சோறு கண்ட இடம் சொர்க்கம்! இதன் உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா?

சோறு கண்ட இடம் சொர்க்கம் என்ற வேடிக்கையாக சொல்வதுண்டு. அதன் உண்மையான
சோறு கண்ட இடம் சொர்க்கம்! இதன் உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா?

சோறு கண்ட இடம் சொர்க்கம் என்ற வேடிக்கையாக சொல்வதுண்டு. அதன் உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா? யாராவது உறவினர் வீட்டிற்கு விருந்துக்குப் போன  இடத்தில் நீண்ட நாட்கள் தங்க நேர்ந்தால் அவரை கேலி செய்வதற்காக இந்த பழமொழியைப் பயன்படுத்துகின்றனர். உண்மையிலேயே சிவன் கோயில்களில் ஐப்பசி பௌர்ணமியன்று பச்சரிசியால் ஆன வெள்ளை அன்னத்தால் அபிஷேகம் நடக்கும். அதைத் தரிசித்தால் சொர்க்கத்தில் வாழும் பாக்கியம் கிடைக்கும் என்பதுதான்.

அன்னம், பரபிரம்மம் என்பர். அதாவது, உணவே தெய்வம் என்பது இதன் பொருள். இதனால் தான், சமையல் செய்யும் போது, கெட்ட எண்ணங்களைத் தவிர்த்து, நல்ல எண்ணங்களுடன் சமைக்க வேண்டும் என்று கூறுவர். சமையலின் போது, மனதில் எந்த மாதிரியான எண்ணங்கள் ஓடுகிறதோ அது, சமைக்கும் உணவிலும் பிரதிபலிக்கும்.  அந்த உணவை சாப்பிடுவோருக்கும் அந்த எண்ணங்களின் தாக்கம் பாயும்.

இப்படி நல்ல எண்ணங்களுடன், மந்திரங்கள் சொல்லி சமைக்கப்படும் உணவைத் தான், கோவில்களில் சுவாமிக்கு படைக்கின்றனர். கோவில் மடப்பள்ளியில் சமைப்பவர் மனதில், எந்தவித வக்ர எண்ணங்களும், சலிப்பும் இன்றி செய்தால் மட்டுமே அதை கடவுள் ஏற்றுக்கொள்வார். இல்லையெனில் கடவுளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்பர். இதற்காகத்தான், அன்னத்தின் சிறப்பை உணர்த்தும் வகையில், சிவாலயங்களில், அன்னாபிஷேகம் எனும் விழாவையே உருவாக்கினர். கோவிகளில் கும்பாபிஷேகம்  செய்யும் முன்பு, சிலைகளை, 'தானிய வாசம்' என்ற பெயரில், தானியங்களில் கிடத்தி வைத்து, அதன் பின்னர் தான் சிலைகளைப் பிரதிஷ்டை செய்வார்கள்.

அமுது படைக்கும் அந்த ஆண்டவனுக்கே அமுது படைக்கும் விழாவாக ஆண்டுதோறும் அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது. ஐப்பசி மாதப் பௌர்ணமியன்று சகல சிவாலயங்களிலும் சாயரட்சையின் போது பரம கருணைக் கடலாம் ஐயன் சிவபெருமானின் அருவுருவமான லிங்கத் திருமேனிக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகின்றது. 

பௌர்ணமியன்று சந்திரன் தனது பதினாறு கலைகளுடன் பூரண சோபையுடன் விளங்குகிறான். அன்று அவனது கலை அமிர்த கலையாகும். அத்தகைய ஐப்பசி பௌர்ணமியன்று, அறுவடையான புது நெல்லைக் கொண்டு அன்னம் படைத்து சிவனுக்கு அபிஷேகம் செய்து பக்தர்களுக்குப் போஜனம் அளிப்பது பெரும் புண்ணியத்தைத்  தர வல்லதாகும்.

எல்லோருக்கும் படியளப்பவன் இறைவன் என்பதால், மக்களுக்கு மட்டுமல்லாது, அனைத்து ஜீவராசிகளுக்கும் இந்த உணவு போய் சேர வேண்டும் என்பதற்காக, நீர் நிலைகளில் இதைக் கரைப்பர். அது, மீன்கள் உள்ளிட்ட ஜீவராசிகளுக்குப் போய் சேரும். அந்த இறை பிரசாதம், அவற்றுக்கு முக்தியைக் கூட தரலாம். பறவைகளுக்கு கிடைக்கும் வகையிலும் அதை வைப்பதுண்டு.

அன்னாபிஷேக நன்னாளில், உணவின் பெருமையை உணர்ந்து, அதை வீணாக்குவதில்லை என்று உறுதியெடுங்கள். நாளை (நவம்பர் 12-ம் தேதி) சகல சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. இதில், அனைவரும் கலந்துகொண்டு சிவபெருமானின் பரிபூரண அருளைப் பெறுங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com