Enable Javscript for better performance
weekly prdiction (november 15 - 21) | இந்த வாரம் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்?- Dinamani

சுடச்சுட

  

  இந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது?

  Published on : 15th November 2019 12:19 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  prediction

  12 ராசிக்காரர்களுக்குமான இந்த வார (நவம்பர் 15 - நவம்பர் 21) பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். 

  மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

  கவலைகள் குறையும். திட்டமிட்டபடி செயலாற்றுவீர்கள். உடன்பிறந்தோர் வகையில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புண்டு. விட்டுக்கொடுத்து நடந்துகொள்ளவும். வீட்டிற்குத் தேவையான பொருள்களை புதிதாக வாங்குவீர்கள்.

  உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவும் சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் ஒருங்கே கிடைக்கும். பணவரவு சீராக இருந்தாலும்  சம்பாதிக்க வேண்டிய காலகட்டமிது. வியாபாரிகள் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வார்கள். சுறுசுறுப்பாக உழைத்து வருமானத்தைப் பெருக்குவீர்கள். 

  விவசாயிகள் புதிய குத்தகை முயற்சிகளில் இறங்க வேண்டாம். பயிர்களுக்கு பூச்சி தாக்குதல் நேராமல் இருக்க முன் முயற்சிகள் மேற்கொள்வீர்கள்.

  அரசியல்வாதிகளுக்கு கட்சியில் முக்கியப் பொறுப்புகள் கிடைக்கும். தொண்டர்களின் ஆதரவுடன் பதவியைத் தக்க வைத்துக் கொள்ளுங்கள். 

  கலைத்துறையினருக்கு அனுகூலமான திருப்பங்கள் வரும். சிலருக்கு விருது பெறும் யோகம் உண்டாகும். 

  பெண்மணிகள் கணவர் வீட்டாரின் அன்பு மழையில் நனைவீர்கள். மாணவமணிகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.

  பரிகாரம்: துர்க்கையம்மனை விளக்கேற்றி வழிபடவும். 

  அனுகூலமான தினங்கள்: 15, 16. 

  சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}

  ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

  புத்தி சாதுர்யத்துடன் செயல்பட்டு தடைகளைத் தகர்ப்பீர்கள். அந்தஸ்தான மனிதர்களின் சந்திப்பு, மனதிற்கு மகிழ்ச்சியளிக்கும். உடன்பிறந்தோரிடம் வேற்றுமை பாராட்டாதீர்கள். எதையும் வெளிப்படையாகப் பேசி அடுத்தவரின் கோபத்திற்கு ஆளாகாதீர்கள்.

  உத்தியோகஸ்தர்கள் திட்டமிட்ட வேலைகளை முன்கூட்டியே முடித்து, பிரச்னைகளைத் தவிர்க்கவும். உழைப்பிற்கேற்ற மரியாதை , ஊதியம் கிடைப்பதில் பிரச்னை இல்லை. வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் சீராகவே இருக்கும்.  புதிய முதலீடுகளில் சற்று கவனத்துடன் ஆலோசித்து செயல்படவும். விவசாயிகளுக்கு விளைச்சல் அதிகமாகி வருமானம் கூடும். 

  அரசியல்வாதிகள் அனுகூலமான திருப்பங்களை எதிர்பார்க்க முடியாது. உற்சாகமின்மை, மேலிடத்தில் அவமதிப்பை சந்திக்க நேரிடும். தொண்டர்களை அரவணைத்துச் செல்வது நல்லது. 

  கலைத்துறையினர் திறமைக்கேற்ற பாராட்டுகளைப் பெறுவார்கள். ஒப்பந்தங்கள் லாபகரமாகும். 

  பெண்மணிகள் அலைபாயும் மனதைக் கட்டுப் படுத்தவும்.  மாணவமணிகள் முன்கூட்டியே நன்றாக முயற்சி செய்து படித்தால் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறலாம்.

  பரிகாரம்: குலதெய்வ வழிபாடு அவசியம். 

  அனுகூலமான தினங்கள்: 16, 17. 

  சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}
  மிதுனம் (மிருகசீரிஷம்3-ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

  மனதில் புதிய உற்சாகம் தென்படும். பொருளாதாரத்தில் ஏற்றம், இறக்கம் உண்டாகும். முடிவு எடுக்கப்படாமல் இருந்த விஷயங்களில் தெளிவு பிறக்கும். திட்டமிட்ட வேலைகளில் முன்கூட்டியே செயல்படவும். மௌனம் சாதிப்பது நன்மை பயக்கும்.

