மெய்யாலுமா?

இரட்டை ஆச்சரியத்தில் மூழ்கிப் போய் இருக்கிறது கோட்டை வட்டாரம். முதலாவது வியப்பு, அந்த மூன்று அதிகாரி ஏன் அகற்றப்பட்டார் என்பது.

இரட்டை ஆச்சரியத்தில் மூழ்கிப் போய் இருக்கிறது கோட்டை வட்டாரம். முதலாவது வியப்பு, அந்த மூன்று அதிகாரி ஏன் அகற்றப்பட்டார் என்பது. இரண்டாவது வியப்பு, அந்த இடத்திற்கு இந்த அதிகாரி ஏன் நியமிக்கப்பட்டார் என்பது.

மன்னார்குடிப் பெருமாளின் பெயர் கொண்ட அந்த அதிகாரி நேர்மையானவர், கறாரானவர். முதல்வரின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர் என்று கருதப்பட்டவர். காவல் துறை உயர் அதிகாரிகள் வரை யாரைப் பார்த்தாலும் சந்தேகப் பார்வை பார்த்து வந்தாராம். மூத்த காவல் துறை அதிகாரிகளை வேண்டுமென்றே காத்திருக்கச் சொல்லி அவமானப்படுத்தினாராம். இந்திய அரசுப் பணி பெரிதா, இந்தியக் காவல் பணி பெரிதா என்பதை நேரம் பார்த்துப் போட்டுக் கொடுத்து நிரூபித்து விட்டனர் காவல் துறையினர் என்கிறார்கள்.

முந்தைய ஆட்சியில் துணை முதல்வரின் துணைவர் என்று அழைக்கப்படும் அளவுக்கு அவருக்கு நெருக்கமாக இருந்தவர். ஆட்சிக் காலம் முடியும் தறுவாயில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் தங்களுக்கு சாதகமான சிலர் அடுத்த ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதற்காகவே, முக்கியத்துவம் இல்லாத பதவிக்குத் தூக்கி அடிக்கப்பட்டவர். அங்கே இங்கே என்று இந்த ஆட்சியில் பரமபதத்தில் ஏணி ஏறுவது போல ஏறி எதிர்பார்க்காத உயரத்திலுள்ள பதவியை எட்டிப் பிடித்து விட்டிருக்கிறார். "உள்'ளபடியே இவருக்கு அந்தத் துறை கிடைத்ததில் அவரைவிட செனடாப் ரோடில்தான் அதிக மகிழ்ச்சி காணப்பட்டதாகச் சொல்கிறார்களே, மெய்யாலுமா?



கடந்த மாதம் பெங்களூரு பாரதிய ஜனதாக் கட்சி அலுவலகத்தின் அருகே நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் அம்மோனியம் நைட்ரேட் பயன்படுத்தப்பட்டது தெரிய வந்துள்ளது. இது தொடர்பான விசாரணையில் கர்நாடகக் காவல்துறையினர் தமிழகத்தைச் சேர்ந்த தடை செய்யப்பட்ட அல்-உம்மா இயக்கத்தினர் பலரைக் கைது செய்தனர். விசாரணையில், பெங்களூரு குண்டு வெடிப்புக்காக ஒரு சிறு பகுதி மட்டுமே பயன்படுத்தப்பட்டதாகவும், மீதி 2 கிலோ அம்மோனியம் நைட்ரேட் தலைமறைவாக இருக்கும் தீவிரவாதிகளிடம் இருப்பதாகவும் தெரிய வந்திருக்கிறதாம். அந்தத் தீவிரவாதிகளைத் தேடிப் பிடிக்கத் தென் மாநிலக் காவல் துறையினர் அலையாய் அலைகிறார்களாம். தவியாய்த் தவிக்கிறார்களாமே, மெய்யாலுமா?



தன் குறிப்பு அல்லது "பயோ டேட்டா' என்பதுதான் லத்தீன் மொழியில் "கரிக்குலம் விட்டே' அல்லது சி.வி. என்று சொல்லப்படுகிறது. வேலை கோருபவரின் முன் அனுபவம், தகுதி, அவரது ஏனைய சிறப்புகள் போன்றவற்றை இரண்டு பக்கங்களுக்குள் தெரிவிப்பதுதான் கரிக்குலம் விட்டே என்கிறது விளக்கம்.

