பஞ்சபூதத்தலங்கள் (மினி தொடர்) - 1. திருவானைக்கா

அகவழிபாடு புறவழிபாடு ஆகிய இரண்டு வழிபாட்டு முறைகளுக்கு பஞ்சாட்சர மந்திரம் துணை செய்கிறது.
பஞ்சபூதத்தலங்கள் (மினி தொடர்) - 1. திருவானைக்கா

அகவழிபாடு புறவழிபாடு ஆகிய இரண்டு வழிபாட்டு முறைகளுக்கு பஞ்சாட்சர மந்திரம் துணை செய்கிறது. 

நமசிவாய என்பது பஞ்சாட்சர மந்திரமானது வலது நாசித் துவாரத்தை சிவனாகவும், இடது நாசித்துவாரத்தை சக்தி என்றும் யோக சாஸ்திரம் உரைக்கிறது.

புலன்களுக்குப் புலப்படாத பரம் பொருளை நாம் குருவின் மூலமாகவும் மூர்த்திகள் மூலமாகவும் மனத்தில் உருவாக்கிக் கொண்ட பல வடிவங்கள் மூலமாகவும் தியானங்களையும் வழிபாடுகளையும் செய்து தொடர்கிறோம்.

நாம் ஆலயங்களிலுள்ள மூர்த்திகள் லிங்கங்கள் எல்லாம் பக்தியினாலும் மந்திர சக்தியினாலும் பரம் பொருளின் வடிவமாக நமக்கு அருட்காட்சி அளிக்கின்றன. உருவமாகவும் அருவருவமாகவும் படிப்படியே தியானம் செய்த பிறகு 'சிவோகம்' (நானே சிவம்) என்ற பேத மற்ற ஞானம் நமக்கு உணர்த்துகின்றன.

பஞ்சாட்சரத்தில் 'நம' என்பதைச் சீராக உள்ளிழுத்து 'ஒம்' என்று சிறிது நேரம் நிறுத்தி, 'சிவ' என்று சொல்லி வெளியிடும்போது 'ய' என்ற அட்சரம் மந்திரத்தின் உயிராக அமைந்து இந்த சுவாசத்தைப் பூர்த்தி செய்கிறது பஞ்சாட்சர மந்திர வடிவம்.

சிவலிங்க ஸ்வரூபங்கள் 'சிவ-சக்தி' ஐக்கிய ரூபமாக விளங்குவதால் ஆனந்தமயமானவரும், மங்களத்தை அளிப்பவருமான சிவனைத் துதிப்பவர்களுக்கு சக்தியும் எளிதில் வந்து சேர்கிறது. சிவன் பஞ்சபூதத் தத்துவங்களைத் தன்னுள் அடக்கி இருக்கிறான்.

பஞ்சபூதத்தலங்கள்

1. அப்பு- திருவானைக்கா.

2. தேயு- திருவண்ணாமலை.

3. வாயு- காளஹஸ்தி.

4. ப்ருத்வி- காஞ்சிபுரம்.

5. ஆகாயம்- சிதம்பரம் 

இத்திருத்தலங்களில் இருக்கும் லிங்க மூர்த்திகளை மனமுருக தொழுது இறைவனின் அருளை பக்தர்கள் பெறுகின்றார்கள்.

"சிவாயநம" மந்திரம் ஜெபிக்க, அபயத்தைத் தருவான் பிரபஞ்சத்தான். பஞ்சபூதத் தலங்களிள் அப்புஸ்தலம் முதலாவது.

1. திருவானைக்கா

மூலஸ்தான லிங்கம் இருக்குமிடம் தரைபட்டத்திற்குக் கீழே இருப்பதால் எப்போதும் தண்ணீர் கசிவு இருந்துகொண்டே இருக்கும்.

திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் அலயம் ஒரு மிகப்பெரிய கோவில். சுமார் பதினெட்டு ஏக்கர் நிலப்பரப்பில் நீண்ட உயரமான மதில்களும் நான்கு திசைகளிலும் கோபுரங்களும் ஐந்து பிரகாரங்களும் உடையது.

