திருப்பதியில் வருகிறது புதிய முறை: இலவச தரிசனத்திற்கும் இனி டோக்கன் 

திருப்பதியில் இலவச தரிசனம் செய்யும் பக்தர்கள் குறைந்த நேரத்தில் சுவாமி தரிசனம் செய்யும் வகையில் புதிய திட்டம் கொண்டுவர உள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது. 
திருப்பதியில் வருகிறது புதிய முறை: இலவச தரிசனத்திற்கும் இனி டோக்கன் 

திருப்பதியில் இலவச தரிசனம் செய்யும் பக்தர்கள் குறைந்த நேரத்தில் சுவாமி தரிசனம் செய்யும் வகையில் புதிய திட்டம் கொண்டுவர உள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது. 

திருமலை திருப்பதிக்கு நடைபாதையாக வரும் பக்தர்களுக்கு கடந்த ஜூலை மாதத்தில் திவ்ய தரிசன டோக்கன் வழங்குவதில் புதிய முறையை தேவஸ்தானம் அமல்படுத்தியது. அதன்படி, பொது தரிசனம் செய்யும் பக்தர்கள் குறைந்த நேரத்தில் சுவாமி தரிசனம் செய்யும் புதிய திட்டத்தைக் கொண்டுவர  தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்து வந்தது.

அதன் அடிப்படையில், திருப்பதி ஏழுமலையானை பொது தரிசனத்தின் மூலம் தரிசிக்கும் பக்தர்களுக்கு நேரம் குறிப்பிட்டு டோக்கன் வழங்கும் முறையை சோதனை அடிப்படையில் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இது குறித்து திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில் இணை செயல் அலுவலர் சீனிவாசராஜூ அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். 

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் அளித்த பேட்டியில், 
இலவச தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் குறைந்த நேரத்தில் சுவாமி தரிசனம் செய்யும் விதமாக நேரம் ஒதுக்கீடு செய்யும் திட்டம் (டோக்கன் சிஸ்டம்) அறிமுகப்படுத்தப்பட உள்ளது. 

இதற்காக திருமலையில் 21 இடங்களில் 150 கவுண்டர்கள் அமைத்து பக்தர்களுக்கு இலவச தரிசனத்திற்கான டோக்கன்கள் வழங்கப்படும். இந்த புதிய திட்டம் வரும் 2018 பிப்ரவரி முதல் நிரந்தரமாக நடைமுறைக்குக் கொண்டு வரப்படும்.

இந்த நடைமுறை டிசம்பர் இரண்டாம் வாரத்தில் சோதனை முறையில் செயல்படுத்தப்படும் என்றும், இதற்கான ஆயத்தப் பணிகள் டிசம்பர் 5ம் தேதிக்குள் செய்து முடிக்கப்படும் என்றும் கூறினார்.

இதன் மூலம், பொது தரிசனத்தில் ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள், பல மணி நேரம் வரிசையில் நிற்பது தவிர்க்கப்படும், மிகக் குறைந்த நேரத்தில் பக்தர்கள் சுவாமியை தரிசிக்கலாம் என்றார்.

21 இடங்களில் அமைக்கப்படும் 150 டோக்கன் வழங்கும் மையங்களும் அனைத்து வசதிகளுடன் கூடியதாக இருக்கும் வகையில் அமைக்கவும், எந்த தாமதமும் இன்றி டோக்கன்கள் உடனுக்குடன் வழங்கப்பட வகை செய்யவும் சீனிவாசராஜூ உத்தரவிட்டுள்ளார்.

திருமலைக்கு வரும் பக்தர்களின் தங்கும் அறை போன்ற வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க கால் சென்டர் வசதி இன்னும் ஓரிரு நாட்களில் செயல்படும்.  மேலும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருப்பதிக்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்களுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com