பா.ம.க. தலைவர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதில் இருந்து, தான் ஏதோ அமைச்சராகி விட்டது போன்ற மிதப்பில் இருக்கிறாராம் அந்த இரண்டெழுத்து இனிஷியலுடன் கூடிய முன்னாள் அமைச்சர். அவராவது பரவாயில்லை, அவரது சகோதரர் இப்போதே வானத்துக்கும் பூமிக்குமாகக் குதித்துக் கொண்டிருக்கிறார். பா.ம.க.வினர் பலரைக் கைது செய்திருப்பதால் அதிருப்தி அடைந்திருக்கும் வன்னியர்களைத் திருப்திப்படுத்தத் தனது சகோதரரை மீண்டும் அமைச்சராக்குவதைத் தவிர முதல்வருக்கு வேறு வழியே கிடையாது என்று சொல்லிச் சொல்லி மகிழ்கிறாராமே சகோதரர், மெய்யாலுமா?



ஒருவர் தென் சென்னைப் பேட்டையைச் சேர்ந்தவர். ஆளுங்கட்சிக்காரர். ஊருக்குப் பெரியவர். தனது பகுதியின் பெயரைத் தனது பெயரின் அடைமொழியாக வைத்திருப்பவர்.

மற்றவர் மத்திய சென்னையைச் சேர்ந்த முன்னாள் காங்கிரஸ்காரர். இப்போது உடன்பிறப்பாக மாறி விட்டிருப்பவர். தனது பள்ளிகொண்ட பெருமாளின் பெயருக்கு முன்னால், முன்னவரைப் போலவே தனது பகுதியின் பெயரை அடைமொழியாக வைத்துக் கொண்டிருப்பவர். முன்னவரும் சரி, பின்னவரும் சரி தமிழக சட்டப்பேரவையின் முன்னாள் உறுப்பினர்கள்.

ஒரு திருமண வீட்டில் இருவரும் சந்திக்க நேர்ந்தது. முன்னவர் ஓடிப்போய் பின்னவரின் கையைப் பிடித்துக் குலுக்கிப் பாராட்ட முனைந்தார். பின்னவர், சட்டெனக் கையை உதறிக் கொண்டு, "ஏதோ நம்ம ஆள் ஒருத்தர் பதவியில் இருக்கியேன்னு சந்தோஷமா இருக்கோம். இது ஏதாவது உங்க அம்மாவுக்குத் தெரிஞ்சா உன்னோட பதவி போயிடும். கண்டும் காணாம போவியா... எல்லாம் போன்ல பேசிப்போம் போதும்...'' என்று சத்தம் போட்டுச் சொல்லியபடி அகன்று விட்டாராம். முன்னவர் முகத்தில் ஈயாடவில்லையாமே, மெய்யாலுமா?



மருத்துவராகவே இருந்தாலும் தனக்கு அறுவை சிகிச்சை செய்து கொள்வதென்றால் பயம்தானே? இதயத்தில் அந்தத் தலைவருக்கு இரண்டு இடங்களில் அடைப்பு இருப்பது இரண்டு வருடங்களுக்கு முன்பே தெரியுமாம். ஆனாலும் அறுவை சிகிச்சைக்கு பயந்து தள்ளிப் போட்டு வந்தாராம். இப்போது தன்னையும் கைது செய்து தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அடைத்து விடுவார்களோ என்கிற பயத்தில், பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவமனையைத் தஞ்சம் புகுந்து விட்டாராமே, மெய்யாலுமா?



ஜெர்மானியரான காரல் மார்க்ஸ், பத்திரிகையாளராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கியவர் பிரான்சுக்குக் குடிபெயர்ந்து, அங்கிருந்துதான் தனது புரட்சிகரமான பொருளாதாரக் கருத்துக்களைக் கட்டுரைகளாக எழுதத் தொடங்கினார்.  பிரான்சிலிருந்து வெளியேற்றப்பட்டதால் லண்டனைத் தஞ்சம் அடைந்தார்.