  உத்தியோகஸ்தர்கள் காலநேரங்களை வீணாக்காமல் உழைத்தால் புதிய பொறுப்புகளைப் பெறலாம். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். சிறு முதலீடுகளில் ஈடுபட்டு வியாபாரத்தை விரிவுபடுத்தவும்.

  விவசாயிகள் செய்ய நினைத்த வேலைகளை உடனடியாகச் செய்து முடிப்பது நல்லது. பழைய குத்தகை பாக்கிகளைத் திருப்பிச் செலுத்துவீர்கள். 

  அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். தொண்டர்களை அனுசரித்து வழிநடத்திச் செல்லவும். புதிய முயற்சிகளை வெற்றிகரமாக முடிப்பார்கள். கலைத்துறையினரின் ஆற்றல் அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பு மரியாதை கூடும். 

  பெண்மணிகள் குடும்பத்தில் அமைதியையும் ஒற்றுமையையும் காண்பார்கள். தாய்வழி உறவினர்கள் அனுகூலமாக இருப்பார்கள். மாணவமணிகள் ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெறுவார்கள். விளையாட்டுகளிலும் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள்.

  பரிகாரம்: சூரியவழிபாடு ஆரோக்கியத்தை மேம்படுத்தும். 

  அனுகூலமான தினங்கள்: 15, 18. 

  சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}
  கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

  தந்தை வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் ஆற்றல் கூடும். எதிரிகளின் பலம் குறையும். சமூகத்தில் மதிப்பு மரியாதை உயரும். புனிதப் பயணங்களை மேற்கொண்டு மகிழ்வீர்கள். பொருளாதாரம் ஏற்றமாகவே இருக்கும். 

  உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளால் சில சஞ்சலங்கள் உண்டானாலும் தைரியத்துடனும் நம்பிக்கையுடனும் எதையும் சமாளிப்பீர்கள். வியாபாரிகள் தடைகளையும் எதிர்ப்புகளையும் தாண்டி வியாபார அபிவிருத்தி செய்வார்கள். எவருக்கும் முன்ஜாமீன் போடுவது நல்லதல்ல. விவசாயிகளுக்கு லாபம் அதிகரிக்கும். சந்தையில் நிலவும் போட்டிகளைச் சாதுர்யமாகச் சமாளிப்பீர்கள். 

  அரசியல்வாதிகள் மேலிடத்தின் பாராட்டுகளைப் பெறுவார்கள்.  புதிய பயணங்களால் நன்மையடைவார்கள். எதிர்பார்த்த உயர் பதவிகளைப் பெறுவார்கள். கலைத்துறையினர் திறமைக்குத் தகுந்த மதிப்பும் அங்கீகாரமும் பெறுவார்கள். பெண்மணிகளுக்கு குடும்பத்தில் மதிப்பு உயரும். கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். மாணவமணிகளின் விருப்பத்தை பெற்றோர் பூர்த்தி செய்வார்கள். ஆசிரியர்களும் அனுகூலமாக இருப்பார்கள்.

  பரிகாரம்: பெருமாளை துளசி கொண்டு அர்ச்சித்து வழிபடவும். 

  அனுகூலமான தினங்கள்: 16, 18. 

  சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}

  சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

  திட்டமிட்ட செயல்களில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். எல்லோருக்கும் உதவி செய்வீர்கள். வரவு செலவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். தெய்வ பலத்தை நம்பவும்.

  உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் நன்மதிப்பைப் பெறுவார்கள். சக ஊழியர்களின் பகைமையை சம்பாதித்துக் கொள்வீர்கள். அதனால் எச்சரிக்கை தேவை. 

  வியாபாரிகளுக்கு நீண்டநாள் பாக்கி வசூலாகும். தளராத மன உறுதி வெற்றியின் பக்கம் இழுத்துச் செல்லும். விவசாயிகள் வசூலில் நல்ல ஏற்றம் இருக்கும். இடையிடையே சிறிது தாமதம் ஏற்பட்டாலும் பின்பு சுமுகமாக முடியும்.

  அரசியல்வாதிகள் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். பொறுப்புகளை கவனத்துடன் செயல்படுத்துங்கள். தொண்டர்களின் ஆதரவைத் தக்க வைத்துக் கொள்ளுங்கள். கலைத்துறையினருக்கு பேராசை தேவையில்லை. தங்கத்தை விற்று தகரம் வாங்கும் கதையாகிவிடும். பெண்மணிகள் சுப நிகழ்ச்சிகளால் மன நிம்மதி அடைவீர்கள். கணவரின் உடல்நலத்தில் கவனமாக இருக்கவும். மாணவமணிகள் படிப்பில் கவனம் செலுத்தவும். நண்பர்களைத் தேர்ந்தெடுத்துப் பழகவும்.