மூலவர் ஜம்புகேஸ்வரர் ஐந்தாம் உள் பிரகாரத்தில் அப்புலிங்கமாக காட்சி தருகிறார். நான்காம் பிரகாரத்தில் அம்பாள் அகிலாண்டேஸ்வரி தனி சந்நிதி கொண்டு அருட்ப்பார்வை வழங்கிக் கொண்டிருக்கிறாள்.

திருவானைக்கா அன்னை அகிலாண்டேஸ்வரியின் ஆட்சித்தலம் இது. அகிலாண்டேஸ்வரி அம்மையின் காதுகளில் இருக்கும் காதணிகள் பெரிதாக நம் பார்வைக்கு மிக நன்றாக பளிச்சென்று தெரியுமாறு அணிந்திருக்கிறாள். இந்தக் காதணிகளை "தாடகங்கள்'” என்று எல்லோரும் அழைப்பார்கள்.

அம்பாள் முன்னொரு காலத்தில் மிக உக்கிரமான உருவத்துடன் கொடூரமாக இருந்ததாகவும் பக்தர்கள் வழிபாடு செய்ய மிகவும் அச்சமுற்றபடி இருந்திருக்கிறார்கள். அப்போது, ஸ்ரீ ஆதிசங்கரர் ஸ்ரீசக்ர ரூபமான இக்காதணிகளைப் பிரதிஷ்டை செய்து அம்பாளுக்கு அணிவித்து அம்பாளின் உக்கிரத்தைத் தணித்தார் என்று தல வரலாறு உரைக்கிறது.

அன்னையின் உக்ரத்தை தணிப்பதற்காக முன்புறம் விநாயகரையும், பின்புறம் முருகனையும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. உஷத் காலத்தில் கோபூஜையும், உச்சிக் காலத்தில் சுவாமிக்கு தினமும் அன்னாபிஷேகமும் நடைபெறுகிறது.

உச்சிக்கால பூஜையின் போது சிவாச்சாரியார் அன்னை அகிலாண்டேஸ்வரி போல பெண் வேடமிட்டு கிரீடம் அணிந்து கொண்டு மேள வாத்தியங்களோடு யானை முன்னே செல்ல சுவாமி சந்நிதிக்கு வந்து சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகளைச் செய்வது இன்றும் இத்தலத்தின் தனிச் சிறப்பாகும்.

மேலும் இத்தலத்தின் நான்காவது திருச்சுற்று மதிலை இறைவனே நேரில் ஒரு சித்தரைப் போல் வந்து மதில் சுவர் எழுப்பிய பணியாளர்களுக்கு திருநீறை கூலியாகக் கொடுத்ததாக தலவரலாறு உரைக்கிறது.

பணியாளர்களின் உழைப்புக்கேற்ப திருநீறு தங்கமாக மாறியதாகவும் தலவரலாறு வெளிபடுத்த உரைக்கிறது. இதனால் இம்மதிலை "திருநீற்றான் மதில்" என்று அழைக்கும்படியானது.

தல வரலாறு

புராண காலத்தில் இத்தலம் வெண் நாவல் மரங்கள் நிறைந்த காடாக இருந்து வந்திருக்கிறது. அப்படி இங்கு ஒரு வெண் நாவல் மரத்தடியில் ஒரு சிவலிங்கம் இருந்தது. அந்தசமயத்தில், சிவகணங்களில் இருவர் தாங்கள் பெற்ற சாபம் காரணமாக இக்காட்டில் ஒரு யானையாகவும், மற்றொருவர் சிலந்தியாகவும் பிறந்தனர்.

சிவலிங்கம் கூரையில்லாமல் வெய்யிலில் காய்ந்ததும்,, மழையில் நனைந்தும் கிடந்தது. இதைக் கண்ட சிலந்தி சிவலிங்கத்தின் மேல் வலை பின்னி வெய்யில், மழை மற்றும் மரத்தின் சருகுகள் லிங்கத்தின் மேல் விழாமல் காத்து வந்தது.

யானையும் காவிரியில் இருந்து தன் துதிக்கை மூலம் நீரினை உறிஞ்சி வந்து அபிஷேகித்து, மேலும் புஷ்பங்களை ஆய்ந்து கொண்டு வந்து சார்த்தி வழிபட்டது.