"தி கம்யூனிஸ்ட் மானிஃபெஸ்டோ', "தாஸ் கேபிடல்' போன்ற பல புத்தகங்களை அவர் எழுதியிருந்தாலும், அவர் கூற, அவரது உயிர் நண்பர் ஏஞ்சல்ஸ் எழுதி, வெளிவந்த "தி ஆர்ஜின் ஆப் த பாமிலி, ப்ரைவேட் ப்ராப்பர்டி, தி ஸ்டேட்' (குடும்ப முறையின் தொடக்கம், தனியுடமை, அரசு) என்கிற புத்தகம்தான் அவரை ஒரு தலைசிறந்த சமூக சிந்தனையாளராக வெளிக்காட்டுகிறது என்பது பெர்னார்ட்ஷாவின் கருத்து.

கார்ல் மார்க்சுக்கு ஏழு குழந்தைகள். அவர்களில் மூன்று பேர்தான் தங்கினர். வீட்டு வேலைக்காரி ஹெலன் டெமூத் மூலம் அவருக்கு ஒரு மகன் (பிரெட்டி) இருப்பதாக ஒரு குற்றச்சாட்டு உண்டு. மார்க்ஸ் தனது பெயரை அடிக்கடி மாற்றிப் புனைப்பெயரால் தன்னை அழைத்துக் கொள்வாராம். அதேபோல, தனது குழந்தைகள், நண்பர்களையும் புனைப்பெயர் சூட்டி அழைப்பதில் அவருக்கு ஒரு மகிழ்ச்சி.

÷லண்டனில் 1883 மார்ச் மாதம் 14 ஆம் தேதி காரல்மார்க்ஸ் இறந்தார். சாய்வு நாற்காலியில் அமர்ந்து தூங்கியபடியே இறந்துவிட்டிருந்தார். அவரது சவ அடக்கம் மார்ச் 17 ஆம் தேதி லண்டன் ஹைகேட் கல்லறையில் நடந்தது. நமது பாரதியைப் போலத்தான். 11 பேர்தான் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

மகளிரும் காரல் மார்க்ஸ் என்கிற பெயரை வைத்துக் கொள்வது நமது தமிழகத்தில் மட்டுமாகத்தான் இருக்கும்.

மகளிரணியைச் சேர்ந்த ஓர் உடன்பிறப்பு, பேச்சாளர்கள் கூட்டத்தில் தான் மனித வெடிகுண்டாக மாறி முதல்வர் ஜெயலலிதாவை அழிக்கப் போவதாக சூளுரைத்தாராமே, மெய்யாலுமா?



ஆளும் கூட்டணியின் ஆதரவு இருந்ததால் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் இரண்டு இடங்களில் வெற்றி பெற்ற கட்சித் தலைவர் அவர். தொழிலால் மருத்துவர். அவருக்கு எப்படியும் மக்களவை உறுப்பினராகி விட வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. இங்கே இருந்தால் வாய்ப்புக் கிடைக்காது என்பதால் அணி மாறத் தயாராகி விட்டாராம், கட்டபொம்மனையும், வ.உ.சி.யையும் நினைவுபடுத்தும் தொகுதியின் உறுப்பினராக இருக்கும் அந்தத் தலைவர். ""சட்டசபை பள்ளிக்கூடம் மாதிரி இருக்கிறது. அந்த "அம்மா' வந்தால் ஆளும்கட்சி உறுப்பினர்கள் எல்லாம் ஆரம்பப் பள்ளிக்கூடக் குழந்தைகளைப் போல வாயைப் பொத்திக் கொண்டு உட்காராத குறை. சட்டப்பேரைவக்குப் போகவே வெறுப்பாக இருக்கிறது'' என்றெல்லாம் பேசத் தொடங்கி இருக்கிறாராம். ""ஏன் சாமி, இப்படி வம்பை விலைக்கு வாங்கறே...'' என்று நண்பர்கள் அவரை எச்சரித்து அடக்குகிறார்களாமே, மெய்யாலுமா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com