முன்னோடிகள்: ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர்

ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர் இசைப்புரட்சி செய்த ஒரு மகாவித்வான் என்று கூறலாம். இவர் 1877-ல் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள புனைவேலி என்ற கிராமத்தில் லிங்கம் ஐயருக்கும், ஆனந்தம் அம்மாவிற்கும் மகனாகப
முன்னோடிகள்: ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர்

ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர் இசைப்புரட்சி செய்த ஒரு மகாவித்வான் என்று கூறலாம். இவர் 1877-ல் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள புனைவேலி என்ற கிராமத்தில் லிங்கம் ஐயருக்கும், ஆனந்தம் அம்மாவிற்கும் மகனாகப் பிறந்தார். திருவையாறைச் சேர்ந்த முது கணபதிகளிடம் ஒன்பதாவது வயதில் வேதம் பயிலத் தொடங்கினார்.

திருவையாறு சங்கீதத்தின் உறைவிடமாய் இருந்த காலம். சங்கீதம் முத்தையாவை இழுத்தது. வேத அத்யாயனம் செய்வதை விட்டுவிட்டு, தியாகய்யரின் சிஷ்ய பரம்பரையைச் சேர்ந்த பல்லவி துரைசுவாமி அய்யரின் சீடரும், சபேசய்யரின் தந்தையுமான வித்வான் சாம்பசிவ ஐயரிடம் சங்கீதம் பயின்றார். அவர் காலத்திற்குப் பிறகு சபேசய்யரிடமும் சில உருப்படிகளைப் பாடம் செய்தார்.

1893-ம் ஆண்டு மீண்டும் ஹரிகேசநல்லூருக்குத் திரும்பினார்.

அசுர சாதகம் செய்து தன் குரலை வளப்படுத்திக் கொண்டார். த்ரிஸ்தாபியும் (மூன்று காலமும்) பேசக்கூடிய சாரீரம். தானம் பாடுவதில் நிபுணத்துவம் அடைந்தார். 1897-ம் வருடம் திருவனந்தபுரம் மூலம் திருநாள் முன்பு பாடி சமஸ்தான கௌரவங்கள் பல பெற்றார். தஞ்சாவூர் கிருஷ்ண பாகவதருக்குப் பின்பு ஹரிகதையில் ஒரு இடைவெளி வந்துவிட்டதைப் புரிந்துகொண்டு, தன்னுடைய நாவன்மை, நகைச்சுவை உணர்வு, மொழி ஆளுமை ஆகியவற்றை மூலதனமாகக் கொண்டு, ஹரிகதை செய்ய ஆரம்பித்தார்.

÷தஞ்சாவூரில் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் வசித்தார். அங்கு கோனேரிராஜபுரம் வைத்யநாத ஐயர், கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளை, மாயவரம் சுப்பு ஐயர், கும்பகோணம் அழகநம்பி இவர்களின் பழக்கம் ஏற்பட்டது. குரு சாம்பசிவ ஐயரின் உதவியாலும் அப்பிரஹாம் பண்டிதரின் நட்பாலும் இசையையும் திறம்படக் கற்றார். இந்த நேரத்தில் அவர் ஹரிகதைக்குத் தேவையான பாடல்களையும், தனிக் கீர்த்தனைகளையும் இயற்ற ஆரம்பித்தார். தன்னுடைய ஹரிகதைகளுக்கு நிரூபணங்களை எழுதினார். எல்லா சமஸ்தான மன்னர்களும் இவரை ஆதரித்தனர்.

÷மைசூர் மஹாராஜா இவருக்கு காயக சிகாமணி என்ற பட்டத்தை அளித்தார். மஹாராஜாவின் வேண்டுகோளின்படி சாமுண்டீச்வரியின் பெயரில் அஷ்டோத்திரங்களும், பாடல்களும் புனைந்தார். 1930-ம் வருடம் சங்கீத கலாநிதி பட்டம் சங்கீத வித்வத் சபையினரால் இவருக்கு வழங்கப்பட்டது.

÷1936-ல் திருவனந்தபுரம் சமஸ்தானத்தில் ஆஸ்தான வித்வானாக நியமிக்கப்பட்டார். சுவாதி திருநாள் மஹாராஜாவின் கீர்த்தனைகளை தொகுப்பதில் முக்கிய பங்கு வகித்தார். "சங்கீத கல்பத்ருமம்' என்ற இசை இலக்கண நூலை எழுதி டாக்டர் பட்டம் பெற்றார். காசியில் சிலகாலம் தங்கி இந்துஸ்தானி சங்கீதத்தையும் முறைப்படி புரிந்துகொண்டார்.

இவர் வர்ணங்கள், தருவர்ணங்கள், கீர்த்தனைகள் என்று பல உருப்படிகளை இயற்றியுள்ளார். இவருடைய கீர்த்தனைகளில் 400 கீர்த்தனைகள் நமக்கு கிடைத்துள்ளன. விஜயநாகரி, புதமனோஹரி போன்ற பல ராகங்கள் இவரின் கண்டுபிடிப்பு. அவரிடம் சங்கீதம் பயின்றவர்களில் சிலர், மதுரை மணி ஐயர், பூதலூர் கிருஷ்ணமூர்த்தி சாஸ்த்ரிகள் போன்றோர். 1945-ம் வருடம் இயற்கை எய்தினார்.

சுவாதி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com