  பரிகாரம்: விநாயகருக்கு அருகல்புல் சார்த்தி வழிபடவும். 

  அனுகூலமான தினங்கள்: 17, 19. 

  சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}
  கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

  சூழ்நிலைகளில் புதிய மாற்றங்களைக் காண்பீர்கள். அளவுக்கு மீறின யோசனைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். எடுத்த காரியங்கள் நீங்கள் எதிர்ப்பார்த்ததற்கும் குறைவான நேரத்தில் முடிவடையும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும்.

  உத்தியோகஸ்தர்களின் கோரிக்கைகள் நிறைவேறும். கடந்த சில காலங்களாக தொடர்ந்து வரும் பிரச்னைகளிலிருந்து விடுபட்டு புதிய மாற்றத்தைக் காண நினைப்பீர்கள். 
  வியாபாரிகள் புதிய யுக்தியுடன் செயல்பட்டு பொருள்களை விற்பனை செய்வீர்கள். கூட்டுத்தொழில் செய்பவர்கள் ஒற்றுமையாக இருக்கவும். விவசாயிகள் கையிருப்புப் பொருள்கள் மீது அக்கறை காட்டவும். 

  அரசியல்வாதிகளுக்கு அலைச்சல்கள் அதிகரிக்கும். சில தடைகள் ஏற்பட்டாலும் அனைத்தும் வெற்றி பெறும். கலைத்துறையினரின் விடாமுயற்சிகள் அனைத்தும் வெற்றியை தேடித் தரும். பெண்மணிகளின் உடல் நலம் சற்று பாதிக்கப்படும். தெய்வ பலத்தைப் பெருக்கிக் கொண்டால் பிரச்னைகளைத் தவிர்க்கலாம். மாணவமணிகள் வீண் பிரச்னைகளில் சிக்கிக் கொள்வார்கள் என்பதால் கவனம் தேவை.

  பரிகாரம்: சனிபகவானை வணங்கி நவக்கிரகத்தைச் சுற்றி வரவும். 

  அனுகூலமான தினங்கள்: 18, 19. 

  சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}
  துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

  அலைச்சலும் வேலைப்பளுவினால் ஏற்படும் தொந்தரவுகளும் அதிகரிக்கும். இறுதியில் இத்தகை நிலைமைகளில் மாற்றம் தென்படும். பயணங்களால் நன்மை உண்டாகும். எதிர்பார்ப்புகள் ஏமாற்றம் தராது. வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும்.

  உத்தியோகஸ்தர்கள் எதிர்வரும் இடையூறுகளைச் சாதுர்யத்துடன் சமாளிப்பார்கள்.  சிலருக்கு விரும்பிய இடமாற்றமும் பதவி உயர்வும் கிடைக்கும்.

  வியாபாரிகள் வியாபாரத்தை தங்கள் நேரடிப் பார்வையில் செய்து வந்தால் நல்ல முன்னேற்றம் உண்டாகும். விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருக்கும். புதிய முயற்சிகளிலும் துணிந்து ஈடுபடலாம். 

  அரசியல்வாதிகளுக்கு பெயரும் புகழும் அதிகரிக்கும். மாற்றுக் கட்சியினரும் பாராட்டுவார்கள். தொண்டர்களின் பிரச்னைகளைத் தீர்த்து வைப்பார்கள். 

  கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் வரும். ரசிகர்களின் ஆதரவு கிடைக்கும். 

  பெண்மணிகள் குடும்பத்தில் ஒற்றுமையை நிலைநாட்டுவார்கள். வார்த்தைகளில் நிதானம் தேவை.

  மாணவமணிகளின் கோரிக்கைகள் நிறைவேறும். ஆசிரியர்கள், பெற்றோர் சொல்படி கேட்டு நடக்கவும். உடற்பயிற்சி மேற்கொள்வது நல்லது.

  பரிகாரம்:  ஆஞ்சநேயர், காலபைரவரை தரிசனம் செய்யவும். 

  அனுகூலமான தினங்கள்: 16, 20. 

  சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}
  விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

  சூழ்நிலைகளில் சிறிய மாற்றங்களைக் காண்பீர்கள். மனதில் புதிய நம்பிக்கைகள் பளிச்சிடும். உயர்ந்த எண்ணங்களால்  சிறப்படைவீர்கள். திட்டமிட்ட பணிகளை சாதுர்யத்துடன் முடிப்பீர்கள். பொருளாதாரம் வசதியாக இருக்கும். 

  உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகப் பணிகள் அனைத்தும் சாதகமாக முடியும். புதிய பொறுப்புகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது. வியாபாரிகள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பார்கள். உழைப்பிற்குத் தகுந்த பலன்களைப் பெறுவார்கள். விவசாயிகளுக்கு கொள்முதல் லாபம் சிறப்பாக இருக்கும். விளைபொருள் விற்பனையில் கவனம் செலுத்தவும்.

  அரசியல்வாதிகள் பொதுச் சேவையில் அனுகூலம் ஏற்படும்.  உள்கட்சி விவகாரங்களில் தலையிட வேண்டாம். கலைத்துறையினர் கடின முயற்சிகளுக்குப்பிறகே புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பயணங்களால் எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். 

  பெண்மணிகள் மனநிம்மதி பெற ஆன்மிகத்தில் நாட்டம் செலுத்துவார்கள். குழந்தைகளால் அனுகூலம் உண்டாகும். மாணவமணிகளுக்கு பெற்றோரின் அன்பும் ஆசியும் கிட்டும். பொழுதுபோக்கு அம்சங்களில் மனம் ஈடுபடும்.

  பரிகாரம்:  பராசக்தியை மலர்கள் சாற்றி வழிபடவும். 

  அனுகூலமான தினங்கள்: 18,  21. 

  சந்திராஷ்டமம்: 15, 16, 17.

  {pagination-pagination}
  தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

  தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிலும் கவனமுடனும் நிதானத்துடனும் செயல்படுங்கள். உடல்நலத்திலும் அக்கறை காட்டவும். சகோதர வழியில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட  வாய்ப்புண்டு. பொருளாதார நிலையில் முன்னேற்றம் உண்டு. 

  உத்தியோகஸ்தர்களுக்கு பணவரவு சீராகும்.  மேலதிகாரிகளிடம் வாக்குவாதங்களில் ஈடுபடாதீர்கள். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் சாதகமாக அமையும். யாரிடமும் கடன் பெற்று வியாபாரத்தைப் பெருக்க வேண்டாம். 

  விவசாயிகளுக்கு விளைச்சல் அதிகமாகி வருமானம் பெருகும். சிலருக்கு பால் வியாபாரம் அமோக வருமானத்தைத் தரும். 

  அரசியல்வாதிகளுக்கு இது சிக்கலான காலமாகும். மனதில் ஏற்படும் சஞ்சலமும் மேலிடத்தின் அதிருப்பதியும் உங்களைக் குழப்பத்தில் ஆழ்த்தும். கலைத்துறையினருக்கு முன்னேற்றகரமான காலமாகும். புதிய ஒப்பந்தங்களோடு அதிக வருமானமும் கிடைக்கும். 

  பெண்மணிகள் சலனத்தையும் குழப்பத்தையும் கட்டுப்படுத்தவும். தேவையில்லாத வீண் யோசனைகள் வலிமையை குறைக்கும். மாணவமணிகள் படிப்பில் ஆர்வம் குறையாமல் ஆசிரியர்களின் சொற்படி கேட்டு நடக்கவும்.

  பரிகாரம்: தினமும் 108 முறை ஸ்ரீ ராமஜெயம் எழுதி வழிபடவும். 

  அனுகூலமான தினங்கள்: 17, 20.

  சந்திராஷ்டமம்: 18, 19.

  {pagination-pagination}
  மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

  மனதிலும் உடலிலும் உற்சாகம் பிறக்கும். உல்லாசப் பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள். புதிய ரகசியங்களை அறிவீர்கள். சமுதாயத்தில் அந்தஸ்து உயரும். செய்யும் தொழிலில் திட்டமிட்டு வெற்றி பெறுவீர்கள். புதிய நட்புகள் கைகூடும்.

  உத்தியோகஸ்தர்களுக்கு அனைத்து வேலைகளும் மகிழ்ச்சியாகவே முடியும். வருமானமும் திருப்திகரமாக இருக்கும். சக ஊழியர்கள் சுமுகமாக பழகுவார்கள். வியாபாரிகள் அதிக போட்டிகளைச் சந்திக்க நேரிடும். கூட்டாளிகளின் உதவி கிடைக்கும். விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். கால்நடைகளாலும் சுமாரான வருமானம் உண்டாகும்.

