இன்று மஹா பெரியவரின் 124-வது ஜயந்தி தினம்: அந்த மகானின் ஒரு நிகழ்வைப் பார்ப்போம்

மஹா பெரியவா என்று அழைக்கப்படும் காஞ்சி ஸ்ரீகாமகோடி பீடாதிபதி ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அவதாரம் தினமாக இன்று கொண்டாடப்படுகிறது.
இன்று மஹா பெரியவரின் 124-வது ஜயந்தி தினம்: அந்த மகானின் ஒரு நிகழ்வைப் பார்ப்போம்
Published on
Updated on
2 min read

மஹா பெரியவா என்று அழைக்கப்படும் காஞ்சி ஸ்ரீகாமகோடி பீடாதிபதி ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அவதரித்த தினமாக இன்று கொண்டாடப்படுகிறது. பெரியவா வைகாசி மாதம் அனுஷ நட்சத்திர நன்நாளில் அவதரித்தார். இன்று அவருடைய 124-வது ஜயந்தி தினமாகும்.

உலகம் முழுவதும் உள்ள மகா பெரியவரின் பக்தர்கள் இன்றைய தினம் சிறப்பு ஹோமங்கள், தேவார - திருவாசகம் முற்றும் ஓதுதல், சிறப்பு அபிஷேகம், திருவீதி உலா, அன்னதானம் என்று இந்த அவதார தினத்தை பக்தியோடு விமரிசையாகக் கொண்டாடி வருகிறார்கள்.

அந்த மகான் பற்றிய ஒரு நிகழ்வை இன்றைய தினம் நினைவு கூறுவோம்...

மஹா பெரியவரிடம் அளவு கடந்த பக்தி கொண்ட ஒரு தம்பதி. மகானை அனுதினமும் பூஜை செய்யாமல் எந்த காரியத்தையும் தொடங்குவதே இல்லை. அவர் இல்லத்தரசி மட்டுமின்றி கர்ப்பிணியும் ஆவார். தங்களுக்குப் பிறக்கப் போகும் குழந்தை நல்ல விதமாகப் பிறக்க வேண்டும் என்று அவர்கள் அனுதினமும் மகானை வேண்டாத நாளே இல்லை. இத்தனைக்கும் அவர்களது குலதெய்வம் நரசிம்மர்!

ஒரு நாள் இரவில், அந்த கர்ப்பிணிப் பெண் தூங்கிக் கொண்டு இருந்தபோது, நரசிம்மர் அவர் கனவில் தோன்றி, 'பிறக்கப் போகும் குழந்தைக்கு தன் பெயரை வைக்கவேண்டும்' என்று உத்தரவிடுகிறார். ஆனால் குழந்தையைச் சுமந்த தாயோ, "எங்களுக்கு எல்லாமே காஞ்சி மகான்தான். அவரைக் கேட்டுத் தான் எதையும் செய்ய வேண்டும்" என்று வாதம் புரிகிறாள்.

நரசிம்மர் பிடிவாதமாக இருக்கிறார். காலையில் கண் விழித்தவுடன் தான் கண்ட கனவை கணவரிடம் சொன்னார் அந்தப் பெண். "நரசிம்மர் என்றே வைத்து நாம் அழைக்கலாம். எதற்கும் காஞ்சி மகானை அணுகி இது விஷயமாகக் கேட்டு விடலாம்" என்று முடிவு செய்தார்கள். குலதெய்வத்தின் பொல்லாப்பு வரக் கூடாதல்லவா?

அவர்களுக்கு அழகான ஓர் ஆண் மகவு பிறந்தது. உரிய தினத்தில் எல்லா சடங்குகளும் முடிந்த பிறகு ஒரு நாள் குழந்தையுடன் அவர்கள் மகானின் தரிசனத்துக்காகப் போனார்கள். மகானிடம் தான் கண்ட கனவைச் சொல்லி, என்ன செய்யலாம் என்று யோசனை கேட்க மனைவி முடிவு செய்ய, அதுதான் சரி என்று கணவனும் ஆமோதித்தார்.

தங்கள் முறை வந்தபோது, குழந்தையை மகானின் முன்னால் கீழே போட்டார்கள். குழந்தையைப் பார்த்தவுடன், மகானின் முகத்தில் லேசான குறுநகை பிரகாசம். அவர், ‘பொதுவாக குழந்தை பிறந்த பிறகு உரிய சடங்குகளுக்குப் பிறகு தான் அதற்குப் பெயர் சூட்டுவார்கள். ஆனால் இவன் வயிற்றில் இருக்கும்போதே பெயரை வைத்துக் கொண்டு பிறந்திருக்கிறான்… இல்லையா நரசிம்மா?" என்று குழந்தையைப் பார்த்துச் சொன்னார். பெற்றோர்கள் அதிர்ச்சிக்குள்ளாகக் கேட்பானேன்? அவர்களின் எண்ணம் போலவே மகானும் அந்த தெய்வத்தின் பெயரை வைத்தே அழைத்து விட்டார்.

தங்கள் கனவு, எண்ணம் எதையுமே சொல்லாமல் மகான் அதே பெயரைச் சொல்கிறாரே, அது எப்படி? தன் பக்தர்களுக்கு இப்படித்தான் மஹா பெரியவா அருள் பாலித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com