜகவின் கேசவ் பிரசாத் மெளரியா 5,03,564 வாக்குகளும், சமாஜவாதி கட்சியின் தரம்ராஜ் சிங் படேல் 1,95,256 வாக்குகளும், பகுஜன் சமாஜ் கட்சியின் கபில் முனி கர்வாரியா 1,63,710 வாக்குகளும் பெற்றனர்.
 இடைத்தேர்தலில் சமாஜ்வாதி கட்சி வெற்றி பெற்றதால், அதிர்ச்சியடைந்த பாஜக மேலிடம் இம்முறை படேல் (குர்மி இனம்) சமுதாயத்தைச் சேர்ந்த கேசரிதேவி படேலுக்கு போட்டியிட வாய்ப்பளித்து விட்டது. அதேசமயம், 2014ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது, தனித்தனியே போட்டியிட்ட சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜ் கட்சியும் இம்முறை மகா கூட்டணி அமைத்துள்ளதால், சமாஜ்வாதி கட்சி சார்பில் பண்டரி யாதவை வேட்பாளராக களம் இறக்கியுள்ளனர்.
 வாக்காளர்களின் எண்ணிக்கை:
 புல்பூர் தொகுதியில் 10,63,897 ஆண் வாக்காளர்களும், 8,49,377 பெண் வாக்காளர்கள் உள்பட மொத்தம் 19,13,274 வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை செலுத்த போகின்றனர்.
 வெற்றியை நிர்ணயிக்கும் சக்தி:
 பிரதமராக நேரு இருந்த காலத்தில் விஐபி அந்தஸ்துடன் திகழ்ந்த புல்பூர் தொகுதியில் குர்மி இனமான படேல் சமுதாயத்தை சேர்ந்தவர்களே அதிக அளவில் வசிக்கின்றனர்.
 இவர்களைத் தவிர யாதவர்கள், முஸ்லிம், தலித் இனத்தை சேர்ந்தவர்களின் வாக்குகளும் கணிசமாக உள்ளது. எனவே, படேல் மற்றும் யாதவ சமுதாயத்தினரின் வாக்குகளே வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கிறது.
 இத்தொகுதியில், தொடர்ந்து நிலவி வரும் வேலையில்லா திண்டாட்டம், விவசாயிகள் பிரச்னை, இந்துத்துவா மற்றும் தேசிய பாதுகாப்பு போன்றவைகளே தலையாய பிரச்னைகளாக கருதப்படுகிறது.
 முன்பு பிரதமர் போட்டியிட்ட நட்சத்திர அந்தஸ்து பெற்ற இந்த தொகுதியில், தற்போது ஜாதிவாரியான வாக்குகளே வெற்றியை நிர்ணயிக்கும் காரணியாக உள்ளது என்பது வேதனையளிக்கும் உண்மையாகும்.


 வெற்றி வாய்ப்பு யாருக்கு?:
 முன்பு வேளாண் தொழில் கொடி கட்டிப் பறந்த நிலையில் தற்போது, வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளதாக தொகுதிவாசிகள் கூறுகின்றனர். அண்மைக் காலமாக, வகுப்புவாரியான வாக்குகளே வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கிறது. மத்திய அரசின் தூய்மை இந்தியா, உஜ்ஜூவாலா போன்ற திட்டங்கள் மக்களை சென்றடைந்துள்ளன. எனினும், தேர்தல் என்று வந்தால், அனைத்துப் பிரச்னைகளையும் விட ஜாதிவாரியான வாக்குகளே மேலோங்கி நிற்கின்றன.
 கடந்த, 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது, நாடு முழுவதும் வீசிய மோடிக்கு ஆதரவான அலை காரணமாக பாஜகவால் இங்கு வெற்றி பெற முடிந்தது. ஆனால், 2018ஆம் ஆண்டு இடைத்தேர்தலில் குர்மி இனத்தைச் சேர்ந்த நாகேந்திர சிங் படேல் தான் சமாஜ்வாதி கட்சியின் சார்பில் வெற்றியை பெற முடிந்தது.
 இதைப் புரிந்து கொண்ட பாஜக, இந்த முறை படேல் சமுதாயத்தை சேர்ந்த கேசரி தேவி படேலுக்கு போட்டியிட வாய்ப்பளித்துள்ளது. அவரும், தொகுதி முழுவதும் இந்தி திரையுலக நட்சத்திரமான சன்னி தியோல் உள்ளிட்ட பிரபலங்களின் துணையோடு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
 அதேசமயம், கடந்த 2014 தேர்தலின்போது, தனித்தனியே போட்டியிட்ட சமாஜவாதியும், பகுஜன் சமாஜ் கட்சியும் இணைந்து கிட்டத்தட்ட 3 லட்சத்து 60 ஆயிரம் வாக்குகளை பெற்றது. தற்போது, பாஜகவுக்கு எதிராக மாயாவதியும், அகிலேஷ் யாதவும் தொடர்ந்து மேற்கொண்டு வரும் பிரசாரம் காரணமாக வெற்றியை வசப்படுத்த முடியும் என்று அக்கட்சியினர் நம்புகின்றனர். மேலும், படேல் சமுதாயத்தினரின் வாக்குகள் தங்களுக்கு கிட்டாமல் போனாலும், முஸ்லிம் மற்றும் தலித் சமுதாயத்தினரின் வாக்குகள் தங்களுக்கு பெரும்பான்மையாக கிடைக்க வாய்ப்புள்ளதால், பாஜகவை வீழ்த்த முடியும் என மகா கூட்டணியின் வேட்பாளர் பண்டரி யாதவ் கருதுகிறார்.
 அதேசமயம், காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் பங்கஜ் நிரஞ்சன், பாஜகவின் வாக்குகளை கணிசமாக பிரிக்க வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். எனினும், காங்கிரஸ் வேட்பாளாரால் இத்தொகுதியில் எந்தவிதமான மாயாஜாலக்தையும் நிகழ்த்தி விட முடியாது என்று கூறப்படுகிறது.
 மொத்தத்தில், மே 23ல் இந்த சஸ்பென்ஸ் முடிவுக்கு வந்து விடும்.
 - நாராயணஸ்வாமி.எம்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com