சிலந்தி பின்னிய வலையைக் கண்ட யானை, சுவாமிக்கு இது அசிங்கம் என்று கருதி சிலந்தி பின்னிய வலைப்பந்தலை அழித்துவிட்டுச் சென்றது. சிலந்தி மறுபடியும் வலையைப் பின்ன, யானை மறுபடியும் வலையை அழிக்க, இது தொடர்ந்தது. கோபங்கொண்டு சிலந்தி ஒரு நாள், யானையின் துதிக்கையில் புக, யானையும் வலியில் புரள, துதிக்கையின் அழுத்தத்தினால் சிலந்தியும் போராட கடைசியில் இரண்டும் மடிந்து போயின.

இவைகளின் சிவபக்திக்கு மெச்சி சிவபெருமான் யானையைத் தன் சிவகணங்களுக்குத் தலைவனாக ஆக்கினார். சிலந்திக்கு மறு பிறவி கொடுத்து, கோச்செங்கட் சோழன் என்ற அரசனாகும் பிறப்பு நிலையைத் தந்தார்.

பூர்வஜென்ம வாசனையால், கோச்செங்கட் சோழன் யானை ஏற முடியாதபடி குறுகலான படிகளை உருவாக்கி கட்டுமலை மீது சிவலிங்கம் ஸ்தாபித்து சுமார் எழுபது கோவில்கள் வரை கட்டினான். அப்படி கட்டிய கோவில்களில் இதுவும் ஒன்று. அவன் கட்டிய கோவில் யாவும் மாடக்கோவில் என்று அழைக்கப்பெற்றன.

கோச்செங்கட் சோழன் கட்டிய முதல் மாடக்கோவில் திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் ஆலயமாகும். இந்த தல வரலாற்றை திருநாவுக்கரசர் தனது திருக்குறுக்கை பதிகத்தில் நான்காம் திருமுறையில் "ஆதியில் பிரமனார் தாம்" என்று தொடங்கும் பதிகத்தில் நான்காவது பாடலில் தெரிவிக்கிறார்.

"சிலந்தியும் ஆனைக்காவில் திருநிழல் பந்தர் செய்து உலந்து அவண் இறந்த போதே கோச்செங்கணானும் ஆகக் கலந்த நீர்க் காவிரீ சூழ் சோணாட்டுச் சோழர் தங்கள் குலந்தனில் பிறப்பித்திட்டார் குறுக்கைவீ ரட்டனாரே"

திருவானைக்காவிலுள்ள பெருமானுக்கு அழகிய நிழலைத்தரும் பந்தலை அமைத்த சிலந்தி இறந்தபின் மறுபிறப்பில், சுவாமியுடன் கலந்து பயின்ற நீரை உடைய காவிரியாற் சூழப்பட்ட சோழ நாட்டில் அந்நாட்டு மன்னர் மரபிலே கோச்செங்கண்ணான் என்ற பெயருடைய அரசனாகுமாறு பிறப்பித்து விட்டார் குறுக்கை வீரட்டனார்.

அம்பிகை வழிப்பட்ட லிங்கம்

இங்கு இருக்கும் ஜம்பு லிங்கம் அன்னையால் ஏற்படுத்தியது. ஒரு முறை பூமிக்கு வந்த அம்பிகை, சிவனை வழிபட சித்தம் கொண்டார். அழகிய காவேரியில் சிறிது நீர் எடுத்து லிங்கம் வடித்தார். அம்பிகையின் திருக்கரங்களிலிருந்த நீர் லிங்கமாக மாறியது. அம்பிகை அந்த லிங்கத்தை வழிபட்டு ஆனந்தம் அடைந்தார். நீரால் செய்யப்பட்டதால், லிங்கம் ஜம்புகேஸ்வரர் என வழங்கப்படுகிறது.