  அரசியல்வாதிகளின் அந்தஸ்து உயரும். எதிரிகளால் உண்டாகும் சங்கடங்களும் குறையும். கலைத்துறையினர் தொழில் நிமித்தமாக குறுகிய தூரப் பயணங்களை மேற்கொள்வார்கள். பெண்மணிகள் குடும்பத்தில் ஒற்றுமையை காண்பார்கள். அனைவரும் நட்புக் கரம் நீட்டுவர். கணவருடனான ஒற்றுமையும் நன்றாக இருக்கும். 

  மாணவமணிகள் கல்வி உயர்வுக்காகச் செய்யும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். சிலருக்கு கல்வி கற்பதற்கான இடமாற்றமும் ஏற்படும்.

  பரிகாரம்: நந்திதேவரைஅருகல்புல் சார்த்தி வழிபடவும். 

  அனுகூலமான தினங்கள்: 15, 19. 

  சந்திராஷ்டமம்: 20, 21.

  {pagination-pagination}
  கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

  பொருள் வரவு சீராக இருக்கும். உடல் ஆரோக்கியம் சீர்படும். உற்றார் உறவினர்களை அனுசரித்துச் செல்லவும். சுறுசுறுப்புடன் செயலாற்றுவீர்கள். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். அநாவசியப் பயணங்களைத் தவிர்க்கவும். 

  உத்தியோகஸ்தர்களில் அலுவலக வேலைகளில் பிடிப்பில்லாமல் இருந்தவர்கள், அந்த சூழலிலிருந்து விடுபட்டு மகிழ்ச்சியுடன் பணியாற்றுவீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். 

  வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் சாதகமாக இருக்கும். எவருக்கும் கடன் கொடுத்து வியாபாரத்தைப் பெருக்க வேண்டாம். 

  விவசாயிகளுக்கு உழைப்பிற்கேற்ற மகசூல் கிடைக்கும். பழைய கடன்கள் முடிவுக்கு வரும். கால்நடைகளின் பராமரிப்புச் செலவுகள் கூடும். 

  அரசியல்வாதிகளுக்கு கட்சியில் மதிப்பும் மரியாதையும் உயரும். ஒப்படைக்கப்பட்ட வேலைகளை மகிழ்ச்சியுடன் செய்வீர்கள். 

  கலைத்துறையினரின் திறமைகளை மற்றவர்கள் பாராட்டுவார்கள். பெண்மணிகள் வீண் குழப்பங்களைச் சந்திக்க நேரிடும். எல்லோரிடமும் அனுசரித்து நடக்கவும். 

  மாணவமணிகள் விளையாட்டில் கவனத்துடன் ஈடுபடவும்.

  பரிகாரம்: காகத்திற்கு அன்னமிட்டு வருதல் நலம் பயக்கும். 

  அனுகூலமான தினங்கள்: 19, 21. 

  சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}
  மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

  குடும்ப பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். எல்லோருக்கும் உதவி செய்வீர்கள். வரவு செலவு விஷயங்களில் கவனமாக இருக்கவும். பிரிந்திருந்த குடும்பத்தினர் ஒன்றிணைவார்கள்.

  உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் நன்மதிப்பைப் பெற கடுமையாக உழைக்க நேரிடும். சக ஊழியர்களும் பகைமை பாராட்டுவார்கள். வியாபாரிகளுக்கு கொள் முதலில் லாபம் கிடைக்கும். நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் உதவுவார்கள். புதிய முதலீடுகளில் சற்று கவனம் தேவை. 

  விவசாயிகளுக்கு விளைச்சல் அதிகமாகி வருமானம் பெருகும். புதிய குத்தகைகளால் லாபம் கொட்டும். 

  அரசியல்வாதிகள் கவனமாக செயல்பட வேண்டிய நேரம் இது. மக்களுக்கு உதவக்கூடிய போராட்டங்களில் மட்டுமே கலந்து கொள்ளலாம். கலைத்துறையினருக்கு அதிக முயற்சிகளுக்குப்பிறகே ஒப்பந்தங்கள் கைகூடும். ரசிகர்களின் ஆதரவும் குறைந்தே காணப்படும். 

  பெண்மணிகளுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். ஆடை ஆபரணங்களை வாங்குவீர்கள். மாணவமணிகள் உள்ளரங்கு விளையாட்டுகளில் ஈடுபடுவது நல்லது. பாடங்களை உடனுக்குடன் படித்து நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

  பரிகாரம்: மகாவிஷ்ணுவை வழிபட்டு நலன்கள்கூடப் பெறவும். 

  அனுகூலமான தினங்கள்: 20, 21. 

  சந்திராஷ்டமம்: இல்லை.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai