பகைவர்களை வெல்ல பைரவ வழிபாடு செய்யுங்கள்! இதுவும் ஒரு யுக்தி தான்!!

சிவபெருமானின் திருக்கோல வடிவங்களில் பைரவர் திருக்கோல வடிவமும் ஒன்றாகும்
பைரவர்
பைரவர்

சிவபெருமானின் திருக்கோல வடிவங்களில் பைரவர் திருக்கோல வடிவமும் ஒன்றாகும். ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் அஷ்டமி திதி அன்று  பைரவ வழிபாடு செய்ய உகந்த காலமாகும். பெரும்பாலும் அனைத்து சிவன் கோவில்களிலும் வடகிழக்குப் பகுதியில் தனிச்சன்னிதியில் பைரவர் எழுந்தருளியிருப்பார். 

சிவாலயங்களில் முதல் வழிபாடு விநாயகருக்கு என்றால் இறுதி வழிபாடு பைரவருக்கு. ஒருவகையில் ஆலயத்தின் காவல் தெய்வமாகக் கருதப்படும் பைரவர் சிவனுடைய அம்சமான பைரவர், எட்டு மற்றும் அறுபத்து நான்கு என்ற வகையில் அருள்புரிகிறார். அஷ்டமி தினத்தன்று அஷ்ட லட்சுமிகளும் பைரவரை வழிபடுவதாகவும், அதனால் அன்றைய தினம் பைரவரை வணங்குவோர் சகலவித வளங்களையும் பெறுவதாக நம்பப்படுகிறது.

பைரவரை வழிபட்டால் நிச்சயம் உடனே கைமேல் பலன்கள் கிடைக்கும். காலம், காலமாக உள்ள இந்த உண்மையை சமீப காலமாகத்தான் மக்கள் முழுமையாக உணர்ந்து கொள்ளத் தொடங்கியுள்ளனர். பைரவர் என்றால் பக்தர்களின் பயத்தை நீக்குபவர் என்று பொருள். எல்லா கிரகங்களையும், நட்சத்திரங்களையும் கட்டுப்படுத்துபவர் இவர்தான்.

பைரவர் என்ற உடனேயே எல்லோருக்கும் முதலில் காசிதான் நினைவிற்கு வருகிறது இல்லையா? காசி என்னும் புண்ணிய நகரத்தைக் காக்கும் காவல் தெய்வம்  காலபைரவர். காசியில், காலபைரவருக்கு வழிபாடுகள் முடிந்த பிறகே காசி விஸ்வநாதருக்கு வழிபாடுகள் நடைபெறும் காசியாத்திரை செல்பவர்கள் கூட இறுதியில் காலபைரவரை தரிசித்தால்தான் காசி யாத்திரை பூரணம் அடைவதோடு யாத்திரையின் பலமும் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. 

பைரவர் தோன்றிய வரலாறு

சிவனின் ஆதி அந்தம் காண முடியாத பிரம்மா, தோல்வியை ஒப்புக்கொள்ள மனமின்றி திருமுடியைக் கண்டதாகப் பொய்யுரைத்து திருமுடியில் இருந்து வீழ்ந்ததாகத் தாழம்பூவையும் பொய்யுரைக்க வைத்தார். குறிப்பாகப் பிரம்மனின் ஐந்தாம் தலை இப்பொய்யைத் திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டே இருக்க சினம் கொண்ட சிவனார், தனது புருவ மத்தியிலிருந்து பைரவ மூர்த்தத்தை உண்டு செய்தார். "பைரவனே! பொய்யுரைத்த பிரம்மனின் தலைகளை அறுத்தெறி" என உத்தரவிட, உச்சந்தலையை அறுத்தெறிந்த பைரவர், பின் மற்ற தலைகளையும் அறுக்க முற்பட அங்குத் தோன்றிய திருமால், "முன்னர் பிரம்மன் செய்த தவத்தில் மகிழ்ந்து அவனுக்கு ஐந்து முகங்கள்   அருளினார். இப்போது அவனை நீரே நான்முகனாக்கிவிட்டீர், எனவே அவனை மன்னியுங்கள்!" என்றார். இதையடுத்து பிரம்மாவும் மன்னிப்புக் கேட்டார்.

ஈசன் சினம் தணிந்து, "வேதம் ஓதுபவருக்கு இனி நீரே அரசன், அனைத்து வேள்விகளுக்கும் நீயே குரு, யாக யக்ஞங்களின் பலனை அனைவருக்கும் நீ வழங்கு" என   அருளினார். பைரவரையும், வீரபத்திரரையும் சிவனின் மூர்த்தி பேதங்களாக நூல்கள் கூறுகின்றன. 

திதிகளில் அஷ்டமி நாளின் கடவுள் மஹாருத்ரன் ஆவார். ஆயுதம் எடுத்தல், அரண் அமைத்தல், போர் மற்றும் தற்காப்பு கலை கற்றல் ஆகியவை செய்ய உகந்ததாகப் போற்றப்படுகின்றது. அஷ்டமி திதியில் தான் பராசக்தியான அம்பாள் ஆயுதம் தரித்த நாளாகும். இந்த நாளில் பரிகார பூஜைகள் செய்வது சிறப்பாகும்.

காலபைரவரின் திருஉருவத்தில் பன்னிரண்டு ராசிகளும் அடங்கியுள்ளன. சிரசில் மேஷ ராசியும், திருவாய் பகுதியில் ரிஷப  ராசியும், ஹஸ்தங்களில் மிதுன ராசியும், திரு  மார்பினில் கடக ராசியும், உந்திப் பகுதியில் சிம்ம ராசியும், இடையினில் சிம்ம ராசியும், புட்டப் பகுதியில் துலா ராசியும், லிங்கப் பகுதியில் மகர ராசியும், தொடைப்  பகுதியில் தனுசு ராசியும், முழந்தாள்களில் மகர ராசியும், காலின் கீழ்ப் பகுதிகளில் கும்ப ராசியும், காலின் அடிப்பகுதிகளில் மீனா ராசியும் அமைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. 

பைரவரை எந்த ராசிக்காரர்கள் எந்த நாளில் வழிப்பட்டால் யோகம்?

பைரவ வழிபாட்டை முதன் முதலில் தொடங்குபவர்கள் தை மாதம் முதல் செவ்வாய்க்கிழமை தொடங்க வேண்டும். தொடர்ந்து ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் விரதமிருந்து பைரவரை வணங்கி, கால பைரவ அஷ்டக துதி பாடினால் பகைவர்களின் தொல்லை அகலும். கடன்சுமை தீரும். எமபயம் நீங்கும்.

ஞாயிற்றுக்கிழமை ராகுகாலத்தில் பைரவருக்கு விரதமிருந்து அர்ச்சனை, ருத்திராபிஷேகம், வடைமாலை சாத்தி வழிபட்டால் திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணப்  பேறு கிடைக்கும். கடன் சுமை உள்ளவர்கள், ராகுகாலத்தில் காலபைரவருக்கு முந்திரிப்பருப்பு மாலைகட்டி, புனுகு சாற்றி, வெண்பொங்கல் நிவேதனம் செய்தால் நலம்  பெறலாம்.

சிம்ம ராசிக்காரர்கள் திங்கட்கிழமையில் வரும் அஷ்டமியில் விரதமிருந்து வழிபடுவது சிறப்பானது. மேலும், சங்கடஹரசதுர்த்தியன்று விரதமிருந்து பைரவருக்கு பன்னீர்  அபிஷேகம் செய்து, சந்தனக் காப்பிட்டு, புனுகு பூசி, நந்தியாவட்டை மலர் சாற்றி வழிபட கண்நோய் அகலும்.

கடக ராசிக்காரர்கள் எதிர்பாராத விதமாக இழந்துவிட்ட பொருளைத் திரும்பப் பெற, செவ்வாய்க்கிழமை மாலையில் பைரவர் ஆலயத்தில் மிளகு தீபம் ஏற்றி வழிபட்டால்  பலன் கிடைக்கும். மேஷம், விருச்சிக ராசிக்காரர்களும் விரதமிருந்து வழிபாட்டுக்குரிய நாள் இது.

எல்லா அஷ்டமி திதிகளிலும் பைரவர் விரதம் இருக்கலாம். செவ்வாய்க் கிழமைகளில் அஷ்டமி திதி வந்தால் அது மேலும் சிறப்பானது. குறைந்தது 21 அஷ்டமிகள்  தொடர்ந்து விரதம் இருக்க வேண்டும். ஆறு தேய்பிறை அஷ்டமிகளில் பைரவரை சிவப்பு நிற அரளி மலர்களால் வழிபட்டால், நல்ல மக்களைப் பெறலாம். புதன்கிழமை நெய்  தீபம் ஏற்றி வழிபட வீடு, மனை வாங்கும் யோகம் கிடைக்கும்.

மிதுனம், கன்னி ராசிக்காரர்கள் விரதமிருந்து வழிபட வேண்டிய நாள் வியாழக்கிழமை. அன்றைய தினம் பைரவருக்கு விளக்கேற்றி வந்தால் ஏவல், பில்லி, சூனியம் நீங்கி  நலம் கிடைக்கும்.

தனுசு, மீன ராசிக்காரர்கள் வெள்ளிக்கிழமையில் விரதமிருப்பது சிறந்ததாகும். மாலையில் பைரவ மூர்த்திக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்ய நீங்காத செல்வம்  வந்து நிறையும்.

ரிஷபம், துலாம் ராசிக்காரர்கள் விரதமிருந்து வழிபட ஏற்ற நாள் சனிக்கிழமையாகும். சனி பகவானுக்கு குரு, பைரவர். ஆகவே சனிக்கிழமையன்று விரதமிருந்து இவரை  வழிபடுவதால் சனி தோஷம் விலகி நன்மை கிடைக்கும்.

மகரம், கும்ப ராசிக்காரர்கள் தினமும் சாதாரண விளக்குப் போட்டு வழிபடலாம். 64 பைரவ மூர்த்தங்களில் யாருக்கு வேண்டுமானாலும் விளக்கேற்றி வழிபடலாம். 

அஷ்டமியும் பைரவ வழிபாடும்

பைரவ வழிபாட்டிற்கு வளர்பிறை மற்றும் தேய்பிறை அஷ்டமி மட்டுமல்லாது தேய்பிறை சஷ்டி, மாத பரணி நட்சத்திரம் மற்றும் ஞாயிறு மாலை 4.30 மணி முதல் 6.00  மணி வரை மிகவும் ஆற்றல் அளிக்கும் நாட்களாகும்.

பைரவருக்குண்டான பொது காயத்ரி

சுவாநத் வஜாய வித்மஹே

சூலஹஸ்தாய தீமஹி

தந்தோ பைரவ பிரசோதயாத்

பைரவரின் காயத்ரியை அஷ்டமி தினத்தில் சொல்லி வரலாம். அருகில் இருக்கும் ஆலயத்துக்குச் சென்று பைரவரை வழிபடலாம். 

நவக்கிரக தோஷங்கள் நீங்க.. 
சதுர்கால பைரவருக்கு செவ்வரளி பூவால் 9 வாரங்கள் சகஸ்ரநாமா அர்ச்சனை செய்ய வேண்டும். 

வறுமை நீங்க..
வளர்பிறை அஷ்டமிகளில் மாலை நேரத்தில் வில்வம் மற்றும் வாசனை மலர்களால் அஷ்டோத்திரமோ, சகஸ்ரநாமமோ அர்ச்சனை செய்து 11 பைரவ தீபங்கள் ஏற்ற  வேண்டும். அஷ்டமிகளில் தொடர்ந்து வழிபடவேண்டும்.

இழந்த சொத்தைத் திரும்பப்பெற..
11 அஷ்டமிகள் பைரவ தீபங்கள் ஏற்ற வேண்டும். மிளகைச் சிறு மூட்டையாகக்கட்டி நெய் அல்லது நல்லெண்ணெய் இட்டு தீபம் ஏற்றுவது பைரவ தீபமாகும். 

சனி தோஷம் நீங்க.. 
பைரவருக்கு 9 சனிக்கிழமைகள் சிவப்பு நிறப் பூக்களால் அர்ச்சனை செய்து 4 பைரவ தீபங்கள் ஏற்ற வேண்டும். திருமணத்தடை நீங்க ஞாயிறு இராகு காலத்தில் திருநீறு  அபிஷேகம் செய்து மிளகு வடை மாலை சாத்தி அர்ச்சனை செய்ய வேண்டும்.

பகைவரை வெல்ல..
9 முறை பைரவருக்கு அர்ச்சனை செய்து வசதிக்கு ஏற்ப நிவேதனங்கள் செய்ய வேண்டும். இப்படி 9 அஷ்டமிகளில் செய்தால் வியாபார நஷ்டம் விலகும், எல்லாத்  தொல்லைகளும் அகலும்.

செல்வம் செழிக்க.. 
வளர்பிறை அஷ்டமிகளில் சதுர்கால பைரவருக்கு சொர்ண புஷ்பம் அல்லது 108 காசுகளால் அர்ச்சிக்க வேண்டும். அந்தக்காசுகளை வீட்டில் பணப் பெட்டியில் வைக்கச்  செல்வம் செழிக்கும்.

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ..!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com