குபேரலிங்கம்

மற்றொரு சந்நிதியில் குபேர லிங்கம் உள்ளது. மிகப்பெரிய வடிவமாகவும், பலமுக ருத்திராட்சம் தாங்கியும் உள்ளது. இந்த குபேர லிங்கத்தை குபேரன் வழிபட்டதால் தான் சிவன் அருள் பெற்று செல்வந்தன் ஆனார் என்ற வரலாறு எல்லோருக்கும் தெரிந்ததே. இப்போது மக்கள் அதிகம் வழிபாடு செய்யும் இடங்களில் ஒன்றாக குபேர லிங்க சன்னதியும் ஆகிப்போனது.

சிற்பங்கள்

பல அரிய சிற்பங்களும் இத்தலத்தில் காணக் கிடைக்கின்றன. அதில் முக்கியமானது மூன்று கால் முனிவர் சிலை. சிவலிங்க சன்னதிக்கு இடதுபுறம் அமைந்துள்ளது. வெளிப்பிரகாரத்தூண்களில் இந்த சிற்பம் இருப்பதை காணவேண்டியதில்முக்கியம். அது மட்டுமின்றி ஏகநாதர் திருவுருவம் அன்னையின் சன்னதிக்கு வெளியே உள்ள தூணில் காணக் கிடைக்கிறது. ஏகநாதர் என்பது மும்மூர்த்திகளும் சமமானவர் என்றும், எல்லோரும் ஒருவரே என்ற மாபெரும் தத்துவத்தை விளக்கவும் வல்லது.

அது மட்டுமின்றி நான்கு கால் தூணில் உள்ள மங்கைகள் எல்லோர் மனதையும் கவருகின்றார்கள். அவர்களின் கூந்தல் அலங்காரம் பிரம்மிக்க வைப்பதாக உள்ளது. அதிலும் ஒரு சிறு குழந்தையை ஏந்திக்கொண்டு இருக்கும் பெண் மிக தத்ரூபமாக செதுக்கப்பற்றுள்ளதைப் பார்க்கும்போது, நம்மை பிரமிக்க வைக்கிறது.

"யானையும் சிலந்தியும்"

துலையில் புறவின் நிறையளித்த

சோழர் உரிமைச் சோணாட்டில்....

அதாவது புறாவின் எடைக்குத் தன்னையே உரிமையாக்கிய சிபிச் சக்கரவர்த்தி எனும் சோழப்பேரரசர் விளங்கிய சோழ நன்னாட்டின் அலைகள் வாயிலாக முத்துக்களும், அகில்-சந்தன மரங்களும் கொண்டு வந்து கொழிக்கும் நீரையுடைய காவிரி ஆறு, மாணிக்க மணிகளைச் சேர்க்கும் கரைதனில், பெருகி விளங்கும் சந்திர தீர்த்தத்தின் பக்கத்தில் குளிர்ச்சி மேவும் மரங்கள் நிறைந்த சோலையாக இத்தலம் இருந்து வந்தது.

அந்தச் சோலையின் நடுவில் ஒரு வெண்ணாவல் மரம். அதன் கீழ், முன்பு பிரம்மனும் பெருமாளும் அடிமுடி தேடி காணமுடியாத சிவபிரான், அழகிய சிவலிங்கமாகத் தோன்றிக் காட்சி தந்தார்.

பிராணிகளான யானைக்கும் சிலந்திக்கும் எப்படி சிவபக்தியும் ஞானமும் வந்தது?

கயிலாயத்தில் ஈசனுக்குச் சேவை செய்து வந்த மாலியவான், புட்பதந்தன் ஆகிய சிவகணங்கள், தங்களுக்குள் ஏற்பட்ட போட்டியினால் ஒருவரையருவர் சிலந்தியாகவும் யானையாகவும் பிறக்கும்படி, சாபமிட்டுக் கொண்டனராம். அவர்களே, இந்த வனத்தில் சிலந்தியாகவும் யானையாகவும் பிறந்ததாகப் புராணங்கள் காரணத்தைக் கூறுகிறது.

சிலந்தி, சோழர் குலத்தில் சுபதேவன்- பெருந்தேவி கமலவதி எனும் அரச தம்பதிக்குக் குழந்தையாகப் பிறந்தது. அரசி பெருந்தேவி கமலவதி, தன்னுடைய குழந்தை நல்லதொரு நேரத்தில் ஜனிக்கவேண்டும் என விரும்பினாளாம். பிரசவ நேரத்தில் சோதிடர்கள், 'இன்னும் ஒரு நாழிகை கழித்துப் பிறந்தால், குழந்தை அகண்ட மூவுலகையும் ஆட்சி செய்வான்’ என்றனர்.

அப்படியெனில் இப்போது பிறக்காமல் ஒரு நாழிகை கழித்து பிறக்கும்படி, எனது கால்களைக் கட்டி உயரே தூக்குங்கள்’ என்றாள் அரசி. அதன்படியே செய்தனர். ஒரு நாழிகை கழித்து அற்புதமான குழந்தையை இந்த உலகுக்குத் தந்துவிட்டு இறந்துபோனாள் அந்த மாதரசி. அந்தக் குழந்தைதான் கோச்செங்கட் சோழன்.

சிவபக்தனாகப் பிறந்து சிவநேசனாகவே வளர்ந்தவன் கோச்செங்கட் சோழன். அரச பொறுப்பேற்றதும் அரனாருக்கு ஆலயங்கள் பல எழுப்பினான். அதுவும் ஆலயத்தை எப்படி அமைத்தான்? அதுவும் யானைகள் ஏறிவர முடியாதபடி.....

திருவானைக்காவும் விபூதி சித்தரும்

யானை வழிபட்டதால், திருவானைக்கா என்று பெயர். நாவுக்கரசரால் பாடப்பெற்ற தலம். பஞ்சபூதத் தலங்களுள் நீர்த்தலம் இது. பிரமாண்டமான ஆலயத்தில், மூலவர் ஸ்ரீஜம்புகேஸ்வரர் தரை மட்டத்துக்கு கீழே அப்புலிங்கமாக அருள்கிறார்.

இந்தத் தலத்தின் ஐந்தாவது திருச்சுற்று மதிலை திருநீற்றான் மதில் என்பார்கள். ஏன் தெரியுமா? சிவபெருமானே, 'விபூதிச் சித்தர்’ என்ற பெயரில், சித்தபுருஷராக வந்து இந்த மதிலைக் கட்டியதால். இந்த மதில் அமைந்த பிராகாரம் "விபூதிப் பிராகாரம்" எனப்படுகிறது.

இந்தத் தலத்தின் மற்றுமொரு சிறப்பம்சம், இங்கு கோபூஜை சிறப்புற நடைபெறுகிறது. இந்த அம்மையின் அருளால்தான் ஞானம் பெற்றார் கவிகாளமேக புலவர். இந்தத் தலத்துக்கு வந்து அம்பிகைக்குத் தாம்பூலம் சமர்ப்பித்து வழிபட, கல்வி-ஞானம் கைகூடுமாம்.

அப்புலிங்கம்

இறைவன் அமுதமான நீரினாலே உருவாக அமைந்ததால் அப்புலிங்கம் என்னும் பெயருடன் வணங்கப்பட்டு வந்தார். திருமுழுக்காட்டவோ, ஏனைய அலங்காரங்களைச் செய்து வணங்கவோ, நீர் உருவத்தில் உள்ள திருவுரு உலகத்தார் வழிபட வசதிக்குறைவாக இருந்ததால் அழகியதொரு சிவலிங்கம் அமைக்கப்பட்டது. அதுவே நாம் வணங்கும் ஜம்புலிங்கம், கருவறையில் இடைவிடாது ஊற்றெடுத்து வரும் புனிதப் புனலான நீர்.

பராசரன் அருள்

இந்திர சபையில் ஒருநாள் விசுவாமித்திரனுக்கும், வசிட்டனுக்கும் இடையே நடந்த விவாதத்தில் விசுவாமித்திரர் தோற்றுப்போனார். விசுவாமித்திரர் கோபமடைந்து வசிட்டரைக் கொல்லுவதற்காக வேள்வித் தீ ஒன்றை வளர்த்தார். அதிலிருந்து ஒரு பூதத்தை தோற்றுவித்து வசிட்டரைக் கொன்று வருமாறு அனுப்பினார்.

