தங்க ரதம், கருட வாகனத்தில் பத்மாவதி தாயார் வீதியுலா

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவத்தின் ஆறாம் நாளான வியாழக்கிழமை மாலை தங்க ரதத்திலும்,
தங்க ரதம், கருட வாகனத்தில் பத்மாவதி தாயார் வீதியுலா

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவத்தின் ஆறாம் நாளான வியாழக்கிழமை மாலை தங்க ரதத்திலும், இரவு திருமலையான் திருவடியுடன் கருட வாகனத்திலும் பத்மாவதி தாயார் மாடவீதியில் வலம் வந்து அருள்பாலித்தார்.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் கடந்த சனிக்கிழமை முதல் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. இதன் ஆறாம் நாளான வியாழக்கிழமை காலை பலவித வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சர்வ பூபால வாகனத்தில் பத்மாவதி தாயார் வலம் வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.
பின்னர் மதியம் 2 மணிக்கு தாயாருக்கு ஆஸ்தான மண்டபத்தில் மூலிகைக் கலந்த வெந்நீரால் ஸ்நபன திருமஞ்சனம் நடைபெற்றது. இதையடுத்து மாலை 5 மணிக்கு ஏழுமலையானின் பட்டத்து ராணி அலங்காரத்தில் தங்க ரதத்தில் தாயார் மாடவீதியில் எழுந்தருளினார். தங்கரதம் மகாலட்சுமியின் அம்சம் என்பதால் ஏராளமான பெண்கள் இந்த ரதத்தை வடம் பிடித்து இழுத்தனர். இதில் கோயில் அதிகாரிகள் தம்பதிகளாகக் கலந்து கொண்டனர்.
இதற்கு பின்னர், மாலை 6 மணிக்கு தாயாருக்கு சகஸ்ர தீப அலங்கார மண்டபத்தில், ஊஞ்சல் சேவை நடைபெற்றது. இரவு 8 மணிக்கு தாயார் ஏழுமலையானின் கருட வாகனத்தில் மலையப்ப சுவாமியின் திருவடிகளை பொருத்திக் கொண்டு மாடவீதியில் வலம் வந்தார்.
இதைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர். இந்த வாகன சேவையில் திருமலை ஜீயர்கள், தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனர். வாகன சேவையின் முன்னும், பின்னும் இந்து தர்ம பரிக்ஷத் அமைப்பினர் நடனம், கோலாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளை நடத்தியபடி வந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com