மத்தியில் யார் ஆட்சி? அடையாளம் காட்டும் தலைநகர்!

மக்களவைத் தேர்தலை பொருத்தமட்டில், தில்லியில் அதிகத் தொகுதிகளைக் கைப்பற்றியுள்ள கட்சிதான் மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது கடந்த கால வரலாறு மூலம் தெரிய வருகிறது.
மத்தியில் யார் ஆட்சி? அடையாளம் காட்டும் தலைநகர்!

மக்களவைத் தேர்தலை பொருத்தமட்டில், தில்லியில் அதிகத் தொகுதிகளைக் கைப்பற்றியுள்ள கட்சிதான் மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது கடந்த கால வரலாறு மூலம் தெரிய வருகிறது. கடந்த 20 ஆண்டுகளில் நடைபெற்ற 4 மக்களவை தேர்தல் முடிவுகள் மூலம் இதைக் காணலாம். தற்போதைய தேர்தலிலும் இது நிகழுமா என்பதே தலைநகர் அரசியல் வட்டாரத்தில் ஒரே பேச்சாக உள்ளது.


1996-இல் இருந்து 2014-ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில்  தில்லியில் அதிக இடங்களைப் பெற்ற கட்சிதான், மத்தியில் ஆட்சி அமைத்திருக்கிறது. 2014 மக்களவைத் தேர்தலில்  தில்லியில் உள்ள ஏழு மக்களவைத் தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற்ற பாஜகதான்,  மத்தியில் அறுதிப்  பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்தது.
1996 மக்களவை தேர்தலில் தில்லியில் மொத்தம் உள்ள ஏழு தொகுதிகளில் ஐந்தில் பாஜக வெற்றி பெற்றது. 2 இடங்கள் காங்கிரஸுக்குச் சென்றது. அப்போது காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட எந்தக் கட்சிக்கும் மத்தியில் ஆட்சி அமைக்கும் வகையில் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காததால், தொங்கு நாடாளுமன்றம் உருவானது . அதாவது தேர்தலில் அதிக இடங்களை பெற்ற கட்சியாக பாஜக 161 இடங்களுடன் இருந்தது. அக்கட்சியில் சமதா கட்சி, சிவசேனை,  ஹரியானா விகாஸ் கட்சி உள்ளிட்டவை கூட்டணியில் இருந்தன. பாஜகவை ஆட்சி அமைக்குமாறு அப்போதைய குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா அழைத்தார். ஆனால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் போனதையடுத்து, 13 நாள்களுக்குப் பிறகு வாஜ்பாய் தனது பிரதமர் பதவியை ராஜிநாமா செய்தார்.
அதைத் தொடர்ந்து, ஹெச்.டி தேவகெளடா தலைமையிலான தேசிய முன்னணி ஆட்சி அமைத்தது. அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாததால் இரு ஆண்டுகளில் மூன்று பிரதமர்களை நாடு சந்திக்க நேரிட்டது. 
அதன் பிறகு 1998 மக்களவைத் தேர்தலில் தில்லியில் பாஜக மொத்தம் உள்ள ஏழு இடங்களில் 6 இடங்களைக் கைப்பற்றியது. ஓர் இடம் காங்கிரஸுக்கு சென்றது . இதைத் தொடர்ந்து, அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராக அறிவிக்கப்பட்டார். ஆனால், அவரது ஆட்சி பதிமூன்று மாதங்கள் மட்டுமே நீடித்தது.
அதன்பிறகு அவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால், ஒரு வாக்கு வித்தியாசத்தில் ஆட்சி கவிழ்ந்தது. 1999-இல் கார்கில் போருக்குப் பிறகு 13-ஆவது மக்களவைத் தேர்தல் நடைபெற்றது . தில்லியில் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றது. தேசிய அளவில் பாஜக மட்டும் 182 இடங்கள் பெற்றது. இதையடுத்து, மத்தியில் பாஜக தலைமையிலான  தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும்ஆட்சி அமைத்தது.   வாஜ்பாய் பிரதமராகப் பதவியேற்று 2004, ஏப்ரல் வரை ஆட்சியில் இருந்தார்.
இந்த நிலையில்,   2004 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தில்லியில் உள்ள ஏழு இடங்களில் 6-ஐ கைப்பற்றியது. பாஜகவுக்கு ஓர் இடம் மட்டுமே கிடைத்தது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சிய அமைத்தது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முதலாவது ஆட்சி பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் அமைந்தது.  2009 மக்களவைத் தேர்தலில் தில்லியிலுள்ள அனைத்துத் தொகுதிகளும் காங்கிரஸ் வசமானது. இதைத் தொடர்ந்து, இரண்டாவது முறையாக மன்மோகன் சிங் தலைமையில்  ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி அமைந்தது. ஆனால், 2014 மக்களவைத் தேர்தலில்  நரேந்திர மோடியின் பிரசார அலை காரணமாக பாஜக தில்லியில் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. அதேபோல,  தேசிய அளவில் 282 இடங்களில் வெற்றி பெற்று  மத்தியில் மீண்டும்  பாஜக ஆட்சி  மலர்ந்தது.
அதாவது தில்லியில் உள்ள ஏழு மக்களவைத் தொகுதிகளில் அதிக இடங்களைக் ûப்பற்றும் கட்சி, மத்தியில் ஆட்சி அமைத்துள்ளதைக் காணலாம் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். இந்த நிலை தற்போதைய 2019 மக்களவை தேர்தலிலும்  நீடிக்குமா என்பது மே 23-இல் வெளியாகும் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தும்.
முன்னதாக 2009 மக்களவைத் தேர்தலுடன்  ஒப்பிடுகையில் 2014ஆம் ஆண்டு தில்லி மக்களவைத் தொகுதிகளில் வாக்கு சதவீதம் அதிகரித்திருந்தது. 2009-இல் 51.8 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன. இது 2014 தேர்தலில் 13.3 சதவீதம் அதிகரித்து 65.1சதவீதமாக இருந்தது. ஆனால் தற்போது நடைபெற்றுள்ள  மக்களவைத் தேர்தலில் தில்லியில் 60 சதவீதம் வாக்குகள்தான்  பதிவாகியுள்ளது. வட கிழக்கு தில்லி தொகுதியில் மட்டும் அதிகபட்சமாக 63.45 சதவீதம் வாக்குகள் பதிவாகிவுள்ளன. 
தேர்தலில் வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வரும் வகையில்,  தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருந்த போதிலும், கடந்த 2014 மக்களவைத் தேர்தலை விட தற்போது  5 சதவீதம் வாக்குகள் குறைவாகவே பதிவாகியுள்ளது அனைவரையும் யோசிக்க வைத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com