பர்ணசாலையில் வசிட்டரின் சாயலில் இருந்த அவனது மகனான சத்தி முனிவனைக் கொன்றுவிட்டது அப்பூதம். வெளியில் சென்று திரும்பிய வசிட்டர் தன் மகன் இறந்திருப்பதைக் கண்டு அலறினார். வசிட்டரைத் தேற்றுவதற்காக நான்முகன் தோன்றினான்.

இறந்தவனின் மனைவி கருவுற்றிருக்கும் செய்தியைக் கூறி அச்சிசுவால் உன் குலம் உலகெலாம் ஒளிவீசப் போகிறது என்று கூறினான். வசிட்டர் தனது மருமகள் வயிற்றில் இருக்கும் சிசுவின் செவிப்பட இடைவிடாது வேத மந்திரங்களை உச்சரித்து வந்தார்.

தாயின் கருவில் இருந்தே தத்துவஞானம் முழுவதையும் பெற்ற அவ்வுயிர் பராசரன் என்னும் பெயர் கொண்ட ஆண் மகவாகத் தோன்றியது. வசிட்டர், பராசரன் வாலிபனானதும் நடந்த சோகக் கதையைக் கூறினான். அநியாயமாகத் தன் தந்தை கொல்லப்பட்டதை எண்ணி அவன் மனம் துடித்தது. தாயின் விதவைக் கோலம் நீங்க அகில புவனத்திலுள்ள அத்துனை அரக்க பூதங்களையும் அழிக்க நினைத்தான். அறிஞர்களின் ஆலோசனைப்படி ஆணைக்காவைச் சேர்ந்து ஆகம முறைப்படி ஆனைக்கா அண்ணலை வழிபட்டான். அவன் வழிபாட்டைக் கண்டு மகிழ்ந்த சிவபெருமான் அவனுக்குத் திருவருள் வழங்கினார்.

சிவபெருமானின் அருள்பெற்று பராசரன், ஆன்மா சாந்தியடையாது பேய் உருவில் அலைந்துக் கொண்டிருந்த தனது தந்தைக்கு மானுடயாக்கை பெற, திருக்கோயிலின் வடகிழக்கு மூலையில் வேள்விச் சாலை அமைத்து மாபெரும் வேள்வி ஒன்றை நடத்தி அத்தீயினில் அரக்க பூதங்கள் அனைத்தும் விட்டில் பூச்சிகளைப் போல் விழுந்து இறக்குமாறு செய்தான்.

கரியமாலீஸ்வரர்

இராவணனும் கும்பகர்ணமும் பிரம்ம குல மரபில் வந்தவர்கள். இலங்கையில் நடந்த போரில் அவ்விருவரையும் கொன்று சீதையை மீட்டுத்திரும்பிய இராமனைப் பிராமனோத்தமர்களாகிய அவ்விருவரையும் கொன்ற பாவம் "பிரமகத்தீ" என்னும் பெயரில் நிழலுறுவில் தொடரலாயிற்று.

இராமன் தன்னைத் தொடரும் இருபெரும் பேயுருவங்களால் மன அமைதி குலைந்து வருந்தினான். இராமேஸ்வரத்தில் சிவ வழிபாடு செய்தான். இராவண வதத்தால் ஏற்பட்ட பாவம் நீங்கியது. ஆயினும் கும்பக்கர்ணன் ஆவி தொடர்ந்தது. இதனால் அயோத்தி செல்லும் பயணம் தடைப்பட்டது. பொன்னியாற்றங்கரையில் தவம்புரியும் முனிவர்களிடத்தில் சென்று பிரமகத்தீ நீங்க வழி கேட்டான். முனிவர்கள் ஞான பூமியாகிய நாவற்காலில் (திருவானைக்கா) சிவலிங்கம் அமைத்துச் சிவவழிபாடு செய்யத் தூண்டினர்.

இராமனும், சம்புநாதரின் திருக்கோயிலின் மேற்குப் புறத்தில் குளம் வெட்டி அதன் தரையில் கோயில் எடுத்தான். அங்கதனைக் கொண்டு அக்கோயிலின் சிவலிங்கம் அமைத்து முறைப்படி சிவவழிபாடு செய்து தன் பிரமகத்தி பாவம் நீங்கப் பெற்றார். அத்திருக்கோயிலே கரியமாலீஸ்வரர் (நீலகிரிஸ்வரர்) என விளங்குகின்றார்.

அகம்பாவம் அழிய திருவானைக்காவலில் ஒரு சிவாச்சாரியார் பரம்பரை இருந்தது. சிறந்த புலமை பெற்றும் அரசனும், அடியார்களும் அள்ளிக் கொடுத்த பொருட்செல்வத்தாலும் குபேரர்களாகவும் இருந்தனர். இத்தகைய சிறப்புகள் பெற்றிருந்ததால் அவர்களுக்கும் ஆணவம் எழுந்தது. சிவாச்சாரியர்கள் உறவினர் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு பரிசல் மூலம் தான் சென்று வந்தனர்.

ஒரு நாள் அந்தணர் ஒருவரின் வீட்டு நிகழ்ச்சிற்குச் செல்வதற்காக சிறு பையன் ஒருவனை மட்டும் விட்டுவிட்டு மற்ற அனைவரும் புறப்பட்டனர். பரிசிலில் செல்லும்போது வெள்ளம் ஏற்பட்டு பரிசில் கவிழ்ந்தது. ஆண், பெண் எல்லோரையும் அப்பயங்கர வெள்ளம் விழுங்கியது.

அப்பெருங்குலம் அடியோடு அழிவதை விரும்பாத இறைவன் அசரீரியாய் ஆணையிட அதன்படி அழிவதைத் தேடி சென்ற அந்தணர்கள் விட்டுச்சென்ற ஒரே சிறுவனை அர்ச்சகராக்கி அண்மையில் உள்ள திருப்பறியலூர் சிவாச்சாரியார்களை அழைத்து குடியமர்த்தி ஒழுங்கு செய்தார். அந்தப் பயங்கர நிகழ்ச்சியின் மூலமாக ஆணவம், அகம்பாவம், திமிர் இவற்றின் முடிவு இதுதான் என்பதை உலகிற்கு உணர்த்தவே இறைவன் இவ்வாறு செய்தார்.

தல அருமை

உறையூர்ச்சோழர் மணியாரம் தரித்துக்கொண்டு காவிரியில் நீராடினார். மூழ்கி குளித்து எழும்போது, மணியாரம் கழுத்திலிருந்து நீங்கி, ஆற்றுக்குள் விழுந்துவிட்டது. உடனே அவர் சிவபெருமானே அடியேனின் மணியாரம் கொண்டருளும் என வேண்டினார்.

உடனே, அந்த மணியாரம் திருமஞ்சனக்குடத்தில் புக, அதனை இறைவருக்கு அபிடேகிக்கும் போது அவர் அதனை ஆரமாக ஏற்றுக்கொண்டு சோழனுக்கு அருள் புரிந்ததும் இப்பதியேயாகும். இச்செய்தியை, சுந்தரமூர்த்தி நாயனார் இவ்வூர்ப்பதிகத்தில்......

தாரமாகிய பொன்னித் தண்டுறையாடி விழுத்து

நீரினின்றடி போற்றி நின்மலாக் கொள்ளென வாங்கே

ஆரங்கொண்ட வெம்மானைக் காவுடையாதியைநாளும்

எனவும்......

திருஞானசம்பந்தப்பெருமானும்.....

"ஆரம் நீரோ டேந்தினா னானைக்காவு சேர்மினே"

எனவும்.....

சேக்கிழார்பெருமானார் ஏயர்கோன் கலிக்காமநாயனார் புராணத்தில்....

"வளவர் பெருமான் திருவாரஞ் சாத்திக் கொண்டு வரும் பொன்னிக்

கிளருந் திரைநீர் மூழ்குதலும் வழுவிப் போகக் கேதமுற

அளவில் திருமஞ் சனக்குடத்தி லதுபுக்காட்ட வணிந்தருளி

தளரு மவனுக் கருள்புரிந்த தன்மை சிறக்கச் சாற்றினார்"

என்றும், போற்றியுள்ளார்.

திருநாவுக்கரசர் தேவாரம் – பாடியவர் பாலச்சந்திரன்

- கோவை கருப்பசாமி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com