சுகமில்லாத குடும்ப வாழ்க்கை அமைவது எதனால்?

சுகம் என்றால், இன்பம் காண்பது, இணக்கமாக இருப்பது, நன்மை தருவது, நல்வாழ்வு வாழ்வது..
சுகமில்லாத குடும்ப வாழ்க்கை அமைவது எதனால்?

(ஜோதிட பார்வையில்)

சுகம் என்றால் என்ன ?

சுகம் என்றால், இன்பம் காண்பது, இணக்கமாக இருப்பது, நன்மை தருவது, நல்வாழ்வு வாழ்வது போன்றவையே ஆகும். சரி, சுகம் பலவகைப்படும். படுக்கை சுகம் (பெண் சுகம், ஆண் சுகம்) , தடங்கல் அற்ற உறக்கம் சுகம், சுவையான உணவு உண்பதால் வரும் சுகம், நல்ல நண்பர்கள் அமைவது சுகம் போன்றவைகளே. அதே போல் இணக்கமாக இருப்பது என்றால், தொழிலாளிக்கு முதலாளி இணக்கமாக இருப்பது  அதேபோல் முதலாளிக்கு தொழிலாளி இணைக்கமாக இருப்பது. குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒருவருக்கு ஒருவர் இணக்கமாக இருப்பது. 

எடுத்த காரியம் யாவிலும் நன்மையே தருவது மற்றும் பெறுவது. அனைத்திற்கும் மேலாக நல்வாழ்வு வாழ்வதும் சுகமே. வண்டி, வாகனம், செல்வாக்கு, அந்தஸ்து ஆகியவை அற்புதமாக அமைந்தாலும் சுகமே. ஆம், இப்படிப்பட்ட சுகத்தை சிலர் கனவில் கூட காண முடியாமல் போவதென்பது அதிசயமே. ஆனால் அது அவர்களின் பூர்வ புண்ணிய பலனால் ஏற்பட்ட அவர்தம்  ஜாதக அமைப்பினால் நன்கு அறியவே முடியும் என்பதை கூறும் போது அனைவருக்கும் ஆச்சர்யமாக இருக்கலாம். 

ஜோதிடம் கூறும் சுக அமைப்பும், சுகமற்ற அமைப்பும்

சுக அமைப்பு :-   

ஒருவர் புகழ் பெறுதல், புதையல் கிடைத்தல் போன்ற யோகம், சிறுதூர, வெளிநாட்டு பிரயாணம், பால், பால் பொருட்கள், ஆன்மிக பயணம் உள்ளிட்டவை அடங்கும். பொதுவாக ஒருவரின் ஜாதகத்தில், 4 ஆம் பாவம் மட்டுமே சுகத்தை அடிப்படையாக கொண்டது. 

4ஆம் பாவத்தில் புதன் பலமாக இருந்தால் அவரின் கல்வி மிகச் சிறப்பாக இருக்கும். செவ்வாய், குரு, சுக்கிரன் இருந்தாலும் நல்ல கல்விமான். இந்த கிரகங்கள் அடையும் பலத்திற்கு ஏற்ப உயர் கல்வியைப் பெறுவர். 4ஆம் பாவத்தையும் அதில் சுக்கிரன் இருக்கும் பலத்தையும் பொறுத்து கார், பைக் வாகனம், ஆபரணம் வாங்கும் நிலையை அறியலாம்.

4 ஆம் பாவத்தையும், அதில் செவ்வாய் இருக்கும் பலத்தையும் பொறுத்து, அவர்களின் அசையாத சொத்துகள் நிலை அறியலாம். அதாவது வீடு, நிலம், பண்ணை வீடுகள், தோட்டம் இவற்றை அறியலாம். 4 ஆம் பாவத்தையும் அதில் சந்திரன் இருக்கும் பலத்தையும் பொறுத்து, அவர்களின் தாயின் பாசம், ஆயுள் ஆகியவற்றை அறியலாம்.

4 ஆம் பாவத்தையும் அதில் குருவின் பலத்தை பொறுத்து அவரின் வாழ்க்கையில் பெறும் அனைத்து வசதிகள் சுக போகங்கள், புகழ் பெறும் தகுதியையும் அறியலாம். 4 ஆம் இடத்தை சனி, ராகு, கேதுவால் பார்க்கப்பட்டால் அல்லது சேர்ந்து இருந்தால், ஜாதகரின் தாய்க்கு சுகம் உண்டாகாது. கஷ்டம் தான். 

4 ஆம் இடத்தில் 6, 12க்கு உரியவரால் பார்க்கப்பட்டால், நீச்ச கிரகத்தினால் அல்லது பகை கிரகத்தினால் பார்க்கப்பட்டால், ஜாதகர் அந்நியர் வீட்டில் தான் வசிப்பார். 

சுகமற்ற அமைப்பு:- 

மேஷ லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு, சூரியன் 4ஆம் இடமான சுக ஸ்தானத்தில் இருந்தால், அழகிய மனைவியை அடைவார். ஆனால் மனைவிக்கு எதிராகவே ஜாதகர் நடப்பார். இந்த அமைப்புள்ள ஜாதகர் உயிர் உள்ளவரை கவலையுடன் தான் இருப்பார். சுகம் என்பது இவருக்கு என்ன என்று கேட்கும் அளவுக்கு இருக்கும். ஜென்ம ராசியிலிருக்கும் சந்திரனை தீய கிரகங்கள் பார்க்கவும், செவ்வாய் 7ல் இருக்கவும் பிறந்த ஜாதகரை வேறு ஒருத்தி எடுத்து வளர்ப்பாள்.

எல்லா லக்கினத்தாருக்கும் பொதுவாகவே, சூரியன் 4 ஆம் இடமான சுக ஸ்தானத்தில் இருந்தால், சுகம் குறைவு தான். இந்த லக்கினகாரர்களுக்கு 4ஆம் இடமான சுகஸ்தானத்தில் செவ்வாய், இங்கு இருப்பின் அவர் நீச்சம் பெறுவதால், அடிமை வாழ்க்கை போன்ற துன்பங்கள் ஏற்படலாம். மனச் சஞ்சலங்கள், பயந்து பயந்து வாழவேண்டியது அவசியம், இடிந்து பாழடைந்த அல்லது புகைபிடித்த அல்லது ஒருபகுதி எரிந்து போன வீட்டில் வாசிக்க வேண்டி வரலாம். கல்விக்கு தடங்கல்கள், வாகனங்களால் தொல்லைகள் ஏற்படக்கூடும். இதற்கு ஒரே தீர்வு செவ்வாய் நீச்ச பங்கம் பெற்றிருப்பின், மேலே சொன்ன பலன்களுக்கு எதிரிடையான பலன்கள் ஏற்படும். 

சிம்ம லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு, விருச்சிகம் 4-ம் இடமாவதால், ஜாதகர் கொடிய சுபாவம் கொண்டவராயும், அந்நியர்களிடம் பயமும் உண்டாகும். நித்திரை கெடும். செவ்வாய், இந்த லக்கினகாரர்களுக்கு 4-ம் இடத்தில் இருந்தால், வெளியூரில் வசிப்பார். அந்நியர் வீட்டில் வசிப்பார். வீடு இடிந்து விழுதல், சர்ப பயம் உண்டாகும். சுக்கிரன் இருந்தால், பித்த ரோகம் உடையவர். வயிற்றில் ஆப்பரேஷன் செய்துகொள்ள வேண்டிய அவசியமும் ஏற்படலாம். மனைவியால் சுகம் உண்டாகாது அல்லது இராது. அதனை ஜாதகர் வெளியில் காட்டாமல் மறைத்து விடுவார். கேது இருப்பின், அந்நிய ஸ்த்ரீகளிடம் மோகம் உண்டாகும். ஆயினும், இந்த அமைப்புள்ள ஜாதகருக்கு, சுகம் உண்டாகாது. ஜோதிட ஞானம் ஏற்படும். 

மீன லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு, மிதுனம் 4ஆம் இடமாக வரும். இங்கு 6ஆம் அதிபரான சூரியன் இருந்தால், தனது பிள்ளையின் வருமானத்திலும் சுகத்தை அடைவார். செல்வதை சேர்த்து வைப்பார். அரசாங்கத்தைப் பற்றிய பயம் இருக்கும். அதனால் சுகம் இழக்கும்.  2ஆம் அதிபரான செவ்வாய் இங்கு இருந்தால், வசதிகள் இல்லாத மகிழ்ச்சியற்ற வாழ்க்கை நடத்துவார். அந்நியர் வீட்டில் வாசிக்க நேரிடலாம். வீட்டில் சதா சண்டையும் சச்சரவுமாக இருக்கும். தாய்க்கு சுகம் உண்டாகாது. ஏன் தாரத்திற்கும் சுகம் உண்டாகாது. பூர்வீக சொத்துக்கள் நாசம் அடையும். ராகு இங்கு இருந்தால், மூன்று மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் , கீழ்தரமானப் பெண்களிடம் தொடர்புள்ளவர். பெண்ணால், நீரால், வைசூரியால், விஷத்தால் , நான்கு கண்டங்கள் உண்டாகும் வாய்ப்பு நேரும்.

சாயியைப் பணிவோம் நன்மைகள் யாவும் அடைவோம்.

- ஜோதிட ரத்னா தையூர். சி.வே.லோகநாதன்

தொடர்புக்கு :  98407 17857
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com