திருச்செந்தூர் பன்னீர் இலை விபூதிக்கு ஏன் அவ்வளவு மகிமை? 

ஆதிசங்கர பகவத் பாதாளுடன் ஏற்பட்ட வாதங்களில் தோற்ற அபிநவகுப்தர், ஆபிசார வேள்வி செய்து ஆதிசங்கர..
திருச்செந்தூர் பன்னீர் இலை விபூதிக்கு ஏன் அவ்வளவு மகிமை? 


ஆதிசங்கர பகவத் பாதாளுடன் ஏற்பட்ட வாதங்களில் தோற்ற அபிநவகுப்தர், ஆபிசார வேள்வி செய்து ஆதிசங்கர பெருமானுக்கு உடலை வருத்தும் நோய் உண்டாகச்  செய்து விட்டார். கர்நாடகாவிலுள்ள கோகர்ணத் திருத்தலத்தில் தங்கி வழிபாடு செய்து வந்த ஆதிசங்கரரின் கனவில் ஈசன் தோன்றி, "என் குமாரன் ஷண்முகன்  குடியிருக்கும் புண்ணிய ஸ்தலமான திருச்செந்தூருக்குச் சென்று தரிசித்தால் உன் நோய் முற்றிலுமாக நீங்கப் பெறுவாய்" என்று கூறினார். 

கோகர்ணேஸ்வரர் ஆணைப்படி, திருச்செந்தூர் வந்தடைந்த, ஆதிசங்கரர், செந்தில் வேலன் சன்னதியில் மனமுருகி நின்ற போது, அவருக்கு தரிசனம் கிட்டியது. 

பன்னீர் இலை விபூதியை தரித்துக்கொண்ட சங்கரருக்கு வெகு விரைவில் நோய் குணமாயிற்று. அதன் பின்னர் ஆதிசங்கரர் திருச்செந்தூர் சுப்பிரமணியன் மேல் மனமுருகி "சுப்பிரமணிய புஜங்க ஸ்லோகம்" பாடினார். 

செந்திலாண்டவனை அவர் துதித்து பாடிய 33 ஸ்லோகமே ஸ்ரீ சுப்ரமண்ய புஜங்கம் என்பதாகும். அதில் 25வது பாடலில் இலை விபூதியின் மகிமை பற்றிச் சொல்கிறார். 

திருச்செந்தூர் முருகன் கோவிலின் சிறப்புப் பன்னீர் இலையில் வைத்துத் தரப்படுகிற விபூதி தான் அது. அனைத்து கோயில்களிலும் விபூதி தருகிறார்கள். இதிலென்ன விசேஷம் என்றால், பன்னீர் இலையில் வைத்துத் தருவதில் தான் சிறப்பு இருக்கிறது. இன்றும் இந்த இலை விபூதி பிரசாதம் தீராத பல நோய்களைத் தீர்க்கும் அருமருந்தாக விளங்கி வருகிறது.

முருகனின் ஒருபக்கம் ஆறு கரங்கள் என இருபக்கங்களிலும் சேர்த்து பன்னிரு கரங்கள். அது மாதிரியே பன்னீர் மரத்தின் இலைகளிலும் ஒரு பக்கத்திற்கு ஆறு  நரம்புகள் என பன்னிரு நரம்புகள் இருக்கும். பன்னிரு கரத்தானான முருகனைச் சென்று தரிசித்து, வணங்குகிற பக்தர்களுக்கு அவன் தனது பன்னிரு திருக்கரங்களினாலேயே  இந்த விபூதி பிரசாதத்தைத் தருவதாக ஐதீகம். 

அப்படி வழங்கப்படுகின்ற திருநீற்றைப் பத்திரமாகப் பன்னீர் இலைகளில் சேமித்து வைப்பது, செல்வத்தைச் சேமிப்பதைப் போல. அதனால் இந்த விபூதியைப் பன்னீர் செல்வம்  என்று பக்தர்கள் வாங்கிச் செல்கிறார்கள். 

"அபஸ்மார குஷ்ட க்ஷயார்ச ப்ர மேஹ.

ஜ்வரோன் மாத குல்மாதி ரோஹான் மஹாந்த

பிசாசஸ்ச ஸர்வே பவத் பத்ர பூதிம்

விலோக்ய க்ஷணாத் தார காரே த்ரவந்தே" 

                                                                         என்று பாடியிருக்கிறார்.

இதன் பொருள், "சுப்பிரமண்யா! உன்னுடைய இலை விபூதிகளைக் கண்டாலே கால் கை வலிப்பு, காச நோய், குஷ்டம் முதலிய எல்லா நோய்களும் நீங்கிவிடும். எந்த  விதமான செய்வினைகள், பூதம், பிசாசு, தீவினை யாவும் விட்டு விலகிவிடும்" என்பதாகும். 

முருனைப் பூஜித்த தேவர்கள் அனைவரும் இந்த பன்னீர் மரங்களாக இருப்பதாகவும், அதிலிருந்து பெறப்படும் பன்னீர் இலைகள் பிரசாதமாக வழங்கப்படுவதால் அதற்குத்  தனி மகத்துவம் இருப்பதாகவும் கருதப்படுகிறது.

பன்னீர் இலையை நேராக வைத்துப் பார்த்தால் முருக பெருமானின் வேல் போன்று காட்சி அளிக்கும். 

திருச்செந்தூரில் சூரபத்மனை வென்று, கடற்கரையில் ஒளி வீசி நின்றான் முருகன். அவனது பெருமையைத் துதித்த வேதங்களனைத்தும் ஒன்று சேர்ந்து செந்திலோனின்  மகிமையை விளக்கும் பன்னீர் மரங்களாக இவ்விடத்தில் தோன்றின. எனவே வேதங்கள் அனைத்தும் பன்னீர் மரங்களாக நின்றதினால், இவற்றின் இலைகளுக்கும் வேத மந்திரசக்தி உண்டு என்கிறது புராணம். 

எனவே சுப்ரமண்ய புஜங்க ஸ்லோகத்தினை மனமுருக பாராயணம் செய்வோர் தமது தீராத பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பர். செந்திலாண்டவன் அருளும் ஸ்ரீ ஆதிசங்கரர்  சுவாமிகளின் ஆசியும் ஒருங்கே பெறுவர்.

காஞ்சி பெரியவா ஆக்ஞைக்கிணங்க வரும் கந்த சஷ்டி ஆறு நாட்களும் சுப்ரமண்ய புஜங்க ஸ்லோகத்ததினை மனத்துள் சரவணபவனை நினைத்து பாராயணம் செய்ய வேண்டுகிறோம். 

மந்திர சக்திகள் நிறைந்து விடுவதால் அனைத்து இகபர சௌபாக்கியங்கள் ஒருங்கே கிடைக்கப்பெற்று செந்தூரில் ஜெயந்திநாதராக அருள்பாலிக்கும் முருகப்பெருமானின்  திருவருள் பரிபூரணமாக சித்திக்கும் என்பது நிதர்சனம்.

வடிவேல் முருகனுக்கு அரோகரா.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.

- மாலதி சந்திரசேகரன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com