அசத்துகிறார்!

கடந்த சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு பார்த்தசாரதி சபாவில் எஸ்.செளம்யாவின் வாய்ப்பாட்டு
அசத்துகிறார்!

கடந்த சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு பார்த்தசாரதி சபாவில் எஸ்.செளம்யாவின் வாய்ப்பாட்டு. எம்பார் கண்ணன் வயலின். பூங்குளம் சுப்பிரமணியம் மிருதங்கம். கே.வி. கோபாலகிருஷ்ணன் கஞ்சிரா. முந்தைய இரண்டு சீசன்களில் செளம்யாவின் இசைக் கப்பல் தரை தட்டப் போகிறதோ என்கிற அச்சம் நமக்கு ஏற்பட்டது நிஜம். அதற்கு காரணம் அவரது சங்கீதத்தில் சாஸ்திரிய லட்சணங்களும் சாரீர வளமும் இருந்தும் ஆரம்பத்திலிருந்த ஜீவன் இல்லாததுபோல ஒரு தோற்றம் காணப்பட்டது. செளம்யாவுக்கு என்னவாயிற்று என்று பல ரசிகர்களும் ரகசியமாக தங்கள் மனத்திற்குள் கேட்டுக் கொண்டார்களே தவிர அதை வெளிப்படுத்தாததற்கு காரணம், அவர் அதிஅற்புதமான கலைஞர் என்பதால்தான்.

 கடந்த இரண்டு சீசனாக இருந்த தளர்வும் தயக்கமும் இந்த சீசனில் முற்றிலும் அகன்று செளம்யாவின் இசைக்கலம் கம்பீரமாக விரையத் தொடங்கியிருக்கிறது. அரங்கம் நிறைந்திருந்தது என்பது மட்டுமல்ல, அன்றைய கச்சேரியைக் கேட்டவர்களின் மனதும் நிறைந்தது என்பதுதான் நிஜம். அப்படியொரு ஆகர்ஷணமான சங்கீதம்!

"கருணிம்ப' (சஹானா) என்கிற வர்ணத்துடன் தொடங்கி, தியாகய்யர் "பூர்ண ஷட்ஜம்' ராகத்தில் இயற்றிய "லாவண்ய ராமா' பாடியது முதல், அத்தனை ரசிகர்களையும் தனது இசையால் கட்டிப்போட்டுவிட்டார். அதற்குப் பிறகு நிகழ்ச்சி முடியும்வரை ஒருவராவது எழுந்து போக வேண்டுமே...

"சக்ரவாகம்' ராக ஆலாபனையைத் தொடர்ந்து பெரியசாமித் தூரன் இயற்றிய "நான் ஒரு சிறு வீணை' என்கிற சாகித்யம். "சக்ரவாகம்' என்கிற ராகம் எப்படி இருக்க வேண்டும் என்றால் அன்று செளம்யா பாடியதைப் போல இருக்க வேண்டும்! இலக்கண சுத்தமாகவும் அதே சமயம் இனிமையாகவும் "சக்ரவாகம்' ராகத்தை செüம்யா பாடுவதற்கு நிகராக இன்னொருவர் பாடி இதுநாள் வரை கேட்டதில்லை. "நல்ல நல்லிசைகளாய்' என்கிற இடத்தில் நிரவல் அமைத்துக் கொண்டு ஸ்வரம் பாடினார்.

தியாகய்யரின் "வினவே ஓ மனஸை' (விவர்தனி), மைசூர் வாசுதேவாச்சாரின் "பஜரே ரே மானஸ' (கர்னாடக தேவகாந்தாரி), தீட்சிதரின் "அர்த்தநாரீஸ்வரம்' (குமுதக்ரியா) என்று மூன்று சாகித்யங்களைப் பாடிவிட்டு விஸ்தாரமான ராகம், தானம், பல்லவிக்கு நகர்ந்தார் செளம்யா.

சமீப காலத்தில் "வர்தனி' ராகத்தில் யாரும் ராகம், தானம், பல்லவி இசைத்துக் கேட்கவில்லை. நாமும் ஏதோ எல்லோருக்கும் தெரிந்த ராகத்தில் பாடிவிட்டுப் போவோம் என்று விட்டேத்தியாக நினைக்காமல், ரசிகர்களுக்கு புதிது புதிதாக ஏதாவது கொடுக்க வேண்டும் என்கிற செüம்யாவின் தாகம்தான் அவரை முன்வரிசை கலைஞராக நிலைநிறுத்துகிறது. "தர்மார்த்த காம வர்தனி சதா மாம்பாஹி' என்பதுதான் பல்லவி. தானம் அசத்தல். அதற்காகவே செளம்யாவுக்கு நூறு சபாஷ் போடலாம்.

÷தனியாவர்த்தனத்தைத் தொடர்ந்து பாரதியாரின் பாடலையும் அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச் சிந்து ஒன்றையும் பாடி நிகழ்ச்சியை நிறைவு செய்தார் அவர்.

÷புலி பதுங்குவது பாய்வதற்குத்தான் என்பார்கள். கடந்த இரண்டு சீசன்களாக செளம்யா சற்று சோர்ந்துவிட்டாற்போல இருந்ததன் காரணம் இப்போது அல்லவா புரிகிறது. அசத்துகிறார்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com